சனி, ஜனவரி 29, 2011

படிமக் கோளங்களை உருக்கி வார்த்த இரவு..

*
ஒரு சாகசம் நிறைந்த இரவை நாம்
ஆவி பறக்கும் சூட்டில் உறிஞ்சினோம்
கொளுத்தி இழுத்த சிகரெட் புகை சற்று நேரம்
வெளிவந்த வேகத்தில் மீசையில் தொங்கியது
நரைத்து விட்டது என்றேன்

நீயுன் நரம்புப் புடைத்த புறங்கையை
பூகம்பத்துக்குப் பிறகு நெளிந்துவிட்ட
தண்டவாளங்கள் அவை என்றாய்

அந்த இரவு முழுவதும் ரயில் ஒன்று
இதயத்தில் தடதடத்து சுமந்து சென்ற துக்கத்தை
மூளைக் குடவுனில் இறக்கி விடுமல்லவா

படிமக் கோளங்களை உருக்கி வார்த்த
கண்ணாடிக் குடுவைக்குள்ளிருந்து
வெண்மையை உமிழ்கிறது
தள்ளு வண்டிக்காரனின் பெட்ரோமாக்ஸ்

பின்னிரவின் மணிச்சத்தத்தோடு
குல்பி ஐஸின் தந்த நிறத்தில்
கவிதைக் குச்சிகளை செருகிக் கொடுக்கிறான்
வெளுத்த குஜராத்தி இளைஞன்

மொழி புரியா சுவையை ருசித்துக் கழித்த
இரவை
சாகச இரவு என்று மறுநாள் நீ
மெயிலில் குறிப்பிடுகிறாய்

உனக்குப் பிடித்த நிறத்தில்
புத்தம்புது ஸ்மைலி ஒன்றைத் தேடுகிறோம்
நானும்
எனது ஆறு மாத மகளும் சேர்ந்து
உனக்கு அனுப்ப

*****

நன்றி : ( உயிரோசை / உயிர்மை. காம் ) [ ஜனவரி - 31 - 2011 ]

http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=3914

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக