வெள்ளி, ஜூலை 31, 2009

பகைமைக்கான முகாந்திரம்..

*

இருவருக்குமான
இடைப்பட்ட
நிமிடங்களின் இடைவெளியில்..

மௌனமொன்று..
உறுமுகிறது..

பின்னிரவின்
தெருவிளக்கு உமிழும்
மங்கிய
மஞ்சள் நிற ஒளியின்..
நிழலுக்குள்..

கவனிப்பற்று
சேகரமாகிறது..
சலிப்பு மிகு பகமைக்கான
முகாந்திரம்..

முஷ்டியின்
பலம் முறுகும்..
தசை நார்களில்..

எப்போதும்
தொடுக்க முடிந்ததில்லை..

சமாதானத்துக்கான பூக்களை..!

*****

புதன், ஜூலை 29, 2009

தொலைந்த இரவும்.. அடுத்தப் பக்கத்துக்கான திசையும்..

*

அகாலத்தில்
கதவு தட்டுகின்றன..

பாதி படித்து
கவிழ்த்து வைத்த
புத்தகத்தின்
கதாபாத்திரங்கள்..

'தூக்கம் தொலைத்த
இரவும்..
தொலைந்து விட்டதாக..'
சண்டைக்கு வருகின்றன..

அடுத்தப் பக்கத்துக்கான..
திசையை..
நச்சரிப்புடன் விசாரிக்கின்றன..

'என்னங்க..?' - என்றாள்
தூக்கக் கலக்கத்தில்..மனைவி..

'படு..! காலைல எழுப்பறேன்..' -
என்றபடி..
படுக்கையறை கடந்து..

படிக்கும் மேஜையில்..
கவிழ்ந்து கிடந்த புத்தகத்தை..
கையிலெடுத்து..

விட்ட இடத்திலிருந்து...
வாசிக்கத் தொடங்கினேன்..

தொலைந்த இரவும்..
அடுத்தப் பக்கத்துக்கான
திசையும்..

அறை ஜன்னலின்
இடுக்கினூடே..
மெல்ல நுழைகிறது..

*****

பூக்கும் நுண்ணியங்கள்..!

*

இள ரோஸ் நிற
'ஜெல்லாக'
தளும்பும் உதடுகளின்..

ரேகை வகிடுகளுள்..

பூக்கும் நுண்ணிய
ஈரத் துளிகளில்..

பிரமிக்கும்..
குட்டி பிம்பங்களாய்..
மிதக்கக் கூடும்..

என் முத்தங்கள்..

****

வெட்கத்தின் வளைவுகளை..முத்தமிடும் பென்சில் முனை..

*

வரைக்கோட்டுச் சித்திரத்தின்..
நெளி கோடுகளில்..

வெட்கத்தின் வளைவுகளை..
விரல் நுனிகள்
பிரசவிக்க..பிரசவிக்க..

பென்சிலின்
கார்பன் முனை..
முத்தமிட்டபடியே..
பயணிக்கிறது...

கையெழுத்திட்டு..
புள்ளி வைக்கும் வரை..

****

மல்லுக்கடுதலுக்கான இரவுகள்..

*

என்
அறை முழுக்க..
இறைந்து கிடக்கின்றன
புத்தகங்கள்..

புத்தகங்கள் முழுக்க..
இறைந்து கிடக்கின்றன
வாக்கியங்கள்..

வாக்கியங்கள் முழுக்க..
இறைந்து கிடக்கின்றன
சொற்கள்..

சொற்களுக்குள்..
முண்டியடித்து -
ஒளிந்து கொள்கின்றன
எழுத்துக்கள்..

அர்த்தங்களோடு
மல்லுக்கட்டும்...
இரவை.. உருக்க..

'ஸ்டீல்' பாத்திரத்தில்..
நிரப்பி அடுப்பிலேற்றுகிறேன்..

பாத்திரத்தின்..
அடிவயிற்றை..
ஆசையோடு நக்குகிறது..
'கேஸ்' நெருப்பு...

****

புணரும் வேர் நுனிகள்..

*

நறுவிசாய்
மௌனம் பூசிக்கொள்ளும்
தனிமையின்
வேர் நுனியில்..

முடிச்சிட்டுக் கிடக்கிறது
சிறு சப்தம்..

உறைந்துவிட்ட
நினைவுகளை உருக்கிட..

அனல் வீசிக் கடக்கும்
ஒருத்தியின் புன்னகையால்..

பொங்கும்
கண்ணீர்த் துளிகளை..
புணரும்
வேர் நுனிகள்..

இளக்குகின்றன..
முடிச்சுகளை..

*****

நுரைக் குமிழென..

*

முகில் சுழியில்..
சிக்கி முறுகும்..
மழைத் துளியில்..

மின்னல்
பட்டுத் தெறிக்கும்
சிரிப்பலையின்..

நுரைக் குமிழென..
ஊதிப் பெருகும்..

நின் காதல்..!

****

மழைச் சித்திரங்கள்..

*

செருப்பின்
ஓரத் தையல்களில்..
நைந்து..

பிசிராய் கிளம்பிய
நூல் நுனிகள்..

நேற்றிரவு..
வீடு திரும்புகையில்..
மழையில்..
தெருவில்..
நனைந்த சுகத்தில்..

வாசலோரச் சுவரில்..
வரைந்து வைத்திருக்கின்றன..
தான்..
ப்ரியப்பட்ட
கோட்டுச் சித்திரங்களை..!

*****

மெட்ரோ கவிதைகள் - 23

*
வட்டமாய்
நகம் கொண்டு
கீறி வைத்திருக்கிறேன்..

ஏதோ ஒரு
'ஷேர்' - ஆட்டோவின்
இடப்பக்கத் தகட்டில்..

உன்னோடு
செல் போனில்..
பேசிய..

நேற்றைய பயணத்தை..

****

செந்நிற சதுரங்களும்..எல்லையற்ற வடிவங்களும்..

*

ஒற்றை
மழைத் துளி..

தூரிகையாக
உருகிய..
கன வேகத்தில்..

செந்நிற சதுரக் கல்லில்
மோதிய நொடியில்..

'மாடர்ன் ஆர்ட்டாக..'
ஊறுகிறது..
எல்லையற்ற வடிவோடு..

****

மெட்ரோ கவிதைகள் - 22

*
'டைட்டானிக்' - படத்தின்
தலைப்புப் பாடலில்..
தாலாட்டுவதாய்..

யாதொரு பிரக்ஞையுமற்று
உறங்கிய பல்லி..

'கப்பல்' - இரண்டாய் முறிந்து..
புகைக் குழாய்..
பெரும் சப்தத்தோடு
சரிந்த கணத்தில்..

அலறியடித்து..

சுவரில் பொருத்தியிருந்த..
'சரவுண்டு ஸ்பீக்கரின்..'

மறைவிலிருந்து..
வெளிப்பட்ட வேகத்தில்..

'அட்லாண்டிக்' கடலிலிருந்து..
உயிர் தப்பியது..

*****

நான் அறையில்...இல்லாத சமயத்தில்..

*

கண்ணாடி அலமாரிக்குள்
கால வரிசைப் பிறழ்ந்து
முதுகு காட்டி..
நிற்கும்
டைரிகளுககுள்..

எழுதாத பக்கங்களுக்கும்..
எழுதிய பக்கங்களுக்குமான
நீண்ட உரையாடல்களை..

பக்கத்து குடுவையில்
செருகிக் கிடக்கும்..
என்
பேனாக்கள்..
குறிப்பெடுத்துக் கொண்டிருக்கின்றன..

*****

மீண்டும் உன் வருகை..

*

அழகாக இருப்பதாக..
சொல்லியபடியே..
ஓடிவிட்டாய்..
உன்
அம்மாவின் குரல் கேட்டு..

மீண்டும்
உன் வருகைக்காக..
காத்திருக்கிறோம்..

நானும்..

ஈரமாய் காய்ந்துகொண்டிருக்கும்..
என் ஓவியமும்..

*****

துளி நிழல்..

*

க்ரில் கதவின்
இரும்பு வடிவங்களை..

முரட்டுத்தன
சிமென்ட் தரையில்..

நீட்டிக் கிடத்துகிறது
அதிகாலை வெயில்..

கொடியில் உலரும்..
ஈரத்துனியிலிருந்து...
சொட்டு
சொட்டாய்..
நழுவிக்கொண்டிருக்கிறது..
நிழல்..

*****

நீ..!

*

சற்றேறக்குறைய
நிதானமிழக்க நேர்ந்தது..

நீ..

'களுக்' கென்று..
சிரித்த பொழுது..!

****

காத்துக் கிடந்த..வாசல்..

*

நீ கோரிக்கை வைத்த
அழைப்பை..
எவரோ திருடி சென்றனர்..
அதை..
'Commitment' -
என்று சொல்லும்படியாயிற்று..
மன்னித்துவிடு..

நீ
காத்துக் கிடந்த
வாசலை..
அவசரமாய் அடைத்துவிட்ட
காற்றை..
தண்டிக்க..மறந்து விடு..

மீண்டும்
சந்திப்பதற்கான கெடுவை..
காலம்..
தட்டச்சு செய்யும் சத்தம்..

தொடர்ந்து இரவு நெடுக..
மேற்கு வானத்தின்
இருளுக்குள் கேட்டுக்கொண்டே இருந்தது..

வைகறையில்..
முதல் வெள்ளியொன்று முளைக்கும் வரை...

******

வியாழன், ஜூலை 09, 2009

மெட்ரோ கவிதைகள் - 21

*
உறுமலோடு..
நகரும் மஞ்சள் நிற பிசாசுகள்..
தெரு முழுதும் அடைத்தபடி..

ஆட்களை அள்ளிப் போட்டு..

போன மழையில் பெயர்ந்த..
சிறு குழியெங்கும்..
நிரப்பிக் கொண்டு ஓடுகின்றன..

காலை நேர அவசரங்களை..

*****
( குறிப்பு - மஞ்சள் நிற பிசாசு - ஷேர் ஆட்டோ..)

நூல் கோர்க்கும் குளிர் ஊசிகள்..

*
கனவின் பக்கங்களை
ஓசையின்றிக் கிழிக்கின்றன
இரவுகள்..

தென்றலை நூல் கோர்த்து..
குளிர் ஊசிகளை
இறக்குகின்றன..
காட்சிகளின் மீது..

சூரியன்
தன் நூலகத்தின்
கதவுகளைத் திறந்து வைக்கும்போது..

வெளிச்சம் படராத..
அதன்
உள்ளறை அலமாரிகளில்..

வரிசைக் குலைந்து
அடுக்கப்பட்டிருக்கின்றன..

இதுவரை..
பூமியில் -
பிறந்து மரித்தவரின்..
கனவு புத்தகங்கள்..


****

புதன், ஜூலை 08, 2009

மௌனத்தை உடுத்திக்கொண்டு..

*

ஒரு
நண்பகலில்..
மௌனத்தை..உடுத்திக்கொண்டு..
தெரு இறங்கினேன்..

எதிர்ப்பட்டவர்கள்..
சொன்னார்கள்..

அழகாக இருப்பதாக..
நல்ல உடுப்பென்றும்..

மன நெரிசலுக்கு அடர்த்தியாக..
சொகுசாக இருக்கும் போலும்..

எனும்படி..

அபிப்பிராயங்களை...
என் பாக்கட்டில்..செருகி சென்றார்கள்..

மிடுக்கில்..நெஞ்சு
நிமிர்ந்த..நொடியில்..

பின்னிருந்து..
என்னைக் கடந்து சென்ற ஒருவன்..
என் தோளைத் தட்டி சொல்லிச் சென்றான்..

என் மௌனம்...
முதுகு பக்கம் கிழிந்திருப்பதாக...

****

நன்றி : ( உயிரோசை/உயிர்மை.காம் ) ஜூலை - 2009
http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=1740

சொற்கள்...உடைகின்றன..

*

சூடாக ஒரு கோப்பைத் தேனீரோடு..
டீ - கடையில் நிற்கும்போது..
சொற்கள் மழையாக பொழிகின்றன..

எரியும் சிகரெட்டை..
உதட்டில் பொருத்தி. .
கடற்கரையில்..நின்றபடி..

ஆழமாக இழுத்தால்..

சொற்கள் புகையாக..
நுரையீரல் முழுதும் நிரம்புகிறது..

கால் நனைக்கும் அலையொன்று..
தொட்டு மீளும்போது..

சொற்கள்..நுரையாக உடைகின்றன..

துள்ளத் துடிக்க..
தொடுவானின் விளிம்பை..
முத்தமிடும்..
ஒரு மீனின்..
இதழ்களில்..

சொற்கள் பூசிக்கிடக்கின்றன..
நிலவின் மினுமினுப்பை..

சாலையேறி..
கடப்பதற்கு.. காத்திருக்கும் நிமிடத்தில்..

சொற்களை..
அரைத்தபடி எங்கோ விரைகின்றன..
கணக்கில்லா வாகனங்கள்..!

****

நன்றி : ( உயிரோசை /உயிர்மை.காம் ) ஆகஸ்ட் - 2009
http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=1807

நடுநிசி வீடுகளின் பக்கச் சுவர்கள்..

*

கண்கள் சொக்கிய
நடு ஜாமத்தில்..
கவிதை தன் கதவுகளை மூடிக்கொண்டது..

நிலவின் எச்சிலாக ஒழுகிய இரவை..
நடுநிசி நாய்கள்..
நக்கியபடி ஊளையிடுகின்றன..

தெருமுனை
அரசமரத்தின் இலைகளெல்லாம்..
ஒரு சேர..
காற்றில் அசைந்து..

தெருவிளக்கொளிப்பட்ட
நிழல்கள்..

ஆட்சேபம் எழுதின..
வீடுகளின் பக்கச் சுவர்களில்..

*****

சனி, ஜூலை 04, 2009

அந்தி..

*

விரல்களிடையே..
உருளும்..

ஜெபமாலையில்..

பிரார்த்தனைகளை..
கோர்க்கிறது..
வயோதிகம்..

****

குளிர் இரவு..

*

தனிமை இரவில்..
தீப் பிடித்து எரிகிறது..
முன்பு..
நாம் கண்ட கனவொன்று..

குளிர் காய..
என்
கவிதைத் தாள்களை..
கொண்டு வா...
நெருப்பு அணையும் முன்..

விரல்கள் நடுங்குகின்றன..!

*****

இன்னொரு கதவு..

*

எழுதிக் கொண்டிருந்த
கவிதையிலிருந்து..
ரத்தம் சொட்ட..வெளியேறினான்..
பகைவன்..

விசாரணைக்காக..
போலிஸ்
என்னைத் தேடி வந்தபோது..

இன்னொரு கவிதைக்குள்ளிருந்து..
கதவு திறந்து விட்டாள்..காதலி..
ஒளிந்து கொள்ளும்படி..!

*****

உணர்வுக் குமிழ்...!

*

யதார்த்தங்கள் கசிந்து வழிய..
உடைந்து..வழி வகுக்கும்..
உணர்வுக் குமிழ்களை..

யாரோ..

ஊதி வைக்கிறார்கள்..
ஏகாந்தத்தில்..!

****

காலச் சிலந்தி..

*

பரண்களில் ஒளிந்து கிடக்கின்றன..
தலைமுறைகளுக்கான
காதல் ஏடுகள்..

நியாயத் தர்க்கங்களை..
ஓட்டடைகளாகப் பின்னி வைத்திருக்கிறது..
காலச் சிலந்தி..

முகமூடி அணிந்தபடி..
இன்றும்..
சுத்தம் செய்வதில்லை..
தும்மல் வந்துவிடுமே... என..

*****

நீ வரும் வரை..

*

சொல்வதாக சொன்னவை எல்லாம்..
சொல்லாதவைகளாகவும் படர்கின்றன..
நீர் பசலையாக..

மனப் படித்துறையில்..
அருகில்..
குவிந்து கிடக்கின்றன..
சிறு சிறு ஞாபகங்கள்..

அலை வளையங்கள்..
கரை நோக்கி விரியும் பொருட்டு..
ஒவ்வொன்றாய் வீசிக் கொண்டிருக்கிறேன்..
நீ வரும் வரை..

வெகு நேரம்..
யாரோடோ..
பேசிக் கொண்டே இருக்கிறது..
தன்
கீழ்த்தாடையின் உப்பலில்..
செய்தி சேகரித்து வைத்திருக்கும்..
ஒரு தவளை..

****

பெருந்துயரப் பாடல் ஒன்று..

*

மந்திரக் கிழவன் ஒருவனின்..
மாயக் கரங்களில்..ஒரு கூடு இருந்தது..

பெயர் தெரியா..
பறவையொன்று இட்டு வைத்த..
முட்டைக்குள்.. வளருகிறது..
பெருந்துயரப் பாடல் ஒன்று..

யுகங்கள் கடந்த பருவ நிலைகளில்..
வெப்பம் உறையும்.. குளிர் இரவுகளாய்...
கிழவன் உறங்குகிறான்..

அவன் மூச்சுக் காற்றில்..
பனி பொழிகிறது.. எப்போதும்..

கூட்டைத் தேடி..
கோடைப் பாலைவெளியெங்கும்.. பறக்கிறது..
எனக்கும்....பாடலுக்குமான..
சிறகுகள்...

****

வார்த்தைகளுக்குள் இருக்கும் முனகல்..

*

மரணம் பற்றி..
சிறு குறிப்பொன்று..
எழுதிக் கொண்டிருந்த இரவில்..

வழித் தப்பிய தும்பியொன்று..

என் அறையின்..
மின் குழல் விளக்கை..
சுற்றத் தொடங்கியது..

இறகின் ரீங்கரிப்பில்..
எழுதிக் கொண்டிருந்த ..
மரணக் குறிப்புகள்..நடுங்கின..

வார்த்தைகளுக்குள்ளிருந்து..
சிறு முனகலொன்றும்..மெல்ல கசிந்தது..

விளக்கின் மறைவிலிருந்து..
நழுவி வெளிப்பட்ட..
பல்லியொன்று..

வேகமாய் முன்னகர்ந்து..
சட்டென்று..நின்றது..

அசைவற்ற கணங்கள்...
முறையே மூன்று..

1. என் பேனாவின்.. நின்றுவிட்ட இயக்கம்..
2. தும்பியின்.. ரீங்கரிப்பற்ற பேரமைதி..
3. சாம்பல் நிறக் கண்கள்..குத்திட்ட..பல்லியின் பார்வை..

நீண்டிழுத்துக்கொண்ட
நாவின் நுனியில்..
தும்பியின் துடிப்பாக..
வால் மட்டுமே.. எஞ்சிற்று..

மரணக் குறிப்பில்..
மாமிச வாசனை..
கொஞ்சங்கொஞ்சமாய்.. வீசத் தொடங்கிய..
இரவில்..

பல்லிகள் உறங்கவில்லை..

*****


மேகமென கடந்து போகும்..தேநீர் ஆவிகள்

*

மழை பொழியத் தொடங்கிய போதே..
தெரிந்து கொண்டேன்..
நீ சீக்கிரம் வந்துவிடுவாய்..

சாலையோர சிறு பூக்களிலிருந்து..
புறப்பட்டுக் கொண்டிருந்தது..
மிக அமைதியான..
கேவல் ஒன்று..

அதை..
ஒரு இசைக்குறிப்பென...
சொட்டிக் கொண்டிருந்தது மழை..

நீ..கையோடு கொண்டு வந்த..
வார்த்தைகளை..
உணவக..சிப்பந்தி..தந்து சென்ற..
தேநீர் கோப்பையில்..
கலக்கத் தொடங்கினாய்..

கோப்பை விளிம்பின்..
இளஞ் சூட்டை முத்தமிட்டபடி..
பருகும் உதடுகளை..

தேநீர் ஆவிகள்..மேகமென கடந்து போனதில்..

உதடுகளுக்கு மேலாகவும்..
மூக்கு நுனுயிலும்..
மைக்ரோ புள்ளிகளாய்..
வியர்க்கத் தொடங்கியது
மற்றுமொரு மழை..

ஒலிப்பெருக்கியிலிருந்து..
இழைந்துருகிய.. வயலின்..இசை..
உன் கூந்தலில்..காய்ந்துவிட்ட
மல்லிகைச் சரத்தின்..
உதிரி மிச்சங்களை..

கேவலோடு...அழைத்தபடி..
ஜன்னல்..கடந்து..
தெருவில்..இறங்கி.. நனைகிறது..

****

ஆதியில் ஒரு மரமிருந்தது..!

*

திசை காட்டியை..
தொலைத்து விட்டதாக..
கானகத்திடம் முறையிட்டேன்..

ஆதி மரமொன்று..
கிளைகள் அசைத்து..
மெல்ல சிரித்தது..

அதன்
விழுதுகளை..
இறுகப் பற்றியிருந்த நிலத்தில்..

எறும்புகள்..
எனக்கு முன்னே...
ஊர்ந்து கொண்டிருந்தன..

அதை..
பின்தொடர்ந்து..
நகரத்தை கண்டு பிடித்தேன்..

****

ஆதாமின் விலா..

*

ஆதாமின்
விலாவிலிருந்து..
எலும்பொன்றை..உருவி..
நதிக்குள் வீச..

அதிலிருந்து..
வெட்கப்பட்டபடியே..
கரையேறுகிறாள்.. ஏவாள்..

அவளின்
இடது கையில்..

பாதி கடித்த
ஆப்பிள் ஒன்றின்..காம்பை..

சிறு பாம்பொன்று...
சுற்றிக் கிடக்கிறது..
கிறங்கியபடி..

****

மனமின்றி..

*

வாசித்துக் கொண்டிருக்கும்..
உன் புன்னகையை..

பாதியில்..
விட்டுச் செல்ல மனமின்றி..

அடையாளமாய்..
செருகிச் செல்கிறேன்..

ஒரு பார்வையை..!

****

கரையென புதைந்த சொற்கள்...

*

புனைவின் வெளி..
கரைகளற்று விரிந்து கிடக்கிறது..

கழுகுகள்..
வட்டமிட்டபடியே இருக்கின்றன..
நான்.. கடக்கவிருக்கும் பொழுதுக்காக..

தீர்மான கிரணங்கள் பட்டு..
கண் கூசினாலும்..
சில அடிகள் நகர்ந்தேன்..

ஊன்றும் எழுதுகோல்.. முனை புதைகிறது..

அதன்.. கூர்மை மழுங்கலிலிருந்து..
சொட்டுகளாய் திரளும் வார்த்தைகள்..
கோர்த்துக்கொண்டு ஒழுகுகின்றன..
வாக்கியங்களாக..

வானிலிருந்து..
கழுகின் ஒற்றை இறகு..
உதிர்ந்த வேகத்தில்..அசைந்து..அசைந்து..
என் வெளியைத் தொட்டபோது..

நான்..
புனைவின் கரையென..
உறைந்துவிட்டேன்..

வேர்விட்டுப் படர்ந்தபடியிருக்கிறது...
மிக நீண்ட..
கவிதையொன்று..!

*****

நிழல் போல் மலர்கிறாய்..

*

சதுரமெனவும்..
நீள் வட்டமெனவும்..
நேர்க்கோடு - நெளிக்கோடு எனவும்..

கனவின் கன்னத்தில்
நிழல் போல் மலர்கிறாய்..

உன் ரகசிய பாதைகளில்..
நிலவொன்று விழுந்து
பாதரசமாய் சிதறி உருளுகிறது..

வெளிச்சங்களை அள்ளி..
தாவணி முந்தானையில் மறைத்து..
என்னிடம் காட்டுகிறாய்..

அவை..
குட்டி குட்டி சிறகுகள் முளைத்து..
இறகென மிதந்து..
காட்டுக்குள் பறக்கின்றன..

ஆனால்..

சதுரமெனவும்..
நீள் வட்டமெனவும்..
நேர்க்கோடு - நெளிக்கோடு எனவும்
வரைபடமாகிறாய்..
தினமும்..

*****

புதன், ஜூலை 01, 2009

நவீனக் காடும்..'சர்ரியலிஸ' குதிரையும்..

*

நவீனக் காட்டுக்குள்..
ஒளிந்து கிடக்கும்..
பின் - நவீனத்தை
வேட்டையாட..

'சர்ரியலிஸ'
குதிரையேறி..
விரைந்து வருகிறான்..

'எக்ஸிஸ்டென்ஷியலிஸ'
வீரனொருவன்..

'பரோக்' சமவெளியெங்கும்..
பூத்திருக்கும்..மஞ்சள் நிற
'ரொமாண்டிஸிஸ' பூக்கள் கொய்து..

கிரீடம் வனைந்து..
காத்திருக்கும்..

'கிளாஸிஸ' இளவரசியின்..
கனவில் விரிகிறது..

இலக்கிய சுவர்களும்..
கிளைவிட்டு பரவும்..
மரபின் வேர்களும்..

*****

தீண்டல்..

*

நிலையற்றதின்
வால் முனையை..
நகத்தால் தீண்டிய..
கணத்தில்..

எங்கிருந்தோ முளைத்த
தலை..

பட்டென்று கொத்தி..
விஷமாக்கியது..
சூழலை..!

****

கண் மலர்..

*

என்
உடல் மீது நகரும்..
காமச் சருகை..
நொறுங்கி விழச் செய்யவே..

காதலின் இதழ்கள்
உன்
கண்களில் மலர்கின்றன..

****

காலக் கலயம்..

*

நீ
உச்சரிக்கும்..
சொற்களின்..
அர்த்த வடிவங்களை..
உன் உதடுகள் வனைகின்றன..

காலக் கலயத்துக்குள்..
உரையாடல் ஒன்று..
குழைந்து கிடக்கிறது..

****

நிசி அடர்த்தி..

*

மௌன இலைகள்..
என்
உடற் செடியின்
காம்பு நுனிகளில்..
உயிர்ப் பற்றி..
அசைகின்றன..

மன நிசி
கசியும் அடர் இருளின்..
கூச்சலில்..

அவை..நடுங்குகின்றன..
உதிர நேரும்..
கணத்தை நினைத்து..

*****

மெட்ரோ கவிதைகள் - 20

*
என்
கட்டிடத்திலிருந்து..
எதிர் கட்டிடத்திற்கான..
இடைவெளியை..

கேபிள் வயருக்குள்
ஊரும்..
பன்னாட்டு செய்திகளை..

மெல்ல நுகர்ந்தபடி..

அந்தரத்தில்..
கடக்கிறது..

ஒரு அணில்..!

****

உறைந்த வெளிகள்..

*

நட்பென
குளிர்ந்து உறைந்த
வெளியில்..

சூரியனொன்று..
தலைக்குப்புற விழுந்து
நொறுங்கியது..

****

மற்றுமொரு உரையாடல்..

*
மது போத்தல்களின்
குறுகிய வாய்களில்..
மிதக்கின்றன..
உதடுகள்..

குழைந்து நெளிந்த
அதன் கழுத்து வளைவில்..
பதியும்..விரல் ரேகைகளில்..

வியர்த்துப் பூக்கின்றன..
போதையின்..
புள்ளிக் குமிழ்கள்..

உருகும்
பனித் துண்டங்களினின்றும்..
ஆவியாய் பிரிகின்றன..

சில்லிட்ட உரையாடல்கள் சில..

எதிர்ப்பட்டு..
பிளந்து கூடும் பிம்பங்களை..
ஊடறுத்து...

சிணுங்கி மோதும்
கண்ணாடி கோப்பைக்குள்..

அசைந்தபடி கொப்பளிக்கிறது..
பொன்னிறத்தில்..
மற்றுமொரு உரையாடல்..

*****

நன்றி : ( உயிரோசை /உயிர்மை.காம் ) ஜூலை - 2009
http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=1712

இருளின் அடர்த்தியில் உதிரும் சிறகு..

*
அறையில்
இறுகி கெட்டித்திருக்கும்
இருளின் அடர்த்தியில்..

சிறு வீக்கமாய்
புடைத்திருக்கும்
சுவர் குண்டு விளக்கில்..

வழியும்
ஒளிக் குருதியை
பருகும் தாகத்தோடு..

சுழலும் ஈசலின்..
பார்வை..

பதிவு செய்கிறது..
உதிரும் தன் சிறகை..

பின்..
யாதொன்றும் செய்யவியலா..
கையறு நிலையென..

தரையில் ஊர்ந்து..
மௌனமாய்..
அறையை விட்டகலும்..

என்னிடம்...
சொல்லிக்கொள்ள மறந்தபடி..!

****

நன்றி : ( உயிரோசை /உயிர்மை.காம் ) ஜூலை - 2009
http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=1712

மெட்ரோ கவிதைகள் - 19

*
சிறுவன்
பேட்டைச் சுழற்றி அடித்த பந்து..

சிக்ஸரென..
ஒத்துக்கொள்ளப்பட்டது..

கட்டிடங்களுக்கிடையே..
உயர்ந்தெழுந்து..
அது...
தரையிறங்கிய இடம்..

பிளாட்பாரத்தில்..
பதியனிட்டு..பூத்திருந்த
கனகாம்பரச் செடியில்..

கிரிக்கெட்டில்
கலந்து கொள்ள முடியாத
தங்கை..

கைத் தட்டி..
சிரிப்போடு பார்த்தபடி
நின்றாள்..
வாயில் பிரஷ்ஷோடு..

'சனியனே..வந்து தொலைங்க..'

உள்ளிருந்து..
வேகமாய் வந்து விழுந்த
அதட்டல் குரல்..
விளையாட்டை..முடித்து வைத்தது..

அடுத்த கால் மணியில்..

பட்டாம்பூச்சிகளிரண்டும் ..
முதுகில் சுமையோடு..

சீருடைச் சிறைக்குள் அகப்பட்டு..
நடக்கின்றன..
சிறைக்கூடம் நோக்கி..

****

உந்துதல்..

*
கீழ்மையின் கனம்
தாங்கவொண்ணா..
பதற்ற நீட்சியை..

செதில்கலென
நினைவிற் செருகி..

நிரந்தர
பகிர்வுக்கான இழைகளை
அறுபட..
நிர்பந்திக்கும் பொருட்டு..

மனசின்
புறவாசலில்..
மண்டும்
விஷக் கொடிப் புதர்களை..
வேரோடு பிடுங்கி..தீயிலிட்ட
சாம்பலின் மிச்சங்கள்..

வாயகற்றி கொட்டுகிறது..
தனிமையின் உந்துதலை..

புறக்கணிக்கும்..
வக்கற்ற
கற்பனாயுத வெளியொன்று..
இனத்தின் சுவடுகளை தூசுகளாய்..

காற்றில் கிளப்பி..

தாங்கவொண்ணா
பதற்ற நீட்சியின் கீழ்மையின் கனம்
யுக யுகமாய் அலைகிறது..

*****

காகத்துடனான பகல்..

*

கா..கா - வென்று மட்டுமல்லாமல்..
'காவ்..காவ்..'
'க்வ்வாவ்..க்வ்வாவ்..' -
என்பதான..

மூன்று ஒலிக்குறிப்புகளை..
கலைத்து கலைத்து
புனைகின்றன..

இனத்துக்கான செய்திகளாகவுமின்றி..
நமக்கான சங்கேதமாகவும்..

நிலவை
ஒளித்து வைப்பதான
இரவுக்குரிய
பகல் பொழுதுகளை..
காகங்கள் கொண்டாடுகின்றன..

குழந்தைகளுக்கான
நிலாச் சோறு
உருண்டைகளாக வெய்யிலில் காய்வதை..

கான்க்ரீட் மாடியிலோ..
ஓட்டுக் கூரையிலோ..

அலகு பிளந்து..
ஆச்சரியமாய்..
வேடிக்கைப் பார்க்கின்றன..

தனக்கினையென
மனிதர்கள்
கூவும் ஒலியலைகளை..
மொழிப்பெயர்க்கும் பொருட்டு..

விழிகளில்..
உருண்டபடி இருக்கிறது..
பிரபஞ்ச இருள்..!

*****பாட்டன் விந்து..

*
அசுர னெனவும்
அரக்கனாவும்
வரைந்து கொடுத்தீர்..

என்
பாட்டனின் பாட்டன் விந்தை..

புத்தாடைகளும்..
பட்டாசுகளுமாக
வெடிக்கின்றன..

ஆண்டுதோறும்..
அவன் மாமிசம்..

வெட்கமின்றி - பிரக்ஞையற்று..
வாழ்த்துக்களும்
சொல்லித் திரிகிறேன்..
பாட்டன்களின்
சாவு குறித்த துக்கம்
அறியும் திறனற்று..

குழந்தைகளை மட்டுமே..
மன்னிக்கக் கூடும்..

வெடிப்புகையில்..
மூச்சுத் திணறும்..
அவன் ஆன்மா..!

*****

நீர்நிலைப் பாலைவனம்..

*
நேற்றிரவு குடித்த
மதுவை..
துப்பிவிட..

ஆட்காட்டி விரலைத்
தொண்டைக்குழிக்குள்.. இறக்கி..

ஒக்காலமிட்ட நொடியில்..

கையில்.. பிசுப்பிசுப்பாய்..
வந்து விழுந்தது
கவிதையொன்று..

உள்ளங்கையில்..ஏந்தியபடி..
நீர்நிலையைத்
தேடி அலைகிறேன்..

மனம்
முழுக்க..
பாலைவனத்தைக்
கொட்டி வைத்திருக்கும்..
உன்னைத் திட்டியபடி..

*****

செந்நிற நதி..

*
சொல்லிவிடத் துடிக்கும் நாவில்..
குதிரைகளாகி உட்புறம் ஓடுகின்றன சொற்கள்..

நாளங்கள் இழுத்துப் போகும்
செந்நிற நதியில்..
பழுத்த இலையென பயணிக்கும்..தவிப்பை..

பின்மூளையின்..
'செரிபல'.. கரையில்..
ஒதுக்கி..

தொடர்ந்தோடுகிறது..
உடலெங்கும் விரியும்.. கடலை நோக்கி..
கலந்துவிடும் முனைப்போடு..

முடிந்தவரை..
சொற்களின் குளம்போசைகள்..
இதயத்தில் தேங்குகின்றன..
வாழ்வதாக பொய் சொல்லி..!

*****

நுண்ணுனர் செல்களின் தட்டாமாலை...

*
பிறிதோர் முயங்குதலில்..
உடல் வேட்கையின் பரந்த வெளியில்..
முகர்ந்தலையும் மிருகத்தின்..
மென்வெப்ப மூச்சுக் காற்றில்..
பிசிரெனப் பறந்தது காமத் துகள்..

சொட்டுத் திரவத்தின் சொற்ப பொழிதலில்..
கெட்டித்து விட்ட அங்குல.. படுகையில்...
வெடித்துக் கிளை பரப்பும்..இச்சை வேர் முனையும்..

நுண்ணுனர் செல்களின்.. தட்டாமாலையில்..
இறுகப் பற்றுதலாய் புடைக்கும் நரம்புகளும்..

ஊர்ந்து கிறங்கும் உடலின் வாய்க்காலில்..
கால் நனைந்தலையும் உயிரின் இலக்குகளும்..

உச்சம் நோக்கி ஏகும் பாய்ச்சலின் பொருட்டு..
ஊர் - பெயர் - இடம் அகன்று..
செத்து பிறப்பதாக..

பகிர்தலற்று புரண்டு படுப்பதில்..
முடியலாம் இரவு..

*****