திங்கள், ஜூன் 28, 2010

வளர்மதி அக்கா - அனு - மற்றும் ஒரு ரோஜாப் பூ..!

*
வெண்ணிற கைக்குட்டையில்
வளர்மதி அக்கா பின்னிக் கொடுத்த
ரோஜாப் பூவில்
வாசம் இருப்பதாக அடம் பிடிக்கிறாள் அனு

சதுரமாய் மடித்துத் தரச் சொல்லி
பிறந்த நாளுக்கு அப்பா எடுத்துக் கொடுத்த
மஞ்சள் நிற பிராக்கின்
ஒற்றைப் பாக்கெட்டில் பத்திரப்படுத்துகிறாள்

தான் கண்ட நேற்றிரவின் கனவில்
தன் ரோஜாப் பூவைத் தேடி
நிறைய வண்ணத்துப் பூச்சிகள் வந்ததாக
விடுமுறை முழுதும் சொல்லிக் கொண்டே இருக்கிறாள்

அம்மா பிசைந்து கொடுத்த
தயிர் சாதக் கிண்ணம் திடீரென உருள
என் முதுகில் கை ஊன்றித் தாவி மாடிக்கு ஓடுகிறாள்

திரும்பி வந்த சில நொடிகளில்
மழையில் நனைந்திருந்தாள்

அரை மணிநேர மழைக்குப் பிறகு
என் கைப் பிடித்துக் கட்டாயமாய்
இழுத்துச் செல்கிறாள் மாடிக்கு

கறுத்த சவுக்குக் கம்பின்
இருமுனையில் பிணைந்திருந்த
வயர்க் கொடியில்

தன்னந்தனியாய்..

நனைந்து சொட்டிக் கொட்டிருந்தது
வளர்மதி அக்காவின்
ரோஜாப் பூ..!

****

2 கருத்துகள்: