வெள்ளி, ஏப்ரல் 30, 2010

ஈரம் சொட்ட..

*
கடந்து விரிவதில்
சிறகுகள் மௌனிக்கின்றன

மொழிபெயர்ப்பை லகுவாக்குவதில்
மழைத் துளிகளுக்கு
பங்குண்டு

சொல்லுங்கள்
ஈரம் சொட்ட சூடாக பருக விரும்புவது
யார் சிறகை..?

****

கரைந்தொழுகும் அந்தி..

*
மண் துகள்களை
நெருடியபடி
அலையும் விரல்கள் காத்திருக்கின்றன

பிரியத்தோடு
வந்து சேரும்
புன்னகையில்

கரைந்தொழுகும்
வர்ணப் பிசுபிசுப்பில்
காயாமல் ஈரமென மிஞ்சும்

அந்தியின் வர்ணம் தொட..


****

உரையாடல்களின் பிரியத்தைத் திரவமெனப் பருகுதல்..!

*
ஒரு
அழுத்தமான முத்தத்துக்குப் பிறகு
வார்த்தைகள்
இல்லாமல் போகிறது

இறுகிய த்வனியில்
வெளியேறும் பெருமூச்சில்
ஒவ்வொரு கணமும்
குளிர்ந்து வியர்த்தபடி நிழலாடுகிறது

உரையாடல்களின் பிரியத்தை
திரவமெனப் பருகுதல்
சாத்தியமென விழுகிறது
இருள் நொறுக்கும்
மௌன மழையொன்று..

****

கொடுவாளின் கைப்பிடி வடிவம்..!

*
வெகு நேர யோசனைக்குப் பின்
முடிவாயிற்று
உன்
நட்பை வெட்டி வீழ்த்தும்
கொடுவாளின் கைப்பிடி வடிவம்..

துரோகத்தின்
வேட்டையை
இனிமேலும் நடத்திப் பார்க்க
உன்
வனத்தில்
இனியுனக்கு இடம் இருக்கப் போவதில்லை..

திசைகள் துண்டிக்கப்பட்ட
வெட்டவெளியில்
நீயுன்
மனப் புரவியால் கைவிடப்பட்டு
சுடுமணல் பரவ நடப்பாய்

வெகு நேர யோசனைக்குப் பின் தான்
முடிவாயிற்று
உன்
நட்பை வெட்டி வீழ்த்தும்
கொடுவாளின் கைப்பிடி வடிவம்..

வா..!
காத்திருக்கிறேன்..

****

யாருமற்ற பூங்காவில்..

*

யாருமற்ற பூங்காவில்..
சலசலக்கும்
இலைகளின்
கைத் தட்டலோடு

சருகுகளை..

ஓடிப் பிடித்து விளையாடுகிறது
காற்று..!

****

தொட்டு விலகிய பார்வையின் குறுகிய கணம்..

*

மழை விட்டு ஈரமான
மொட்டை மாடி சில்லிப்பில்
பாதத்திலிருந்து தொடங்கி
காது நுனி வரை
பரவுகிறது
ஒரு
மென் குளிர்

நீ
கவனிக்கத் தவறி நனைந்து விட்ட
உன் உடைகளை
கொடியிலிருந்து
அப்புறப்படுத்திக் கொண்டிருக்கிறாய்..

திரும்பும்போது
என்னைத் தொட்டு விலகிய
உன் பார்வையின்
குறுகிய கணத்தில்..

உஷ்ணமேறி உலர்ந்து விட்டது
என் உதட்டில் துளிர்க்க முனைந்த
ஒரு
புன்னகை..

****

மெட்ரோ கவிதைகள் - 67

*
தெரு முக்கு இட்லி கடையருகே
பற்களை இழந்த
கிழவன் ஒருவனின்
தாடை அசைவில்..

நரைத்து விட்ட வருடங்கள்
கறுத்த கன்னங்களின் குழிக்குள்
இருள் பள்ளம் போல
அமிழ்ந்து மீள்கின்றன
நொடிக்கொரு முறை..

அருகே..

அடித்தண்டு வீங்கிப் பழுத்து
மேடு இறக்கங்களோடு
உயர்ந்து நிற்கும்
அரச மர இலைகள்..

காற்றில் ஒருசேர அசைந்து
முணுமுணுக்கின்றன..

காலத்தின் சலசலப்பை..!

****

மெட்ரோ கவிதைகள் - 68

*
நிழல் மங்கும் இருளில்

சுவரோரம் நிற்கும்
மாட்டு வண்டிக்கு பின்புறமோ
ஆட்டோவின் பின் சீட்டிலோ
தெருவிளக்கின் மஞ்சள் வெளிச்சம் விழாத
மூடிய கடை வாசலிலோ..

அவசரமாய் உடைக்கப்பட்டு
பிளாஸ்டிக் தம்ளர்களில்
நிதானமாய் ஊற்றப்பட்டு
வேகமாய் காலியாகிறது..

சாராயம் என்ற பெயரில்..

அன்றைய
உழைப்புக்கு பிறகான
ஒரு
வலி நிவாரணி..!

****

மெட்ரோ கவிதைகள் - 69

*
முதன்மை நாயகனின்
முதல் நாள்
திரைப்பட ரிலீசுக்கு

தியட்டர் வாசலுக்கு அருகே
குறுகிய சந்தில்

ரகசிய குரலில்
பிளாக் டிக்கட் விற்கும்
இளம்பெண்ணின்
இடுப்பில்

குழந்தையொன்று ..

அம்மாவின் முகத்தை
அண்ணாந்து பார்த்தபடி
விரல் சூப்பிக் கொண்டிருக்கிறது..!

****

மெட்ரோ கவிதைகள் - 70

*
வில் போன்று வளைந்து
துருத்தி அசையும்
நெஞ்செலும்பு
அடுக்கடுக்காய் நெரிய

ஆடுதசை பச்சை நரம்பு சுருள
மிதிக்கும்..
ரிக்-ஷக்காரனிடம்

இறங்கும் இடம்
வந்த பிறகும் இறங்காமல்..

கூடுதலான அஞ்சு ரூபாவுக்காக
பீடா எச்சில் தெறிக்க
உரக்க
பேரம் பேசுகிறான்..

கனத்து பிதுங்கும்
ஒரு முதலாளி..!

****

மெட்ரோ கவிதைகள் - 64

*
மெட்ரோ லாரிக் குழாயிலிருந்து
வீட்டு மாடிப்படி வரை

இடுப்பில் அமர்ந்திருக்கும்
குடத்து நீரில்

அலுங்கியபடி பயணிக்கிறது
உச்சி வெயில்..!

****

மெட்ரோ கவிதைகள் - 65

*
தெருவில்
எதிர் கட்டிட வீட்டில்
காலி செய்த ஒரு
குடித்தனம்

சிறுவர்களின்
குரல்களையும்
தட்டு முட்டு சாமான்களோடு
வாடகை லாரியில் ஏற்றி

ஒரு விடியற்காலை நேரத்திலிருந்து
காணாமல் போயிற்று..!

****

மெட்ரோ கவிதைகள் - 66

*
சாலையின் எதிர் சாரியில்
கோணலாய்
ஹாண்டில் பார் முறுக்கி
சரிந்து நின்ற பைக்கை
ஓரமாய் இழுத்துப்போட்டு..

ஒரு கும்பல்
அடிப்பட்டவனின் ரத்தக்கரையோடு
அவனைத் தூக்கிக் கொண்டு
ஓடிய கணத்தில்..

சிக்னல் மாறி
பின்பக்கம் ஹாரன்கள் என்னை
அவசரமாய் துரத்தின அடுத்த சிக்னல்
நோக்கி விரையும்படி..

****

காற்றில் பறக்கவிட்ட மென் முத்தம்..

*

விடைபெறும்போது
உனக்கென காற்றில் பறக்கவிட்ட
மென் முத்தம்

தவறுதலாக

ரயிலின் ஜன்னல் வழியே
கை நீட்டி ' டாட்டா ' சொன்ன
குழந்தையொன்றின்
விரல்களில்
சிக்கிக் கொண்டது..!

****

இடைப்பட்ட வெளியில்..

*

நெடுநேரம்
தரையை வெறித்தபடி உட்கார்ந்திருந்த
நிமிடங்களை
மின்விசிறி இழைகள் சுழற்றி
ஜன்னல் திரைசீலைகளை அசைத்தன

சொல்லி முடித்த வார்த்தைக்கும்
சொல்ல முடியாமல் தவிக்கும் வார்த்தைக்கும்
இடைப்பட்ட வெளியில்
சம்பந்தமில்லாமல் ஊரும் எறும்பின் வாயில்
சற்று முன் பரிமாறப்பட்ட இனிப்பின்
மிச்சத் துணுக்கு..

இப்படி மௌனக் கணங்களில்
பேச்சற்று இறுகும்
அவமானக் கசப்பின் சிறு உருண்டைகளை..

உலகின் அத்தனை எறும்புகளும்
வந்து இழுத்துச் சென்றால் என்ன..?

****

பிரியங்கள்..

*

கோடையின் முதுகில்
வெயில்
கசகசவென
உருட்டுகிறது நிழலை..

வன்மத்தின் நெருப்பென
தகிக்கிறது
பாலையின் சுருங்கிய தசைகளில்
கானல் நீர் கொப்புளத்தில்
வெடித்து
ஆவியாகி அலையும் பிரியங்கள்..

****

கரைதல்

*

விசும்பல் ஒலியில்
கரைந்து
வழிகிறது

ஒரு வரியிலிருந்து
அடுத்த வரிக்கு

என்
வார்த்தை..!

****

நிரூபிக்கும் தடயங்களற்ற தருணங்கள்..

*

குறுக்கும் நெடுக்குமாக
உயர்ந்து தாழ்கின்றன

சதுரமோ
நீள் சதுரமோ

கட்டமைப்புகளைக் கொண்டதாக
வரையறைக்குட்படுகிறது

ஆழங்களையும்
அகழ்வுகளையும்
வட்டமென நிரூபிக்கும்
தடயங்களற்ற தருணங்களை
கடக்க வல்லது

உணர்வின் வேர் திருகி
கிளை பரத்தும்
கவிதை..!

****

முன்னெப்போதோ மறந்துவிட்ட கைப்பிரதி..

*

அவனுடைய வயது
அதிலிருந்தது..

அவளுடைய வெட்கம்
அதில் சிவந்திருந்தது..

அவர்களுடைய மௌனம்
இன்றும்..
மிதந்து கொண்டு அதிலிருந்தது..

ஒரு புல்வெளி இருந்தது
கொஞ்சம் பனித்துளி இருந்தது
ஒரு குருவியின் ' கீச் ' இருந்தது..

கொலுசின் ஒலியும்
வளையலின் சிணுங்கலும்
அதிலிருந்தது

ஒரு கனத்த கண்ணீர்த்துளியென
வார்த்தையொன்றும் உறைந்திருந்தது..

****

நன்றி : ( உயிரோசை / உயிர்மை. காம் ) [ ஏப்ரல் - 2010 ]

http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=2834

பெரும் குப்பைக் குவியலும்.. அகன்ற சுடுகாடும்..

*
குறுகிய இலக்குகளுக்குள்..
வழிந்து பிதுங்கும் நம்பிக்கைச் சிதறலின்
மிச்சங்களை வீசியபடி..

வசீகரங்களின்
பயங்கரங்களின்
புன்னகைகளின்
அலறல்களின்..
காரிய எதிர்பார்ப்பில் பாதை நீண்ட
நிழல்களின்..
கனவின் ஓலங்களைப்
புசித்து நாறும் மௌனங்களின்..

தொட்டிகளில்..

தேங்கிவிடும் பருவங்களைக்
குவிப்பதில்..
அகன்று நிறம் பூசிக் கொள்கிறது..
சாம்பலென..
நகரத்து சுடுகாடு..!

******

நன்றி : ( உயிரோசை / உயிர்மை. காம் ) [ ஏப்ரல் - 2010 ]

http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=2834

மெட்ரோ கவிதைகள் - 63

*
கிழடுக்கு வகிடெடுத்தது போல்
நகரத்து நெடுஞ்சாலை

வெள்ளை காக்கி உடுப்புகளின்
பூட்ஸ் ஒலித் துல்லியம்

வட்டச் சிவப்பு
அணைத்து திசையிலும் எரிய

இருபுறமும்
அசையாத மனித முகங்கள்

ஓரங்கட்டி ஒடுங்கும்
இருசக்கர வாகனங்கள்

சட்டென ஊமையாகிவிட்டது
நகரத்து பரபரப்பு

நடுக்கத்தோடு காற்றை சுமந்து
சாலை கடக்கிறது
உதிர்ந்த ஒற்றை சருகு
ஒன்றும் புரியாமல்

சர்...சர்ரென்று
கொண்டை விளக்கு சுழற்றி விரையும்
குளிரூட்டப்பட்ட வெள்ளை வாகனங்களில்
யாரும் இல்லை..

****

ஒரு வார்த்தைக்கும்...மறு வார்த்தைக்கும் நடுவே..

*

நீண்டு நிற்கிறது.. இடைவெளி
அகன்ற பள்ளம் போல சரிந்து இறங்குகிறது..
மனதின் இடுக்குகளில்..

எட்டிவிடும் தொலைவிலும் மனிதர்கள் அகலுகிறார்கள்
ஆறங்குல அளவிலான நாக்கிலிருந்து கிளம்பிவிடுகிறது
ஒரு மகா யுத்தமும் கூட

வரலாற்றில் அறுந்து விழுந்த தலைகளை
ஆவணக் குறிப்புகளில் அடுக்கி வைத்திருக்கிறோம்..

உலோக வாற் சப்தங்களை உள்வாங்கிய அதிர்வில்
தலைமுறை தொடர்பழக்கத்தில்..
இன்றும் கீச்சிடுகின்றன...
மொட்டைமாடிகளில் நெல் தேடும் குருவிகள்..

நீண்டு நிற்கிறது இடைவெளி..

ஒரு வார்த்தைக்கும் மறு வார்த்தைக்கும் தொடர்பை அறுக்கிறது
ஒரு மரணத்துக்கும் மறு மரணத்துக்கும் நடுவே.. தெரு வளர்க்கிறது..

மனதின் இடுக்குகளில்..எப்போதும்
அகன்ற பள்ளம் போல சரிந்து இறங்குகிறது..
இடைவெளி..

****

நன்றி : ' கீற்று ' இணைய இதழ் ( ஏப்ரல் - 28 - 2010 )

http://www.keetru.com/index.php?option=com_content&view=article&act=section&id=7172&Itemid=139

நீயில்லாத..

*

ஒதுங்குதல்
என்பது
அத்தனை எளிதாய் இல்லை

நீயில்லாத
மனதின் நிழலில்..!

****

உதிரும் வேப்பம் பூக்களை..

*

மரத்திலிருந்து
உதிரும்
வேப்பம் பூக்களை

சரசர வென ஒலியெழுப்பி
உருண்டு குதூகலித்து
தெரு நிழலை உடைத்து

வரவேற்கின்றன
பழுத்த
சருகுகள்..!

****

சுவர்கள்..!

*
இருவருக்கும் நடுவே
வளர்கிறது
மௌனம்
நேற்றைய உரையாடல்களை
இருண்ட இரவை கலந்தபடி

****

மெட்ரோ கவிதைகள் - 62

*
நசுங்கிய
காகித டீ கப்பை
கடக்கும் நொடியில்

ஒரு கணம்
நின்று
சிந்தனை கலைந்து

பின்பு

வேறு பக்கமாய்
திரும்பி நடக்கிறது
ஒரு
எறும்பு..!

****

மௌன நதியில் மிதவையாகி..

*

மரணத்தை
மருதலித்துவிடச் சொல்லி
அழைக்கிறாய் என்னை..

ஆழ்ந்த துயிலில்
மௌன நதியில் மிதவையாகி

சுழித்து உள்ளிழுக்கத் துடித்துக்
காத்திருக்கும்
கண்ணீர்த்துளி நோக்கி நகர்கிறேன்

மீளாத் துயரத்தை
மறுதலிக்கச் சொல்லி
மேலும் அழைக்கிறாய் என்னை..

****

நானொரு எழுது கருவி...மட்டுமே..

*

நம்பிக்கைக்குரிய வரிகளை
நீக்கிவிடும்படி

இறைஞ்சி நிற்கிறது

முன்னெப்போதோ எழுதிய
கவிதையொன்று

' நானொரு
எழுது கருவி மட்டுமே
எழுதியதை புணரும் உரிமை
எனக்கு மறுக்கப்பட்டிருக்கிறது..' -

என்றேன்
அமைதியாக..!

****

உருகும் மெழுகில்..

*
உறைபனி இரவில்
நிழல் நிழலாய் நீளுகிறாய்

என் மேஜையில்
உருகும் மெழுகில்

அசைகிறது
நேற்றைய இரவு..!

****

நறுமணக் கமழ்தலின் குறிப்புகள்..

*

என்
தனிமைக் கேவலின் ஒலி மோதி
உடைகிறது ஒரு மலர்

நறுமணக் கமழ்தலின்
குறிப்புகளோடு
என்
வனம் விட்டு
வெளியேறுகிறது

வண்டின் நிறமொத்த
இரவொன்று..!

****

யாருமறியாத நள்ளிரவில்..

*

நெடுநேர காத்திருப்புக்குப் பின்
நீ
வந்து கொடுத்த
பரிசுப் பொட்டலத்தை

யாருமறியாமல்
நள்ளிரவில் பிரித்த போது

அதிலிருந்து

குட்டி குட்டியாய்
வர்ணச் சிறகு முளைத்த
முத்தங்கள் பறந்தன..!

****

திங்கள், ஏப்ரல் 26, 2010

தனிமை மௌனம்

*

தனிமை மௌனத்தின்
அடர்த்தியை

தொடர்ந்து அனுப்பும்
குறுஞ் செய்திகள் கொண்டு
நெம்புகிறாய்..!

****

மெட்ரோ கவிதைகள் - 59

*
ஊமை செவிடு என
கையகல அட்டை சொல்லுகிறது

ஒன்றோ இரண்டோ
ரூபாய்களைத் தரத் தயங்கும்
விரல்கள்

புத்தகத்தின் பக்கங்களைப் புரட்டும்
பாவனையில்
வரிகளுக்குள் ஒளிகிறது

****

மெட்ரோ கவிதைகள் - 60

*
மகப்பேறு மருத்துவமனையின்
காம்பவுண்ட் அருகே

தனிமைத் துயரமென
உயரமாய் நிற்கும்
எரியாத மின்விளக்கு கீழே..

சாய்வாய் நிறுத்தப்பட்ட
பைக்கில்

மலங்க விழித்தபடி
தன் அப்பாவுக்காகக்
காத்திருக்கிறது

ஒரு
குழந்தை..!

****

மெட்ரோ கவிதைகள் - 61

*
கோன் ஐஸின்
அடி நுனியை
ஆர்வத்தில் கடித்துவிட்ட
குழந்தைக்கு

தொடர்ந்து வழியும்
ஐஸ் க்ரீம் குறித்த
ரகசியம்
புரியவேயில்லை..!

****

மெட்ரோ கவிதைகள் - 58

*
தீராத தாகத்தில்
வெயில் தகிக்கும் தார் சாலை மீது

டிரைவருக்குத் தெரியாமல்

தண்ணீர் சிந்தி
விரைகிறது
குடிநீர் லாரி..!

***

மெட்ரோ கவிதைக்ள் - 56

*
நுரைத் தள்ளி பாரமிழுக்கும்
வண்டிமாடுகள்
மாநகரத்து வெயிலை மிதித்து
நகருகின்றன

ஒவ்வொரு
சாட்டை சொடுக்கலுக்கு பின்னும்

கண்ணீர் சிந்தலோடு..!

****

மெட்ரோ கவிதைகள் - 57

*
சில்வர் தூக்கின்
வாய்க்குள்
விழும்
பைசாக்களின் சத்தம்

அவன்
புல்லாங்குழலின் இசையை
மேலும் கூட்டுகிறது

ரயிலின்
தாளத்தோடு..!

****

மெட்ரோ கவிதைகள் - 55

*
பள்ளிக்கூட வாசலில்
மாங்காய் பத்தைகள் விற்கும்
மனிதனின்
கனவுகளில்

காரம் குறைவுள்ள
மசாலாக்கள்
பூசப்பட்டிருக்கலாம்..!

****

ரத்தத் துளி..!

*

சிலுவையில்
ஆணி இறங்கிய கணம்

மரம்
ரத்தத் துளி வடித்தது

****

வாசிக்கப்படாத இரவு..

*
முணுமுணுக்கும் சொற்களில்
வழிந்திறங்குகிறது
வாசிக்கப்படாத இரவின்
துர்க்கனவு

அகாலத்தின் குடுவையில்
சொற்ப நினைவில்
மிதந்துக் கொண்டிருக்கிறது
வாலசைக்கும்
மௌனச் சிறகு

****

நிராகரிக்கும் பொருட்டு..!

*

பற்றிக் கொள்ளும்படி
கை நீட்டுகிறது
வாழ்க்கை

அதை
நிராகரிக்கும் பொருட்டு
உதறிச் செல்லவே

நிர்ப்பந்திக்கிறது சூழல்..!

****

இதழ்களின் துளைகள்

*

முட்கிரீடம் துளைத்த
மலர்களின் இதழ்களில்
ரத்தம்
சிவந்திருந்தது

****

துண்டு துண்டாகும் காற்று...

*
நெட்டி முறிக்கும் சோம்பலில்
குட்டி குட்டியாய்
வெளியேற்றும் மூச்சில்

மின்விசிறிக் காற்றைத்
துண்டு
துண்டாக்குகிறாய்
அறை முழுக்க..

முனைத் துடித்து
படபடக்கிறது
இன்னும் எழுதாத
காகித முனைகள்..

****

' நேற்று ' - என்று ஒன்று இருந்தது

*

சென்னை பிராட்வேயில் ராஜா அண்ணாமலை மன்றம் அருகே ஷேர் ஆட்டோவிலிருந்து இறங்கிய நொடியில் என் செல்போன் ஒலித்தது.

நம்பரைப் பார்த்தேன். குணசேகர்.

“என்ன மச்சி. இந்த வாட்டியும் லேட்டா?”- என்றான்.

“எல்லாரும் வந்தாச்சா?”

“நீயும் சையதும் தான் எப்பவும் லேட்டு மச்சான்.”

“பஸ் ஏறிட்டா அரை மணி நேரம்டா குணா. ஒரு தம்மை போட்டு ரெண்டாவத பத்த வைங்க வந்துருவேன்.”

“வீக் - என்ட கெடுத்துராம வந்து சேர்ந்தா சரி.”

செல்போனை அணைத்து பாக்கெட்டில் போட்டபடி ரோட்டைக் கடந்து பழைய திருவள்ளுவர் பஸ் ஸ்டாண்டுக்குள் நுழைந்தேன்.

கூரையில்லாத, வானம் பார்த்த பஸ் ஸ்டாண்டு. முனையில் ஒரு பங்க் கடையும்..பஸ் ஸ்டாண்டின் உள்வளைவில் பிளாட்பாரத் திண்டில் ஒரு நரிக்குறவர் குடும்பமும் அதன் பிரதான அடையாளம்.

நான் போக வேண்டிய இடம், தேனாம்பேட்டை சிக்னலருகே.
எனவே கிளம்பும் நிலையில் எஞ்சின் உறுமலோடு நின்றிருந்த 18 A பஸ்ஸை நோக்கி நகர்ந்தேன்.

டிரைவர் சீட்டு காலியாக இருந்தது.
முன்பக்கமாக உள்ளே ஏறினேன். அது மட்டும் தான் காலியாக இருந்தது.

அடைசலாக இல்லாமல் ஆனால் ஸ்டாண்டிங்கில் பயணிகள் நிறைந்த பஸ். முன் வழியில் ஏறி..மனிதர்களை ஊடுருவி பின்பக்கம் வந்தேன். ஆண் ஸீட் வரிசையில், கடைசியிலிருந்து இரண்டு வரிசைக்கு முன்னாள் ஒரு ஸீட் காலியாக இருந்தது.

‘யாராவது இடம் பிடித்து வைத்திருப்பார்கள் போல’- என்று நினைத்தபடி அந்த ஸீட்டை நெருங்கினேன்.
ஜன்னலோரத்தில் ஒரு பெரியவர் உட்கார்ந்திருந்தார். என்னை ஏறிட்டுப் பார்த்தார்.

“யாராவது வர்றாங்களா.?”- என்றேன் அவரிடம்.

“இல்ல சார்”- என்றார் சிரித்தபடி.

எனக்குக் கிடைத்த ஆச்சரியமான அந்த பதிலோடு, சுற்றியிருந்தவர்களை சந்தேகமாய் பார்த்தபடி தயக்கத்தோடு அந்த ஸீட்டில் உட்கார்ந்தும் விட்டேன்.

எல்லோரின் பார்வையும், இப்போது என் மீது.
அந்தப் பார்வைகளின் உறுத்தலில், சட்டென்று ஸீட்டுக்குக் கீழே குனிந்து பார்த்தேன்.
எவனாவது வாந்தியெடுத்துத் தொலைத்திருக்கிறானா.?
ஊஹூம்ம்.!! அப்படி எதுவும் இல்லை. சுத்தமாயிருந்தது.

“இன்னா சார். எதுனாச்சி கீழ போட்டீங்களா.சார்.?”

பக்கத்திலிருந்த பெரியவரின் குரல். கூடவே அவரிடமிருந்து லேசான, மிக லேசான சாராய வாடை.

சட்டென்று நிமிர்ந்து அவரைப் பக்கவாட்டில் திரும்பிப் பார்த்தேன்.
ஆல்பர்ட் ஐன்ஸ்டீனை நினைவுப்படுத்தும் தலைமுடி. கருப்பு - வெள்ளை - சாம்பல் கலந்த நிறம்.
காற்றுக்குக் கட்டுப்படாமல் கலைந்துக் கிடந்தது. அதிலிருந்து ஒரு சிக்கு வாடை. அழுக்கான உடை. பழுப்பு நிறத்தில் மடியில் ஒரு சிறிய துணி மூட்டை. முகத்தில் ஏகப்பட்ட சுருக்கங்கள்.
மோவாயிலும் மீசையிலும்.’இருந்துவிட்டுப் போகட்டுமே’- என்கிற தினுசில் கொஞ்சம் மயிர் பிசிறுகள்.
பொக்கை வாயில் பள்ளமான புன்னகை. கண்களில் ஒளி.

இந்த ஸீட்டை, யாரும் உட்காராமல் விட்டு வைத்த காரணம் புரிந்தது.

இப்போது, மற்றவர்கள் பார்வையில் ஒரு ஆர்வம். அடுத்து நானும் எழுந்து நிற்கப் போகிறேன் என்ற நக்கலான எதிர்பார்ப்பு.
ஆனால் எனக்கு அவருடைய கேள்விக்கு பதில் சொல்ல வேண்டும் போலிருந்தது.

“கீழ எதையும் போடலங்கைய்யா. பஸ்ஸ சீக்கிரம் எடுத்துட்டா நல்லாருக்கும். கொஞ்சம் காத்தாவது வரும். புழுக்கமா இருக்குல்ல.?”

அவர் சிரித்தார். தலையசைத்துக் கொண்டார்.

“எடுத்துருவான். டீ காபி சாப்ட போயிருப்பான்.”

நான் ‘உஸ்.உஸ்.’- என்று ஊதிக்கொண்டேன். கசகசவென்று இருந்தது.

“உங்களல்லாம் பார்த்தா பாவமா இருக்கே சார்.”

திடீரென்று அவர் அப்படி சொன்னதில்.. எனக்கு ஒன்றும் புரியவில்லை.
சாராய வாடை, இன்னும் நெருக்கத்தில் கப்பென்று மூக்கை நெருடி அந்தப் பக்கம் ஓடியது..
ஒயின் ஷாப் வாடை ஏற்கனவே பழக்கம் தான் என்பதால் அப்படி ஒன்றும் இந்த வாடை ஒரு இம்சையாகத் தோன்றவில்லை. எனவே நிதானமாக அவரை திருப்பிக் கேட்டேன்.

“ஏன் அப்படி சொல்றீங்க.?”

“இவ்ளோ கசகசன்னு கீது. இப்டி இறுக்கமா உடுப்ப போட்டுக்கினு. எப்டி ஆபீஸ் போய் வர்றீங்களோ.? பேஜாரா இல்லீயா சார்.?”

அவருடைய வெகுளித்தனமான விசாரிப்பில் எனக்கு சிரிப்பு வந்தது.

“என்ன பண்றது.பழகிட்டோம். வேற வழியில்ல."

என் தொடைகளை இறுக்கிப் பிடித்திருந்த ஜீன்ஸ் பேண்ட்டின் சுருக்கங்களை நீவி விட்டுக் கொண்டேன்.

அவருடைய ஏழ்மையான தோற்றமும், சுத்தமின்மையும் இத்தனை பயணிகளிடமிருந்து அவரை அன்னியப்படுத்துகிறதா? ஏறக்குறைய.எல்லாருமே களைத்தும், காலையில் வீட்டிலிருந்து புறப்பட்ட புத்துணர்ச்சியை இழந்தும் தானே இருக்கிறார்கள்?

ஆனாலும் மனிதர்கள்.!

பஸ் கிளம்பியது.

பெரியவர் விடாமல் தன் பேச்சைத் தொடர்ந்தார். குரலில் வயோதிக நடுக்கம் இருந்தது. இருந்தாலும் குரலில் மெலிதாக ஒரு 'கணீர்’தன்மை.

அவருடைய சிரிப்பும், அந்த சாராய வாடை கலந்த பேச்சும் இத்தனை நேரம் பழகிவிட்டது.

18 A - பஸ் ஸ்டாண்டிலிருந்து வெளியேறி, அண்ணாமலை மன்ற சிக்னலில் வளைந்து, கோட்டை ரயில் நிலைய பயணிகள் நடைமேடையை ஒட்டின பாதையில் டெண்ட்டல் ஆஸ்பத்திரியின் எதிர் சாரியில் கடந்த போது சாலை விளக்குகள் மஞ்சளாகி விட்டிருந்தன.

மீண்டுமொரு சிக்னல். பச்சை - ஆம்ப்பர் - சிகப்பு. வித வித வாகனங்கள். வித வித ஹாரன் ஒலிகள். நகரம் சூடு பிடிக்க ஆரம்பித்துவிட்டது.
அதுவும் சனிக்கிழமை மாலை நேர ‘பீக்-அவர்’.

என் செல்போன் மீண்டும் ஒலித்தது. குணசேகர் தான்.

“என்ன மச்சி எங்க இருக்க.?”

“பஸ் எடுத்துட்டாண்டா .வந்துருவேன். சையதுக்கு கால் போட்டியா.?”

“அவனும் பஸ்ல தான் வந்துகிட்டு இருக்கான். ஏண்டா தெரியாம தான் கேக்குறேன். பைக்கை ரெண்டு பேருமே வீட்டுல தொடச்சி தொடச்சி வச்சீப்பீங்களா.? ஓட்ட மாட்டீங்களா.? ஏண்டா கொல்றீங்க.?”

“டிராபிக் ஏரியாடா. சனிக்கிழமை மச்சான். உயிர் போயிரும். மூட் அவுட் ஆயிரும். புரிஞ்சுக்கடா.. ஜஸ்ட் ட்வெண்ட்டி மினிட்ஸ் மச்சி.”

“வந்து தொலை.”

சிரித்தபடி செல்போனை பாக்கெட்டில் வைத்துக் கொண்டேன்.
வாராவாரம் சனிக்கிழமை மாலைகள் எங்களுக்கானது..கல்லூரி காலங்கள் முடிந்த பின்பும் ஆளுக்கொரு வேலையில் உட்கார்ந்த பிறகும் தொடரும் சந்திப்பு. கல்யாணம் முடிந்தாலும் சந்திப்பு தொடரவேண்டும் என்று தீர்மானித்திருக்கிறோம்.

இதில் பிரபு, குணசேகர், நந்து, தரணி, பாஸ்கர், ரஞ்சித், மௌரியா ஏழு பேரும் தேனாம்பேட்டை எல்டாம்ஸ் ரோட்டில் குடியிருப்பு.
நானும் சையதும் தான் தொலைவிலிருந்து வருபவர்கள். நான் வண்ணாரப்பேட்டை. சையது விருகம்பாக்கம்.

எனக்கு பஸ் பயணம், பால்ய சிநேகம். மிகவும் பிடித்த விஷயம்.
நிறைய மனிதர்கள். நிறைய சுவாரசியங்கள்.
காலப்போக்கில் வாழ்வின் அவசியங்கள் என்ற பேரில் அதை நான் முற்றிலும் இழந்துவிட விரும்பவில்லை. அது குணாவுக்கோ இன்ன பிற நண்பர்களுக்கோ புரியாது. புரிய வைக்க நான் முயன்றதும் கிடையாது.

“செல்போனுங்களா சார்.? பத்திரமா வையிங்க சார்.”

பெரியவர் என் உரையாடலை கவனித்திருக்கிறார் என்பதை அவர் சொன்னதிலிருந்து புரிந்து கொண்டேன்.

“பத்திரமா தான் வச்சிருக்கேன்.”

“இத்துனூண்டா எலிக்குஞ்சு மாரி கீது. அதுல பேசிக்குறீங்க. அதிசயமா இருக்கு சார்”- வியப்பில் அவர் முகம் பிராகசித்தது.

“விஞ்ஞானம் பெரியவரே.! விஞ்ஞானம்.! நாடு முன்னேறுதுல.? புதுசு புதுசா கண்டுபிடிச்சா தானே எல்லாமே ஈஸியா இருக்கும்.?”

புரிந்தது போல தலை ஆட்டிக்கொண்டார்.

“ரெண்டு வாரத்துக்கு முந்தி ஒங்கள மாரி ஒரு சாரு. இத மாரியே ஒரு போனை பஸ்சுல வுட்டுட்டு அவசரமா ஸ்டாப்பு வர்றதுக்குள்ள சிக்னல்ல எறங்கிட்டாரு. நான் எடுத்து வச்சிக்கினேன்.
அத பாத்துட்டு இன்னொருத்தரு சொன்னாரு ‘உனக்கு லக்கு தான்னு'. இன்னா லக்கு.? பாவம்.! அப்புறம் எனக்கு ஒரு ஐடியா தோணிச்சி. ஒரு வாரம் பூரா அதே டைமுக்கு டெய்லி அதே பஸ்சுல ஏறி ஒக்காந்தேன். செல்போனை தொலைச்சவரு அதத் தேடிக்கினு வருவாரு. வந்தா குடுத்திரலாம்னு. ப்ச்.! ஆனா ஆளு வரல சார்.”

அவர் முகம் இதை சொல்லும்போது சோகமாகியது. நான் அவரை ஆச்சரியமாக பார்த்தபடியே இருந்தேன். இந்தக் காலத்தில் இப்படியும் ஒரு மனிதர்.!

“அப்புறம் என்ன பண்ணீங்க அந்த போனை.?”

“அத வச்சிக்கினு நான் இன்னா பண்றது.? என் மவன்கிட்ட குடுத்துட்டேன். அவன் 'ஏதுன்னான்.?’ இந்த மாரின்னு விஷயத்தை சொன்னேன். சரி வுடுன்னான். வுட்டேன்.”- சிரித்தார்.

“கரக்ட் தான்.”- நானும் சிரித்தேன்.

“எத்தனை பசங்க உங்களுக்கு.?”- என்றேன் தொடர்ந்து.

“பையன் ஒன்னு. பொண்ணு ஒன்னு. பையன் டாக்சி ஓட்டுறான். பொண்ண மொகப்பேறுல கட்டி குடுத்துட்டேன். இப்போ மாசமா கீறா. மாப்ள சொந்தமா அச்சாபீஸ் வச்சிக்கீறான்.”

“நீங்க யாரோட தங்கியிருக்கீங்க.?”

“மவனோட தான். மருமக ரொம்ப மருவாதியான பொண்ணு சார். நல்லா கவனிச்சிப்பா. மவனுக்கு மூணு வயசுல புள்ள கீறான்.. ஷோக்காருப்பான்.. நான் வூட்டுக்குள்ள பூந்ததுமே, என் சொக்காய புட்சி, ஏறி கழுத்த கட்டிக்கினு தொங்குவான்.”

பெரியவருக்கு தன் பேரனைப் பற்றி சொல்ல சொல்ல குரலில் உற்சாகம் பீறிட்டது.

“உங்க வொய்ப்.?”

“கீறா. அவளும் என்கூட தான் கீறா. சொம்மா இல்லாம அக்கம்பக்கத்துல வூட்டு வேலக்கி போவுறா. 'ஏன்டினா.?’- ’கையி காலு நல்லாருக்க சொல்லோ சொம்மா கெடக்க சொல்றியா?’-ம்பா. மருமவளுக்கு புடிக்கல. ‘வேனாத்தங்கறா.’ கெழவி கேக்காது. சரி தான்னு நானும் வுட்டேன்.”

பெரியவரிடமிருந்து சிரிப்பு. கண்கள் இடுங்கிய சிரிப்பு.

“நீங்க என்ன வொர்க் பண்ணுறீங்க.?”

“நான் மின்ட்ல வேல செய்யுறேன் சார். இப்போ வேல முடிஞ்சி வூட்டுக்கு போயிட்ருக்கேன்.”

“வீடு எங்க இருக்கு.?

“தாம்பரம் சார்.”

“அவ்ளோ தூரத்துல இருந்தா வந்து போறீங்க.?

“மொதல்ல மின்ட்ல தான் இருந்தேன். இப்போ கீற வெலவாசிக்கு கட்டுபடி ஆவுல. அதான் அங்க போயிட்டன்."

“மின்ட்ல கடை எங்க.?”

“கிரவுன் தியேட்டரு பக்கமா. பாத்திரத்துக்கு பாலீஷ் போடற கட சார். முப்பத்தஞ்சி வருஷமாச்சி வந்து. கடக்கி பக்கத்துல தான் வூடும் இருந்துச்சி.”

“வாட்.? முப்பத்தஞ்சி வருஷமா அதே கடையா.? ஐ மீன் ஒரே கடையிலா வேலை செய்றீங்க.?

என்னால் நம்ப முடியவில்லை. ஆனால் பொக்கை வாய் சிரித்தது.

“ஆமா சார். என் மொதலாளி தங்கமானவரு. நான் மெட்ராசுக்கு வந்த புதுசுல, எனக்கு யாரயும் தெரியாது. ஒரு எடமும் புரியாது. வேல கேட்டு வந்தேன். சேத்துக்கினாரு. கூடவே தொழில் கத்துக் குடுத்து நல்லா பாத்துக்கினாரு. இப்பவும் அதட்டி தான் பேசுவாரு. நல்ல மனுஷன்.”

எனக்கு ஆச்சரியங்களை அள்ளி வீசிக்கொண்டே இருந்தார் அந்த மனிதர். முப்பத்தஞ்சு வருடங்கள். கிட்டத்தட்ட என் வயது. நாங்களெல்லாம் அடுத்த பத்தாண்டுகளுக்கான எதிர்காலத்தை திட்டமிடுகிறோம். தனியாக ஒரு சாப்ட்வேர் கம்ப்பெனி என்று கனவு வைத்திருக்கிறோம்.

ஒரு மனிதன். ஒரே கடையில் கடந்த முப்பத்தஞ்சு வருடங்கள் தொழிலாளியாகவே தன் காலத்தை கழித்திருக்கிறான். தலைமுறைகள் மாறியது பற்றிய கவலை அவர் பார்வையில் வேறாக இருப்பதை ஏற்றுக் கொள்ளவும் முடியவில்லை. மறுக்கவும் முடியவில்லை.

என்னைக் குழப்பிக் கொண்டிருக்கிறார் இந்த மனிதர்.

“பெரியவரே. உங்க பேரு.என்ன.?”

“முருகேசன்ங்க."

“என்ன வயசாகுது உங்களுக்கு.?”

“கணக்கு தெரில சார். லேட்டா தான் கல்யாணம் கட்னேன்.. மவன் பொறந்தே முப்பது வருஷத்துக்கு மேல ஓடிருச்சே.. அண்ணாதொர தனிக் கட்சி ஆரம்பிச்சாரே அப்போல்லாம்.. கல்யாணம் கட்ல நான். வண்ணாரப்பேட்ட ராபின்சன் பார்க்ல தான தலைவருங்க கூடுவாங்கோ. எப்போ பாரு மேடை பேச்சு தான். ஜே ஜேன்னு ஜனம் கூடும். நான் அண்ணாதொர மாரியே பேசிக் காட்டுவேன். ஜோரா பேசுறடா நீ-ம்பாரு மொதலாளி.”

ஒரு அட்டகாச சிரிப்பு.

பஸ் சென்ட்ரல் கடந்து, பழைய மத்திய சிறைச்சாலைப் பாலத்தைக் கடந்து சிம்ப்ஸன் சிக்னலில் நின்றது.

“நானும் நீங்க வேலைப் பார்க்குற ஏரியா தான் பெரியவரே.! ஆனா. மின்ட் பிரிட்ஜூக்கு அந்த பக்கம். சிமிட்ரி ரோடு.”

“ஹ.ஹ.ஹ.ஹ.!”

குழந்தைத்தனமான சந்தோஷ சிரிப்பு ஒன்று அவரிடமிருந்து வெளிப்பட்டது.

“அப்போ நம்ம கடப்பக்கம் வந்திருப்பீங்களே..சார்?”

“இருக்கலாம். எனக்குத் தெரியல. கிரவுன் தியேட்டர்ல படம் பார்க்க வருவேன்.. முன்ன காலேஜ்ல படிக்கும்போது கிரவுன் தியேட்டர் எதிரே பிளாட்பாரக் கடைல.. பழைய புக்ஸ் வாங்க வருவேன்.. இப்போ அங்க புக் கடை இல்லை.”

“ஆமா. ரத்னம் கட அது.. ரொம்ப வருஷம் வச்சிக்கினுருந்தான். இப்போ கட்டுப்படி ஆவுலன்னு தூக்கிட்டான்.
எங்க பாத்திர கட, மெயின்ல இல்ல சந்துல கீது.."

“அடுத்த முறை கட்டாயம் தேடி வர்றேன்.”

“வாங்க.வாங்க. எங்க மொதலாளிய பாத்தீங்கன்னா ரொம்ப குஷியாயிடுவாரு.”

“நிச்சயமா வருவேன்.”

பஸ் சிக்னலில் இருந்து புறப்பட்டு பெரியார் சிலையருகே டிராப்பிக்கில் நகர்ந்தது.
பெரியவர் பெரியார் சிலையைத் திரும்பிப் பார்த்தார்.

நான் இடது பக்கம் அரசினர் தோட்டத்து வளாகத்தில் மிக பிரம்மாண்டமாய் ரெடியாகிக் கொண்டிருக்கும் புதிய சட்டமன்றக் கட்டிடத்தை பார்த்தேன்.

பஸ்ஸில் இருக்கும் அணைத்து பயணிகளுமே.. குனிந்து குனிந்து ஒரு அதிசியத்தை பார்ப்பது போல ஜன்னல் வழியே நோட்டம் விட்டார்கள். கிடுகிடு என்று கம்ப்யூட்டர் கிராபிக்சில் உருவாவதை போல ஒரு சில மாதங்களில் பார்வைக்கு முளைத்த அந்தக் கட்டிடம், அண்ணா சாலையின் ரெகுலர் பயணிகளுக்கும் வாகன ஓட்டிகளுக்கும் ஒரு ஆச்சரியம் தான்.

“கரெக்டா தான் சொன்னாரு..”

“யாரு.?”- எனக்குப் புரியவில்லை.

“ராமசாமி அய்யா.”

எனக்கு தாமதமாக உரைத்தது.

“பெரியாரா.?”

“ஆமா சார். விஞ்ஞானம் வளர வளர மனுசன் முன்னேறுவான். கையில புடிக்க முடியாது. வெங்காயம்-பாரு”

“ஆமா.ஆமா.. உங்க காலத்துல நீங்கல்லாம் கொடுத்து வச்சவங்கல்ல.? அவர் பேச்செல்லாம் நேருல கேட்டுருப்பீங்க. எங்களுக்கு புக்கு தான் வழி.”

“ஒரே ஊரு தான் சார்.”

“என்ன சொல்லுறீங்க.?”

“ஈரோட்ல அவரு இருந்த தெருவுல தான் என் வூடு. அப்போ நான் தம்மாத்தூண்டு தான் இருப்பன். இங்க வாடா வெங்காயம்பாரு. ஆளு சும்மா ஜம்முன்னு இருப்பாரு சார்”

எனக்கு நாக்கு மேலண்ணத்தில் ஒட்டிக்கொண்டது.

“அவரு எவ்ளோ நல்லது செஞ்சாரு.. எவ்ளோ போராட்னாரு. கடசீல இங்க தூக்கியாந்து செலயா ஒக்கார வச்சி கருப்பு பெயிண்ட்ட அடிச்சி வுட்டுட்டானுங்கோ. பஸ்சுங்க பொகை கக்கிக்கினு போவுது. ஜனங்கல்லாம் ஆபீஸ் போய்க்கினேருக்குது. காலம் ஓடிப்பூட்சி.”

நான் அவரையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டே இருந்தேன். செல்போன் ஒலித்தது. எடுத்தேன்.

“குணா.! மவுண்ட் ரோடு கிராஸ் பண்றேன்.மச்சி..ஓ.! அப்படியா.? சையதும் வந்துட்டானா.? ஓகே.ஓகே.”

செல்போன் அணைந்தது.

“போன்னு வந்துக்கினே இருக்குதுங்களே சார்.! எங்க வேல பாக்குறீங்க.?

சிஸ்டம் அனலிஸ்ட் என்பதை இவருக்கு எப்படி விளக்குவது என்று ஒரு நொடி குழம்பினேன்.

“வெளிநாட்டு கம்பெனிகளுக்கு இங்கருந்தே வேலை செஞ்சி தர்றோம். ஒரு டீமா வொர்க் பண்றோம். நல்ல சம்பளம்.”

புரிந்தது போல மையமாகத் தலையசைத்துக் கொண்டார்.

“மச்சினு சொன்னீங்களே..யாரு..சார்.? சிநேகிதக்காரரா?”- கண்கள் இடுங்க சிரித்தபடி கேட்டார்.

“ஆமா.”

“என் மவன் என்ன ‘மாமா'னு தான் சொல்லுவான்."

எனக்கு வேடிக்கையாக இருந்தது.
மெட்ராஸ் பாஷையில் ‘மாமா’என்கிற விளிப்பு அன்பின் வெளிப்பாடு. நண்பர்களுக்கிடையே சகஜம். இது எனக்கு தெரியும்.
ஆனால் தகப்பனையே.. அப்படி அழைப்பது என்பது.!

நான் புன்னகைத்தேன். உறவையே கேள்விக்குள்ளாக்கும் 'அன்பு’ அவர் சொல்ல வருவது.

“கலக்சன் நல்லாருந்தா தண்ணீ சாப்பிடறீயா மாமா’ம்பான். எனக்கு சீமை சரக்கு ஒத்துக்காது. கையில துட்டு தந்துருவான். நமக்கு எப்பவுமே சாராயம் தான் லாயக்கு. மருமவ தான் திட்டிக்கினே இருக்கும். புடிக்காது அதுக்கு.. ஒடம்ப ஏன் கெடுத்துக்கறனு கத்தும். ஆனா.. புருஷன ஒன்னும் சொல்லாது.. சின்ன வயசுல்ல.? அதான். ஆனா என் மேல பாசம் ஜாஸ்தி.. எனக்குன்னு தனியா கோழிக் கறி வறுத்து வச்சிரும்.”

சொல்லும்போதே அவர் கண்கள் மின்னியது.

நான் அமைதியாகிவிட்டேன். பஸ் அண்ணா மேம்பாலத்தில் மெதுவாக ஊர்ந்துக் கொண்டிருந்தது. அவர் உற்சாகமாக பேசிக் கொண்டிருந்தார்.

“என் மவன் கல்யாணத்துக்கு என் மொதலாளியும் நானும் தான் எங்க பாத்திர கடயிலருந்து கெளம்பனோம். ஏற்பாடெல்லாம் அவரு தான் செஞ்சாரு. திருவொத்தியூர் கோயில்ல கல்யாணம். கெளம்பும் போதே சொன்னாரு. ’டேய்.! மவன் கல்யாணத்துக்கே மொய் எழுதிராத.. நீ ஏடாகூடமான ஆளு’னு.. தாலி கட்டிட்டு என் மவனும் மருமவளும் மொதலாளி கால்ல வுளுந்து ஆசீர்வாதம் வாங்கிக்கினு என் கால்ல வுளுந்து எழுந்தாங்கோ. டக்குனு அவங் கையில ஐநூறு ரூபாவ திணிச்சிட்டேன். மொதலாளி திட்னாரு. 'என்னடானாரு?’ எனக்கோ ஒரே சிரிப்பு. மவனும் முழிக்கறான் மருமவளும் முழிக்குது."

“ஆமா.ஏன் அப்படி செஞ்சீங்க.?”

“அவன் என்னை ’மாமா’னு தான கூப்புடறான்.! அதான்.. மருமவனுக்கு மாமனோட மொத சீர்னு சொன்னேன்.”

சொல்லிவிட்டு அட்டகாசமாக சிரித்தார்.
என்னாலும் சிரிப்பைக் கட்டுப்படுத்த முடியவில்லை.

பஸ்ஸின் இரைச்சலுக்கு எதிராக எங்கள் உரையாடல்.. சத்தமாக இருந்ததால் எல்லோரின் கவனமும் இந்தப்பக்கம் குவிந்திருந்தது.

என் மனசுக்குள் பலவித எண்ணங்கள் முன்னும் பின்னும் கலைந்து மோதின.

பஸ் - டி.எம்.எஸ்ஸில் டிக்கட் பரிசோதனைக்காக ஸ்டாப் ஓரமாக நிறுத்தப்பட்டது. ஏனோ மனம் நண்பர்களை நிராகரித்துத் தனிமை நாடியது.
அடுத்த ஸ்டாப்.. தேனாம்பேட்டை சிக்னல்.
சையதும் இந்நேரம் வந்து சேர்ந்திருப்பான். நண்பர்கள் ஆவலோடு எனக்காகக் காத்திருப்பார்கள்.

நான் என் முடிவை மாற்றிக்கொண்டேன்.

“நான் இறங்குறேன் பெரியவரே.. மின்ட் வரும்போது உங்கள எப்படியும் தேடி கண்டுபுடிக்கிறேன். வரட்டுமா.?”

“சரிங்க சார். உங்க போன் பத்திரமா இருக்கான்னு பாத்துக்கோங்க.”- என்று சிரித்தார்.

பதிலுக்கு புன்னகைத்தபடி பாக்கெட்டைத் தொட்டுக் காட்டினேன்.

“இருக்கு” என்றேன்.

கண்கள் இடுங்க சிரித்தார்.

பஸ்சிலிருந்து இறங்கி செக்கிங் இன்ஸ்பெக்டரிடம் என் பஸ் டிக்கட்டை கொடுத்துவிட்டு, பஸ்ஸை சுற்றிக் கொண்டு நடந்தேன்.

ஜன்னலோரமாக உட்கார்ந்திருந்த அவருடைய பார்வை..
தொலைவில் ஒரு உயரமான கட்டிட மேற்தளத்தில் நிறுவப்பட்டிருந்த அகலமான விளம்பர போர்டில் நிலைக் குத்தியிருந்தது.

நான் சுரங்கப்பாதையில் இறங்கி மறுபுறம் சாலையில் ஏறி இந்தப்பக்கம் பார்த்தேன்..
பஸ் போய்விட்டிருந்தது.

தலைத் திருப்பி அந்த விளம்பரப் போர்டை கவனித்தேன்.

டாப்சும் டைட்சும் அணிந்த கவர்ச்சியான மாடல் பெண்ணின் கையில் ஒரு தனியார் நிறுவனத்தின் நவீன செல்போன் விளம்பரப்படுத்தப் படுத்தப்பட்டிருக்கிறது..
அவள் தன் அழகான புன்னகையால்.. ஒயிலாக தலை சாய்த்தபடி இந்த நகரத்து மனிதர்கள்..அத்தனைப் பேரையும் சலிக்காமல் பார்த்துக் கொண்டிருக்கிறாள்.

மீண்டும் என் செல்போன் ஒலித்தது.

“என்னடா.?”- என்று ஆரம்பித்த குணாவை இடையில் வெட்டி..

“ஸாரி மச்சி..தலைவலிக்குது.. நான் பாதியிலயே கிளம்புறேன். நீங்க கண்டினியூ பண்ணுங்க.. நாம நெக்ஸ்ட் வீக் மீட் பண்ணலாம்.”

அவனுடைய பதிலுக்கு காத்திருக்காமல் போனை துண்டித்தேன்.
அதை சுவிட்ச் ஆப் செய்து விட்டு பஸ் ஸ்டாப்புக்கு பின்புறம் இருந்த பெட்டிக் கடையில் ஒரு சிகரட் வாங்கி பற்றவைத்தேன்.

அங்கேயே கொஞ்சம் வெள்ளை தாள்கள் வாங்கிக் கொண்டேன்.
சிகரட்டை ஊதிப் பாதியில் எறிந்துவிட்டு பஸ் ஸ்டாப்பிலிருந்த சிமன்ட் திண்டில் உட்கார்ந்து எழுதத் தொடங்கினேன்.

முதல் பக்கம் முழுக்க குறிப்புகளும்..
இரண்டாம் பக்கத்தில்.. ஒரு கதைக்கான வடிவமும் தொடங்கியிருந்தது.

பிராட்வேக்கு போகும் பஸ் ஒன்று வரவே.. ஓடி சென்று ஏறிக் கொண்டேன்.

எனக்கு உடனே வீட்டுக்குப் போயாக வேண்டும். இதை அப்படியே எழுதியாக வேண்டும்.
மனதின் எண்ண அலைகள்.. கண்டதையும் யோசித்தபடி விரைந்தது.

பஸ்...அதே பெரியார் சிலையையும் புதிய சட்ட மன்றக் கட்டிடத்தையும் கடக்கும்போது...

அந்தப் பெரியவரின் இடுங்கிய கண்களும் சிரிப்பும் மனதுக்குள் ஒரு முறை வந்து போனது.

******************
நன்றி : ' கீற்று ' இணைய இதழ் [ ஏப்ரல் - 12 - 2010 ]
http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=5554:2010-04-12-07-24-15&catid=3:short-stories&Itemid=266

துடிப்பு

*

பெரிய முள்ளை
சூரியனில் செருகி
சின்ன முள்ளை
நிலவில் ஊன்றி

நொடிக்கு..நொடி காத்திருக்கிறேன்

அவள் அழைப்புக்காக
துடித்தபடி..!

***

ஒரு நொடியின் ஆயிரம் பாகம்..

*
உச்சியின் விளிம்பிலிருந்து...
நழுவத் தொடங்கினேன்

காற்றை அவசரமாய் உள்ளிழுக்கிறது
நுரையீரல்..
காட்சியின் குழப்பங்கள்..
யாவற்றையும் பச்சை நிறத்தில்
வர்ணம் தீற்றுகிறது..

திடீரென்று பேரிரைச்சல்..
காதில் அடைப்பட்டு..
வியாபிக்கிறது எப்போதுமே அறிந்திராத
கனத்த மௌனமொன்று..

கீழ் உந்தும் உயிரும்
கவர்ந்து கொள்ளும் விசையும்...
ஒருங்கே ஆலிங்கனம் செய்தபடி..
முனகுகின்றன திசைகளை அறுத்து..

ஒரு நொடியின் ஆயிரம் பாகத்தின்
ஒற்றை மெல்லிய இடைவெளியில்
பள்ளத்தாக்கின் மென்மையை தொட்டுணர்ந்த
மறுகணம்..

உடைகின்றன எலும்புகள்...
நசுங்குகின்றன நரம்பு மண்டலங்கள்..
உடனே..
நொறுங்குகிறது மண்டைக் கூடு...

ரெண்டாய் பிளந்து வெளியேறும்
மூளையின் சொதசொதப்பு...
முதல் முறையாக..

ஆகாயத்தை...
பள்ளத்தாக்கை...
நீல பச்சை வர்ணத்தை...
வாழ்ந்ததாக நம்பிய உலகத்தை...
தரிசிக்கும்போதே...

அதன் மீது கவிகிறது...வழிகிறது..
இருள் மசிய ஒரு கருநீலப் பிரபஞ்சம்...

ரத்தக் கொப்பளிப்பை
இதயம் மட்டும்...பரப்புகிறது..
அப்பள்ளத்தாக்கெங்கும்...
நிரப்பி விடும் ஆவலோடு..!

*****

நன்றி : ' திண்ணை ' இணைய இதழ் [ ஏப்ரல் - 25 - 2010 ]

http://www.thinnai.com/?module=displaystory&story_id=31004252&format=html


சுவாசிக்கும்படி எழுதிச் செல்லும் காற்றின் கட்டளைகள்..

*
கதவடைத்துப் போகின்றன நம் தீர்மானங்கள்..
இருள் தன் தனிமைக்குள் என்னை இழுத்துக் கொள்கிறது..
அல்லது..
உன்னால் நான் அனுப்பி வைக்கப் படுகிறேன்..

சுவாசிக்கும்படி எழுதப்படும் காற்றின் கட்டளைகளை..
நிராகரித்துவிட யோசிக்கிறது மூச்சுக் குழாய்..

என் நியாயத் தர்க்கங்களை..
சுவீகரித்துக் கொள்கின்றது..
நிழலென என்னோடு தங்கி விட்ட என் அவமானங்கள்..

புன்னகை முகமூடியை முகத்தோடு சேர்த்து தைத்துவிடும்
நைச்சியக் கூர்மைகளை...
துரோக ஊசிகள்..தம் காது துளைக்குள் ஏற்றிக் கொள்கிறது..
மௌனமாய்..

மேலும்...பல கதவுகளும் சுவர்களுமாய்..
நீண்டு உயரும்...தருணங்கள்..
வாழ்வின்...முடிவுகளென மேற்கொள்ளப்படும்
தீர்மானங்களோடு... ஒத்துப்போகின்றன..

தனிமை இருளில்..
சுவாசிக்கும்படி எழுதப்படும் காற்றின் கட்டளைகளை..
மறுபரிசீலனை செய்யத் தூண்டுகிறது..
நைச்சியக் கூர்மைகளும்..
காது துளைகளும்..

****

நன்றி : ( உயிரோசை / உயிர்மை. காம் ) [ ஏப்ரல் - 19 - 2010 ]

http://www.uyirmmai.com/Uyirosai/Contentdetails.aspx?cid=2806


நிலவைக் கிள்ளி இரவெங்கும் தூவுதல்..

*
திசைகளை எழுதத் துணிகிறாள் சிறுமி..
பறவைகளின் சிறகுகள் பற்றி..
சிலேட்டில் குறிப்பிட்டுக் கொள்கிறாள்..

வானம் கலைத்து மேகம் வரையும் ஓவியங்களை..
தன் விரல் தூரிகை கொண்டு நகல் எடுக்கிறாள்..

'உஷ்ஷ்..' -என்று உதடுகளை இறுகப் பூட்டி..
இரைச்சல்களுக்குரிய...மௌனச் சாவியை...
மரப் பொந்தொன்றில்..விட்டெறிகிறாள்..

அம்மாவின் முந்தானை வர்ணத்தில்..
சிறைப்பட்டிருக்கும் பட்டாம்பூச்சியை.. இழை பிரிக்கிறாள்..

கிணற்றடி...சலவைக் கல் மீதமர்ந்து..
நிலவைக் கிள்ளி இரவெங்கும் தூவுகிறாள்...

தொலைதூர விடிவெள்ளியொன்றின்...
நுணுக்க மினுமினுப்பில்..
அசைந்து கொண்டே இருக்கிறது..
அவளின் தூங்கும் இரவும்...திறக்கும் கதவும்..!

****

நன்றி : ( உயிரோசை / உயிர்மை. காம் ) [ ஏப்ரல் - 2010 ]

http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=2757

பொம்மைகள் சிரிக்கின்றன..

*
ஐந்து விரல் நுனிகளிலும்
மைப்புள்ளியிட்டு
வரைந்த பொம்மைகள் சிரிக்கின்றன

சாப்பிட அழைத்தும்
கை கழுவ உத்தரவிட்டும்

பிடிவாதமாக மறுக்கிறாள்
பாவம் பொம்மைகள் என்று

' அவைகளுக்கும் நீ உணவு ஊட்டலாம்..
வா... சாப்பிடு ' - என்ற
அம்மாவின் சாமர்த்தியத்தை

விழிகள் கலங்க.. உதடு பிதுங்க
எளிமையாக மறுக்கிறாள்

' வேணாம்மா... அதுங்க செத்துடும்..! '

****

நன்றி : ' கீற்று ' இணைய இதழ் ( ஏப்ரல் - 22 - 2010 )

http://www.keetru.com/index.php?option=com_content&view=article&act=section&id=6196&Itemid=139

எழுத பயன்படாத கவிதைக்கான சொற்கள்..

*
அளவற்ற நம்பிக்கைச் சருகுகள்
மனம் போர்த்தி
மௌனம் உலர்த்துகின்றன

துண்டிக்கப்படும் கனவுகளின்
சாளரத்திலிருந்து
காற்றென கசிகிறது
பாதி வாசித்து கைவிடப்பட்ட
துரோகத்தின் இசை

பரிந்துரைக்கப்படும்
பாதைகளின் நான்குவழித்
திசைக் குழப்பத்தில்

பாதங்கள் பயணிக்கின்றன
யாரும் அறிந்திராத
ஒற்றையடிப் பாதையில்

உதிரும் பழுப்பு இலைகளின்
நரம்புகள் தொய்ந்து சுருங்கித் தோற்றமளிப்பதில்
கண்டடையாமலே
அதனின்று நழுவுகிறது
எழுத பயன்படாத கவிதைக்கான
சொற்கள்

அளவற்ற நம்பிக்கைச் சருகுகள்
மௌனம் போர்த்தி
மனம் உலர்த்துகின்றன

****

நன்றி : ' கீற்று ' இணைய இதழ் ( ஏப்ரல் - 10 - 2010 )

http://www.keetru.com/index.php?option=com_content&view=article&act=section&id=5277&Itemid=139

ஞாயிறு, ஏப்ரல் 25, 2010

தெரு நிழல் மீது.. உதிரும் சிறு பூக்கள்..

*
மரத்தின் கிளைகளை..
நிழல் பரப்பிய
வெயில்..

வேடிக்கைப் பார்த்தபடி
இருக்கிறது..

தெரு நிழல் மீது..
மரம் உதிர்க்கும்
சிறு பூக்களை
அமைதியாக..!

****

தீற்றல்..

*
மரணமொன்று
வண்ணத் தீற்றலிடப்பட்ட
கேன்வாசில்..

ஓவியனின்
கையெழுத்து மீது..

கண்காட்சியின் சாளரம் வழியே..
தன் நிழலைப் பூசிக் கிடந்தது
வெயில்..!

****

மனக் கதவு

*
இரவு
என்னை உள்முகமாகத் திருப்புகிறது..

நிலவின் கனவை
நட்சத்திரங்களில் கிறுக்கிப் பதுக்க
மனக் கதவைத் துளையிடுகிறது..

உன்
நினைவின் படிமக் கூர்மை..!

****

செவ்வாய், ஏப்ரல் 13, 2010

பிரபஞ்சத்தை வரையும் ஜரிகைத் துகள்..

*

ர்மங்களை உள்ளடக்கி
அகாலங்களில்
பரவுகிறது குளிர் இரவு

நடுக்கங்களுடன் சுவாசிக்கும்படியான
தருணங்களை உதிர்க்கின்றன
கடந்து செல்லும்
நொடிகளோ நிமிடங்களோ
அல்லது
காலவரையறையின் ஏதோவொரு அளவீடோ

இருளின் மினுமினுப்பை
உதறிக் கொள்கிறது
பிரபஞ்சத்தை வரைந்து வைத்திருக்கும் மனம்

நட்சத்திரங்கள்
ஜரிகைத் துகளென
கனவுகளில் பறக்கின்றன
சூரியனில் குவிந்து
வட்டமாய் எழும் வரை..!

****

நன்றி : ' கீற்று ' இணைய இதழ் ( ஏப்ரல் - 7 - 2010 )

http://www.keetru.com/index.php?option=com_content&view=article&act=section&id=5197&Itemid=139

திங்கள், ஏப்ரல் 12, 2010

மீண்டும் ஒரு முறை..

*

"நான் ரகுவை லவ் பண்றேன் பாலாஜி."

"ஹேய்..! கங்கிராட்ஸ் புவனா. சொல்லவேயில்லையே நீ?"

"அதான்.. இப்ப சொல்லிட்டேன்ல.."

"சரி.. எப்பலருந்து..?"

"ரெண்டு நாளைக்கு முன்னால தான் அவன் மனசை சரியா புரிஞ்சுக்கிட்டேன்."

"அடடா! கன்னமெல்லாம் குப்புன்னு சிவப்பாயிருச்சே..! உனக்கும் வெட்கப்படத் தெரியும்னு எனக்கே இப்போ தான் தெரியுது புவனா."

"சீ..! கிண்டல் பண்ற பார்த்தியா.."

"சே..! சே..! இல்லப்பா. இவ்ளோ க்ளோஸ்ல ஒரு வெட்கத்தை என் லைப்ல முதல் தடவையா பார்க்கிறேன்ல..?"

"இப்படியெல்லாம்.. பேசினா எழுந்து போயிடுவேன்..பாலாஜி.."

"பார்த்தியா.. டக்குனு 'எஸ்' ஆவுரியே..?"

"பின்ன.. நீயே டீஸ் பண்ணா.. நான் என்ன பண்ணுவேன்?"

"ஓ.கே.. ஓ.கே.. கூல் டவுன் தேவதையே..! ரகு கிட்ட உன்னோட லவ்வை சொல்லிட்டியா..?"

"இல்லடா.. சரியான சந்தர்ப்பம் எனக்கு கிடைக்கவே இல்லை. பட்.. ரகுவுக்கு என் மேல லவ் இருக்கு. அதை கண்டுபிடிச்சிட்டேன்."

"எப்படி..எப்படி.. அவ்ளோ தீர்மானமா சொல்ற..?"

"அவனோட காலேஜ் பேக்ல... ஒரு வெள்ளை கலர் கர்ச்சீப்ல 'ஐ லவ் யூ புவனா'னு அழகா எழுதி, ரோஸ் கலர்ல ஒரு ஹார்ட்டின் வரைஞ்சு வச்சிருந்தான். பார்த்துட்டு ஷாக் ஆயிட்டேன் தெரியுமா? அப்படியே எடுத்த இடத்துல, எடுத்த மாதிரியே வச்சிட்டேன். மனசெல்லாம் படபடனு இருந்திச்சி.."

"இன்ட்ரஸ்ட்டிங். நம்ம கிளாஸ்ல ரகுவோட ஆர்ட்டிஸ்டிக் திறமை எல்லாருக்கும் தெரிஞ்சுது தானே..! ஆனா, அந்த வொயிட் கலர் கர்ச்சீப்பை உனக்கு தான் வரைஞ்சான்னு என்ன நிச்சயம்..?"

"லூஸு மாதிரி உளறாத.. கிளாஸ்ல நான் ஒருத்தி தான் புவனா. மறந்துட்டியா..?"

"யெஸ்.. யெஸ்.. உன் லாஜிக் கரெக்ட். அப்புறம் என்னாச்சி..? ரகு அந்த கர்ச்சீப்பை உன்கிட்ட கொடுத்துட்டானா..?"

"ப்ச்.. இல்ல.. என்கிட்டே கொடுக்காமலேயே இன்னும் பத்திரமா அவனே வச்சிட்டிருக்கான் பாலாஜி. ஆனா, அதைப் பார்த்ததிலிருந்து நான் ரொம்ப டிஸ்டர்ப் ஆயிட்டேண்டா. அவன், இதுவரைக்கும் என்கிட்டே பேசினது, பழகினது.. எல்லாத்தையுமே.. மனசுக்குள்ள..."

"ரீ-வைன்ட் பண்ணி பார்த்தியாக்கும்..?"

"யெஸ்ஸ்ஸ்ஸ்ஸ்..! ரொம்ப எக்ஸைட் ஆயிட்டேன் தெரியுமா? இதுவரை நடந்தது எல்லாமே வேற கோணத்துல தெரியுதுடா.."

"ம்ம்.. ம்ம்.. ப்ரொஸீட்.."

"இந்த நொடி வரைக்கும்... அந்த உணர்வே வித்தியாசமா இருக்கு.. பாலாஜி.."

"என்னைக்கு பார்த்தே..?"

"யாரை..?"

"மக்கு.. அந்த கர்ச்சீப்பை என்னைக்குப் பார்த்தே..?"

"ரெண்டு நாளைக்கு முன்னாடி.."

"ம்ம்.. அவனோட நடவடிக்கைல உனக்கு ஏதாவது மாற்றம் தெரியுதா..?"

"இல்லையே..! பெரிய கள்ளனா இருப்பான் போலிருக்கு.. ஒன்னுமே நடக்கலைங்கற மாதிரி காட்டிக்கிறான். சரியான கல்லுளிமங்கன்.."

"இருக்கட்டும்... அது சரி..! இந்த மேட்டரை இதுவரைக்கும் எத்தனை பேர்கிட்ட சொல்லியிருக்க..? எத்தனை எஸ்.எம்.எஸ். அனுப்பின..?"

"அடப்பாவி..! இதை டமாரம் அடிச்சி.. என்னை... என்ன.. சவுண்டு விட சொல்லுறியா..?"

"அப்படி.. இல்லப்பா.."

"என்ன.. அப்படி இல்லப்பா..?
அய்யா... சாமி..! நீ, தயவு செஞ்சி ஊரைக் கூட்டி கூப்பாடு போட்டு என் மானத்தை வாங்கிறாத... இந்த மேட்டர் ரொம்ப சீக்ரட்டா.. நம்ம ரெண்டு பேருக்குள்ள மட்டும் தான் இருக்கணும்.. புரிஞ்சுக்கோ.."

"சரி... சரி..."

"என்ன.. சரி.. சரி..? என்னோட லவ் ரொம்ப டிவைன். அது ஒன்னும் ரோட் சைடு போஸ்டர் இல்லை. போறவன் வர்றவனெல்லாம் பார்த்து பல்லிளிச்சிட்டு போறதுக்கு... ஆமா.."

"அது... எல்லாம் சரி தான் புவனா... எனக்கொரு வீக்னஸ் இருக்கே..!"

"என்ன... அது..?"

"நான் ஒரு ஓட்ட வாயனாச்சே..!"

"வாட்...?!"

"ரொம்ப கஷ்டமான காரியத்தை செய்ய சொல்றியே... புவனா..!"

"மவனே...! எவன்கிட்டயாவது உளறி வச்சேன்னு தெரிஞ்சுது, கொன்னுடுவேன் உன்னை. திக் பிரண்டுன்னு உன்கிட்ட சொல்ல வந்தா, என்னையே கலாய்க்கறியா..?"

"அடடடா...! பத்ரகாளி கெட்-அப் கூட என்னமா செட் ஆவுது புவனா, உனக்கு..?"

"இதாண்டா... எப்பவும் உன்கிட்ட எனக்கு புடிச்ச விஷயம். சீரியஸ் மேட்டரை சிரிப்பாக்கிடற. இந்த சென்ஸ் ஆப் ஹியூமரை... என்னால ரசிக்காம இருக்க முடியலை. ஆனா... விஷயம் பொக்கிஷம் பாலாஜி. பாதுகாத்துக் கொடு கடவுளே..!"

"யாமிருக்க பயமேன்! ஓகே. ஓகே.. ரகு மேட்டரை பாதியிலயே வுடறியே..?"

"அதான் பாலாஜி.. அவன் பாட்டுக்கு கிணத்துல போட்ட கல்லு மாதிரி கம்முன்னு சுத்திட்டிருக்கான். நான் என்னடானா கிறுக்கு புடிச்ச பட்டாம்பூச்சி மாதிரி அலைபாயுறேன்"

"ஆஹா...! என்னா உவமை.. என்னா உவமை..! கவிதை... கவிதை... எங்க இன்னொரு முறை சொல்லு"

"டேய்ய்ய்ய்ய்..! என் பீலிங்க்ஸ்டா..."

"கூல் கூல் கூல்! ஓகே... விஷயத்துக்கு வந்திருவோம்... ரெண்டு நாள்ல பிப்பிரவரி 14. வேலண்டைன்ஸ் டே இல்லையா..?"

"அட ஆம்ம்ம்ம்...மா..!"

"பய.. அதுக்கு தான் ஏதோ பிளான் பண்ணி. கொஞ்சம் கலர் பண்ணிருப்பான் போல.."

"சே..! எனக்குத் தோணவே இல்லை பாரு. யூ ஆர் ரியலி கிரேட் பாலாஜி! தாங்க் - யூ - டா.. பையா... தாங்க் - யூ.. ஸோ.. மச்.."

"நீ கொஞ்சம் உணர்ச்சியக் கட்டுப்படுத்து. தமிழ் கலாச்சாரப்படி அவசரப்படாதே. மாடர்ன் கேர்ள்-க்கு உள்ளே எப்பவும் ஒரு மாட்டுவண்டி ஓடிக்கிட்டே இருக்கட்டும். ஹா...! உன்கிட்டே பேசிட்டு இருந்ததுல நானும் உளற ஆரம்பிச்சிட்டேன் பாரு..! பாலாஜி.. ஸ்டெடி மச்சான்... ஸ்டெடி.."

"சுத்த கன்ட்ரிடா... நீ..! லவ் பண்ணி பாரு... அப்போ தான் உனக்கும் எங்கள மாதிரி பீலிங்க்ஸ் புரியும்..."

"அது.. சரி.."

* பிப்ரவரி 14 *

"என்ன புவனா.. வேலண்டைன்ஸ் டேவும் அதுவுமா கிளாஸ் ரூம்ல தன்னந்தனியா மூஞ்சிய உம்முன்னு தூக்கி வச்சிக்கிட்டு உட்கார்ந்திருக்கே..? ஏன்? ரகு... இன்னும் வரலையா?"

"வந்தான்..."

"குட் - அப்புறம்..?"

".................."

"சஸ்பென்ஸ ஏத்தாத அப்புறம் என்ன ஆச்சு..?"

"ரெட் ரோஸ் குடுத்தான்."

"ஹையோ! சூப்பர்... அதை ஏன் இவ்ளோ டல்லா முகத்தை வச்சிக்கிட்டு சொல்ற..? ட்ரீட் எல்லாம் கேட்க மாட்டேன்பா.."

"டேய்ய்ய்ய்ய்...! அவன் ரெட் ரோஸ் கொடுத்தது எனக்கு இல்லடா"

"பின்ன..?!"

"என் பக்கத்துல உட்கார்ந்திருந்த உமாவுக்கு..."

"வாட்..?"

"ஆமா... இவளும்... 'ஈ'னு... இளிச்சிக்கிட்டு... அவன் கூட கிளம்பிப் போயிட்டா"

"அடப்பாவி.."

"அடிப்பாவியும்... தான்.."

"கடைசில அவன் உனக்கு கொடுத்தது வெறும் அல்வா தானா..?"

"வெறுப்பேத்தாதடா...! படுபாவி. அப்புறம் ஏன் என்னை இப்படி அலைக்கழிச்சான்? கர்ச்சீப்ல... 'ஐ லவ் யூ புவனா'னு.. என் பேரை எழுதி பக்கத்துல ஹார்ட்டின் வரைஞ்சி! இப்போ அந்த ஹார்ட்ல அம்பு குத்திட்டு போயிட்டான்.."

"ச்சோ...ச்சோ.."

"என்ன... ச்சோ..ச்சோ..? போடா...! உனக்கு என் பீலிங்க்ஸ் எதுவுமே புரியவே இல்லை"

"யாருக்கு? எனக்கு?"

"ஆமா உனக்கு தான்"

"அதுசரி. இருக்கட்டும்... நீ கிறுக்குப் புடிச்சி ஏங்கி ஏங்கி தேடி அலையுரியே... ஒரு வொயிட் கர்ச்சீப், அது இதுவா பாரு..?"

"மை - காட். இதே... தான்... இது... எங்கே கிடந்துச்சி..? தூக்கி கிடாசிட்டானா அவன்..?"

"ரொம்ப பேசாத..! முதல்ல இதைப் புடி... இந்தா... அட...! யோசிக்காத புவனா புடிங்கறேன்ல..!"

"சரி. கொடு. இப்ப சொல்லு. இதெப்படி..? உன்..."

"மக்கு.. மட சாம்பிராணி...! ரகு இந்த கர்ச்சீப்ல.. 'அதை' எழுதித் தந்ததே எனக்காகத் தான்..."

"எதை...?!"

"ஐ - லவ் - யூ - புவனா..."

*
(மீண்டுமொரு முறை இந்தக் கதையை புவனா, "பாலாஜியின்" கோணத்திலிருந்து படிக்க ஆரம்பிக்கிறாள்.)
****

நன்றி : ' யூத்புல் விகடன் ' - இணைய இதழ் ( பிப்பிரவரி 2010 )

http://youthful.vikatan.com/youth/Nyouth/elangostory130210.asp