திங்கள், ஜனவரி 23, 2012

கொஞ்சமும் பொருந்தாத ஒரு தருணத்தில்..

*
பதுங்கிக் காத்திருந்த வார்த்தையிலிருந்து
வெளிப்பட்டாய் கொஞ்சமும் பொருந்தாத ஒரு தருணத்தில்

அது ஒரு பகல் பொழுதின் நிழலை அசைப் போட்டபடி
அதுவரை எழுதிய பக்கங்களை தன்னிச்சையாய்ப் புரட்டும்
விரல் நுனிகளைக் கவனித்துக் கொண்டிருந்த நொடி

மாற்று அர்த்தங்களை அனுமதிக்காத உனது அவசரத்தை
பதட்டத்தோடு எதிர்கொள்ளும் அவகாசத்தை
நான் தேர்ந்தெடுக்க விரும்பவில்லை

என்னிலிருந்து பிரிந்தெழுந்து அறை மூலையின்
ஜன்னலோரம் நின்று கொள்ளவே விரும்புகிறேன்

அதன் கண்ணாடியினூடே அசையும் உலகின் வெளி
என் வாழ்வின் மீது எந்தவொரு அபிப்பிராயத்தையும்
கொண்டிருக்கவில்லை
எனது தனித்த இரவின் சாட்சியாக அதிகாலையில் வழிந்திறங்கும்
ஒன்றிரண்டு பனித்துளிகளைத் தவிர
வேறெவரும் எதிர்கொள்வதுமில்லை இந்த அகாலத்தை

ஆனாலும்

காத்திருந்த வார்த்தையிலிருந்து வெளிப்பட்டாய்
கொஞ்சமும் பொருந்தாத
ஒரு தருணத்தில்

வெளியே திரளும் சாம்பல் மேகங்கள்
கொஞ்சம் மழையாய் பெய்தால் நன்றாக இருக்கும்

*****

நன்றி : ( உயிரோசை / உயிர்மை.காம் ) [ ஜனவரி - 16 - 2012 ]

http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=5198

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக