வெள்ளி, ஜூலை 30, 2010

சுழலும் தனிமை அறை..

*
இத்தனிமை அறையில்
மௌன நிழலென
சுழல்வதையே

ஒரு
பழக்கமாக வைத்திருக்கிறது

இந்த
மின்விசிறி..

****

உதிரும் வர்ணங்களில்..

*
பிரியத்தின்
சிதறலில்

உதிரும் வர்ணங்களில்

இழைகிறது
நட்பெனும் ஈரம்..

****

மரணத்தின் ஈரச் சிறகுகளில் சொட்டும் நிழல்த் துளிகள் ..

*
துர்க் கனவொன்றின்
விரல் பிடித்துப் பறந்த இரவில்

மரணத்தின் ஈரச் சிறகுகளில்
சொட்டிய
நிழல் துளிகளைப்
பருகித் திமிறுகிறது

இதுவரை
பாடப்படாத
துக்கத்தின் குரல்..!

****

தனித்து தேங்குதல்..

*
எல்லா அடிக்குறிப்புகளிலும்
தனித்து
தேங்கிவிடுகிறது

கவிதைக்குள்
வடிக்கட்டப்பட்டுவிடும்
ஒரு
படிமம்

****

என்றேன்..என்றாள்..

*
'முடிவாக என்ன சொல்லுகிறாய்..? - என்றாள்

'முடிந்ததாக தெரியவில்லை ' - என்றேன்

'சரி..! இனி எனக்கு கால் பண்ணாதே ' - என்றபடி
ஸ்கூட்டியை கோபமாய் முறுக்கி
வேகமாய் டிராபிக்கில் கலந்துவிட்டாள்..

ஸ்கூட்டி ஓட்டும் பெண்கள் மொத்தமும்
அவளாகவே தெரிகிறார்கள்..!

****

காணும்போது..

*
காணும்போது
மலர்வதில்லை மொட்டுக்கள்..
காலையில் சொல்கின்றன
மலர்கள்..

****

உன்னில் காணாத ஒரு வெட்கம்..

*
இதுவரை
உன்னில் காணாத
ஒரு
வெட்கம்
நீ நடக்கையில்
உன்
சேலையில் சிக்குகிறது..!

****

நிழல்கள்..

*
நீல ஒளி படர்ந்த
என்
படுக்கை அறைச் சுவற்றில்..

அசையும் ஜன்னல்திரை நிழலோடு
கை குலுக்கி..
என்
இரவைப் பகிர்ந்து கொள்கிறது
தோட்டத்து நெல்லி மர இலை நிழல்..

***

புரியாத கணக்கு..!

*
வகுப்பின்
கடைசி பெஞ்சில் அமர்ந்து
புரியாத கணக்குக்கு பதில்
தமிழில் கிறுக்கிக் கொண்டிருந்த
ஏதோவுக்கு..

உள்ளங்கையில் பட்டையாய்
ரத்தங்கட்டிக் கொண்ட
வாத்தியாரின் பிரம்பு வரிகளுக்கிடையே..

மூச்சுத் திணறிக் கொண்டிருக்கிறது
எழுத நினைத்த..
அந்த ஏதோ ஒன்று..!

****

உன் புன்னகை வளைந்திருக்கிறது..

*
சாய்வுக் கோணத்தில்
எடுக்கப்பட்ட புகைப்படத்தில்
உன் புன்னகை வளைந்திருக்கிறது..

ஒளியும் இருளும் ஊர்ந்து வந்து
உன்னை அடைந்ததாகவே
தீர்மானிக்கத் தூண்டுகிறது

கண்ணசைத்துவிடாமல் நிற்க நேர்ந்த
அந்தவொரு நொடியில்
உன் கண்களில்...
எல்லைக் கோடமைத்த கண்ணீருக்கு
யாதொரு அர்த்தமும் இல்லை தானே..!

****

இமைச் சிமிட்டலுக்கிடையே..

*
ஒரு
இமைச் சிமிட்டலுக்கிடையே
அந்தப் பார்வை சொல்லிவிடும்
செய்தியின் நாசூக்கு..

மொட்டைமாடிக் கொடியில் காயும்
ஒரு டவலோ..

தொங்கியபடி போக நேரும்
பஸ்ஸின் ஜன்னல் கம்பி நிமிடமோ..

'எக்ஸ்க்யூஸ் மீ ஆண்ட்டி..!' - என்ற
அசந்தர்ப்ப வாசல் தரிசனமோ..

ரகசியம் பேசும் உதடுகள்
புன்னகைகள் கொண்டு முணுமுணுக்கப்
பழகிக் கொண்டன..

****

சொல்ல விருப்பமற்று விடுபட்ட பட்டியல்..

*
காத்திருப்பதாக
சொல்லிக்கொண்டிருந்த என் நிழலுக்கு
புரியவைக்க முயன்று கொண்டிருந்தேன்..

என் நிர்ப்பந்தங்களை..
நான் மையப்படுத்தப்பட்டிருக்கும் அடுக்குகளை..
பொருளாதார நெகிழ்வுக்குள்
நசுங்க பழகிக்கொண்ட கனவுகளை..
முத்தங்கள் மறுக்கப்பட்ட காதலை..
வரையறைக்குள் சிந்திக்க பிரயோகப்படுத்தப்பட்ட
உத்தரவுகளை..

இன்னும் சொல்லாமல்
அல்லது
சொல்ல விருப்பமற்று விடுபட்டு போன
பட்டியலின் நீளத்தை
அதன்
கடைசியிலிருந்து கடந்து வருவதற்குள்..

முன்னமே வந்து
காத்து நிற்பதாக சொல்லிக்கொண்டிருக்கும்
என் நிழலுக்கு..
புரியவைக்க முயன்று கொண்டிருக்கிறேன்..

****

நினைவு நுனிகளின் காரணிகள்..

*
டைரியின் கிழமைகளில்
எண்களோடு முடிவடைகிறது பொழுதுகள்

ஒரு துக்கத்தையோ
ஒரு பிரியத்தையோ
வசபடுத்திக் கொள்ளும் கோடுகளுக்குள்
ரசவாதம் செய்யும்
நினைவு நுனிகளின் காரணிகளை..

புள்ளிகளிட்டு மட்டும் முடித்துவிடுவதில்லை
வாக்கியங்கள்..

அதொரு ஈடு செய்ய முடியாத குரூரம்..

****

இடுப்புயர நாணல் மண்டும் சதுப்புகள்..

*
நதியலைக் கடத்தும்
சரளைக் கற்களில்..
காதல் காலங்கள்
உருண்டோடி ஒதுங்குகின்றன
அரவமற்ற
கானகக் கரையிலோ
இடுப்புயர நாணல் மண்டும்
சதுப்பு நீரிலோ..

****

விரல் விட்ட கணக்கு..

*
இடது கட்டை விரலை
சூப்பிக் கொண்டே..

வீட்டுப்பாடக் கணக்குப் போடும்
சிறுவனுக்கு..

விரல் விட்டு எண்ணும்
கணக்கின் மீது..

துப்பி விடத் தோன்றுகிறது..!

****

ஆணியில் தொங்கும் புத்தகப் பைகள்..

*
விடுமுறை ஆட்டங்கள் கனக்கும்
புத்தகப் பைகள்
ஆணியில் தொங்குகின்றன..

கிரிக்கட் ஸ்டம்புகளும்
ரப்பர் பந்துகளும்
பூமியில் புதைந்தும்
புழுதியில் பறந்தும்..

ஸ்கோர்களாகும் கணக்கில்..

திங்கட்கிழமை
விக்கட்டுகளாய் விழுவது..

கணக்குப் பாடங்களும்
வரையாமல் விடுபட்ட
அறிவியல் மண்டை ஓடுகளும்..!

****

மனப் பூனையின் பாதங்களையும் மீறி..

*
மௌனத் தாழ்
என்றதுமே
அடைப்பட்டுவிட்டது
உன்
அத்தனைக் கதவுகளும்..

நீ பொத்திப் பொத்தி..
வளர்த்து வரும்
மனப் பூனையின் பாதங்களையும் மீறி..

உன் நினைவுப் பரணில்..
பெருகும்
என் வார்த்தை எலிகள்..
இனி கோர்க்கத் தொடங்கும்
மணிப் பரல்கள்..!

****

கணத்தின் அற்புதங்கள்..

*
கணத்தின்
அற்புதங்களைச் சொல்லி
விரைகின்றன..
என்
வானின் குறுக்கில்
உன்
எரி நட்சத்திரங்கள்..!

****

இரவில்..

*
பகலில் உடையும்
சூரியனை..
இரவில்
அள்ளி எடுத்துக் கொள்கிறது
வானம்..!

***

மெட்ரோ கவிதைகள் - 77

*
இஸ்திரிப் பெட்டிக்குள்
கனலும்
கரியின் தீக்கங்கு..

கால் உதறி நிற்கும்
காலை நேர அவசரங்களைப்
பொசுக்கி நீவுகிறது..

உஸ்சென்ற சப்தத்தோடு நழுவி..
துண்டுக் கல்லொன்றில்
உட்கார்ந்தபடி..!

****

மெட்ரோ கவிதைகள் - 76

*
எதிர்மாடிக் கட்டிடட வேலைக்கு
கொட்டி வைத்திருக்கும்
பக்கத்து மணல் ஒதுக்கை நோக்கி..

எங்கிருந்தோ
வெவ்வேறு திசையிலிருந்து
கிளம்பி வருகின்றன பின்னிரவில்..
இரண்டு பசுக்கள்..

சிநேக அசைப் போடுதலில்
உருகி ஓடுகிறது
மஞ்சள் நிற சோடிய விளக்கொளி

விடியலில் சுரக்கும் பால்
டீக்கடை எவர்சில்வர் பாத்திரத்தில்
கொதித்து ஆவியாவதில்..
வெண்ணிறமாய்
சுழன்றெழும் பெருமூச்சுக்கள்..!

****

இதய வடிவ..நிழல்கள்..

*
பலத்து வீசிய
ஒற்றைக் காற்றில்
ஒருமித்துப் படபடத்தன
இதய வடிவ
அரச இலைகள்..

தெருவில்
ஒளி நிழல்
கலைந்து மீண்டது..!


****

ஒரு முறையாவது..

*
யாரோடும்
பொல்லாப்பில்லை..
ஒரு
முறையாவது
தலைகுனியாமல்
கடந்து விட வேண்டும்
முதலாளியை..!

****

மழையோடு கரைதல்..

*
வசை வார்த்தைகளோடு
கரைந்து விடக்கூடாதா
இந்த மழையோடு சேர்ந்து
அதன்
அர்த்தங்களும்..!

****

வர்ணத் துகளில்..

*
தனித்த வனத்தில்
வீசும் காற்றில்..

சிதறும் பட்டாம்பூச்சி சிறகொன்றின்
வர்ணத் துகளில்..

மிதந்து போகிறது
உன்
முத்தமொன்றும்..!

****

இருண்மை..

*
வந்த போதும்
சென்ற போதும்..

தொடர்ந்து நீடிக்கிறது
அறை முழுக்க..

உன்
மௌனத்தின் இருள்..!

****

புன்னகையோடு விசில் கூவி..

*
சைக்கிளின்
பின் கேரியரில் உட்கார்ந்து
பெடல் போடும் விடலை..

நொடிக்கொரு மணியடித்து
தெருவையே கலைத்துப் போட்டு..

திண்ணையில்
அரிசிப் புடைக்கும் பார்வைக்கு
புன்னகையோடு விசில் கூவி..

விரையும் புழுதியோடு..

மறைந்து போகும்
அக் கணம்..!

****

கரைந்தோடும் நிமிடங்களின் உப்புத் தன்மை..

*
இறுகிக் கட்டிக் கொண்ட முழங் கால்களுக்குள்
புதையுண்ட முகமும்
குலுங்கும் முதுகும்..

ஆறுதல் வார்த்தைகளை ஸ்தம்பிக்கச் செய்து
உதடுகளைப் பூட்டி விடுகின்றது..

கரைந்தோடும் நிமிடங்களின்
உப்புத் தன்மையை
தொடரும் ஒரு மௌனத்தின் நீர்மை
தேக்குகிறது மீளாத் துயரின் நெஞ்சுக் குழிக்குள்..!

****

மற்றுமொரு ஏழு..

*
மற்றுமொரு ஏழு என்பதில்
என்னுள் ஒரு வேர் படர்கிறது..

நீயற்ற தன்மையிலிருந்து புறப்படும்
உன்
வேடிக்கை நிழல்களை
இங்கு மனச்சுவற்றில் வரைந்து பார்க்க
நான் அனுமதிக்கிறேன்..

மரணத்தின் ஒத்திகையை நிறைவேற்ற
ஒரு வேட்கை எழுவதில்
நமக்கிடையில் முரண் வெயில் அடிப்பதில்லை..

தென்றல் பொட்டலங்களை அவிழ்த்து கட்டும்
மலர்க் கண்களில் ஊறுகிறது
காமத்தின் உச்சத் தேன்..

அதைப் பருகக் குவியும் உதடுகள் கடந்து
வழுக்கிச் செல்லும் குரல்வளையில் புறப்படுகிறது
மரணத்தின் உச்ச ஸ்தாயி..

ஸ்வரங்களை மீறிப் பறக்க எத்தனிக்கும்
மற்றுமொரு ஏழு என்பதில்..
உனக்குமொரு வேர்..
உன் நிலத்தில்
படரும் தானே..!

****

பிரிவின் வாசம்..!

*
நிழல் பிராவகத்தில்
மூழ்கும் நரகமொன்றின்
பிரதான வழிச் சாலையில்
தனித்து நிற்கிறேன்..

என்
மாம்ச உரத்தில்
பதியனிட்டுச் செழித்து
காலக் கிளையில் கொய்த மலர்களை
கைகளில் ஏந்தி..
அதன் பெயர் தெரியா வர்ணங்களோடு நிற்கிறேன்..

நினைவின்
சிறு குடுவைக்குள்ளிருந்து தெளிக்கப்படுகிற
சிலத் துளித் திரவத் திவலையில்
புறப்படுகிறது..

பிறவியெனும் வாசனையும்..

அதை
நுகர்ந்தபடி..

இதயம் நுழையும் மரணமும்..!

****

நன்றி : ( உயிரோசை / உயிர்மை.காம் ) [ ஜூலை - 26 - 2010 ]

http://www.uyirmmai.com/Uyirosai/Contentdetails.aspx?cid=3210

வெகு தொலைவுக்கு அப்பால் விரியும் மையத்தின் வளைவு..!

*
எத்தனையோ விதங்களில்
முகத்தில் பூசிக் கொள்ள நேர்கிறது பொய்களை..
வசவின்
வீச்சத்தில்
பேச யத்தனிக்கும் சமரசத் திசைகள்
அடைபடுகின்றன..

நிர்க்கதிச் சூழலில் பிதுங்கி
மனம் நழுவி
வெளியேறும் கால்வாயின் குறுக்கே வளர்கிறது
பயன்படாத உரையாடல்..

காலத்தின் பக்கச் சுவரில்
திரித்தேறும் கரையான்களை ஒத்திருக்கிறது
முறுக்கிக்கொண்டு நெளிகின்ற புன்னகைகள் ஒவ்வொன்றும்

வெப்பம் அனத்தும் சொற்களை
எரிந்து சாம்பலாகும் வெளியாக்குகிறது
இதுவரை
கொட்டித் தீர்த்த தர்க்கங்கள் யாவும்..

நிறமிழக்கும் உணர்வுகளை உகுக்கச் செய்யும்
வர்ணப் புள்ளிகளாலான மையத்தின் வளைவு..
வெகு தொலைவுக்கு அப்பால்..
வேர் பரப்பி உறிஞ்சுகிறது.. நடந்தவைகளை..!

****

நன்றி : ( உயிரோசை / உயிர்மை.காம் ) [ ஜூலை - 2010 ]

http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=3190

மறதியின் புதைச்சேறு..

*
ஒவ்வொரு விடியலிலும்
சுவர்க் கண்ணாடி
வேறு வேறு பிம்பங்களை
நீட்டுகிறது

நேற்றைய இரவின் ஆழத்தில்
நினைவுகள் ஊறி மிதக்கின்றன

அதில் குமிழிட்டு வீங்கும்
ஒரு உப்பலில்
துளை விழுந்து வெளியேறுகிறது
இட மறுத்த முத்தமொன்றின்
காத்திரமான வெப்பம்

நிறங்கள் இழுத்துக் குழையும் திசைகளை
நறுமணத் தடமொன்று தேடித் திரிகிறது

ஒரு பூவிலிருந்து
இன்னொரு பூவுக்குப் பறந்து போதல் குறித்து
என் சிறகுகளுக்குப் போதித்த
மனிதனை

எனக்குத் திருப்பித் தர மறுக்கிறது
இந்தச் சுவர்க் கண்ணாடி

பதிலாக
வேறு வேறு பிம்பங்களை
நீட்டுகிறது

சாம்பல் நிற நிழல் தோய்ந்த துரோகச் சாயலில் ஒன்று
இசை கொண்டு தன் துக்கத்தை மீட்டிச் சென்ற ஒன்று
நீண்ட வரிசையின் முடிவில் சோர்ந்து உட்கார்ந்த ஒன்று
நீர்மைச் சாரலில் மரணம் நெகிழ்ந்து இறுகிய ஒன்று

அதன் இளகிய சட்டகத்துள்...
நினைவுகள் ஊறி மிதப்பதாக
பாதரசப் பிம்பங்கள் வழிகின்றன

மன்னித்தலின் முகத்தில்
புன்னகை வியர்ப்பதை
அவசரமாய்த் துடைத்துக் கொள்ள
எத்தனிக்கும் கணத்தில்

ஏனைய பிம்பங்களும் நொறுங்கிப்
புதைகிறது மறதியின் சேற்றில்..

****

நன்றி : ( உயிரோசை / உயிர்மை.காம் ) [ ஜூலை - 2010 ]

http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=3148

தன்னோடு ஒரு பேனா வைத்திருத்தல்..

*
கனவுகளைக் கழற்றி
ஒரு சட்டையைப் போல்
ஆணியில் தொங்கவிடுதல் குறித்து
உனக்கொரு
கடிதமெழுதிக் கொண்டிருக்கிறேன்
இவ்விரவில்..

அவை
தன் பைகளில்..
கடந்து வந்த பல வருடங்களைச்
சேகரித்து வைத்திருக்கிறது

முன்னும் பின்னுமாய்க்
கலைத்து வைத்திருக்கிறது

பட்டன்கள் இருக்கின்றன
மாட்டிக் கொள்வதற்கு துளைகளில்லை
அதனால்
தாராளமாய் காற்று வாங்கிக் கொள்ள
உடலை அனுமதிப்பதோடு
எல்லைகளைச் சுலபமாய் நிராகரிக்கிறது

தன்
அளவுகளைத் தன்னிஷ்டப்படி
கூட்டியோ குறைத்தோ கேலி செய்கிறது

தலைகுப்புற கவிழ்த்து விடுகிறது
யாவற்றையும்..

ஒழுக்கங்கள்
வாக்குறுதிகள்
கோட்பாடுகள்
சமயோசிதங்கள்
மகோன்னதங்கள்

யாவற்றையும்..

அது தன்னோடு ஒரு பேனா வைத்திருக்கிறது
அதன் கொண்டு
இடையறாது எழுதியபடி இருக்கிறது
உன்னைப் பற்றி
முடிவில்லாத ஒரு கவிதையை..!

****

நன்றி : ( உயிரோசை / உயிர்மை.காம் ) [ ஜூலை - 2010 ]

http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=3126

ஆயாசத்துடன் முளைக்கும் ஒரு பகல்..

*
ஆயாசத்துடன் முளைக்கும் ஒரு பகலை
வேரோடு கிள்ளி எரிய
தேடவேண்டியிருக்கிறது
நேற்றைய இரவின் சிறு விரல்களை

அது தன் மீது எழுதிச் செல்லும்
தருணங்களை கைப்பிடி நிழலுக்குள்
ஒளித்துவைப்பது சாத்தியமில்லை

கண் கூசி..
மன இடுக்குக்குள் பதுங்கிக்கொள்ளும்
சாமர்த்தியத்தை பழகி வைத்திருக்கின்றன
கொடும் பகல்கள்

மழையற்ற நகரத்து வெறிச்சோடுதல்
நம்பும்படியான ஒரு ஈரத்தை
எப்போதும் வழங்குவதில்லை

அன்றாடம் தீவுகளிலிருந்து புறப்படும்
இரண்டு கால் பிராணிகளின்
வால்கள்
நூற்றாண்டுகளுக்கு முன் நறுக்கப்பட்டும்..

ஆயாசத்துடன் மலரும் இந்த இரவையும்
துண்டித்து வீச..
தேடவேண்டியிருக்கிறது
நேற்றையப் பகலில் நிகழ்ந்த
ஒரு
கூர்மையான உரையாடலை..

****

நன்றி : ' வார்ப்பு ' இணைய இதழ் ( ஜூலை - 14 - 2010 )

http://www.vaarppu.com/view/2226/

வேரோடி முடிச்சிட்டுக் கொள்ளும் புன்னகை..

*
உருமாறி வழிகிறது
புன்னகையின் கசப்பு..

மௌனம் குழைந்து பொழியும் பார்வையில்..
அர்த்தங்களை மிதவையிட்டு
சுழலுக்குள் இழுத்துக் கொள்கிறது
சொல்லாதவைகளின் தேக்கம்..

நிறமிழந்தபடி சுருங்கும் மலர் இதழ் முனையில்
ஆதரவுப் புள்ளி போல்
ரகசியமாய் இரவில் பூத்துவிடுகிறது
ஒரு பனித்துளி..

வேரோடும் உள் வாதங்களில்
முரண்பட்டு முடிச்சிட்டுக் கொள்கிறது
விடுவிக்கப்படாத சிடுக்குகள்..

குளிர் சொட்டும் துளிர்ப்பை..
உருமாற்றிப் பொழிகிறது
கசப்பின் புன்னகை..!

****

நன்றி : ' திண்ணை ' இணைய இதழ் ( ஜூலை - 4 - 2010 )

http://www.thinnai.com/?module=displaystory&story_id=31007041&format=html

எண்ணற்ற பறவைகளும்..பெயர் தெரியா மலர்களும்..

*
மழை நீரின் நியாபகங்களை
காகிதக் கப்பலுக்குக் கீழே
படரச் செய்கிறாள்

கலர் கிரேயான்கள் வரைந்த
மரங்களின் கிளையில்
வந்தமர்கிறது
ஒரு வயலட் நிற பறவை

சாப்பாட்டு மேசையில்
சிந்திய நீர்த் துளிகளில்
இழுபடுகிறது பிரமாண்ட டைட்டானிக் கப்பலொன்று

உதடுகளின் இரு முனையிலும்
மேல்நோக்கிய சிறிய வளைவாய் முளைக்கிறது
ஹார்லிக்ஸ் நிலா

டாட்டா சொல்லும் சந்தோஷத்தில்
மறந்து விட்ட பென்சில் பாக்ஸில்
வரையப்படாமலே காத்திருக்கின்றன

எண்ணற்ற பறவைகளும்
பெயர் தெரியா மலர்களும்
கிரேயான்ஸ் கலரில் நனைந்த
ஒரு காகிதக் கப்பலும்!

****

நன்றி : ' கீற்று ' இணைய இதழ் ( ஜூலை - 22 - 2010 )

http://www.keetru.com/index.php?option=com_content&view=article&act=section&id=10091&Itemid=139

இலைச் சருகு..

*
காய்ந்து உதிர்வதில்
எழுதி உடைகிறது
ஒரு
சரிதம்..!

****

மறுக்கப்பட்ட வார்த்தைச் சுழலுதல்..!

*
மௌனச் சதுப்பில்
சிக்கிக் கொள்வதோடு..

நகரத் துடிக்கும்
நொடிகளுக்குள்..

மறுக்கப்பட்ட வார்த்தைகள்
சுழல்கின்றன..
நடந்தவைகளின்
மையத்தைப் பற்றியபடி..!

****

மெட்ரோ கவிதைகள் - 75

*
சமூகக் காகிதத்தில்
வறுமையின்
விழுமியங்களை..

புள்ளியிட்டு வரையும் கோடுகள்
ஏறி இறங்குவதில்..

ஓவியமாகிறது
ஒரு
நகரம்..!

***

மெட்ரோ கவிதைகள் - 74

*
நகரத்தின்
வெறிச்சோடும் பகலை
எதிர்கொள்ளும்
சாமர்த்திய நிழல்கள்..

சொற்ப
மரக் குடைகளின்
காலருகே காத்திருக்கின்றன..!

****

நினைவு ஊற்றின் கண்..

*
நினைவு ஊற்றின் கண் திறந்து
பிய்ந்தொழுகும்
மனச் சவ்வில்..

ரத்தம் தோய்ந்த துரோகத்தின்
பிசுபிசுப்பில்..

துர்வாடை வீசுகிறது
இவ்விருப்பின் அகாலமெங்கும்..

****

தாழிட்டுக் கொள்ளும் அர்த்தங்கள்..

*
உட்புறமாய்த் தாழிட்டுக் கொள்ளும்
உன் அர்த்தங்களை

கை வலிக்கத் தட்டி தட்டித்
திறக்க வைப்பதில்

என்
கவிதைக்கு
உடன்பாடில்லை..!

****

வியாழன், ஜூலை 29, 2010

நீல நிறம் படர்த்தும் வளைவுகள் தோறும்..

*
தாழ்வார ஈரத்தில்
மேலும் சில சுவடுகளைச் சொட்டுகிறது
எனக்குப் பிரியமான மழை..

நீயில்லாத இரவோடு கைக் கோர்த்து
ஜன்னல் வழியே கசிந்து வெளியேறுகிறது
உனக்குப் பிடித்த இசை..

அசைவுறும்
ஒவ்வொரு சிறு பொருளும்
காற்றில் எழுதுகிறது
இந்த அறையின் வெறுமையை..

மெல்லிய நீல நிறத்தைப் படர்த்தும்
விளக்கொளி..
வளைவுகள் தோறும் ஒளிர்ந்து..

உன் நினைவை மீட்டு..

வரைய முயல்கிறது
ஓர்
ஓவியமாய்..!

****

அனல் நெளியும் புகையூடே..

*
அடுப்பின்
அனல் நெளியும்
புகையூடே
உன்
புன்னகை
மேலும் நவீனமாகிறது..!

****

மெட்ரோ கவிதைகள் - 73

*
கான்க்ரீட் கட்டிடத்தின்
பக்கவாட்டில் தொங்கும்
கேபிள் வயரில்..

மழைத் தூறல் சேகரமாகி
துளித் துளியாய்
சரிந்திறங்குவதில்
உருண்டு வழியும்
வானில்..

நீல நிறமில்லை..!

****

மௌனத் துகளொன்று..

*
மௌனத் துகளொன்று
என்
பிரபஞ்ச வெளியில் பருப்பொருளாகி
வெடிக்கும் முன்..

சிவந்து
அச்சுறுத்துகிறது

யாவற்றையும்..

****

தருணங்களின் சூழல்..!

*
தருணங்களை
இரண்டு வகைகளில்
குறிப்பெழுத
அவா கொள்கிறது என் சூழல்..

உன்
கை நழுவுதலை
வேடிக்கைப் பார்ப்பது

உன்
வேடிக்கையிலிருந்து நழுவி
கையசைப்பது..!

****

மேகத்திலிருந்து கழன்ற ஒரு புன்னகை..!

*
எத்தனையோ
கிலோ மீட்டர்கள் பயணித்து
மேகத்திலிருந்து கழன்ற ஒரு மழைத் துளி

உன்
முன்நெற்றி வகிட்டில்
மோதிச் சிதறியபோது

நீ
அண்ணாந்து வானம் பார்த்தது சிரித்ததை
கண்ணடித்து ரசிக்கிறது
ஒரு
மின்னல்..!

****

மரணத்துக்குரிய நிழல்..

*
ஒரு
மரணத்தைச் சுமந்து செல்கிறது
எறும்புக் கூட்டம்..

பிணத்தை
வெயில் சுடாமல்
நிழல் பிடிக்கின்றன
பாவைக் கொடி இலைகள்..!

****

பேய் மழை..!

*
' பேய் மழை ' -
என்றான் நண்பன்..

தலை விரித்தாடியது மரம்..

உண்மை தான் போலும்..!

***

தூயோன்..!

*
மனதின்
அதள பாதாளத்தில்
தளும்புகிறது பாலுணர்ச்சி

புளித்தபடி நாவின் நுனியில் குவியும் வேட்கையும்
நெரிபடும் பற்களை மறைக்கும் சாதுரியமும்
கண்களுக்குப் பழக்கமென வெளிப்படும் தூயோன்

இது ஒரு
கண்ணாமூச்சி..
கண்ணை மூடித் தொலைத்ததை
வேறெங்கே போய் தேட..?

வக்கற்று கொட்டிக் கிடக்கிறது வாழ்க்கை..!

****

தனிமைக் குளத்தில்..

*
அளவற்று மூழ்கும்
தனிமைக் குளத்தில்

நகர்ந்து விரிகிறது

அலையோடு
ஒரு கேவல்

****