வெள்ளி, ஜூலை 30, 2010

தன்னோடு ஒரு பேனா வைத்திருத்தல்..

*
கனவுகளைக் கழற்றி
ஒரு சட்டையைப் போல்
ஆணியில் தொங்கவிடுதல் குறித்து
உனக்கொரு
கடிதமெழுதிக் கொண்டிருக்கிறேன்
இவ்விரவில்..

அவை
தன் பைகளில்..
கடந்து வந்த பல வருடங்களைச்
சேகரித்து வைத்திருக்கிறது

முன்னும் பின்னுமாய்க்
கலைத்து வைத்திருக்கிறது

பட்டன்கள் இருக்கின்றன
மாட்டிக் கொள்வதற்கு துளைகளில்லை
அதனால்
தாராளமாய் காற்று வாங்கிக் கொள்ள
உடலை அனுமதிப்பதோடு
எல்லைகளைச் சுலபமாய் நிராகரிக்கிறது

தன்
அளவுகளைத் தன்னிஷ்டப்படி
கூட்டியோ குறைத்தோ கேலி செய்கிறது

தலைகுப்புற கவிழ்த்து விடுகிறது
யாவற்றையும்..

ஒழுக்கங்கள்
வாக்குறுதிகள்
கோட்பாடுகள்
சமயோசிதங்கள்
மகோன்னதங்கள்

யாவற்றையும்..

அது தன்னோடு ஒரு பேனா வைத்திருக்கிறது
அதன் கொண்டு
இடையறாது எழுதியபடி இருக்கிறது
உன்னைப் பற்றி
முடிவில்லாத ஒரு கவிதையை..!

****

நன்றி : ( உயிரோசை / உயிர்மை.காம் ) [ ஜூலை - 2010 ]

http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=3126

1 கருத்து:

  1. /அது தன்னோடு ஒரு பேனா வைத்திருக்கிறது
    அதன் கொண்டு
    இடையறாது எழுதியபடி இருக்கிறது
    உன்னைப் பற்றி
    முடிவில்லாத ஒரு கவிதையை..! /

    :))

    பதிலளிநீக்கு