ஞாயிறு, பிப்ரவரி 19, 2012

அழைக்க மறுத்த குரலின் நீர்மை..

*
குளிர்கிறது
குளிர்கிறது
முதுகெலும்பின் நடு மஜ்ஜையிலிருந்து
நடுங்குகிறது உன் நிழல்

அழைக்க மறுத்த குரலின் நீர்மை மேற்பரப்பில்
அசைகிறது விரல்

சுட்டுகிறாய்
மௌனம் சுட்டுகிறாய்
உடைகிறது பிம்பம்
உள்ளங்கையில் ஏந்தச் செய்கிறாய்

நீண்ட இரவின் மனம் வனைகிறது என்னை

காற்றில் எழுதி நீளும் அனைத்தின் சாயல்களையும்
உள்ளடக்குகிறாய்
புரியவில்லை இந்த நிதானம்

குளிர்கிறது
கடுமையாய் குளிர்கிறது

முதுகெலும்பிலிருந்து விடுவி உன்னை

*****

நன்றி : ( உயிரோசை / உயிர்மை.காம் ) [ பிப்ரவரி - 27 - 2012 ]

http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=5326

ஒலி உமிழும் மௌனத்தின் யத்தனிப்பில்..

*
கனவின் கனத்த காட்சி
விருப்பமின்றி அரங்கேறுகிறது
உனது மேடையில்

துரிதப்படுத்தப்படும் முக பாவனைகள்
அரிதாரப் பூச்சில் வியர்க்கின்றன

திட்டமிடாத வசனங்களால்
நிரம்பி வழிகிறது
பார்வையாளர் பகுதி

அறுகோணத்தில் வடிவமைக்கப்பட்ட
உணர்ச்சி ஒன்று
தன் சிறகைப் பிய்த்து கையில் வைத்திருக்கிறது
பறப்பதற்கு காரணமற்று

வர்ணமற்ற விளக்கொளியில் சரிகிறது
அடுக்கியிருக்கும் அபத்தங்களின் நிழல்
ஒலி உமிழும் மௌனத்தின் யத்தனிப்பில் ஊடறுக்கிறது
சொல்லில் அடங்காத் தனிமை

மெல்ல இறங்கும் அடர்த்திரையில்
சுருக்கங்களோடு விரிகிறது
பிழையில்லா ஒரு வளையம்

கைத்தட்டல் சப்தங்கள் சதா எதிரொலிக்கும்
நினைவின் பாதைக்குள்ளிருந்து
ஒவ்வொரு காகிதமாக உதிர்கிறது
எழுதி வைத்திருந்த உரையாடல்களோடு

****

நன்றி : ( உயிரோசை / உயிர்மை.காம் ) [ பிப்ரவரி - 27 - 2012 ]

http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=5326

மீதக் காடு..

*
பாதி எரிந்து முடிந்த
தீக்குச்சியில்
மீத நெருப்பைக்
கைப்பற்றி வைத்திருக்கிறது
காடு

****

நன்றி : ( உயிரோசை / உயிர்மை.காம் ) [ பிப்ரவரி - 20 - 2012 ]

http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=5298

செவ்வாய், பிப்ரவரி 14, 2012

விருட்..

*
கழுத்து வரை
மூழ்கச் செய்த மொழியில்
சாதகம் பிடித்து
மேலெழும்பிய இசை உடைய

விருட்டென்று பறந்துவிட்டது
உச்சியிலிருந்து
குயில்

****

நன்றி : ( உயிரோசை / உயிர்மை.காம் ) [ பிப்ரவரி -]

http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=5298

அறைக்கு வெளியே வீசும் புயல் காற்று

*
தூக்கத்தில் அசையும்
தான்யாவின் கால் கொலுசு
இரவை ஒலிக்கிறது

அறைக்கு வெளியே வீசும்
புயல் காற்று ஜன்னலைத் துளைத்து

பின்
கொலுசு திறக்கும் இரவில்
காற்று கடக்கிறது
புயலை

****

நன்றி : ( உயிரோசை / உயிர்மை.காம் ) [ பிப்ரவரி - 20 - 2012 ]

http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=5298

மிகச் சிறிய இரவில்..

*
மிகச் சிறிய இரவில்
நிறைய காகிதங்கள் அடுக்கப்பட்டிருக்கிறது
ஒரு பேனா
ஒரு கத்தி

இத்தனிமையைத் தொட்டு எழுதுவதற்கு பேனா
மணிக்கட்டு நரம்பைத் துண்டித்துக் கொள்வதற்கு கத்தி

பெருகும் ரத்தக் கசிவில் எத்தனை வார்த்தைகள்
பெருகும் வார்த்தைக் கசிவில் எத்தனைக் கோட்பாடுகள்

ஒரு பேனா
ஒரு கத்தி

மிகச் சிறிய காகிதத்தில்
அடுக்கப்பட்டிருக்கிறது இரவு

*****

நன்றி : ( உயிரோசை / உயிர்மை.காம் ) [ பிப்ரவரி - 13 - 2012 ]

http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=5276

சரியும் பார்வையில் உதிரும் இறகு..

*
நீ
பிழியும் துணியிலிருந்து நழுவும் சோப்புத் துளிகள்
வெப்பமேறி சாகின்றன பாத விரல் வளைவில்

உன் சரியும் பார்வையின் குளிரில்
சிறகொன்று உதிர்க்கிறது இறகை

தடயங்களேதுமில்லா ரகசியமென
பின்வரும் இரவை நறுக்கி வைக்கிறாய்
மாடிப்படி முனையில்

மேல்நோக்கி குவியும் உதட்டில் தாழ
இறங்கித் ததும்புகிறது மௌனமாய் ஒரு முத்தம்

உரையாட மிச்சம் பிடித்து வைத்திருக்கும் சொற்கள்
இறக்கைத் துடிக்கக் காதருகே தொங்குகிறது
ஏனைய அர்த்தங்களைக் கொத்தி

****

நன்றி : ( உயிரோசை / உயிர்மை.காம் ) [ பிப்ரவரி - 13 - 2012 ]

http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=5276

யாருமற்ற பொழுதின் சூரியன்

*
ஒரு போதும் அசைவதில்லை
நைலான் கொடியில் முறுக்கிக் கொண்டிருக்கும் நிழல்

ஒன்றிரண்டு ஈக்கள் மட்டும் நக்கிப் பார்க்கின்றன
அப்போதும் அதில் மீதமிருக்கிறது கொஞ்சம் வெயில்

கான்க்ரீட் சொரசொரப்பில்
இலைச் சருகொன்று தன் தடித்த நரம்புகள் உரச
சப்தமெழுப்பி உருட்டுகிறது காற்று

மருண்ட கண்களோடு நிழல் விளிம்பைத் துரத்தி
ஓடுகிறது வெயிலில் சிவந்த கட்டெறும்பு

யாருமற்ற பொழுதின் சூரியன்
மொட்டைமாடிச் சுவரில் யாரோ வைத்துப் போன
ஒரு பிடிச் சோற்றிலும் கொஞ்சம் காய்கிறது

****

நன்றி : ( உயிரோசை / உயிர்மை.காம் ) [ பிப்ரவரி - 13 - 2012 ]

http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=5276

துளிச் சலனம் விழுந்து... வட்டமென விரியும் பசலை...

*
அழுந்தத் துடைத்துக் கொள்ள எப்போதும்
ஒரு சின்னஞ்சிறு கைக்குட்டை உதவுகிறது

மறுப்பின்றி உச்சரிக்க நேரும் வாக்கியங்கள்
இணக்கத்தோடு இறுகத் தழுவும் ஸ்பரிசம்
ப்ரியமான பார்வையுடன் உதிரும் முத்தங்களின் வாசல்
அசைப் போட்டுத் தனித்திருக்க அனுமதிக்கும் மயக்கம்
கூடலில் முயங்கும் மௌனத்திலிருந்து வெளியேறும் ஒரு சொல்
மரணத்தின் துளி சலனம் விழுந்து வட்டமென விரியும் பசலை
ஊடலில் தென்றல் தொட்டு சிலிர்ப்பூதும் இசையின் லயம்

ஒவ்வொன்றிலிருந்தும் கோர்த்துக் கொண்டு
துளிர்த்துப் படரும் காமத்தின் ஈரம் சிவக்கும் முகத்தில்
மெழுகிப் பெருகும் தாபத்தை அழுந்தத் துடைத்துக் கொள்ள

ஒரு சின்னஞ்சிறு கைக்குட்டை உதவுகிறது

*****

நன்றி : ( உயிரோசை / உயிர்மை.காம் ) [ பிப்ரவரி - 13 - 2012 ]

http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=5276

சாம்பலாகும் பொழுதொன்றின் விரல் பிடித்து..

*
எனக்குள் பற்றியெரியும்
நீண்டச் சாலையில்
கைவிடப்பட்ட சொற்களோடு நிற்கிறேன்

எல்லாத் திசையிலும்
தீப்பிழம்புகள்

கருகி உதிரும் மகரந்தங்களின் பிண வாசம்
வனங்களின் புண்ணில் புரையோடுகிறது

சுழலும் கனலின் விரல் பிடிக்கத்
தயங்கும் மௌனத்தின் மயிர்க்கால்கள் வெந்து போகிறது

சாம்பலாகும் பொழுதொன்றின் தனிமை வெப்பத்தில்
நீறு பூத்து மிச்சமாகிக் கிடக்கிறது

நீயென்றும் நானென்றும்
சொற்கள்

*****

நன்றி : ( உயிரோசை / உயிர்மை.காம் ) [ பிப்ரவரி - 6 - 2012 ]

http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=5253

பூ வேலைப்பாடுகள் நிறைந்த ஒரு கோப்பை மழை இரவு..

*
மௌனத்தைக் குழைக்கிறது இந்த மழையின் ஈரம்
தாழ்வாரத் தாளங்களின் குதித்தலோடு
சிதறும் சாரல்களின் புள்ளிகளில்
நனைகிறது அகாலம்

இந்த இரவு விடிவதை சாத்தியப்படுத்த முயல்கிறது
காற்றில் ஊசலாடும் குண்டு பல்பு

சுவர்களில் அசையும் நிழல்கள்
கை நீட்டி யாசிக்கின்றன என் மௌனத்தை

ஓயாத இம்மழை இரவின் ஈரத்தைக் கர்ச்சீப்பில் ஒற்றியெடுத்து
பிழிந்து வைத்திருக்கிறேன்
பூ வேலைப்பாடுகள் நிறைந்த ஒரு
பீங்கான் கோப்பையில்

****

நன்றி : ( உயிரோசை / உயிர்மை.காம் ) [ பிப்ரவரி - 6 - 2012 ]

http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=5253

ஞாயிறு, பிப்ரவரி 05, 2012

நழுவி உடையும் சலனம்

*
ஒற்றை முகப் பாவனையில்
யாவற்றையும் எழுதிப் போகிறது மௌனம்

கணிப்பின் மீறலில் துடிக்கும் அர்த்தங்கள்
ஒரு அடர்ந்த திரைச் சீலையைப் போல்
இவ்விரவைத் தொங்க விடுகிறது

பேச்சற்று அமர்ந்திருக்கும் மேஜையில் எதுவுமில்லை
வெறுமையின் வெளி
மெழுகிப் பூசுகிறது
மனதின் சொற்ப வெளிச்சத்தை

வார்த்தைகள் கொண்டுத் தாங்கிப் பிடிக்கும்
வலி ஒவ்வொன்றும்
அவசியமற்ற புன்னகையோடு சூழ் கொள்கிறது

சலனத்தின் மென்வருடல் நழுவி உடையும் என் நிழலில்
சில்லுகளாய் நொறுங்கிட அனுமதிக்கிறது
இக்கொடுந்தனிமை

*****

நன்றி : 'கீற்று' இணைய இதழ் [ பிப்ரவரி - 6 - 2012 ]

http://www.keetru.com/index.php?option=com_content&view=article&act=section&id=18371&Itemid=139

கொஞ்சம் சொற்கள் மட்டுமே

*
என்னிடமிருப்பது 
கொஞ்சம் சொற்கள் மட்டுமே 

சிரமப்பட்டு 
அதனுள் உன்னை ஒளித்து வைத்திருக்கிறேன் 

எழுதித் தரும்படி 
நீ நீட்டும் காகிதங்கள் 
உன்னோடு இருக்கட்டும் 

****