புதன், ஜனவரி 25, 2012

கொஞ்சம்..

*
சிறிது தூரம் மட்டுமே
வெளியேறத் தெரிந்த பயணத்தின்
அலுப்பில்
கொஞ்சம் நீயிருந்தாய்

****

நன்றி : ( உயிரோசை / உயிர்மை.காம் ) [ ஜனவரி - 30 - 2012 ]

http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=5225

வளைக் கோடுகளின் முன்னிரவு..

*
வர்ணம் கலைந்து கிடக்கும்
வாசல் கோலத்தின் வளைக் கோடுகளில்

அப்படியே மீதமிருக்கிறது

நேற்றைய முன்னிரவின் பனிப் பொழிவும்
அவசரமாய் கடந்து சென்ற
உனது சைக்கிள் மணிச் சத்தமும்

******

நன்றி : ( உயிரோசை / உயிர்மை.காம் ) [ ஜனவரி - 30 - 2012 ]

http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=5225


மெல்லப் பிடி நழுவும் கண்ணாடிக் கதவுகள்..

*
ஒரு தலைக் குனிவின் அவசரத்தில்
கடிகாரத்தின் நவீன முட்கள்
அசையவில்லை

சொற்கள் இறையும் அறையில்
நா ஒடிந்த பேனாவின் பள்ளத்தில்
வழிகிறது
ஓர் ஆதி மொழி

திரும்பும்போதோ
வெளியேறும்போதோ
உறுத்துகிறது மெல்லப் பிடி நழுவும்
கண்ணாடிக் கதவுகள்

தனித்தத் தெருவில்
ஒரு தலைக் குனிவின் நிதானத்தில்
அவசரமின்றி நம் மீது பரவத் தொடங்குகிறது
கைவிடப்பட்ட வெயிலொன்று

*****

நன்றி : ( உயிரோசை / உயிர்மை.காம் ) [ ஜனவரி - 30 - 2012 ]

http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=5225

அனிச்சையாய் உதிர்ந்து விழும் ஒரு சொல்..

*
வதையின் ரகசிய அறையில்
பாசிப் படர்ந்த அதன் சுவர் முழுவதும்
பெயர்களின் காரை உதிர்ந்து

சதைப் பெயர்த்த ஆயுதங்களின் குளிரில்
விறைத்துப் போகிறது உடலும்
நையப் புடைத்த மனமும்

அனிச்சையாய் உதிர்ந்து விழும் ஒரு சொல்லின்
அர்த்தத்தைக் கழுவி வழிகிறது
புனித ரத்தம்

நினமொழுகும் மௌனங்களின்
பிரார்த்தனை முணுமுணுப்பு எதிரொலிக்கும்
வதையின் அறையில்

மரணத்தின் இறுதிக் குறிப்பை உச்சரித்து
அடங்குகிறது வாழ்வின் உதடு

*****

நன்றி : ( உயிரோசை / உயிர்மை.காம் ) [ ஜனவரி - 30 - 2012 ]

http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=5225

நிலவறை இருட்டில் சாம்பல் பூத்த ரத்தக் கோடுகள்..

*
எனது நிலவறையின் இருட்டுக்குள்
பதுங்கிக் காத்திருக்கிறது
உன்னைப் பற்றிய நினைவுகள்

என்னிலிருந்து கொஞ்சங்கொஞ்சமாக
பிரித்தெடுத்துக் கொண்ட எனது வருடங்களைப்
பற்றிய அனைத்துக் குறிப்புகளும்
நகங்கள் கொண்டு இச்சுவர்களில்
கீறி வைத்திருக்கிறேன்

ரத்தக் கோடுகள் சாம்பல் பூத்து
கரும்பச்சை நிறமேறி பிசுபிசுத்து காய்ந்து கிடக்கிறது

'உச்' கொட்டும் உதடுகளிலிருந்து
புறப்படும் வௌவால்களின் சிறகில்
ஈரம் சேகரிக்கிறது ஒரு மழை நினைவு

கைக்கொட்டி சிரித்து உதிர்ந்த
ஒலியலைகளின் மீது கானலின் வர்ணத்தைப்
பூசி நிற்கிறது ஒரு வெயில் பிசிறு

என் நிலவறையின் இருட்டுக்குள்
தாடைகள் இறுகத் தசை விறைத்துக் காத்திருக்கிறது
ஒற்றை மிருகம்
உனது ஆயுதங்கள் பற்றி அறிந்திராத
ஒரு மிருகம்

*****

நன்றி : ( உயிரோசை / உயிர்மை.காம் ) [ ஜனவரி - 23 - 2012 ]

http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=5209

திங்கள், ஜனவரி 23, 2012

நிறம் மயங்கும் சொற்கள்..

*
நினைவைச் சொல்லும் ஒரு துளியைப்
பருகக் கொடுத்தாய்

தொண்டைக்குள் இறங்கும் பாதையில் அது
ஓசையில்லாமல் எல்லாக் கதவுகளையும்
சார்த்துகிறது

உனது பேரன்பின் முடிவின்மையில்
என்னை ஒரு அடையாளமாய் செருகிச் செல்கிறாய்

மீண்டும் மீண்டும் வாசிப்பதற்குரிய
எனது இரவுகளை அடுக்குக் குலையாமல்
தைத்து வைத்திருக்கிறேன்

யாவற்றையும் தொட்டு துல்லியத்தின் நினைவைச் சொல்லும்
ஒரு துளியைப் பருகக் கொடுக்கிறாய்

நிறம் மயங்கும் சொற்களில் மூழ்கிக் கொண்டிருக்கிறேன்
கொஞ்சங் கொஞ்சமாய்

*****

நன்றி : ( உயிரோசை / உயிர்மை.காம் ) [ ஜனவரி - 23 - 2012 ]

http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=5209

அனர்த்தங்களின் நாளம்

*
சொல் ஒன்று அறுந்து விழும் ஓசையை
கையில் ஏந்திக் கொள்கிறேன்

துண்டிக்கப்பட்டு ரத்தம் கசியும்
அனர்த்தங்களின் நாளம்
தன் நுனியில் கொப்புளித்து வெடிக்கிறது
என்னோடு யாருமற்ற இந்த இரவை

*****

நன்றி : ( உயிரோசை / உயிர்மை.காம் ) [ ஜனவரி - 16 - 2012 ]

http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=5198

விரல்களிலிருந்து பிரியும் விரல்கள்..

*
முதலிரண்டு முத்தங்களில் மலர்த் தோட்டத்தின்
வாசனைகள் படர்ந்திருந்தது

பட்டென்று புறப்பட்ட
ரயில் ஜன்னல்வழி நீண்டிருந்த கையோடு
விரல்களிலிருந்து பிரிந்த விரல்களின்
பிரியத்தில் மலர்ந்திருந்தது ரகசிய முத்தமொன்று

புள்ளியாகிவிட்ட விரலசைவுகளின்
மௌனம்
பிளாட்பார நீளத்திற்கு வெறிச்சோடிக் கிடக்கிறது
திரும்பி நடக்கும் நிமிடம் முழுவதும்

******

நன்றி : ( உயிரோசை / உயிர்மை.காம் ) [ ஜனவரி - 16 - 2012 ]

http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=5198

ஓர் அவமானத்துக்கு பின்னும்..

*
நீ கற்றுக் கொடுத்த அனைத்தையும்
இன்றும் பின்பற்றுகிறேன்

எவரோடு பேசும்போதும் சிரித்துக் கொண்டே அவர்களின்
சொற்கள் மீது நம்பிக்கையிழக்க

ஒரு சத்தியத்தின் ஆயுட்காலம்
சரியாக ஒரு நிமிடம் மட்டுமே என்ற காலத்தின்
நொடிகளைக் கணக்கிட்டுக் கொண்டே

ஓர் அவமானத்துக்கு பின்னும் மிச்சமிருக்கும்
கடைசிப் புன்னகையைக் கூட
அந்த இடத்திலேயே விட்டு விட

நிறமிழக்கும் ஒரு மௌனத்தின் ஈரத்தை
புறங்கையால் நெற்றியிலிருந்து துடைத்துக் கொள்ள

அலுத்து விடும் தனிமையின் சதுரங்களை
முனைத் திருகித் திருகி வளைத்து
வளையங்கள் கோர்க்க

மீண்டும் வருவதாக மீண்டும் மீண்டும்
சொல்லிப் போகும் பொய்களைக் காகிதங்களில் மொழிபெயர்க்க

மன்னிப்புக் கோரி வரும் எந்தவொரு கடிதத்துக்கும்
பதிலெழுதாத பாவத்தைப் பரிசளிக்கும் மனத்தைப் பழக்கப்படுத்த

நீ கற்றுக் கொடுத்த அனைத்தையும்
இனிமேலும் பின்பற்ற விரும்புகிறேன்

அதனால்
எனது கதவுகளை ஆணியறைந்து வைத்திருக்கிறேன்

தயவு செய்து மீண்டும் மீண்டும் என்
அழைப்பு மணியை அழுத்தாதே

******

நன்றி : ( உயிரோசை / உயிர்மை.காம் ) [ ஜனவரி - 16 - 2012 ]

http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=5198

கொஞ்சமும் பொருந்தாத ஒரு தருணத்தில்..

*
பதுங்கிக் காத்திருந்த வார்த்தையிலிருந்து
வெளிப்பட்டாய் கொஞ்சமும் பொருந்தாத ஒரு தருணத்தில்

அது ஒரு பகல் பொழுதின் நிழலை அசைப் போட்டபடி
அதுவரை எழுதிய பக்கங்களை தன்னிச்சையாய்ப் புரட்டும்
விரல் நுனிகளைக் கவனித்துக் கொண்டிருந்த நொடி

மாற்று அர்த்தங்களை அனுமதிக்காத உனது அவசரத்தை
பதட்டத்தோடு எதிர்கொள்ளும் அவகாசத்தை
நான் தேர்ந்தெடுக்க விரும்பவில்லை

என்னிலிருந்து பிரிந்தெழுந்து அறை மூலையின்
ஜன்னலோரம் நின்று கொள்ளவே விரும்புகிறேன்

அதன் கண்ணாடியினூடே அசையும் உலகின் வெளி
என் வாழ்வின் மீது எந்தவொரு அபிப்பிராயத்தையும்
கொண்டிருக்கவில்லை
எனது தனித்த இரவின் சாட்சியாக அதிகாலையில் வழிந்திறங்கும்
ஒன்றிரண்டு பனித்துளிகளைத் தவிர
வேறெவரும் எதிர்கொள்வதுமில்லை இந்த அகாலத்தை

ஆனாலும்

காத்திருந்த வார்த்தையிலிருந்து வெளிப்பட்டாய்
கொஞ்சமும் பொருந்தாத
ஒரு தருணத்தில்

வெளியே திரளும் சாம்பல் மேகங்கள்
கொஞ்சம் மழையாய் பெய்தால் நன்றாக இருக்கும்

*****

நன்றி : ( உயிரோசை / உயிர்மை.காம் ) [ ஜனவரி - 16 - 2012 ]

http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=5198

ஏதேதோ..

*
மதுக் குடுவையின்
குறுகிய வாய் விளிம்பில் எச்சில்
பிசுபிசுப்போடு
ஊர்ந்து கொண்டிருக்கிறது ஒரு மணி நேரமாக
ஏதேதோ
வார்த்தைகள்

****

நன்றி : ( உயிரோசை / உயிர்மை.காம் ) [ ஜனவரி - 9 - 2012 ]

http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=5170

உன் மீதான பிரியங்களின் பொருட்டு..

*
மிருதுவாக இருக்கிறது
புத்தம்புது வெண்ணிற பஞ்சைத் தொடுவதாக
உனது உள்ளங்கை

அதன் மத்தியைக் கிள்ளச் சொல்லி
உறுதிப் படுத்த விரும்புகிறாய்
எனது சொல்லை

உன் மீதான பிரியங்களின் பொருட்டு
அரை மனதோடு
கொஞ்சமாய் கிள்ளியெறிகிறேன்
அந்தச் சொல்லிலிருந்து
ஒரு பொய்யை

*****

நன்றி : ( உயிரோசை / உயிர்மை.காம் ) [ ஜனவரி - 9 - 2012 ]

http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=5170

பகல்களையும் இரவுகளையும் கடக்கும் காலடிச் சத்தங்கள்..

*
சுரங்கப்பாதையின் நீண்டக் குகை நிழலில்
ஒரு பக்கச் சுவரில் சாய்ந்தபடி கையேந்தி நிற்கிறான் அவன்

நிலத்தின் தரையோடு மறு கையை இணைத்திருக்கிறது
ஓர் ஊன்றுகோல்
அது ஒரு கோரிக்கை அல்லது யாசகம்

கூரைக்கு மேற்புறம் ஓடும் வாகனங்களின்
சன்னச் சத்தங்கள் கலந்தபடி
காலடிச் சத்தங்கள் அவனைக் கடக்கின்றன
பகல்களையும் இரவுகளையும் கடக்கும் காலடிச் சத்தங்கள்

அவன் உலகின் இருளுக்குள் சதா கேட்கின்றது குரல்கள்
அவசரக் குரல்கள்
பேரம் பேசும் குரல்கள்
சலிப்பின் குரல்கள்
கோபக் குரல்கள்
கெஞ்சும் குரல்கள்
குழந்தைகளின் அழு குரல்கள்

அதன் நீண்ட குழல் தன்மையின் எதிரொலியில்
குரல்கள் இங்கும் அங்குமாக தப்பிக்கத் தெரியாமல் சிதறுகின்றன

புற உலகின் அவசரங்களுக்கு ஊடே
எந்தவொரு கோரிக்கைக் குரலுமற்று கையேந்தி நிற்கிறது
ஓர் அன்றாடத் தேவையின் குரலற்றக் குரல்

*****

நன்றி : ( உயிரோசை / உயிர்மை.காம் ) [ ஜனவரி - 9 - 2012 ]

http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=5170

பார்வையொன்றை தாழப் பறக்க விடுகிறாய்..

*
ஒரு நகர்தலை
நுணுகி கவனிக்கத் தவறிய வேகத்தில்
சொல்லி முடித்திருந்தாய்
தயங்கியபடி விரல் பின்னிக் கொண்டிருந்த
வார்த்தைகளை

பதுங்கி வெளிப்படும் இரவுகளின் வாசலில்
மீசைத் துடிக்கக் காத்திருந்த
மனப் பூனையின் நறுக்கிய வாலை
அட்டைப் பெட்டிக்குள் அடைத்து வைத்திருக்கிறேன்
உனக்குப் பரிசளிக்க

கடந்து போன கோடைப் பகலின் நிழல் விரிசலை
பூசி மெழுகும் பார்வையொன்றை தாழப் பறக்க விடுகிறாய்
பேரமைதி சூழ்ந்திருக்கும் இவ்வெளியெங்கும்
துடிப்புடன் நழுவுகிறது
நுணுகி கவனிக்கத் தவறிய
ஒரு நகர்தல்

*******

நன்றி : ( உயிரோசை / உயிர்மை.காம் ) [ ஜனவரி - 2 - 20121 ]

http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=5143


மதில் மேல் செருகி நிற்கும் ப்ரைலி புள்ளிகள்..

*
காகிதப் பரப்பில் புடைத்துக் கொண்டிருக்கும்
நிறமற்ற புள்ளிகளில் விரியும் மணல்வெளியில்
சொற்களின் வினோத வடிவங்கள் மீது
கானல் நீரின் நிழல் மிதக்கிறது

வானும் மழையும் கயிறு திரிந்து
விரல்களின் நுனியில் வர்ணங்கள் கோர்க்கிறது

கிராமத்தின் நெல் வயலும்
சஹாராவின் புயல் மணலும்
கான்க்ரீட் இறுகும் நகரின் வெயில் முகமும்
தளிர் இலையும்
பட்ட மரமும்
வாகனங்களும் வாலில்லா பூனையும்
மதில் மேல் செருகி நிற்கும் உடைந்த கண்ணாடிச் சில்லும்
விளக்குகள் மினுக்கும் ஆளற்ற தெருவின் தனிமையும்

விரலோடும் புள்ளிகளின் வேகத்தில்
அடர்ந்த மௌனத்தின் சிறகினை அசைக்கின்றது

புன்னகையின் ரசவாதமும்
பேராவலின் ஒற்றையடிப் பாதைகளும்
விக்கித்து நிற்கின்றன தொடரும் நபர்கள் யாருமற்று

மெல்லப் பரிச்சயமாகும் ப்ரைலி புள்ளிகளோடு வந்து நிற்கிறது
எப்போதும் யாவற்றையும் நிறுத்திப் பார்க்கும்
ஓர் அசாதாரண முற்றுப் புள்ளி

*******
நன்றி : ( உயிரோசை / உயிர்மை.காம் ) [ ஜனவரி - 9 - 2012 ]

http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=5170

ஒரு சிறிய கைத் தட்டலுக்கு காத்திருப்பவன்

*
ஒரு சிறிய கைத் தட்டலுக்கு காத்திருப்பவன்
யாருமற்ற வராண்டாவின் தனிமையை
அளந்து கொண்டிருக்கிறான்

சொற்ப வெயில் பூசிய படிகளில் அசையும்
நிழல் மீது உட்கார்ந்திருக்கிறான்

அழைப்பினூடே உச்சரிக்கப்படும்
வசவு வார்த்தைகளின் வெப்பத்தை
தன் புறங்கையின் நரம்பிலிருந்து
நீவிக் கொண்டிருக்கிறான்

ஒரு சிறிய கைத் தட்டலுக்கு காத்திருப்பவன்
கடற்கரை அலைகளோடு
ஏதோ சொல்லிக் கொண்டிருக்கிறான்

அவன் கணுக்கால் வரைத் தொட்டு நனைத்து
மீள்கிறது வெண்ணிற நுரைகள்

*****

நன்றி : ( உயிரோசை / உயிர்மை.காம் ) [ ஜனவரி - 2 - 2012 ]

http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=5143



மொழிபெயர்த்துவிட முடியாத ஒரு மௌனம்..

*
அத்தனை எளிமையாக நீங்கள் சொல்லிவிட முடியாது
ஒரு பயத்தை
அவ்வளவுத் துல்லியமாக நீங்கள் கணித்து விடமுடியாது
ஒரு துரோகத்தை
அப்படியொன்றும் சுலபமல்ல உங்களை நோக்கி வரும்
சொற்களின் அர்த்தங்கள் புரிந்துவிட

அவ்வளவு அவசரமாக உங்களால் மொழிபெயர்த்து விடமுடியாது
ஒரு மௌனத்தை
அத்தனை பயணத்திலும் நீங்கள் அடைந்து விடமுடியாது
ஒரு மையத்தை

அப்படியொன்றும் ஆழமிறங்குவதில்லை உங்களின் கூர்மை
குரல் தாழ்ந்து கெட்டித்தப் பரப்பில்

அவ்வளவு பட்டியலிலும் இடம்பெற்று விடும் தகுதியோடு
உறங்கச் செல்லும் உங்கள் இரவு
அத்தனைக் கணக்காகத் திட்டமிடப்படுகிறது உங்களுக்கு
சம்பந்தமில்லாத ஒரு பகலில்
ஏதோவொரு மேஜையில்
ஏதோவொரு கோப்பில்
ஏதோவொரு முத்திரையின் கீழ்
ஏதோவொரு பச்சை நிறக் கையெழுத்தில்

அவ்வளவுத் துல்லியமாக நீங்கள் கணித்து விடமுடியாது
ஒரு அர்த்தத்தை

******

நன்றி : 'கீற்று' இணைய இதழ் [ ஜனவரி - 25 -2012 ]

http://www.keetru.com/index.php?option=com_content&view=article&act=section&id=18135&Itemid=139


காற்றோடு ஆடி முந்தும் திரைச்சீலை

*
மற்றுமொரு முறை அழைத்திருந்தாய்
மொட்டைப் போல் அவிழ்கிறது
இதழ் இதழாக என் உலகம்

ரகசிய கனவுகளின் இழைப் பிரித்து
நெய்துக் கொண்டிருக்கிறேன்
ஒரு சிறகை
அதில் வர்ணங்கள் கூட்டுகிறது உனது புன்னகை

இவ்வுலகின் எல்லைக் கடந்து
பறப்பதற்குரிய
இரவை அடுத்தக் கடிதத்தில் அனுப்பி வை

இந்த வானின் கருநீலத்தைக் கொஞ்சம்
உனக்காக அள்ளி வருகிறேன்
உன் ஜன்னல்களை மட்டும் திறந்து விடு

காற்றோடு ஆடி முந்தும் திரைச்சீலைகளின்
வெண்மை நிறத்தையும் மாற்றுகிறேன்

******

நன்றி : 'கீற்று' இணைய இதழ் [ ஜனவரி - 12 - 2012 ]

http://www.keetru.com/index.php?option=com_content&view=article&act=section&id=17998&Itemid=139

சொல்லின் நீர்மைச் செதில்..

*
முன் தீர்மானங்களற்று சொல்வதற்கு
ஒரு சொல் கூட மிச்சமிருப்பதில்லை

காத்திருக்கும் தனிமையில்
எதிர்ப்படும் மௌனங்கள்
செதில் செதிலாக அசைக்கிறது
இவ்விரவை

புள்ளிகளாய்த் திரண்டு கோர்க்கும்
பனித்துளியொத்த தருணங்கள்
ஈரம் குளிரக் காத்திருக்கிறது

ஒரு சொல்லின் நீர்மையில்
எப்போதும்
மிதந்து கொண்டே இருக்கும்
சொல்லப்படாத அர்த்தங்கள்
மிச்சம் வைப்பதில்லை
வேறெந்த சொல்லையும்

******

நன்றி : 'கீற்று' இணைய இதழ் [ ஜனவரி - 10 - 2012 ]

http://www.keetru.com/index.php?option=com_content&view=article&act=section&id=17962&Itemid=139