வியாழன், டிசம்பர் 22, 2016

வெளியவே நிக்கறேன்..


*

கண்ணாடிக்கு முன்னாலே நகரவோ கடக்கவோ முடியல
அது என்னக் கடத்தி வச்சுக்கும்
திருப்பித் தராது

தெனம் தெனம்

நான் என் அறைக்குள்ளே பிரவேசிக்கறேன்
ஆனா கண்ணாடிய மட்டும் தவிர்க்கறேன்

சத்தக்காடா இருக்கிற அறைக்குள்ள சமயங்கள்ல
நிறைய பேர் ஏக நேரத்துல வேற வேற விஷயத்த பேசற மாதிரியே இருக்கும்
அப்போல்லாம் கதவைத் திறக்கவே பயமா இருக்கு
அதனால வெளியவே நிக்கறேன்

நான் இல்லாத நேரமா பார்த்து
அந்தக் கண்ணாடி
அதுவரை அபகரிச்சு வச்சிருக்கிற என்னோட ஒவ்வொரு 'நானை'யும்
இறக்கி விட்டு
அறைய நிரப்பி வேடிக்கைப் பண்ணுதோன்னு ஒரு சந்தேகம்

ஏன்னா
எல்லாக் குரலும் என்னோடது
ஒவ்வொன்னும் வேற வேற தனிம சந்தர்ப்பங்கள்ல
அதும் முன்னாடி நின்னுக்கிட்டு நான் புலம்பனது

குறிப்பா இப்ப
இந்தக் கண்ணாடிக்கு முன்னால சத்தியமா
நகரவோ கடக்கவோ முடியல

கை நகத்தக் கடிச்சு கடிச்சு எவ்ளோ நேரம் தான்
துப்பறது
உள்ள வந்ததும் மொத வேலையா
இதயெல்லாம் பெருக்கி எடுக்கணும்

வெளிய இன்னமும் நின்னுக்கிட்டு இருக்கிற நான்
என்னவெல்லாம் யோசிப்பேன்னு
உள்ள இருக்கிற எனக்குத் தெரியற மாதிரியே
வெளியே இருக்கிற எனக்கும் தெரியும் தானே

அங்கயும் கடிச்சுத் துப்பின நகங்க தரையெல்லாம்
சிதறிக் கிடக்கும்

இன்னும் கொஞ்ச நேரம்தான்
இந்தக் கண்ணாடி என்னக் கடத்தி வச்சுக்கும்
திருப்பித் தராதுன்னு
எப்படியாவது என்கிட்ட சொல்லியாகனும்

நான் என்னடான்னா
கதவுல காதை வைக்க பயந்துக்கிட்டு
நேத்து மாதிரியே இப்பவும்

வெளியவே
நிக்கறேன்
 
***

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக