செவ்வாய், செப்டம்பர் 30, 2014

காயாத ஒற்றை ரத்தத் துளி..

*
பிடித்தங்களின் குறுவாள் 
பாய்கிறது 
நினைவின் அடிவயிற்றில் 

இன்னும் காயாத 
ஒற்றை ரத்தத் துளியாகிறது 
நழுவிய 
கடைசி வாய்ப்பு  

**** 

விட்டுக்கொடுத்தலின் நடைபாதை வெறுமை

*
திரும்புதலின் எல்லை வரை  
நடக்கத் தூண்டுகிறது 
உரையாடலின் ஒவ்வொரு இறுதிச் சொல்லும் 

ஓர் அர்ப்பணிப்பை
அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டும் 
என்ற கட்டாயம் ஏதுமில்லை 

விட்டுக்கொடுத்தலின் நடைபாதை வெறுமை 
ஒருபோதும் இசைப்பதில்லை 
அதன் தனிமையை 

யாவற்றையும் 
ஒருங்கிணைக்கும் மையத்தில் எரிகிறது 
ஓர்  அணையாவிளக்கு 

திரும்பதலின் எல்லைவரை 
துணை வரும் வெளிச்சமாகவும் 
அல்லலுற வீசும் இருளாகவும் 

****

சலிக்காமல்..

*
முற்றுப்பெறா
கவிதையொன்றின் பக்கம்வரை
சலிக்காமல்
புரட்டிக்கொண்டிருக்கிறது
ஜன்னல் காற்று

***

கொஞ்சமேனும்..

*
நான்
நிச்சயமாய் கொஞ்சம் கொஞ்சமாக
செத்துக்கொண்டிருக்கிறேன்

எப்போதும் போல் இப்போதும் வந்து சேர்வதற்கு
நேரம் கடத்தாதே

நான்
எரியூட்டப்படுவதற்கு
ஐந்து நிமிடத்திற்கு முன்னாலாவது
வந்துவிடு

ஓர்
எளிய நம்பிக்கையின் சிறு விதைக்குள்
கொஞ்சமேனும் நீயிருக்கிறாய் என்பதை
நிரூபிக்கும் பொருட்டு

****

ஒன்றன் பின் ஒன்றாக..

*
நான் 
வந்த பிறகும் 
இன்னும் பகிரப்படாமலே உருகத்  தொடங்குகிறது
நீ ஆர்டர் செய்த ஐஸ்க்ரீம்

அடக்கமான வெளிச்ச விளிம்புக்கு
பின்னிருக்கும் நிழலில்
புதைந்திருக்கிறது உன் முகம்

தாமதத்துக்கான
ஒவ்வொரு காரணங்களையும்
ஒன்றன் பின் ஒன்றாக
ஒரு மெழுகுவர்த்தியைப் போல
இந்த மேஜையின் மீது ஏற்றி வைக்கிறேன்

கூடுதலாகிப்போன சொற்ப
பிரகாசத்தில்
முதலில் வெளிப்பட்டது ஒரு
வளைந்த புன்னகை

பிறகு ஒரு சொல்

****

அதீத தனிமையின் நுனி விரல்..

*
என்னைக் கொஞ்சம்
அணைத்துக்கொள் என்றாள்

அதீத தனிமையின் கேவலோடு

விழுதுகளின்
நுனி விரல் கொண்டு
அவளைத் தொட்டுத் தொட்டுத்
தொட்டுக்கொண்டேயிருக்கிறது

ஆலங்காற்று

***

இலை இலையாக உதிரத் தொடங்கும் சொல்லின் சருகுகள்..


*
சொல்லை வைத்து ஆடிய சூதில்
ஓர் அவனை வென்றேன்

இழந்த அவனின் வெற்றிடத்தை
அபகரித்துக்கொண்ட சொல்லைக் குறித்து
விசாரிக்கத் தொடங்கினான்
பயண நெடுவழி தோறும்

ஓய்வாய் உட்கார்ந்துவிட்ட மர நிழலில்
பாடலொன்றை பாடியது களைப்புத்தீர
அச்சொல்

குறிப்புகள் எடுத்துக்கொண்டான்

சொல் ஓய்ந்து அயர்ந்தபோது
மரத்தின் இலைகளை எண்ணிக் கொண்டிருந்தான்

தொடர்ந்த பயணத்தில்
தர்க்க வாதம் பண்ணினான் அதனிடம்

நடக்க நடக்க பாதையெங்கும் இலை இலையாக
உதிரத் தொடங்கிய
சொல்லின் சருகுகள் ஒவ்வொன்றும் நிறம் மாறின
வேறு வேறு சொல்லாக

நான் அவனாகிப் போன சூதில்
என்னை வென்ற சொல்
பெருங்காடாகியது

***

வற்றிவிட்ட இதயத்தின் மரவுரி..


*
ஒளித்துகள் சரியும் பள்ளத்தாக்கில்
துளிர் விடுகிற இரவை பறிக்கிறது
உன் என் அவன் விலா எலும்பு


செரித்த விதைகளின் தோட்டம்
மலரச் செய்கிறது
ரத்தம் ருசிக்கும் கூர் பற்களை
விஷ வால் சுழலும் நைச்சியத்தை பழிக்கிறது
தொடக்கக் கால அசரீரி

குற்றத்தின் முன் மண்டியிடும் பாவங்களை
முகமூடிகளாகத் தயார் செய்து தரும் தச்சன்
எனது தோழன்

அவனுக்கொரு காவியுடையை நெய்து
தருவதாக எழுதி வைத்த சத்தியத்தை
சுவர் மீது தின்று திரிக்கிறது கரையான் கூட்டம்

ஈரப்பதம் வற்றிவிட்ட இதயத்தின் மரவுரியை
தரித்திருப்பினும் ஊடுருவும் குளிர்
குத்துகிறது விலாவை

நூற்றாண்டுகளில் உளுத்துப்போய்
ஒத்துக்கொள்வதாக முனகுகிறது அசரீரி

ஆமென்

****

ஒரே ஒரு முறை மட்டும்..


*
முதன் முதலாக
நீயுன் இரவை ரகசியமாய் திறந்தது ஏன்

முதன் முதலாக
வெட்டுப்பட்ட விரலில் இருந்து கசியும்
ரத்தத்தை ருசித்தது ஏன்

முதன் முதலாக
உனது ப்ரியத்துக்குரிய உதட்டில் முத்தமிட
துணிந்தது ஏன்

முதன் முதலாக
ஒரு கெட்டவார்த்தையை உச்சரித்துப் பழக
முயன்றது ஏன்

முதன் முதலாக
வெளிச்சம் குறைந்த கதவடைக்கப்பட்ட அறைக்குள்
கிடந்து கதறி கதறி அழுதது ஏன்

முதன் முதலாக
பாடையொன்றை தோளில் ஏற்றி வைத்தபோது
தெருவில் சிதறும் மலர்களுக்காக வருத்தப்பட்டது ஏன்

முதன் முதலாக
நேசத்திற்கினிய தோழி தொடர்ந்து அழைத்தும்
அழைப்பை ஏற்காமல்
செல்போனை தண்ணீருக்குள் விட்டெறிந்தது ஏன்

முதன் முதலாக
ஓர் அந்நிய உடல் மீது உருக்கொண்ட வேட்கையை
என்ன பெயரிட்டு அழைக்கலாம் என யோசித்தது ஏன்

முதன் முதலாக
விருப்பப்பட்டு வாங்கிய நாய்க்குட்டியை
நெரிசல் மிகுந்த சாலையோரம் கைவிட்டது ஏன்

முதன் முதலாக
கைக்கு வந்து சேர்ந்த ஒரு நீண்ட காதல் கடிதத்தை
ஒரு முறை மட்டும் வாசித்து முடித்து நெருப்பிட்டு
எரித்தது ஏன்

முதன் முதலாக
காமத்தை அனுபவிக்க நேர்ந்த இரவில்
வேட்டை மிருகத்தின் தீப்பிழம்பு கண்களை
நினைத்துக் கொண்டது ஏன்

முதன் முதலாக
ஒரு துரோகத்தின் நிழலிலிருந்து மீளத் தெரியாமல்
முகத்தை மடியில் புதைத்துக்கொண்டு
தற்கொலைப் பற்றி யோசித்தது ஏன்

முதன்முதலாக துளிர்த்த
இன்னொரு காதலுக்குள் அவ்வளவு சிலிர்த்தது ஏன்
அந்த முத்தம் அத்தனை இனித்தது ஏன்
ததும்பிய காமத்துக்குள் இருள் குழையக் குழைய மிதந்து ஏன்

முதன் முதலாக
உனது ரகசியத்தை நேசிக்க கிடைத்த வாய்ப்பை
பெய்து முடித்த மழையின் கடைசி சொட்டுக்குள்
ஒளித்து வைத்தது ஏன்

*****

துளி நட்சத்திரம்

*
செம்மண் மீது 
விழுந்து 
நட்சத்திரமாகிறது 
சிவந்துபோய் 
முதல் மழைத்துளி 

***