திங்கள், ஜனவரி 23, 2012

பகல்களையும் இரவுகளையும் கடக்கும் காலடிச் சத்தங்கள்..

*
சுரங்கப்பாதையின் நீண்டக் குகை நிழலில்
ஒரு பக்கச் சுவரில் சாய்ந்தபடி கையேந்தி நிற்கிறான் அவன்

நிலத்தின் தரையோடு மறு கையை இணைத்திருக்கிறது
ஓர் ஊன்றுகோல்
அது ஒரு கோரிக்கை அல்லது யாசகம்

கூரைக்கு மேற்புறம் ஓடும் வாகனங்களின்
சன்னச் சத்தங்கள் கலந்தபடி
காலடிச் சத்தங்கள் அவனைக் கடக்கின்றன
பகல்களையும் இரவுகளையும் கடக்கும் காலடிச் சத்தங்கள்

அவன் உலகின் இருளுக்குள் சதா கேட்கின்றது குரல்கள்
அவசரக் குரல்கள்
பேரம் பேசும் குரல்கள்
சலிப்பின் குரல்கள்
கோபக் குரல்கள்
கெஞ்சும் குரல்கள்
குழந்தைகளின் அழு குரல்கள்

அதன் நீண்ட குழல் தன்மையின் எதிரொலியில்
குரல்கள் இங்கும் அங்குமாக தப்பிக்கத் தெரியாமல் சிதறுகின்றன

புற உலகின் அவசரங்களுக்கு ஊடே
எந்தவொரு கோரிக்கைக் குரலுமற்று கையேந்தி நிற்கிறது
ஓர் அன்றாடத் தேவையின் குரலற்றக் குரல்

*****

நன்றி : ( உயிரோசை / உயிர்மை.காம் ) [ ஜனவரி - 9 - 2012 ]

http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=5170

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக