புதன், ஜனவரி 25, 2012

நிலவறை இருட்டில் சாம்பல் பூத்த ரத்தக் கோடுகள்..

*
எனது நிலவறையின் இருட்டுக்குள்
பதுங்கிக் காத்திருக்கிறது
உன்னைப் பற்றிய நினைவுகள்

என்னிலிருந்து கொஞ்சங்கொஞ்சமாக
பிரித்தெடுத்துக் கொண்ட எனது வருடங்களைப்
பற்றிய அனைத்துக் குறிப்புகளும்
நகங்கள் கொண்டு இச்சுவர்களில்
கீறி வைத்திருக்கிறேன்

ரத்தக் கோடுகள் சாம்பல் பூத்து
கரும்பச்சை நிறமேறி பிசுபிசுத்து காய்ந்து கிடக்கிறது

'உச்' கொட்டும் உதடுகளிலிருந்து
புறப்படும் வௌவால்களின் சிறகில்
ஈரம் சேகரிக்கிறது ஒரு மழை நினைவு

கைக்கொட்டி சிரித்து உதிர்ந்த
ஒலியலைகளின் மீது கானலின் வர்ணத்தைப்
பூசி நிற்கிறது ஒரு வெயில் பிசிறு

என் நிலவறையின் இருட்டுக்குள்
தாடைகள் இறுகத் தசை விறைத்துக் காத்திருக்கிறது
ஒற்றை மிருகம்
உனது ஆயுதங்கள் பற்றி அறிந்திராத
ஒரு மிருகம்

*****

நன்றி : ( உயிரோசை / உயிர்மை.காம் ) [ ஜனவரி - 23 - 2012 ]

http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=5209

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக