ஞாயிறு, ஜூன் 27, 2010

பட்டாம்பூச்சியின் வர்ணங்களோடு ஒரு காதல் காட்சி..

*
ஒரு மென்மைத் தொடுதலில்
என் துக்கம் பொடித்து உதிர்கிறது..
உன் கைகளுக்குள்
என் கைகள் தஞ்சமடையும்போது
என் கால்கள் துவளுகின்றன..

நினைவுப்படுத்திப் பார்ப்பதற்குரிய
தொலைவை..
நீ
என்னிடமிருந்து பறித்து
ஆகாயத்தில் வீசிவிடுகிறாய்..

சிறிதளவே வளையும்
உன் புன்னகை முனையில்..
என் காதலுக்கான இடத்தை
அழகாய் குறிப்புணர்த்துகிறாய்

என் துக்கங்கள் எனது பாதையில்
பதியனிடப்படவில்லை..
அவை..
எங்கோ தூரக் காட்டுக்குள் தூவப்பட்டுவிட்டது..

ஒரு கலசத்தைப் போல
நீ என்னை ஏந்துகின்றாய்..
என் கை வளையல்களுக்குள்
உன் ஆட்காட்டி விரல் நுழைத்து உயர்த்துகிறாய்..

புருவம் வளைய
என்ன..? என்பதாகச் சிரிக்கிறாய்..

நான் தலையசைத்து..
உன் தோள்களில் சாய்ந்து கொண்டபோது..
பட்டாம்பூச்சிகளின்
வர்ணச் சிறகுகள்
என் நினைவுக்கு வந்தன..!

****

நன்றி : ( உயிரோசை / உயிர்மை.காம் ) [ ஜூன் - 2010 ]

http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=3006

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக