திங்கள், ஜூன் 30, 2014

கொஞ்சம் பிரக்ஞை இழக்கும்படியான தனிமை

*
என்ன சொன்னாலும் 
ஏற்றுக்கொள்ளப்படும் சொல் 

என்ன செய்தாலும் 
அணைத்துக்கொள்ளும் கரம் 

எப்படியிருந்தாலும் 
பெருகிவிடும் காதல் 

கொஞ்சம் நடுங்கும்படியான 
கொஞ்சம் அச்சுறுத்தும்படியான 
கொஞ்சம் பிரக்ஞை இழக்கும்படியான 
தனிமையை 
கொஞ்சமும் எதிர்பாராத தருணத்தில் 
தந்துவிடும்போது 

பாதை முடிந்துவிடுகிறது 

****

நுனி ஈரத்தைப் பருகும் மனப்புழு

*
முற்றிலும் எரிந்து அடங்கிய பிறகு 
நீ கொண்டு வரும் மழையை 
ஏற்பதாக இல்லை எனது நிலம் 

வெந்து 
துவண்டு கிடக்கும் 
ஆணிவேரின் நுனி ஈரத்தைப் பருகும் 
இந்த மனப்புழுவைத் தான் 
என்ன செய்வதென்று தெரியவில்லை

****

நீலம் துலங்கும் சொல்

*
என்னை 
நீ வார்க்கிறாய் 

முளைத்த பிறையின் நுனியில் 
நீலம் துலங்கும் சொல்லை 
அனுப்புகிறாய் 

அலை வீசும் காற்றின் 
மேற்கு மௌனத்தோடு தொடுகிறாய் 

எழுதும் திசையை 
வாஞ்சையோடு பெற்றுக்கொள்கிறேன் 

தொடங்கி வை உன்னை 

****

நஞ்சு தீண்டிய கண்களின் சாந்தம்

*
அமைதியற்று நீளும் இரவு 
மலைப்பாதைகளின் வளைவை ஒத்திருக்கிறது 

தின்று செரிக்காத நினைவுகளின் நிழல் 
மலைப்பாம்பாகிறது   

நஞ்சு தீண்டிய கண்களின் சாந்தம் 
சொற்களை முறித்துக்கொண்டு இறுகுகிறது 
உடலாகி 

***

காற்றிலாடும் நூலாம்படை

*
மின்சார ரயில் உட்கூறை மூலையில்
காற்றில் ஆடும் நூலாம்படையில் 
தொங்கும்
சிலந்தியின் கண்களில் 

ஆடிக் கொண்டிருக்கிறோம் 

நானும் 
எனது புத்தகமும்

*** 

காற்றில் இறகென சுழன்றபடி..

*
ஜன்னலூடே 
வெயில்பட்டு தெறிக்கும் 
ஒளித் துணுக்கில் 

விரல் ரேகையின் விளிம்பு வளைவில் 
நகரத் தொடங்குகிறது 

காற்றில் இறகென
சுழன்றபடி 

உன்னை எண்ணித் தவிக்கும் 
ஒரு விம்மல் 

****

காற்றின் குரல்..

*
யாருமில்லை தானோ என்றே
தளும்பிய 
மொட்டைமாடி இரவில்

எங்கிருந்தோ குரல் கொடுக்கும் 
ஆட்டின் அழைப்பு 
அருகே வந்து உடலோடு உரசுகிறது 
காற்றைப் போல 


****

டி.என்.ஏ அடுக்கின் வளைந்த படிகள்

*
ஏழு வர்ணங்களில் டிஸைன் செய்து 
வரைந்த 
டி.என்.ஏ அடுக்கின் வளைந்த படிகளில் 
 
மெல்ல 
இறங்கிக் கொண்டிருக்கிறது 
ஓர் ஆதி மிருகம்  

****

அந்தவகையில்..

*
மனங்கொள்ளத்தக்கதாக
பேசச் சொல்லவில்லை

வெறுமனே 

இந்த கைகளை மட்டும் 
பற்றிக்கொள் 

****

ஆணியறையும் நிழல் தகிப்பு

*
அடுத்தடுத்ததாக வேணும் நேற்றைய 
நிழல் தகிப்பை 

இவ்வறையின் சுவர்களில் ஆணியறைந்து 
உரிப்பதாகிறது 

பின்வரும் 
மௌனப் பகல் 

***

ஒன்றுமில்லை

*
ஒரு கைகுலுக்கல் 
ஒரு கையசைப்புக்குப் பிறகு 
ஒன்றுமில்லை 

அது 
ஒரு கைகுலுக்கல் 
ஒரு கையசைப்பு மட்டுமே 

****

அலைவரிசையைத் திருகிக் கடத்தல்

*
ஒலிக்கூட்டு கருவியின் 
பிளாஸ்டிக் குமிழ் 
திருகத் திருக 

நமக்கான அலைவரிசையைக் கடந்துவிடும் 
லாகவத்தை கற்றுத் தருகிறது 
இவ்விரவு 

***

நெஞ்சக் கூட்டின் வளர் சிறகு

*
முன்னெப்போதோ தந்து சென்ற 
முத்த ஈரத்துளி 

உறைந்துவிட்ட நெஞ்சக் கூட்டில் 
சிறகு வளர்கிறது 

பொய்யல்ல இந்த 
வனம் 

***

என்றபோதும்

*
கைவசம் 
ஒரு சொல் மட்டுமே மிச்சமிருக்கிறது 

என்றபோதும் 

உன் அவமானத்தின் மீது 
அதை எழுதிவிடக்கூடாது 
என்பதாக 

ஆமென் 

****

தவிக்கும் விரல் நுனிகளில்..

*
இதிலென்ன இருக்கிறது என்றே 
வியப்புக்குள் இழுக்கிறோம் 
நம்மை 

ஆழ்துளை இருளுக்குள் இறங்குவதாக 
திணறலாகிற மூச்சு 

பற்றிக்கொள்ள தவிக்கும் விரல் நுனிகளில் 
மணல் மணலாய் பெருகுகிறது 
தனிமைக் கடல் 

****

உறைகின்ற சொற்களின் நாளை..

*
பின் 
மெதுவாக அனைத்துக் கொண்டாய் 

உறைகின்ற சொற்கள் மீது 
கிடத்தும்படி ஆயிற்று 
நாளைக்கான 
முத்தங்கள் 

***

மனக்குதிரையின் புறவாசல் லாயம்

*
நோய் குடுவைக்குள் மௌனத்தை 
இட்டு நிரப்பிடும் மனக்குதிரை 
புறவாசல் லாயத்தில் நின்றபடி 
குளம்புகள் அசைய 
வெற்றிடம் நோக்கி அலறுகிறது 

அசரீரி சிதறும் மருத்துவ குரல்கள் 
உச்சரிக்கும் பட்டியலில் 
பயணக் களைப்போடு தள்ளும் 
நுரை எச்சில் 

**** 

விஷம் குளிர்ந்து உலரும் சொல்லின் ருசி

*
ரயிலின் கடைசிப் பெட்டியை மூச்சிரைக்க 
ஓடிவந்து ஏறியதோடு 
துணையற்று பிளாட்பார்மில் நின்றுவிடுகிறது 
ஓர் இறுதிச் சொல் 

கைவிடப்பட்ட பலூனின் 
இலக்கற்ற நிச்சயமின்மையோடு 
திரியும் ஒரு சொல்லின் தனிமையை 
என்ன சொல்வதென்று தெரியவில்லை 

பகிர முடியாத 
ரகசியத்தின் தாழ்ப்பாளில் 
துருவேறுவதாக இருக்கிறது ஒரு சொல்லின் இறுக்கம் 

திறக்க மறுக்கும் உதடுகளுக்கு பின்னே 
நாக்கின் நுனியில் விஷம் குளிர்ந்து உலரும் 
சொல்லின் ருசியை 
எப்படி விழுங்குவது என்ற குழப்பத்திலிருக்கும் நொடியில் 
தொடர்ந்து கதவு தட்டும் சத்தம் கேட்டுக் கொண்டேயிருக்கிறது 

****

வெள்ளி, ஜூன் 27, 2014

வழித்துணை..

*
நீ
இல்லாத திசை எது
என்பதைக் கண்டுபிடித்து
அவ்விடம் நோக்கி பயணிக்கிறேன்

முந்தைய நூற்றாண்டின்
ஒரு புராதான இசை
வழித்துணையாகிறது

***

மூடிய இமை..

*
மெனெக்கெடுவதாக
மனக்குறையைக் கை கழுவுவதாக

காத்திருப்பதாக
முடிவைத் தீர்த்து வைப்பதாக
மௌனித்திருப்பதாக
புரியாக் குழப்பத்தைத் திறந்து விடுவதாக

எத்தனை விதங்களில் சொல்லியும்

மூடிய இமை பிரிவதாக இல்லை
ஒரு ப்ரியத்தின் மரணமாகி

****
 

கொஞ்சமாய்..

*
மீனின் சிறகுகள் அசைய
கொஞ்சமாய் நகர்கிறது
கடல்

***

காட்டிலும்..

*
விட்டு போய்விடுவதைக் காட்டிலும்
அதிகம் வலி தருவதாக இருக்கிறது
திரும்பி வருதல்

***

கண் கூசும் நிர்மூலங்கள்..

*
பறந்து சுழலும் துயரின் நிழல்
ஜன்னல் துளை வழியே இறங்கும்
வெயில் கற்றையைப் பற்றிக் கொள்கிறது

மேஜை விளிம்பில் வைக்கப்பட்ட
சில்வர் குடுவையின் வாய்ப் பகுதி
ஒற்றியெடுப்பதற்கான  உதடுகளுக்காக காத்திருப்பதாக
உச்சரிக்க அஞ்சும் சொற்கள் தயங்குகின்றன

துயரின் நிழல்
தன்னகத்தே கொண்டிருப்பதில்லை
எப்போதும் ஒரு வெளிச்சத்தை

கண் கூசும் சாயல்களோடு பூசிச் சிரிக்கும்
நிர்மூலங்களை இறக்கி வைக்கவே
ஏந்தும் கைத்தலம் நடுங்கும்போது

அறையும் இரவும் உறையத் தொடங்குகிறது
ஓசையற்று 

****

கவ்விக் கொள்ளும் மயில்களின் அலகு

*
அதிர்ந்து விலகும் கள்ளத்தனத்தை
புத்தகத்துக்குள் ஒளித்து வைத்துவிடுகிறேன்

மறந்துவிட்ட பக்க எண்கள்
கனவில் வந்து கண்களைத் தட்டுகின்றன

தவறான முகவரி என்று திருப்பி அனுப்பிய பிறகு
கவ்விக் கொள்ளும் தூக்கத்தில்
மயில்களின் அலகில் துறுத்திக் கொண்டு
குட்டிப் போடுகிறது கள்ளத்தனம் 

வைகறை பரவும் வாசல் படியில்
தூக்கக் கலக்கத்தோடு
முகவாயில் கை தாங்கி மடியில் புத்தகத்தோடு
உட்கார்ந்து கொண்டிருக்கிறது
அறுபத்து ஒன்பதாம் பக்க எண்

****

அது ஒரு வாதம் மட்டுமே என்கிறாய்..

*
நீ
என்ன சொல்லுகிறாய்
முத்தமிடு என்கிறாய்

நீ
என்ன சொல்லுகிறாய்
பரிதவிக்கச் செய் என்கிறாய்

நீ
என்ன சொல்லுகிறாய்
உனக்குள் என்னைப் புதை என்கிறாய்

நீ
என்ன சொல்லுகிறாய்
கனவைத் தீ வைத்து கொளுத்து என்கிறாய்

நீ
என்ன சொல்லுகிறாய்
மரணத்துக்கு இட்டுச் செல் என்கிறாய்

நீ
என்ன சொல்லுகிறாய்
எந்தவொரு காரணமும் உன்வசம் இல்லை என்கிறாய்

நீ
என்ன சொல்லுகிறாய்
அது ஒரு வாதம் மட்டுமே என்கிறாய்

நீ
என்ன சொல்லுகிறாய்
இத்தனை அல்லல் ஓர் அவஸ்தை
என்னைப் புறக்கணி என்கிறாய்

நீ
என்ன சொல்லுகிறாய்

முத்தமிடு என்றுதானே
பரிதவிக்கச் செய் என்றுதானே
கனவைத் தீ வைத்துக் கொளுத்தி
உனக்குள் என்னைப் புதை என்றுதானே
மரணத்துக்கு இட்டுச் செல்லும் வழியில்
எந்தவொரு காரணமும் கைவசம் இல்லை என்றுதானே
இத்தனை அல்லலும் ஓர் அவஸ்தை
எனவே
உன்னைப் புறக்கணி என்றுதானே

இவை ஒரு வாதம் மட்டுமே
என்றான பிறகு
அனைத்தும் முளைக்கும் நிலம் ஒன்றை
உழத் தொடங்குகிறேன் சொற் கூர் கொண்டு

அன்பே
நீ உரமாகிச் சாகும்போது
உன்னை முத்தமிடுவேன்

****

குற்றச்சாட்டின் ருசி

*
இரக்கமின்றி விலகி நடக்க துரத்துகிறது
நேற்றைய இடக்கு
புசிக்கும் பொருட்டு நீட்டப்பட்ட குற்றச்சாட்டின் ருசி
வேறொரு விருந்தை நினைவுப் படுத்துகிறது

ரகசியங்கள் கவிந்த இருள் மீது
ஊளையிடும் சாத்தியங்களை
விளக்கேற்றி அடையாளங்காட்டுகிற இரவு

ஓசையற்று பூக்கும் கிணற்றடி கல்லருகே
உதிர்ந்து கிடக்கிறது
முத்தத்தின் ஒன்றிரண்டு இதழ்கள்

குற்றச்சாட்டின் ருசி
திடம் வாய்ந்த மரக்கிளையின் மத்தியில்
தூக்கிடப்பட்ட கடவுளாகித்
தொங்குகிறது அகாலத்திலும்

***


திரள்..

*
ஒற்றை அதட்டலில் அழுதுவிடுகிற
குழந்தையின் விழிகளில்
திரள்கிறது
இந்த வாழ்வின்
முதல் அபத்தம்

***

நீர் மனிதனின் ஆக்சிஜன் குமிழ் முட்டைகளும்..சாயம் மங்கிய வலையொன்றும்..

*
குளிர் காலத்தில் புகைப் படிந்துவிடும்
மீன் தொட்டிகளில்
மீன்கள் உறைகின்றன
பிளாஸ்டிக் செடிகளுக்கு நடுவே

அவை
நடுங்கும்படியான இரைத் துகள்கள்
உப்பி ஊறும் வரை

எப்போதும்
அசைந்தும் மிதந்தும் ஒரே திக்கை வெறிக்கும்
நீர் மனிதனின் ஆக்சிஜன் குமிழ் முட்டைகள்
தனித்த உயிர் போல மேலேறி
தண்ணீர்ப் பரப்பில் உடையும் வரை

பூட்டிய வீட்டின் சாவித் துவாரம்
மீண்டும் இருளாகி
மீண்டு
திறக்கப்படும் வரை

சாயம் மங்கிய வலையொன்று நீருக்குள்
துழாவப்படும் வரை

உறைகின்றன மீன்களின்
கண்கள்
நினைவுகள்
உப்பி ஊறி துழாவி
மற்றும் உடைந்து

****

வசவுகளின் நீண்ட படுதாக்கள்

*
புழுதித் தூற்றும் சொற்களை
துடைப்பான்களின் முனைகள் சேகரிக்கின்றன

வீதியெங்கும் வருவோர் போவோருக்கான
விநியோகம் தொடங்குகையில்

வசவுகளின் நீண்ட படுதாக்கள்
உதறி உதறிக் காயப்போடப்படுகிறது
கொடிகளில்

ஈரம் சொட்ட
முகங்கள்
தொங்க

***

மின்சாரம் இல்லாமல் நின்றுவிடுகிற விசிறி..

*
நித்தம் திறந்து கொள்ளும் ஜன்னலின் உட்புறம்
வெளிச்ச முகமாகி சுமக்கிறது சுவரின் துயரை

கண்ணாடியின் பாதரசப்  பூச்சுக்கள்
கேட்டுப் பழகிய கதைகளின் முடிவுகள் யாவும்
மின்சாரம் இல்லாமல் நின்றுவிடுகிற
விசிறியின் இறக்கைகளை
அசைக்கும் பொருட்டு
கொஞ்சம் ஊதிப் பார்ப்பதும்

பெருமூச்சு ஒலிகளை சேகரித்து வைத்திருக்கும்
ஸ்டிக்கர் பொட்டின் நிறமிழந்த
தருணத்தின் பசையின் மீது உட்கார்ந்து
கை உரசும் ஈ ஒன்றின் விழிக் கோளமும்

சொற்ப தெருவின் ஈரத்தை
மொழிபெயர்க்க முயன்று தோற்பதை
நகம் சுரண்டி கீறிப் போகும் ஏக்கம்

****