சனி, ஜனவரி 29, 2011

ஒற்றைத் தகவலின் தூது..

*
ஒரு மரணத்தின் குறிப்பிலிருந்து
விடுபட்ட தகவல்களை
சரிப் பார்த்துக்கொள்ள

இரவின் அடையாளம் சுமந்து
கரிய நிழலென கிளைத்திருக்கும்
மரத்தின் அடர்த்திக்குள்ளிருந்து
ஓயாமல் குரலெழுப்புகிறது
முகம் காட்ட மறுக்கும்
ஓர் ஆந்தை

நாற்ச்சந்தி தெருவில்
ஆரஞ்சு நிற விளக்கு உமிழும்
சொற்ப வெளிச்சத்தில்
வால் நிமிர்ந்த நாயொன்றும்
அண்ணாந்து வான் நோக்கி
செய்தி அனுப்புகிறது
தன்னிடம் எஞ்சிய ஒற்றைத் தகவலை
தூதாக

அகாலப் பொழுதுகளுக்காக
உயிர்ப் பற்றி
நுனி ஊசலில்
தொங்கிக் கொண்டு
முற்றிலும் பழுத்து நைந்த
ஒரு இலை
விடுவித்துக் கொள்கிறது
தன்னை
ஓசைகளேதுமின்றி

****

நன்றி : ' திண்ணை ' இணைய இதழ் ( ஜனவரி - 31 - 2011 )

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக