சனி, ஜனவரி 29, 2011

முடிவற்ற இரவின் தாகம்

*
முடிவற்ற இரவை  
சேமிக்கிறது 
ஒற்றைப் பனித்துளி 

பெருந்தாகத்துடன் கடந்து போகிறது
வைகறை சூரியன்  

***** 

ஒற்றைத் தகவலின் தூது..

*
ஒரு மரணத்தின் குறிப்பிலிருந்து 
விடுபட்ட தகவல்களை 
சரிப் பார்த்துக்கொள்ள 

இரவின் அடையாளம் சுமந்து 
கரிய நிழலென கிளைத்திருக்கும் 
மரத்தின் அடர்த்திக்குள்ளிருந்து
ஓயாமல் குரலெழுப்புகிறது 
முகம் காட்ட மறுக்கும் 
ஓர் ஆந்தை 

நாற்ச்சந்தி தெருவில் 
ஆரஞ்சு நிற விளக்கு உமிழும் 
சொற்ப வெளிச்சத்தில் 
வால் நிமிர்ந்த நாயொன்றும் 
அண்ணாந்து வான் நோக்கி 
செய்தி அனுப்புகிறது 
தன்னிடம் எஞ்சிய ஒற்றைத் தகவலை 
தூதாக 

அகாலப் பொழுதுகளுக்காக 
உயிர்ப் பற்றி 
நுனி ஊசலில் 
தொங்கிக் கொண்டு 
முற்றிலும் பழுத்து நைந்த 
ஒரு இலை 
விடுவித்துக் கொள்கிறது 
தன்னை 
ஓசைகளேதுமின்றி 

****** 

நன்றி : ' திண்ணை ' இணைய இதழ் ( ஜனவரி - 31 - 2011 )

நேற்றைய நள்ளிரவு என்பது..

*
காத்திருப்பின் முடிவுகளை
நேற்று நள்ளிரவே எழுதியாகிவிட்டது

இந்தப் பகல் வெப்பம்
ஒரு
வெறுப்போ
இந்த அனல் அச்சிலேருவது
ஒரு
அவமானமோ அல்ல

நேற்றைய நள்ளிரவு என்பது
முன்தின பகலின்
நிழல் தான்

*****

நன்றி : ' திண்ணை ' இணைய இதழ் ( ஜனவரி - 24 - 2011 )

படிமக் கோளங்களை உருக்கி வார்த்த இரவு..

*
ஒரு சாகசம் நிறைந்த இரவை நாம்
ஆவி பறக்கும் சூட்டில் உறிஞ்சினோம்
கொளுத்தி இழுத்த சிகரெட் புகை சற்று நேரம்
வெளிவந்த வேகத்தில் மீசையில் தொங்கியது
நரைத்து விட்டது என்றேன்

நீயுன் நரம்புப் புடைத்த புறங்கையை
பூகம்பத்துக்குப் பிறகு நெளிந்துவிட்ட
தண்டவாளங்கள் அவை என்றாய்

அந்த இரவு முழுவதும் ரயில் ஒன்று
இதயத்தில் தடதடத்து சுமந்து சென்ற துக்கத்தை
மூளைக் குடவுனில் இறக்கி விடுமல்லவா

படிமக் கோளங்களை உருக்கி வார்த்த
கண்ணாடிக் குடுவைக்குள்ளிருந்து
வெண்மையை உமிழ்கிறது
தள்ளு வண்டிக்காரனின் பெட்ரோமாக்ஸ்

பின்னிரவின் மணிச்சத்தத்தோடு
குல்பி ஐஸின் தந்த நிறத்தில்
கவிதைக் குச்சிகளை செருகிக் கொடுக்கிறான்
வெளுத்த குஜராத்தி இளைஞன்

மொழி புரியா சுவையை ருசித்துக் கழித்த
இரவை
சாகச இரவு என்று மறுநாள் நீ
மெயிலில் குறிப்பிடுகிறாய்

உனக்குப் பிடித்த நிறத்தில்
புத்தம்புது ஸ்மைலி ஒன்றைத் தேடுகிறோம்
நானும்
எனது ஆறு மாத மகளும் சேர்ந்து
உனக்கு அனுப்ப

*****

நன்றி : ( உயிரோசை / உயிர்மை. காம் ) [ ஜனவரி - 31 - 2011 ]

http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=3914

கூப்பிட்டும் கேட்டிராத குரல்கள்..

*
தெருமுனை வளைவில் கிடைக்கும்
சொற்ப நொடி அவகாசத்தில்
மிகச் சிறிய புன்னகையோடு
திரும்பிப் பார்க்கிறாய்
அப்போது
நான் அங்கு இல்லை..

0

என்ன சொன்னால்
எழுந்து வருவாய் என்கிறாய்
எதைச் சொன்னாலும்
எழுந்து வருவதாக இல்லை
என்
மௌனம்

0

அர்த்தங்களோடு மல்லுக்கட்டும்
அதிகாலையில்
வெப்பம் குறைந்த வெயிலாக
அறைக்குள் பிரவேசிக்கிறாய்
பேச இருந்த
எல்லா வாக்கியங்களுக்கு கீழும்
நிழல் பரவுகிறது

0

நீ
கூப்பிட்டும் கேட்டிராத குரலைப்
பற்றி
கண்ட கனவில்
இதழ்கள்
பூக்களில் கிழிந்து தொங்கின

******

நன்றி : ' திண்ணை ' இணைய இதழ் ( ஜனவரி - 17 - 2011 )

மௌனத்தில் உப்பியபடி..

*
திரள் நீரின் உப்பை 
வார்த்தைகளில் நிரடச் செய்கின்றன
அர்த்தங்கள்
பின்னொரு மௌனத்தில் உப்பியபடி
மரணிக்கிறது
மனக்குமிழ்

****



மெட்ரோ கவிதைகள் - 90

*
ஒரு பறவையின்
நிழல் பரவும் நிலத்தில்
மகாநதியொன்றின் மிச்சம் 
கான்க்ரீட் குறுகலின் கால்வாயில்
நெளிகிறது மனிதக் கசடுகளை
இழுத்தபடி..

****

இரவின் வரவேற்பறை

*
நீங்கள்
என் கனவின் விமர்சகராக இருப்பதில்
ஆட்சேபனை எதுவும் இல்லை

ஆனால்

அதன் வரவேற்பறையில்
ஒரு
கண்ணாடிக் கோப்பையில்
உங்களுக்கென்று
ஊற்றி வைத்திருக்கும்

என்
இரவுகளை

ஒரு
சொட்டு மிச்சம் வைக்காமல்
நீங்கள் பருக வேண்டும்

இது நிபந்தனை

****

நன்றி : ( உயிரோசை / உயிர்மை. காம் ) [ ஜனவரி - 24 - 2011 ]

http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=3890

சொல்லுவதில் என்ன இருக்கிறது..!

*
சொல்லுவதில் என்ன இருக்கிறது..?
ஓர் அவமானத்திற்கு பிறகு
ஒரு தலைகுனிவுக்கு பிறகு
ஒரு துரோகத்துக்கு பிறகு
ஒரு பிடிப்படலுக்கு பிறகு
ஓர் எள்ளலுக்கு பிறகு
ஒரு களங்கத்துக்கு பிறகு
ஓர் இரவுக்கு பிறகு
ஒரு கலவிக்கு பிறகு
ஒரு கண்ணீர்த் துளிக்கு பிறகு
ஒரு தற்கொலை முயற்சிக்கு பிறகு
ஒரு தனிமைக்கு பிறகு

பரவாயில்லை
விட்டுத்தள்ளுங்கள் என்று
சொல்லுவதில் என்ன இருக்கிறது..!

*****

நன்றி : ( உயிரோசை / உயிர்மை. காம் ) [ ஜனவரி - 17 - 2011 ]

http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=3872

சகதியில் நனையும் ஒரு எளிய நம்பிக்கை..

*
ஒரு சிறிய மழைக்குப் பின்
சகதியில் நனைய நேர்கிறது
அந்த எளிய நம்பிக்கை

சந்திப்புக்காக வழங்கப்பட்ட
அனுமதியின் புறக்கணிப்பை
கொண்டாடப் பழகுதல்
சிகரெட்டின் நுனி கருகுவதோடு
தொடங்குகிறது

காத்திருப்பதாக
வெகு நேரம்
காத்திருந்ததாக
தொடர்ந்து வந்த குறுஞ்செய்திகள்
சலிப்புடன் முடிவுக்கு வரும்போது

யாருமற்ற சந்து ஒன்றில்
பெயின்ட் உதிர்ந்த சுவரின் மீது
சுகமாக
சிறுநீர் கழிப்பதை
அனுமதித்து விடுகிறது

இப்பெரு நகரத்தின்
அவசரமாய் பெய்யும்
ஒரு
சிறிய மழை

*****

நன்றி : ( உயிரோசை / உயிர்மை. காம் ) [ ஜனவரி - 10 - 2011 ]

http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=3858

அர்த்தமற்ற ஓர் இரவின் அபத்தம்

*
அர்த்தமற்ற
ஓர் இரவின் அபத்தத்தை
நீங்கள்
எப்படி வேண்டுமானாலும்
மொழிபெயர்த்துக் கொள்ளலாம்

அதன்
ரகசியத் துவாரங்களில்
உங்கள் கண்களைப் பிடுங்கி
ஒரு வெப் காமிராவைப் போல்
அடைத்து வைத்துவிடலாம்

காட்சிகளின் மௌன நகர்வுகளோ
உதட்டசைவுகளின்
அர்த்தப் பிழைகளோ பதிவாகாத
இந்த
இரவின் அபத்தத்தை

நீங்கள்
எப்படி வேண்டுமானாலும்
மொழிபெயர்த்துக் கொள்ளலாம்

*****

நன்றி : ( உயிரோசை / உயிர்மை. காம் ) [ ஜனவரி - 10 - 2011 ]

http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=3858

நேற்றைய நள்ளிரவு என்பது..

*
காத்திருப்பின் முடிவுகளை
நேற்று நள்ளிரவே எழுதியாகிவிட்டது

இந்தப் பகல் வெப்பம்
ஒரு
வெறுப்போ
இந்த அனல் அச்சிலேறுவது
ஒரு
அவமானமோ அல்ல

நேற்றைய நள்ளிரவு என்பது
முன்தின பகலின்
நிழல் தான்

****

நன்றி : ' திண்ணை ' இணைய இதழ் ( ஜனவரி - 24 - 2011 )

ஒற்றைத் தகவலின் தூது..

*
ஒரு மரணத்தின் குறிப்பிலிருந்து
விடுபட்ட தகவல்களை
சரிப் பார்த்துக்கொள்ள

இரவின் அடையாளம் சுமந்து
கரிய நிழலென கிளைத்திருக்கும்
மரத்தின் அடர்த்திக்குள்ளிருந்து
ஓயாமல் குரலெழுப்புகிறது
முகம் காட்ட மறுக்கும்
ஓர் ஆந்தை

நாற்ச்சந்தி தெருவில்
ஆரஞ்சு நிற விளக்கு உமிழும்
சொற்ப வெளிச்சத்தில்
வால் நிமிர்ந்த நாயொன்றும்
அண்ணாந்து வான் நோக்கி
செய்தி அனுப்புகிறது
தன்னிடம் எஞ்சிய ஒற்றைத் தகவலை
தூதாக

அகாலப் பொழுதுகளுக்காக
உயிர்ப் பற்றி
நுனி ஊசலில்
தொங்கிக் கொண்டு
முற்றிலும் பழுத்து நைந்த
ஒரு இலை
விடுவித்துக் கொள்கிறது
தன்னை
ஓசைகளேதுமின்றி

****

நன்றி : ' திண்ணை ' இணைய இதழ் ( ஜனவரி - 31 - 2011 )

பொய்யின் நிறம்..

*
எப்போதோ சொன்ன
ஒரு
பொய்யின் நிறத்தை
கொஞ்சங் கொஞ்சமாய்
இழந்து கொண்டிருக்கிறது
இந்த நீண்ட இரவு

தாகத்திற்கு என
தருவிக்கப்பட்ட தண்ணீரின் அளவு
பருகப் பருக
பெருகுவதைப் போல்
சொற்களின் நீட்சியில் நீந்துகின்றன
சிக்காத வாக்கியங்கள்

****

நன்றி : ( உயிரோசை / உயிர்மை.காம் ) [ஜனவரி - 3 - 2011 ]

http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=3829

கூப்பிட்டும் கேட்டிராத குரல்கள்..

*
தெருமுனை வளைவில் கிடைக்கும்
சொற்ப நொடி அவகாசத்தில்
மிகச் சிறிய புன்னகையோடு
திரும்பிப் பார்க்கிறாய்
அப்போது
நான் அங்கு இல்லை..

0

என்ன சொன்னால்
எழுந்து வருவாய் என்கிறாய்
எதைச் சொன்னாலும்
எழுந்து வருவதாக இல்லை
என்
மௌனம்

0

அர்த்தங்களோடு மல்லுக்கட்டும்
அதிகாலையில்
வெப்பம் குறைந்த வெயிலாக
அறைக்குள் பிரவேசிக்கிறாய்
பேச இருந்த
எல்லா வாக்கியங்களுக்கு கீழும்
நிழல் பரவுகிறது

0

நீ
கூப்பிட்டும் கேட்டிராத குரலைப்
பற்றி
கண்ட கனவில்
இதழ்கள்
பூக்களில் கிழிந்து தொங்கின

*****

நன்றி : ' திண்ணை ' இணைய இதழ் ( ஜனவரி - 17 - 2011 )

கடலின் விரல்கள்..

*
நடுங்கும்
உன் விரல்களைப் பற்றும்
விருப்பமில்லை மழைக்கு

காற்றில் வலு கூடிய குளிர்ந்த ஈரம்
கடலின் அலையிலிருந்து
உப்புத் துளிகளைச் சுமந்து விசிறும்போது

உன்
உதடுகளில் விழுகிறது
முதல் முத்தம்

பிறகு
நிலவின் நிறம்
மஞ்சளாக உருகி
நீரின் விளிம்பில் பதுங்கிட

உன்
விரல்களைப் பற்றும்
விருப்பமில்லை கடலுக்கும்

நடுங்காதே..!

****

நன்றி : ' கீற்று ' இணைய ' இதழ் [ ஜனவரி - 2 - 2011 ]

http://www.keetru.com/index.php?option=com_content&view=article&act=section&id=12156&Itemid=139