வியாழன், ஜூலை 31, 2014

கூடு முடையும் சம்பவங்கள்

*
வருந்திச் சொல்வதற்கு தவிப்பின் மனம் 
கிளை வளர அனுமதித்து 
கூடு முடையும் சம்பவங்களுக்கு 
மத்தியில் 
இட்டு வைக்கிறது 
அடைகாக்க 
புதிர் ஒன்றை 

****

தன்னைக் கொஞ்சமாக..

*
ஒரு 
சிறிய புன்னகையின் 
வழியே 
தன்னைக் கொஞ்சமாக 
விடுவித்துக் கொள்கிறது
நாள்பட்ட 
மௌனம் 

****

விரல் நெருட வளரத் தொடங்கும் சிறகுக்கான முதல் அடுக்கு..

*
ஒற்றை எழுத்தின் ஒலிக்குறிப்பை சுமந்தபடி நீளும்
உரையாடலை பொறுமையற்று உள்வாங்கிக்கொள்ளும்
இரவின் தொடர் அலைவரிசைக் கம்பியின் மீது
வந்தமர்கிறது
தூக்கம் தொலைந்த குருவி ஒன்று

கோதும் அதன் சிறகுகளின் அடுக்குக்குள்ளிருந்து
சின்னஞ்சிறு அலகுப் பிளவால்
பற்றியிழுக்கிறது
எண்ணற்ற உரையாடல்களின் முடிவற்ற வரிகளை

'க்வீச்.. க்குயிச்' என்ற சப்தக் குறிகளை
முத்தமாக்கிக் கொண்ட காதல் உதடுகளை மன்னித்து
மீள் நினைவென ஏற்றுக்கொள்கிறது
குருவிகளின் உலகம்

அரூப வெளியின் அடர்நீலத்தில் சுக்கிலம் நீந்திப் பிறக்கும்
மனிதக் குருவிகளின் விலா அருகே
விரல் நெருட வளரத் தொடங்கும் சிறகுக்கான முதல் அடுக்கில்
ரத்தம் தோய்ந்த மாம்ச வாசனை

ஒலி மற்றும் சப்தக் குறிப்புகளின்
உரையாடல் கட்டுமானத்தோடு எழும்பும் உலோக டவர்களின்
வெளிச்சக் கண்கொண்டு
இரண்டாம் உலகின் வாசற்கதவு ஓர் ஒளியாண்டுத் தொலைவில்
திறந்து கிடப்பதை நோக்கி
நீந்துகிறது
வால்முனை சிதைந்த விந்துத்துளி

'ம்' எழுத்தின் மீது மிதக்கும் ஒற்றைப் புள்ளியாகி

*****

தவளையின் குரலாகிப் பெருகும் இரவின் நிறம்..

*
இரவை மொழிபெயர்த்துக் கொண்டிருந்த
தவளையொன்றை கண்டேன்

அசைந்துத் துடிக்கிற அதன் தாடை வேகங்கண்டு
அதிரத் தொடங்கியது மழை பெய்து தேங்கிய
நிலத்தின் நீரில் மிதக்கும் உதிர்ந்த வேப்பம் பூக்கள்

வசப்பட்டுவிட்ட இருளின் அர்த்தங்கள் மின்னும்
அதன் கண்களில் பரவுகிற வெளிர் மஞ்சள் நிற பிம்பமானேன்
அரைக் கணம்

எனது கைவிரல்களும் இதயத்துடிப்பும் சொற்களாய் உருமாற்றமாகி
தவளையின் குரலாகப் பெருகிய நொடியில்
கனத்து விழுந்த ஒற்றை மழைத்துளி
உச்சந்தலையில் மோதிச் சிதறியது

சிதறலின் மைக்ரோ நீர்ப்புள்ளி கிரீட நுனிகள்
பிரதிபலித்தன எண்ணற்ற தவளைக் கண்களை

ஏந்திய கை நிறைய காளானாக முளைத்துவிட்ட
சொற் குடைகளின் வனத்தை தவளையிடம் காண்பித்தேன்

அது தன் பசையுள்ள நாவை நொடியிழையில் நீட்டி
காளான்களை அபகரித்துக் கொண்டபடி
தொடர்ந்து
மொழிபெயர்க்கிறது இந்த இரவை

****

பாதையற்ற புறவாசலின் சுற்றுச்சுவர்

*
தொலைந்து போவதற்குரிய பாதையொன்று
மனத்தின் புறவாசலில் கிளை பிரிவதாக நியூரான் பின்னுகிற செய்தி
மீள் சூட்சும எழுத்தின் கோடுகளில்
அதன் நெருக்கக் கணங்களை ஸ்கேனர் சிகப்பொளியின்
இடவல ஓட்டமாக்கி அரூபக் குறிப்பெழுதுகிறது

கவனத்தில் கொள்ளத்தக்க காரண அடுக்குகளின்
புழுதிச் சிதறலில்
முளைவிடுவதாக இல்லை திரும்புதலுக்கான வரைப்படம்

யந்திர கூட்டிணைவின் இயக்க முரண்களை முடுக்கும்
பஸ்ஸர் ஒலி
துரத்துகிறது அவ்விடத்தின் வெளியை வெற்றாக்கிட

பாதையற்ற புறவாசலின்
சுற்றுச்சுவரில்
வேர்ச் சுற்றி வளர்கின்றன உலோக வரைப்படங்கள்

****


நன்றி : ' யாவரும்.காம் ' இணைய இதழ் [ ஜூலை - 19 - 2014 ]

http://www.yaavarum.com/archives/2614

சொல் மீது பரவும் சத்தியத்தின் ரத்தக் கசிவு

*
இயந்திரத்தைப் புரிந்து கொள்வதோடு
தொடர் இயக்க முறைமைகளின் ஏற்ற இறக்கமாகிறது
மொழி நெறி அடையாளமென குறுகும் அர்த்தங்களின் தோற்றம்
கட்டுமான அடுக்கங்களின் நெடிதுயரும் படி வழியே
அழைத்துப் போகும் ரகசிய புன்னகை

சொல் மீது பரவும் சத்தியத்தின் ரத்தக் கசிவை அடைத்துவிட
பயன்படுவதாக நீட்டப்படும் துருவேறிய ஆணி
கோளாறுகளை சரி செய்துவிடும் உத்தி கொண்டிருப்பது
செய் நேர்த்தியின் மீள் மௌனம்
உள்வயக் கொடூரங்களை முடுக்குதல்களின் குறிப்புகள் அடங்கிய
பக்கங்கள் வீசுகிற நீச நெடி

கையகப்படுத்திட நிந்திக்கும் நவீனப் போர்க்கள கேடயங்கள் தருவித்து
தற்காத்துக்கொள்ள கற்றுத் தரும் வாழ்வின் பொத்தல்களில்
பொருந்தும்படி இயங்கும் இயந்திர சொற்கள்
மேலும் இரைச்சலாய் வளர்கின்றன
நகரத்தைத் தின்றபடி

*****

நன்றி : ' யாவ ரும்.காம் ' இணைய இதழ் [ ஜூலை - 19 - 2014 ]

http://www.yaavarum.com/archives/2614

குளிர்ந்த உடலைக் கடந்து வெப்பத் தீவை அடைதல்

*
தாவரப் பச்சமை சுழிக்கிறது காதல் முத்தமொன்றின் கசந்த உதடுகளின் ஊடே
மலர்களைக் கனவு காண்பதாக புரளும் வேர்களின் ஈரக் கசிவை
இமை தாழ்ந்து மீளும்போது காண முடிந்தது

நறுமணம் நுகர்தல் பிழை என்பாய்

புலன்களின் காதுகளை அடைத்தபடி கேட்கப் பழகிய முனகல் இசை
இரவின் மீது படர்ந்தபடி பசலை வளர்க்கிறது

குளிர்ந்த உடலைக் கடந்துவிட அணைத்துக்கொள்
வெப்பத் தீவை அடையும்வரை படகைச் செலுத்து

படபடக்கும் பாய்மரத்தின் துடிப்பில் கனிகள் காய்க்கின்றன

புசிக்கத் தீண்டும் நாவில் பதியனிட்ட சொற்கள் சுரக்கும் பாலில்
சுவை கூட்டுகிறது முத்தத் திரவத்தின் ஊற்றைப் பிளந்து
கூரையை வெறித்து ஒரு மயக்கம்

அழுந்த பிதுங்கி கிளைப் பரத்தும் விரல்களில் வரைகிறாய்
வேறோர் உலகின் கதவை

*****

நன்றி : ' யாவரும்.காம் ' இணைய இதழ் [ ஜூலை - 19 - 2014 ]

http://www.yaavarum.com/archives/2614

கருவளையத்தை விட்டு கீழிறங்கித் திறந்து கொள்ளும் இரவு

*
சென்று அடைகிற காயங்களை சுவாசிக்கும் முன்
காத்திருக்கும்படி வந்து சேர்ந்த உத்தரவு அழைப்பை கையில் வைத்திருக்கிறாள்

மனத்தில் இருத்துவதற்குரிய ரகசியங்கள் யாவும் தீர்ந்துவிட்டதை
கடந்துவிட்ட பகல் சாட்சியம் சொல்வதாக ஒப்புக் கொண்டுவிட்டது

அதன் வெப்பச் சூடு கண்களின் கருவளையத்தில் சற்றேனும்
ஓய்ந்து தூங்கட்டும்
என விட்டு வைத்திருக்கிறாள்

சாபத்தின் சிறகுகளில் ஒட்டடை படிந்திருக்கிறது
முக்காலத்தை வலைப்பின்னும் சொற்களின் எட்டுக்கால்களும்
வலுவேறிவிட்டதாக நம்பத் தொடங்கிவிட்டாள்

அறையின் கிழக்கு மூலையில் இரவு திறந்து கொள்கிறது

படியேறி வரும் காலடிச் சத்தங்கள்
இழந்துவிடக்கூடாத நிதானத்தின் கடைசிப் பக்கத்தை
ஒரே ஒரு முறை நினைவுப்படுத்துகிறது

கருவளையத்தை விட்டு கீழிறங்கும் சொற்கள்
சாபத்தின் சர்ப்பப் பறவை பிளந்த நாவிலிருந்து
கொடிய நஞ்சின் இரண்டொரு சொட்டுகளை இரவல் பெற்று
அவள் கையில் திணிக்கிறது

அது ஒரு ஞாபகமூட்டல்
அது ஒரு பரிந்துரை
அது ஒரு போர்த் தந்திரமும் கூட

*****

நன்றி : ' யாவரும்.காம் ' இணைய இதழ் [ ஜூலை - 19 - 2014 ]

http://www.yaavarum.com/archives/2614

நெஞ்சு அதிர இறைஞ்சும் மன்றாடலின் முகடு

*
வன்மம் கொப்புளித்து வெடிக்கும் குருதி சூட்டில்
மனத்தின் மூர்க்கம் பூசிக்கொள்ளும் முகத்து தசைகள்
கோணுகின்றன

கைப்பற்றி முறுக்கிட தீரும் அவஸ்தையின் சொற்கள் கூட்டம்
வெளியேறுகிறது ஒற்றை அசௌகரியத்தை
முற்றிலும் நொறுக்கி

நெஞ்சு அதிர இறைஞ்சும் மன்றாடலின் முகட்டிலிருந்து
நழுவி வீழ்கிறது ஒப்பந்த வாக்குறுதிகள்
குற்றஞ்சாட்டி அடையாளங்காண பயணப்படும் பாதங்களை
கொடிச்சுற்றிக்கொள்ள பிரயத்தனமாகிறது
தனிமையொன்றின் அகாலம்

நீர்மைப் பொழுதுகளை மௌனக்கோப்பை தளும்ப
ஊற்றி பரிமாறுகிறேன் யாருமற்ற மேஜையின் விளிம்பில்

'சியர்ஸ்' சொல்லும் ரகசிய குரல் ஒன்று
இருள் மூடிய சூழல் பாதையின் அடர்த்தியிலிருந்து கசிகிறது
என்னை நோக்கி

எட்டிப் பிடிக்கும் ஆவலற்று வெறுமனே காயும் பகல் வெப்பம் குறித்து
கனவு காண்கிறேன்
காணுதலுக்கும் அடைதலுக்குமான கால வித்தியாசத்தில்
சுண்டிவிடப்படும் தருணங்களை
எனக்கென உயர்த்திய கோப்பைக்குள் ஊற்றுகிறேன்

அனுபவம் கிறங்கி உரைத்த வெயிலை மீண்டும்
பருகிட பரிந்துரைக்கிறீர்கள்

வன்மம் கொப்புளித்து வெடிக்கும் குருதி சூட்டை
அறை கூரைக்குள்
வரைந்து வைத்திருக்கிறேன்

நெஞ்சதிர இறைஞ்சிய மன்றாடலின் அசௌகரியத்தைப் பற்றி
விவாதிக்கும் மாலை நேரம்
அத்தனை வெதுவெதுப்பாய் இனங்கண்டு கொள்கிறது

மனத்தின் மூர்க்கத்தை
முகத்து தசைகளின் கோணல்களை
செத்துவிட்ட ஒரு ப்ரியத்தை

****

நன்றி : ' யாவரும்.காம் ' இணைய இதழ் [ ஜூலை - 19 - 2014 ]

http://www.yaavarum.com/archives/2614

உறைந்துவிட்ட பொய் நதி..

*
அனைத்தின் மீதான புகார்களையும்
சற்றே ஒத்தி வைக்கலாம்

ஓர் எளிய நம்பிக்கையை
அணுகுதல் குறித்து விவாதிக்கலாம்

எதிர் எதிர் துருவங்களில் வீசுகிற காற்றின்
அளவுகோலுக்கென
ஒரு பழுத்த இலையைப் பறிக்கலாம்

மாறுதலுக்கு உட்பட்ட நடத்தைகளை
குறிப்புகளாக
ஆவணப்படுத்திக் கொள்ளலாம்

சந்தேகத்தின் ஆணிவேரை கசடுகள் நீக்கி
முத்தமிடலாம்

உறைந்துவிட்ட பொய் நதியின் போக்கில்
வெறுங்கால்களுடன்
நடந்து போகலாம்

குழந்தையின் கண்களில் படரும் உலகின்
கண்ணித்திரையை
விரல் ரேகை உரசப் பிரித்து எடுக்கலாம்

இது -

மனநோய் விடுதியொன்றின் பட்டியல் என
நம்பத் தொடங்கும் நிமிடத்தின் முதல் நொடியில்
தடம் புரள்கிற எழுத்து

என்ற முனகலோடு

சற்றே
ஒத்தி வைக்கலாம் அனைத்தின் மீதான புகார்களையும்

*****

மிகுந்த அயர்வின் இறுதியில்..

*
ஒரு பிரார்த்தனையின் வழியாக
நிறைவேற்றிவிட முடியும் எனத் தோன்றவில்லை
உனது இருப்பை

நீ
இல்லாமல் போகும் நிமிடங்களைக் கடப்பது என்பது
அத்தனை எளிதல்ல என்பதாக
நிகழும் சம்பவங்களின்
ஆரம்பப் புள்ளிகளை
எனக்குப் பரிசளிக்கிறது அத்தருணம்

அது

ஒரு கணித சமன்பாடு போல
ஆய்வுக் கூடத்தின் பிரத்யேக ரசாயனத் தன்மையாக
விவாதக் கூட்டத்தொடரின் கடைசி வரிசை மேஜை என
மிகுந்த அயர்வின் எல்லையில் வழங்கப்படும்
ஒரு சொட்டுத் தேன்துளியை எண்ணி
காத்திருப்பதாகவும்

அத்தனைக் கடினம் எனத் தோன்றவில்லை உனது இருப்பு

மேலும்..

அதனைக் கடப்பதற்கான நிமிடங்களை
வழங்கிட முடியாது
ஒரு பிரார்த்தனையால்

*****

இரவற்ற பகல்களின் கண்ணி..

*
மொத்தமாய்
விட்டொழிக்க முடிவதில்லை
கண்ணியின் மீது
ஊன்றி
நிற்கப் பழகிய
கால்கள் இருக்கின்றன

****

தனிமைக்கு என்று ஓர் அறையை நிறுவுதல்..

*
அதையே நினைத்து
என்ன ஆகப் போகிறது

சொல்ல விரும்பாத பொய்யை சொல்லிவிட்ட பின்
செய்ய நேர்ந்த துரோகத்தை செய்துவிட்ட பின்
திருட்டுத்தனமாய் இருளில் முத்தமிட்ட பின்
காத்திருந்த தருணத்தின் நோக்கத்துக்குப் பின்

அதையே நினைத்து
என்ன ஆகப் போகிறது

கை நீட்டி அடித்தாயிற்று
உறவை ஒரேயடியாக துண்டித்தாயிற்று
குற்ற உணர்வோடு அலைக்கழிந்தாயிற்று
யாவற்றையும் துறந்துவிடுவது என முடிவெடுத்தாயிற்று

அதையே நினைத்து
என்ன ஆகப் போகிறது

நாம் அப்படி மருகினோம்
நம் தனிமைக்கு என்று ஓர் அறையை நிறுவினோம்
நமது மௌனத்தை புத்தகங்களுக்குள் ஒளித்து வைத்தோம்
இழப்பதற்கென்றே சேமித்து வைத்திருந்த
அமைதிக்கு வேலியிட்டோம்

அதையே நினைத்து
என்ன ஆகப் போகிறது

எடுத்துவிட்டதாக நம்பும் தீர்மானங்களும்
பிரயோகிக்கப் போவதாக தயார் செய்த பிரகடனங்களும்
முடிவுகளுக்குப் பிறகு நிகழப்போகும் திருப்பங்களும்
உச்சரிப்பதற்கு எனத் தருவிக்கப்பட்ட உத்தரவுகளும்
ஒரு கட்டாயம் என்றான பிறகு

அதையே நினைத்து
என்ன ஆகப் போகிறது

வாஞ்சைக் கொண்டு தடவும் கைவிரல்கள்
அணைப்பின் கதகதப்பை ஊர்ஜிதப்படுத்தும் முத்தம்
காமம் ததும்ப வழங்கப்படும் ஒரு கருணை
ஒற்றைப் பார்வையின் கீழ்மை நிழல் படிந்த காதல்

இருப்பின் பெரும்பரப்பு மீது இடையறாத சூதின் பணயத்தில் விழுந்துவிடாத தாயத்தின் சந்தர்ப்பங்கள்
இப்படியான பின்

அதையே நினைத்து
என்ன ஆகப் போகிறது

*****

மரணித்தல் நிமித்தம் உடன் நீந்தும் மீன்குஞ்சுகளின் கடல்..

*
இன்னும் இருப்பதற்கான அவகாசம் உண்டோ
இழுத்துக் கட்டிய பாய்மர ஓசையோடு
பயணப் படகின் துளையாகிறேன்

வெயில் துளிகள் சிதற
உடலோடு முளைத்திருக்கும் துடுப்பு அசைகிறது
கரை தென்படவில்லை

இந்த மீன்குஞ்சுகள் உடன் நீந்துகின்றன
ஆனால்
எதையோ முணுமுணுத்தபடி கடல் குடிக்கின்றன

இருள மறுக்கும் வானின் நீலம் என் மீது கரைகிறது
மயிர்க்கால் துவாரங்களில் உட்புகும் உப்பு
வேர்ச் சுற்றி உயிர் திரிக்கிறது

நான் கடலாகிறேன்

கரையோடு துப்பிய எனது நுரைக் குமிழ்கள் உடையும் முன்
பதறி ஓடும் நண்டுகளின் வலைக்குள் நுழைந்து
அதன் கண்களில் படர்கிறேன் உப்பாக

காற்றின் ஓசை இழைய முணுமுணுக்கும் குரலை
இழுத்துக் கட்டுகிறது உயிரின் பாய்மரம்
வானின் நீலக் கண்களின் கோடு வரைகிறது
நண்டுக் கால்கள்

தளும்பிக் கடலாகும் என் உடல் மீது
மோதித் தழுவும் அவகாசத்தின் நிமித்தம் நீந்தி மரணத்தில்
திறந்து மூடும் வாயின் கடல் மொழி
உனது மீன்குஞ்சு

*****

கொடுக்க விரும்பும் முத்தம்..

*
கொடுக்க விரும்பும் முத்தம்
மறுக்கப்படும்போது
அதுவரை பேசிய விஷயங்கள் சற்றே
அமைதி இழக்கின்றன

கொடுக்க விரும்பும் முத்தம்
மறுக்கப்படும்போது
திரும்பமுடியாத எல்லை நோக்கி நாம்
அனுப்பப்படுகிறோம்

கொடுக்க விரும்பும் முத்தம்
மறுக்கப்படும்போது
எளிதில் தீர்ந்துவிடாத ஒரு வாதத்தை
நிர்ப்பந்திப்பதற்கான முதல் புள்ளி இடப்படுகிறது

கொடுக்க விரும்பும் முத்தம்
மறுக்கப்படும்போது
புரியாத பாதையின் மத்தியில் சட்டென்று
இறக்கிவிடப்பட்ட ஒரு நாய்க்குட்டியைப் போல்
மனம் திகைத்துவிடுகிறது

கொடுக்க விரும்பும் முத்தம்
மறுக்கப்படும்போது
கெஞ்சுவதற்கான அனைத்துக் காரணங்களும்
தம்மை மூடிக்கொள்கின்றன

கொடுக்க விரும்பும் முத்தம்
மறுக்கப்படும்போது
ஒற்றை இலையென படபடக்கும் மௌனம்
தன் நுனியைப் பழுக்கச் செய்கிறது

கொடுக்க விரும்பும் முத்தம்
மறுக்கப்படும்போது
அத்தனை இறுக்கத்தை அது கொண்டிருக்கும்
என்பதை அதுவரை அறியாதவராகவே
நாம் இருந்திருக்கிறோம்

கொடுக்க விரும்பும் முத்தம்
மறுக்கப்படும்போது
முற்றிலும் ஒரு புதிய சுவர் எழும்புவதை
முதல்முறையாக நாம் தெரிந்துக்கொள்ளத்
தொடங்குகிறோம்

*****

ஒற்றைக் கொடுக்கில் முடிவாகி சிமிட்டும் கசையடியின் நடனம்..

*
வெளியேறிய சொற்களின் தந்திரத்தை
இரவின் குளிர்ந்த உடல் பொத்தலிடத் தொடங்குகிறது
பொத்தல்களின் ஊடே சிமிட்டும் கண்களைக் கேட்கிறேன்

நூற்றி ஏழு கசையடிகளைக் குறித்து பேரம் பேசுகிறாய்
நிர்வாணத்தை உடைக்கும் கருவி தருவிக்கப்படுகிறது

கண் சிமிட்டல் நிற்கவில்லை

வியக்கும்படி தரவிறக்கம் ஆன உத்தரவை கையில் வைத்திருக்கிறேன்
மேலும் வியப்பதைப் பற்றி சிந்திக்கவும் தொடங்குகிறேன்

உடல் முழுக்க வீங்கும் சொற்கள்
ஒவ்வொன்றாகப் பழுத்து சிவக்கும்போது
சூரிய ஒளிப் பிசிர்கள் ரோமக்கால்களின் நுனியில்
தீப்பிடித்து எரிகின்றன

அது ஒரு நடனம்

உருளும் சிந்தனை
பாதாளத்தில் பாசி அடர திரள்கிறது

அங்கே தொப்புள் பள்ளம்

எஞ்சிய கசையடியின் மிச்சம்
அறையின் ஆணியில் தொங்குகிறது
அதிகார ரேகைகள் மாறும்போது அது துருப்பிடிக்கவும் விரும்பும்

பழுத்து சிவந்தவை வெடித்து நொதும்பிய பிசுபிசுப்பின்
தந்திர முனைப் பிளந்து நெளிகையில்
சொடுக்கும் சொற்கள் பொத்தலிடுகின்றன கண் சிமிட்டல்களை

கையெழுத்தாகும் எண்ணிக்கை
வயிறு சிதறி
ஒற்றைக் கொடுக்கின் சிதைவிலிருந்து வெளியேறுகிறது
நூற்றி ஏழுக்கும் பிறகான கசையடியின் விஷம் தோய்ந்த ஓசைகளோடு

இரவின் குளிர்ந்த உடலிலிருந்து புறந்தள்ளிய தந்திரத்தின் நடனம்
தொப்புள் கொடியில் சுற்றிக்கொண்டு கிறங்கி
சமவெளியெங்கும் மலரும் நிர்வாணச் சிறகுகளில்
உடைந்த கருவியின் துருப்பிடித்த நிறம்

வெளியேறிய சொற்களின் தந்திரம் கொண்டு
நனவிலிச் செதிலின் தவம்

*****