திங்கள், ஏப்ரல் 27, 2009

முதல் சந்திப்பில்..

*

கரையிலமர்ந்தபடி..
உப்புக் காற்றை
சுவாசித்த..
நம்
உரையாடலின்
வெப்பத்தை..

குழந்தைகளின்..
வர்ண பலூன்கள்
சுமந்து சென்றன..

வால் நீட்டி..
காற்றேகிய..
சிறு
காகிதப் பட்டங்களின்
நூல் வெளியில்..

ஊர்ந்தேறியது..
நம்
வார்த்தைகள்..

சாம்பல் பூசிய
கடல் வானின்..
மேகமற்ற விளிம்பு வரை..

பார்வையின்
பயணம்..
தொட்டு மீண்ட
கணத்தில்..

மீன்களின் செதி லொத்த
சிரிப்பொன்றை
கண்களில்
வைத்திருந்தாய்..

இருட்டின் பசியை
இட்டு நிரப்பிக் கொண்டிருந்தது
உன் பேச்சும்
என் பேச்சும்..

அலை நுரைகள்..
மெல்ல முயன்று
பாதம் தொட
யத்தனித்தன..

தொண்டை காய்ந்திருக்கும்
வாய்ப்பாக..

நுரையீரல் நிரப்ப
சிகரெட் வேண்டுமென..
நீ
சொன்ன போது

மணல் தட்டி
எழுந்தபடி
காற்று விரட்டினோம்..

சாலையோரம்..
நின்றபடியும்..
நீண்டதொரு பேச்சு..
கண் கவியும்
தூக்கமொன்று
உன்னைத்
தொடும்வரை..

பஸ்ஸி லேறி
கையசைத்து..
ரீங்கரித்துக்
கொண்டே இருந்தது..

உன் சிரிப்பு...

நான்
வீடு திரும்பிய
பின்னும்..!

****

நடை பின்னும் தொலைவுகள்..

*

முத்தச் செதில்களில்
உதடு
குவித்தழுந்துகிறது
நீ
கசக்கிப் பிழிந்த
புன்னகைச் சாறு..

அழுந்தக்
கோர்த்துக் கொண்ட..
கைகளுக்குள்..
ஊறிப் பெருகுகிறது
வியர்வையாக
என்
காதல்..

நடை பின்னும்..
மணல் வெளியில்..
பாதங்கள்
வரைகின்றன..
கணக்கிட முடியாத
தொலைவுகளை..

கடல்
விளிம்பில்
உதித்தெழும்
நிலவின்
கிரண வீச்சில்..

பளபளக்கிறது..
உன்
பார்வையின் கூர்மை..

மெல்ல செருகியபடி..
என் வானத்தில்..

*****

பொடி இலைகளோடு..

*

மௌனப்
பூக்களின்
மகரந்தச் சேர்க்கையில்

நறுமணக்
கண்ணாடி யொன்று
'பட்' டென்று
வெடிக்கிறது..

பொடி
இலைகளின்
காய்ந்த
மொடமொடப்பை

காற்று..
தரையில் உருட்டி
இசைத்துப் போகிறது..

பயந்து விலகி
சுவரேறிய..

எறும்பின்
கறுத்த முதுகில்..
இசை
தொற்றிக் கொண்டது..!

****

காகத்தின் குரல்..

*

கா..கா..வென
கரையும்
காகத்தின்
குரலொன்று..
என்
தூக்கத்தை
கொத்துகிறது..

இமைகளுக்குள்
உருண்டசையும்
கண்களின்
உட்கூரையில்
செருகிக்கிடக்கிறது
சில
கவிதைகள்..

விம்மிப்
புடைக்கும்
நினைவின் உப்பலில்..

பிதுங்கி
வழிகிறது
உன்
பழைய
புன்னகை ஒன்று..

கா..கா.. வென
கரையும்
காகத்தின் குரல்
இன்னும்
கொத்துகிறது
என்
தூக்கத்தை..

*****
நன்றி : ( உயிரோசை / உயிர்மை. காம் - 4.5.09 )
http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=1355

சனி, ஏப்ரல் 25, 2009

லார்வா மொட்டு..!

*

தொட்டிச் செடிகளில்
பூக்கள் இல்லை..

பிடிவாதமாய்
படபடக்கிறது..
இலைகளில் காற்று..!

தண்டிலும்
மெல்லிய கிளைகளிலும்
ஊரும் எறும்புகள்..

நுகர்கின்றன
பூத்தலின் கணத்தையும்..

அதன் நிமித்தம்
துளிர்க்கும் ஈரத்தையும்..

சற்று முன்
ஒரு பட்டாம்பூச்சியை
வெளியேற்றி

பிய்ந்துத் தொங்கும்
பாதி லார்வாவின்
காம்புக்கு
பக்கத்தில்..

வெடிக்கக் கூடும்
ஒரு
ரோஜா மொக்கு..!

*****


போர்க்களம்..

*

விலகிச் சூழும்
இருள் கருவில்..
நெருப்பின் ஊற்று..

சிதறிக் கூடும்..
பார்வைக் குடுவையில்
பகையின் கரைசல்..

ஆயுதம் கிழித்த
வடுக்களின்
ஈரம் ஆறும் முன்

மீண்டும் போர்க்களம்..

அகம் - புறம்
பதிவில்

பூக்களின் நிழலில்..
ரத்த நதி உறிஞ்சும்..
மௌன
அட்டைப் பூச்சி..!


******

மணலின் சப்தம்..!

*

முடிவற்ற
பாதக் கோலங்கள்
அதன்
கருங்குழிக்குள்
கோடி சப்தங்கள்..

ஒன்றின் மேல்
மற்றொன்றாக..

அழிந்து
அடங்கிய
வினோத வடிவம்..

வைகறையும்.. அந்தியும்..
குழைத்து ஊற்றிய
குழப்ப நிழல்கள்..

காலத்தை..
தன்
வெப்ப கர்ப்பத்தில் சுமக்கும்
மணலின் சப்தம்..!

*****

முடிந்த காலம்.. - 2

*

பழுத்துவிட்ட
நட்பின் இலை ஒன்றை

பழைய டைரி
கவிதைகளுக்கு நடுவே..

வாசனையற்ற
ஒரு பக்கத்தில்..

பத்திரப்படுத்திய
ஓர் ஆண்டு அவகாசத்தில்..

தன்
மெல்லிய நரம்புகளின்
தோற்றத்துக்கு அப்பால்..

ஊடாடும் கவிதையை..

தனதாக்கிய
இறுமாப்பில்..

மௌனமாய்
உடைய காத்திருக்கிறது..
ஒரு
ஞானியைப் போல..!

*****

முடிந்த காலம்..- 1

*

வரம் கேட்க
நாக்கு சமதிக்கவில்லை..
தவம் செய்த
இடமோ தொலைந்துவிட்டது..

பயணிக்காத
பாதைகளின் வரைப்படங்களை

காணாத
கனவின் கீழ் முனைகளை

வாழ்வின்
ஏதோ ஒரு இருட்டுச் சுவரில்

எவனோ
ஒருவன் கிறுக்கி வைத்திருக்கிறான்..

விடியாத
இரவின் நீட்சி...

யுகத் தொலைவில்
மையமிட்டிருக்கிறது..

வீசக் காத்திருக்கும்
பெரும் புயல் போல..!

******

கையொப்பம்

*

இட்டு நிரப்பிக்கொள்ள
உன்
வெற்றிடத்திற்கு
என்னை
அனுப்பி வைக்கிறேன்..

' பத்திரமாய்
பெற்றுக்கொண்டேன் ' -

என்றொரு..
கவிதையை
கையொப்பமிடு..!

****

இடைவெளிகள்

*

உன்
மேலுதடும் கீழுதடும்

தட்டி தட்டித் தவிக்கும்..
மௌன இடைவெளிக்குள்..

இதயம் உச்சரிக்கும்
சொல் என்ன..?

கொஞ்சம்
கேட்டுச் சொல்

காத்திருக்கிறேன்..

*****

வெள்ளி, ஏப்ரல் 24, 2009

மெட்ரோ கவிதைகள் - 9

*
லெதர்
பெல்ட்டுக்குள்
கட்டுப் படுமென்றால்..

நாயை
மட்டுமல்ல..

சோறூட்டி..
பேயையும் வளர்ப்பர்..!

*****

மெட்ரோ கவிதைகள் - 8

*
செல்போனில்
பேசிக் கொண்டிருந்தவள்..
வார்த்தைகளோடு சேர்ந்து..

நழுவி விழுந்தாள்

விரையும் ரயிலின்
வாசலிலிருந்து..

தலையும் நசுங்கி..
ஒற்றைக் காலும் பிய்ந்ததாக..
பதிவாயிற்று
மார்ச்சுவரியில்..

தொடர்பு துண்டிப்புக்கான
காரண மறியா காதலன்..
எதிர்முனையிலிருந்து..

தொடர்ந்து
முயற்சிக்கிறான்..
எப்படியும்
அவளைப் பிடித்துவிட..

எவர் கவனிப்புமற்ற
முட்புதரில்..

விடாமல்
முனகிக் கொண்டே இருக்கிறது..
வலியோடு
ஒரு செல்போன்...

*****

மெட்ரோ கவிதைகள் - 7

*
ஹெல்மெட்
அணியாத கபாலம்
பிளந்து..

சிதறிய மூளை..

வெயில் தகிக்கும்
கருந்தார் சாலையெங்கும்..

வரைந்து
வைத்திருக்கிறது
மரணத்தின் வடிவத்தை..!

****

புதன், ஏப்ரல் 22, 2009

மெட்ரோ கவிதைகள் - 6

*
மேம்பாலப் பாம்புகளின்
முதுகில்
நெளிகின்றன
வெயில் பூசிக்கொண்ட
புழுக்கள்..

நகரும்
நொடிகளில் வழிகிறது..
மிக நிதானமாய்..
வாழ்க்கை..

இரண்டு
நிமிடத்திற்கொரு முறை..
வாகன நெரிசலில்..
பார்வை அப்பிக் கொள்கிறது..
வட்டச் சிவப்பை..

சலித்தபடி..
ஊடுருவும்
பிச்சைப் பாத்திரங்களில்..
வெயிலின் பளபளப்பு..

தலைக்கவசத்துக்குள்..
கொதித்துருளுகிறது..
வியர்வைக் குமிழ்கள்..

நகரம்..
ஒரு
பிரமாண்ட பசியோடு..
தினமும்..
எங்களை
நக்கிக் கொண்டிருக்கிறது..!

*****

மெட்ரோ கவிதைகள் - 5

*
பொருந்தா
உடையணிந்து..
முகத்திலறையும்
வெயிலோடு..

கையில்
பயன்படா
லத்தி பிடித்து..

சாலைதோறும்
விளக்குக் கம்பத்தின்
மெலிந்த
நிழலில்..

இடம் தேடி..

விறைப்பற்று
பரிதாபமாய்
நிற்கிறாள்..

தினந்தோறும்
பெண்
போலிஸ்..!

*****

மெட்ரோ கவிதைகள் - 4

*
வெயில் கூசும்
பகலிலும்
கொண்டைச் சிவப்பொளி
உமிழ மறப்பிதில்லை
அரசு
கார்கள்..

அதிகாரப் பசியோடு..
அரைபட்டு
விரைந்து சுழலும்
சக்கரங்களில்..

பொடிந்து
நொறுங்குகின்றன..
சில நூறு
இலைச் சருகுகள்..

நிறமிழந்து
அழுக்கூறிய உடையும்..
சிக்குப் படிந்த
கூந்தலுமாய்...

ஒருத்தி..
இடுப்புக் குழந்தையுடன்..

தெருவோரம் நின்று..
வேடிக்கைப் பார்க்கிறாள்..

தலைமேல்..
தடதடத்தோடும்
அதிசய ரயிலை..!

*****

மெட்ரோ கவிதைகள் - 3

*
' யோவ்..! 420..
என் கால்ல
ஷூ இருக்கா பாரு..'

இருபது வருட
சர்வீஸில்
வளர்ந்த
தொந்திக்கு அப்பால்..

குனிந்துப் பார்க்க முடியாத அளவில்..
பதுங்கிக் கிடக்கும்
ஓர் உலகம்..

தவிப்போடு
அட்டென்ஷனில்..
தினமும் நிற்கிறார்..

சி.எம். கார்..
கடந்து போகும் வரை

ஒரு
சார்ஜன்ட்..!

****

மெட்ரோ கவிதைகள் - 2

*
வெயிலொன்று
ஜனநாயகச் சாலையில்
உருகி வழிகிறது
எல்லாக்
கோடையிலும்.

மாநிலக்
கோட்டை மதில் சுவர்
நெடுக..
பளபளவென்று
வர்ணம் பூசிக்கொண்டு..
பல்லிளிக்கிறது
வறுமை..

தரையில்
நெளியும்
தேசியக்கொடியின்
நிழலசைவை யொத்து

முன்னும்
பின்னும்
நகர்ந்துக்
கொண்டேயிருக்கிறது

ஒரு
கருஞ் சிவப்பு எறும்பு..!

*****

நடைபாதை புத்தகமொன்று..

*

நடைபாதை
கடையில்
கண்டெடுத்த
ஒரு
புத்தகப் பிரதி..

நண்பனுக்கு
பரிசளித்து..

பரிசளித்தப்
புத்தகத்தை..

எப்படி கடன் கேட்க..

படித்து விட்டு
தரட்டுமா என்று..?

*****

என் தலைவன் அழைக்கிறான்..

*

பந்தலிட்ட
இரவின் கீழ்..

உமிழும்
நிலவின் ஒளியில்..

கொழுந்தெரியும்
வார்த்தைகளோடு..
நரம்புத்
தெறிக்க..

என்
தலைவன் அழைக்கிறான்..

உயிர் ஊடுருவும்
பார்வையில்
குத்திக்
கிழிக்கிறான்
உணர்வை..

சூடாகும்
ரத்தம்
கொப்புளித்து
வெடிக்கும் குமிழின்
சாரலில்..

புள்ளிகளாய்
துளிர்க்கிறது..
தன்மானம்..!

****

நா..!

*

இனிப்பு - புளிப்பு
காரம் - துவர்ப்பு
உப்பு..

சேர்ந்து..
கொஞ்சமாய்
வார்த்தைகளும் ஊறும்
நாவில்..

அரைக்கும் சுவையோடு
கிளர்ந்து
எழும்
எச்சிலைத் துப்புவது..

தெருவில்
மட்டுமல்ல..

சமயத்தில்..

எதிர்படும்
பகைவனின் மீதும்..

*****

விதிகளோடு திரி..

*

நீ
உனக்கான
விதிகளோடு திரி..

அம்மா
சோறு ஆக்கி வைத்திருப்பாள்.

உண்டு
செரித்து
படுத்து எழு..

உனக்கான
விதிகளோடு திரி..

வீட்டுக்குத் திரும்பும்போது..

மீண்டும்..
அம்மா
சோறு ஆக்கி வைத்திருப்பாள்..!

****

காமத்தின் கானல் நீரில் மிதக்கும் தாம்பத்யம்..

*
ஊடறுக்கப்படும்
கால முனைப்புகளில்
பெருகி சுழித்தோடுகிறது
மனங்குறுகிய
அவலத்தின் நிழல்..

அசையுறும்
காற்றின் நாவில்..
எச்சில் தெறிக்கும்
வசவுகளின் ஈரம்..

உன்னெதிரே கண்செருகி
கலைந்த ஆடையின் மடிப்பில்
தூக்கியெரியப் பட்டதென் உலகம்..

உரிமையோடு
எரிந்த விளக்கொளியில்..
ஊசலாடியது
என் நிர்வாணம்..

மல்லிகை இதழ்களின்
முனைகளில்..
நிகழ்ந்ததொரு
வண்ண மாற்றம்..

பழுத்த செந்நிறத்தில்..
வாடியது
என் முகம்..

உன்
கைக்குள் சிக்கிய
என்
கொத்துப் பிடரியில்..
உண்டு பண்ணினாய்
என் நிணம் ஒழுகும் வலியை..

எல்லாத் தாம்பத்யங்களும்..
நிலவை குடித்து
காதலைப் பருகுவதில்லை..

பசியோடு அலையும்
மிருகங்களின் இரவாக..
என் போன்ற..
இரைக் கவ்வியும்
திரியக்கூடும்..

****


செவ்வாய், ஏப்ரல் 21, 2009

திசையற்ற ஓட்டத்தில் கால் நனைக்கும் இரவு..

*
கனவின்
அடர் காட்டுக்குள்..
சொற்களின் கொடிகளை..
ஒதுக்கி..

நினைவுச் செதில்களின்
சிறு உருண்டைகளை..
பாதத்தால் நெருடி...

கருத்தப் பாறையொன்றின்..
கரத்தில்..

ரோமக் கற்றையின்..
சிக்குகள் ஒத்த..
பயத்தின் சடையை..

அடையாளமாய்...
விரல் சுற்றிக் கொண்டே..

குறுக்கிடும்..
நினைவு நதியின்..
திசையற்ற..ஓட்டத்தில்..
கால் நனைக்கும்..

தூங்கிய
இரவு..!

*****

வலியின் குறிப்புகள்..

*
நிர்ப்பந்தப் பூக்களின்..
மகரந்தச் சேர்க்கையில்..
காற்றிலேறிப்
புறப்படுகிறது
என்
வலியின் குறிப்புகள்..

அசையும் இலைகளின்..
ரேகைகளில்..
படிந்து
உருள்கிறது
திரவமென... என் நம்பிக்கை..

ஏந்தும்..மடியற்று
மனசுக்குள்
புதையுண்ட
வேர்களின்.. கைகளில்..

ஆணிகளை
இறக்குகிறது..
உன்
பகையின் உலோகம்..

சூழ் கொள்ளும்
ரத்தப் பதியன்களில்..

சிவந்த மேகங்களை...
பொழிய விடுகிறது..

நாளைப் பற்றிய
ஒரு
பேரதிர் நடுக்கம்..

*****
நன்றி : ( உயிரோசை / உயிர்மை.காம் - 18.5.09 )
http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=1418

விட்டுச் சென்ற சிறகில்..

*
மின்சாரம் செத்த..
நேற்றிரவில்..

விட்டில் பூச்சி
சிறகின் இழையில்..
சிக்கிக் கொண்டது..

எழுத முயன்ற
வார்த்தையொன்று..

கண்ணயர்ந்த
நொடியில்..

தன் ஒற்றைச் சிறகை..

என்
டைரியில்
கிடத்திவிட்டு..

இருட்டில் தொலைந்தது
விட்டில் பூச்சி..!

*****

மெட்ரோ கவிதைகள் - 1

*

'பீக்-அவர்'
சாலையில்..

பைக்கில் பயணிக்கும்..
நடு வர்க்க
மனிதனின்...

உதடுகள் புலம்புவது..

விடுபட்ட..
மாதாந்திர
பட்ஜெட்களை
மட்டுமல்ல..

சில
கனவுகளையும்
தான்..!

*****

முகாந்திரங்கள்..

*
நம்
அறிமுக
முகாந்திரங்களில்..

புன்னகையை..
கடன் கொடுத்துவிட்டு..

கண்களில்..
காதல் நெய்யும்..
என்
புத்தகத்தை..
எப்போது வாசிக்கப் போகிறாய்..?

*****

நிழல் போக்கு..!

*

புணரும்
வேட்கையோடு..
துரத்தும் வெயிலை..

போக்குக் காட்டி
நழுவுகிறது
எப்போதும்..
நிழல்..!

****
நன்றி : ( உயிரோசை / உயிர்மை.காம் - 18.5.09)
http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=1418

கானல் மீன்கள்..!

*
நெடுஞ்சாலைக்
கானல் நீரில்..

மூர்ச்சையிழந்து..
மூழ்குகின்றன..

நிழல்
மீன்கள்..

வேடிக்கைப் பார்க்க
சபிக்கப் பட்ட..
மின் கம்பங்கள்..

எப்போதாவது
விரையும் வாகனத்தின்...
பேரோலத்தில்..

சிதறும்
கானல் நீரில்...

நசுங்கும் மீனைக் கண்டு...

அசைவற்று
நிற்கும்..
நடுங்கியபடி..!

****
நன்றி : ( உயிரோசை / உயிர்மை.காம் - 4.5.09 )
http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=1355

மௌனப் பரண்..!

*
உன்
ஒவ்வொரு
மௌனப் பரணிலும்..

அடுக்கி
வைத்திருக்கிறாய்..

வாசிக்க முடியாத..
சில
புத்தகங்களை..!

*****

சிறு குறிப்புகள்...

*
கவனிப்பற்று
குவிந்து கிடக்கும்
சிறுகுறிப்புகள்
நெடுக..

உடைந்து
கிடக்கின்றன..

பல
கவிதைகள்..

****

எழுதிக் கொண்டிருக்கிறாய் ஒரு மௌனத்தை

*
மின் விசிறிக் காற்றில்..
தளும்பும்..
குவளை நீரின்
மேற்பரப்பில்..

உணவகத்தின்
உட்கூரை நிறமொன்று..

நெளிகிறது..
மௌனமாய்..

மேஜையில்
சிந்திய
ஒற்றை நீர்த்துளியை..
விரல் நுனியில்..
வட்டம் வரைந்தபடி..

நீயும்
எழுதிக் கொண்டிருக்கிறாய்..
ஒரு மௌனத்தை..!

****
நன்றி : ( உயிர்மை.காம் / உயிரோசை - 18.5.09)
http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=1418

கடலின் சுவை..

*
சுண்டல்
பொட்டலத்துக்குள்
கொஞ்சம்
மிளகுத் தூவி..

வார்த்தைகள்
குலுக்கி..
கையில் கவிழ்த்தாய்..

நாக்கில்
கரித்த உப்பில்...
கடல் இருந்தது..!

****

ஆட்காட்டி விரலில்..

*
நீ
தெரு முனைக் கோயிலை
கடக்கும்
போதெல்லாம்..

ஆட்காட்டி விரல் மடக்கி..
உதட்டில்
அவசரமாய்..

ஒற்றியெடுக்கும் கணத்தில்..

கடவுளுக்கு
கிடைத்து விடுகிறது..

நறுக்கென்று
ஒரு
முத்தம்..!

****

ஒரு முறை என் காதலி சொன்னாள்...!

*
ஒரு முறை
என் காதலி சொன்னாள்..

' ஆம்பளைங்க திருப்தியா
சாப்பிட்டா தான்
பொம்பளைங்களுக்கு..
சமைச்ச.. சமையல்ல..
சந்தோஷம் இருக்கும்..' -

இருக்கலாம்..
கைப் பக்குவம் என்பது..
கைகளுக்கு சொந்தமில்லை என்பதால்..

ஒரு முறை
என் காதலி சொன்னாள்...

' நிலா இல்லாத
ஒரு ராத்திரி முழுக்க..
உன் மடியில படுத்துக்கிட்டு
கவிதைகள் கேட்கணும்..'

அது சரி..
நிலவை மடியில்
கிடத்திக் கொண்டு...
நட்சத்திரங்களுக்கு அழைத்துப் போவதை விட..
அது ஒன்றும் சுலபமில்லை..

ஒரு முறை
என் காதலி சொன்னாள்...

' ஏன் எப்பவும்
உம்முன்னு யோசனையாவே இருக்கே..?
கொஞ்சம்
அப்பப்போ சிரிச்சா என்ன..? '

சிரிப்பில் என்ன உண்டு..
கண்கள் பேசும்போது..!

ஒரு முறை
என் காதலி சொன்னாள்..

' நான் ஊருக்குப் போறேன்..
திரும்பி வந்ததும்..
நாம கல்யாணம் பண்ணிக்கலாம்..'

பிறகொரு நாள்...

மூன்று முடிச்சுக்குள்...
இறுக்கிக் கொண்டது..

உணவின்..
கைப் பக்குவமும்..

இரவின்
நட்சத்திரங்களும்...

எப்போதும்
யோசனையாகவே
இருந்துவிட்ட...

அந்தப் புன்னகையும்..!

******

குறுக்கே புகுந்த நீ..!

*
கையில் குழந்தையுடன்
மார்க்கெட் சென்ற
என் குறுக்கே புகுந்த..
பைக்கில்..
ஆச்சரியமாய் நீ..!

' என்னடா இந்தப் பக்கம்?' - என்றேன்.

' ஒரு மலர்கொத்துத் தேடி
மார்க்கெட் வந்தேன்..
கொத்து மலராய் உன்னைப் பார்த்து
ஸ்தம்பித்து நின்றேன் ' - என்றாய்..

அன்றிரவு முழுதும்..

உன் புன்னகை..
என் முகத்தில்..
இடமாற்றம் ஆனதைக் கண்டு..

இன்னும் சிரித்துக்கொண்டிருக்கிறோம்..
நானும்..
என் குழந்தையும்..

******

திங்கள், ஏப்ரல் 13, 2009

அம்மாச்சிக் கிழவியின் பூமி..

*

காத்தமுத்துப் பையன்
காதுக்குத்துக்கு
தடியூன்றி வந்தாள்
அம்மாச்சிக் கிழவி...

ஊன்றியத் தடியில்
அவள் நிழலோடு சேர்ந்து
பூமியும் கொஞ்சம்
புதைந்தது..!

*****

காமத்தின் அகதி முகாம்..!

*

காமத்தின் அகதி முகாமில்..
தஞ்சம் புகும் உணர்ச்சிகள்
வரிசைப் பட்டியலில்
அடைப்படுகின்றன..

காமத்தின் அகதி முகாமின்..
பக்கச் சுவர்களில்
அஸ்திவாரத்திலிருந்து
உள்பரவி..
மேலேறுகிறது..ஒரு ஈரம்..

காமத்தின் அகதி முகாம்..
விரித்திருக்கும்... வெளியில்..
வெம்மையில் காய்கிறது
சில நூறு முத்தம்..

காமத்தின் அகதி முகாமோடு..
சடைப் பின்னி வளர்கின்றன
தனிமை இரவுகள்..

காமத்தின் அகதி முகாமை..
காக்கும்.. புன்னகையில்..
எப்போதும்..
பொறுமையாய் காத்திருக்கிறது..
ஒரு குரூரம்..!

*****

உன் அசைவுகளின் நிழல்..

*

குத்திட்டு உள்ளேகும் பார்வையில்..
கூர் தீட்டி வைத்திருக்கிறாய்
ஒரு கனவை..

என்
நினைவுச் சுரப்பியின் ஊற்றுக்களில்..
எப்போதும்..
மிதக்கிறது உன் முகம்.

அசைவுகளின் நிழலில்
துணைக்கு
வால் சுருட்டிப் படுத்துவிடுகிறது..
என்னோடு..
உன் புன்னகை..

தொலைவில்..
கடுகென
உன் உருவம் கண்டதும்..

தரையிலிருந்து..
எம்பும் ஒரு பறவையின்
சிறகைப் போல்..

கடலலை நெளிகளில்..
குதிக்கும்...
நூறு நிலவுகள்..!

என்னைப் பார்க்கும் நொடிகளில்..
சிவக்கும் உன் காது மடலில்..
உதிக்க தவறுவதில்லை..
ஒரு
வெட்கச் சூரியன்..!

வீட்டிலிருந்தே..
உதடுகளுக்குள்
பொட்டலம் கட்டிவிடும்
முத்தங்களை..

கடற்கரை
மணல் தட்டி..
கிளம்ப யத்தனிக்கும்..
கணத்தில் தான்..
பரிசாகக் கொடுக்கிறாய்..
எப்போதும்..!

*****

மெரீனா..பூமி..!

*

காரோ பைக்கோ..
மனிதர்கள் வந்தபடியே இருக்கிறார்கள்..
ஏதாவது ஒரு விதத்தில்..

எப்படியும்...

பூமியில்..
காலை ஊன்றாமல்...
எதுவும் நடப்பதில்லை..

******

சனி, ஏப்ரல் 11, 2009

நுன்னியப் புள்ளிகள்...

*

பந்தாய் சுருன்டெழும்..
நினைவின் நிழலில்..
கைப்பிடிப் புன்னகையொன்று
ஆழமாய் புதைந்துக் கிடக்குமோ..!

நிலவின்
முனை உடைந்தப் பள்ளங்களில்..
தேக்கம் கண்ட..
வெயிலின்..வாசம்..
என் இரவில்...
நட்சத்திரமாய்...உதிர்கிறது..

அசையும்...பெயர் தெரியா
மரத்தின் இலைகளில்..
மெழுகாய்ப் பூசிப் போகிறாய்..
உன் பார்வைகளை...

மனசின்
வேர் நுனிவரை..பரவும்..
ஈரக் கணங்களை..
எளிதில் கடக்கும் விதமாக...
எப்போதும் அமைவதில்லை...
உன் வருகை..

விம்மிக் கசங்கும்..
பொழுதுகளின்..முதுகில்..
நேற்றைய இரவின்
கண்ணீர்த் துளியொன்று..
பாம்பாய் நெளிகிறது..

வீசும்
தென்றலின் பிடரியெங்கும்..
நுன்னியப் புள்ளிகளாய்...
வியர்க்கிறது..
உன் மௌனம்..!

******

வெள்ளி, ஏப்ரல் 10, 2009

நதிக்கரையின்..கூழாங்கற்கள்..!

*
நீர்க் கோர்வைகளின்..
அலை அடுக்குகளில்..
குமிழ்விட்டோடுகிறது...
நாம் சிந்திய வார்த்தைகள்..

நதிக்கரையோரம்...
மணல் படுகை நெடுகே..
நெளிந்து நிற்கும் நாணல் நுனிகளில்..

பிசிர் பறக்க.. தலையசைக்கும்..
நம் சிரிப்பொலி..

இலையுதிர்கால மரமொன்றின்..
கருமைக் கிளைகளில்...பொதிந்திருக்கும்...
பெயர் அறியா பறவையின் கூட்டில்..

அடைகாக்கப் படலாம்..
நம் கவிதைகள்.

சிறகு முளைக்கும் பருவத்தை..
எதிர் நோக்கி..
இறுகப் பற்றிய...
என் உள்ளங்கை வெப்பத்தில்..

கனன்று முளைவிடுகிறது உன் நம்பிக்கை..

காதோரக் குழல் ஒதுக்கி..
வில்கூர் புருவ முனை உயர்த்தும் அழகில்..

அந்தி வானில் ஒளித்தீட்டக்
கிளம்பக்கூடும் ஒரு நட்ச்சத்திரம்..

எதிர் வரும் குளிர் இரவின்..
நிழல் விரல்கள்...
தீண்டத் தவிக்கும் நம் பொழுதை..
பத்திரமாய்...சுமக்கும்படி..

நதிக்கரையின்..
கூழாங்கற்களைக் கேட்டுக்கொள்வோம்..

வா..!
மண்டியிட்டு...
நதியை..முத்தமிடலாம்..

*******

சனி, ஏப்ரல் 04, 2009

மௌன நாளொன்றில்..

*

மௌனமாய்..
உன்னிடம்
கை குலுக்கிய
நாளொன்றின்..
இரவு வானில்

சட்டென்று
ஓர்
எரி நட்ச்சத்திரம்
சிரித்துக்
கடந்தது..

*****

நழுவும் நீர்த்துளி..!

*

குழந்தை
கைக் கழுவிய
தண்ணீர் 'பக்கெட்டுக்குள்..'

உப்பிக் கிடக்கும்
'சோற்றுப் பருக்கைகளை '

'சொட்டு... சொட்டென்று..'

மௌனத்தால்..
அளக்கிறது..

குழாயில்..
நழுவும்
நீர்த்துளி..!

*****

ஒரு புன்னகை..

*

குயவன்
விரல் நேர்த்தியோடு..
வனைய
முயல்கிறேன்..
உன்
புன்னகையை..

குழையும்
எழுத்துக்களோ..
ஈரப்
பிசுப்பிசுப்போடு..
ஒட்டிக் கொள்கிறது..
காகிதத்தில்..

*****

கால யந்திரம்..

*

கால் முளைத்த
பழங்காலத்து..
சமையல் யந்திரம்..
இன்றும்
நிற்கிறது..

நம்
நவீன
சமையலறைகளில்..

அம்மாவாய்..
மனைவியாய்..
மகளாய்..

சமயத்தில்..
கிழவியாகவும்..!

*****

வார்த்தைகள்..

*
வலுவற்ற
பூகம்பம் ஒன்றை
புதைத்து வைத்திருக்கிறாய்
மௌனத்தில்..

வார்த்தைகள்
உடைந்து விழுகின்றன
என்
தாளில்..!

*****

புதன், ஏப்ரல் 01, 2009

எங்கள் ' சே' வும் 'பிடலும்'..

*

எங்கள்
'சே' -வும்
'பிடலும்'

அலைந்துத் திரிந்த..
காட்டில்..

வெடிக்கும்
துப்பாக்கி முனையின்..
இளஞ்சூட்டில்..

பட்டாம்பூச்சிகளுக்கு..
இடமில்லை..!

******