செவ்வாய், மே 24, 2011

ரகசிய இருப்பிடங்களின் உற்பத்தி..

*
நகரின் மௌனம்
தன் அடர்ந்த செதில்கள் ஊடே
இடையறாது சுவாசிக்கிறது
இரவுகளை

அது
துணுக்கு விளக்கொளிகளில்
கரைகிறது
அழுக்கின் கசடென

எளிதில் கடந்துவிட முடியாத
தருணங்களை
உற்பத்தி செய்கிற ரகசிய இருப்பிடமாய்
மாற்றிக் கொள்கிறது

தன் மீது ஊர்ந்து
கூடடையும்
நகர மனிதர்களின்
மௌனங்களை

*****

நன்றி : ' திண்ணை ' இணைய இதழ் ( மே - 2 - 2011 )

மீன்பிடி கொக்குகள்..

*
வார்த்தைகளின்
வேலிப் படலைத் திறந்து வைத்திருக்கிறேன்
என் மனவெளியை
சூறையாடிக் கொள்

நேற்றிரவு உரையாடலின்
குளம்
இன்னும்
தளும்பிக் கொண்டிருக்கிறது

அதில்
உன் மௌனக் கொக்கு
ஒற்றைக் காலில்

நி
ற்
கி

து..

நீ
சுருள் பிரிக்கும்
உன் கைத் தூண்டில் முனையில்
ஒரு எழுத்து நெளிகிறதே

மீன் பிடிக்கவா..?

தூ..!

கொக்கை விரட்டு
கொக்கை விரட்டு..

*******

நன்றி : ' திண்ணை ' இணைய இதழ் ( மே - 30 - 2011 )

கை விடப்பட்ட திசைகள்..

*
நீங்கள்
அப்படி ஒப்புக் கொள்ளும்போதே
கொஞ்சம் மரணிக்கிறீர்கள்..
 
ஆட்படும் கண நேர
தலையசைப்பில் நீர்த்துப் போகிறது
இருப்பதாக நம்பப்படும் வைராக்கியம்.
 
தேங்கியக் குட்டைக்குள்ளிருந்து
நீந்திப் பழகிய வார்த்தைகள்
ஒவ்வொன்றும் சிறகுகள் முளைத்து
கூரைக்கு மேலே பறத்தலை நிகழ்த்துகின்றன..
 
ரகசியமென இரவுகளில் கவிழ்கின்றது
முன்னெப்போதும் இளமையென
கை  விடப்பட்ட சந்தர்ப்பங்கள்..
 
*****
 
நன்றி : ' திண்ணை ' இணைய இதழ் ( மே - 21 -  2011 )

காதுகளற்ற கோப்பைகள்

*
வார்த்தைகளை
வலை விரித்து உட்கார்ந்து கொண்டோம்
இரவைப் பொழிந்து நிரப்பியது நிலவு

கூடுதல் வாகாக
விரல்களிடையே விடாமல்
புகைந்தன சம்பவங்கள்

காதுகளற்ற கோப்பைகள்
நுரைத்துத் தளும்புகிறது
எல்லை மீறும் உரையாடல்களை
கேட்கத் துடித்தபடி

சின்னச் சின்னக் குமிழ்களின்
கிறங்குதலை உடைத்துக் கொண்டு
நாக்கு குழறுகிறது நாள்பட்ட மௌனம்

கருஞ்சிவப்பு சதுரங்கள்
ஒன்று கூடி
பெரிய சதுரமாகிவிட்ட
அந்த மொட்டை மாடி வெளியெங்கும் 

கொஞ்சங் கொஞ்சமாய்
உதிர்ந்து போனோம்
நீயும் நானும்

*****

நன்றி : ( உயிரோசை / உயிர்மை.காம் ) [ மே - 30 - 2011 ] 


http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=4379

தொடுவானம்..

*
நீ வரும்போது நேர்வது
மௌனம் அல்ல
ஓர் ஓசையற்ற
உலகம்
 
நாளை
பெய்யவிருக்கும்
ஒரு
பெருமழையைப் போல்
 
****
 
நன்றி : ( உயிரோசை / உயிர்மை.காம் ) [ மே - 23 - 2011 ] 

http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=4349

புதன், மே 18, 2011

இறுதிக் குமிழ்..

*
நீங்கள் சொல்வதிலிருந்து
மீள்வதற்கான
ரசவாதம்
ஒரு ஊற்றாகப் பிரவாகித்து
நதியாக ஓடுவதில் மூச்சுத் திணறுகிறது.

என்னை
அள்ளிப் பருகும் கரையில் நின்றபடி 
கால் நனைத்து நீங்கள் உணரும் சில்லிடல்
என் மனப் பிறழ்வின்
வெப்பப் பெருகல்.

சொன்னவைகளின் குறிப்புகள்
சிவப்பு மையால்
அடிக் கோடிட்டு கிழிகின்றன

ஒரு
மகாச் சுழியென
முற்றுப்புள்ளிக்குள் இழுபட்டு
எஞ்சி மேலெழும்
இறுதிக் குமிழ் உடைவதில்
பரவுகிறேன்

உங்கள் வெளியெங்கும்
நகரெங்கும்
வாழ்வெங்கும்..

*****

நன்றி : ( உயிரோசை / உயிர்மை.காம் ) [ மே - 16 - 2011 ] 


http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=4306

குளிர்ந்து சொட்டும் கண்ணாடி டம்ளரின் மஞ்சள் நிறப் பூக்கள்..

*
இந்த மேஜையின் இக்கரையிலிருந்து
எதிர்க் கரைக்கு இடைப்பட்ட சொற்பத் தொலைவு
நீண்டுக் கொண்டிருக்கிறது
 
நிமிடங்களின் கூர்மையான கால்கள்
அளந்தபடி இருக்கின்றன
கொடுக்கப்பட்ட மெனு கார்டின் பக்கங்களை
 
குளிர்ந்து சொட்டும் கண்ணாடி டம்ளரின்
மஞ்சள் பூக்கள் அவ்வளவு விசேஷமாய் இல்லை
இந்த மங்கிய ஆரஞ்சு நிற ஒளியில்
 
எதிர் நாற்காலியின் வெற்றிடத்தில் வெறுமனே
நிதானமாய்  பொழிந்து கொண்டிருக்கிறது 
செயற்கையாய் குளிரூட்டப்பட்ட காற்று
 
காத்திருப்புகள்
மடிப்புக் கலையாத ஒரு கைக்குட்டையைப் போல்
சுருங்கிக் காணப்படுவதில்லை எப்போதும்
அவை
நீண்ட பாலைவனத்தின் மீது எல்லையற்று பறந்து கொண்டிருக்கும்
ஒரு கருப்பு மஸ்லின் துணியைப் போல் படபடக்கிறது
 
அணைத்து வைக்கப்பட்ட செல்போனோ
அல்லது
எரிந்து கொண்டிருக்கும் சிக்னல் விளக்கோ
அல்லது
திடீர் மழையோ
அல்லது
ஒரு பழைய பொய்யோ
எதைக்  கொண்டுவந்தாலும் பரவாயில்லை
 
ஒவ்வொரு முறையும் திறந்து மூடும் இந்த உணவகத்தின்
கனமான கண்ணாடித் திரைக்குப் பின்னிருந்து
யார் யாரோ வந்து கொண்டிருக்கிறார்கள்
உன் ஒருவனைத் தவிர
 
பணிவோடு அருகில் வந்து நிற்கும் சிப்பந்தியிடம்
இதுவரை யாரும் கேட்டிருக்க முடியாத ஒன்றை
என்னைக் கேட்க வைத்திருக்கிறாய்
 
'என் மேஜைக்கு இன்னொரு மெழுகுவர்த்தி கொண்டு வாருங்கள்..'
 
*******
 
நன்றி : ( உயிரோசை / உயிர்மை.காம் ) [ மே - 9 - 2011 ] 

http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=4289

பார்த்தலில் பதிவாகும் காந்த முள்..

*
நாட்களின் புதைவெளியில்
கணுக்கால் அழுந்தும் சதுப்பைப் போல்
ஈரமாய் பிசுபிசுக்கின்றன பகிராத வார்த்தைகள்

திசைக்காட்டத் தவறிய காந்த முள்ளாகிறது
கடந்து கொண்டிருக்கும் நிமிடம்

பற்றுதலுக்குரிய கரங்களின் ரேகை
இறுகக் குலுக்குகையில்
கசிந்து வழிகிறது புறங்கை நரம்பில்

நீர்மை வற்றிவிடும் பார்த்தலில் பதிவாகும்
பிம்பங்களின் நகர்தல்
உதிரி இழையென பிரிந்தவிழ்ந்து
சொற்பமாய் பதிவாகிறது
நினைவுக் கோப்பின் பிழை ஆவணமாய்

பிசகிய நடன அசைவை ஒத்திருக்கிறது
நிகழும் தடுமாற்றங்கள்

தாளம் தப்பி அடிக்கப்படும் கைத்தட்டல்கள்
விரல்களின் உதிர்தலோடு
முடித்துக் கொள்கிறது
நம்
அரங்கேறாத காட்சிகளை

*****

நன்றி : ( உயிரோசை / உயிர்மை.காம் ) [ மே - 2 - 2011 ] 


http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=4271