வெள்ளி, ஜூலை 30, 2010

மறதியின் புதைச்சேறு..

*
ஒவ்வொரு விடியலிலும்
சுவர்க் கண்ணாடி
வேறு வேறு பிம்பங்களை
நீட்டுகிறது

நேற்றைய இரவின் ஆழத்தில்
நினைவுகள் ஊறி மிதக்கின்றன

அதில் குமிழிட்டு வீங்கும்
ஒரு உப்பலில்
துளை விழுந்து வெளியேறுகிறது
இட மறுத்த முத்தமொன்றின்
காத்திரமான வெப்பம்

நிறங்கள் இழுத்துக் குழையும் திசைகளை
நறுமணத் தடமொன்று தேடித் திரிகிறது

ஒரு பூவிலிருந்து
இன்னொரு பூவுக்குப் பறந்து போதல் குறித்து
என் சிறகுகளுக்குப் போதித்த
மனிதனை

எனக்குத் திருப்பித் தர மறுக்கிறது
இந்தச் சுவர்க் கண்ணாடி

பதிலாக
வேறு வேறு பிம்பங்களை
நீட்டுகிறது

சாம்பல் நிற நிழல் தோய்ந்த துரோகச் சாயலில் ஒன்று
இசை கொண்டு தன் துக்கத்தை மீட்டிச் சென்ற ஒன்று
நீண்ட வரிசையின் முடிவில் சோர்ந்து உட்கார்ந்த ஒன்று
நீர்மைச் சாரலில் மரணம் நெகிழ்ந்து இறுகிய ஒன்று

அதன் இளகிய சட்டகத்துள்...
நினைவுகள் ஊறி மிதப்பதாக
பாதரசப் பிம்பங்கள் வழிகின்றன

மன்னித்தலின் முகத்தில்
புன்னகை வியர்ப்பதை
அவசரமாய்த் துடைத்துக் கொள்ள
எத்தனிக்கும் கணத்தில்

ஏனைய பிம்பங்களும் நொறுங்கிப்
புதைகிறது மறதியின் சேற்றில்..

****

நன்றி : ( உயிரோசை / உயிர்மை.காம் ) [ ஜூலை - 2010 ]

http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=3148

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக