ஞாயிறு, பிப்ரவரி 19, 2012

ஒலி உமிழும் மௌனத்தின் யத்தனிப்பில்..

*
கனவின் கனத்த காட்சி
விருப்பமின்றி அரங்கேறுகிறது
உனது மேடையில்

துரிதப்படுத்தப்படும் முக பாவனைகள்
அரிதாரப் பூச்சில் வியர்க்கின்றன

திட்டமிடாத வசனங்களால்
நிரம்பி வழிகிறது
பார்வையாளர் பகுதி

அறுகோணத்தில் வடிவமைக்கப்பட்ட
உணர்ச்சி ஒன்று
தன் சிறகைப் பிய்த்து கையில் வைத்திருக்கிறது
பறப்பதற்கு காரணமற்று

வர்ணமற்ற விளக்கொளியில் சரிகிறது
அடுக்கியிருக்கும் அபத்தங்களின் நிழல்
ஒலி உமிழும் மௌனத்தின் யத்தனிப்பில் ஊடறுக்கிறது
சொல்லில் அடங்காத் தனிமை

மெல்ல இறங்கும் அடர்த்திரையில்
சுருக்கங்களோடு விரிகிறது
பிழையில்லா ஒரு வளையம்

கைத்தட்டல் சப்தங்கள் சதா எதிரொலிக்கும்
நினைவின் பாதைக்குள்ளிருந்து
ஒவ்வொரு காகிதமாக உதிர்கிறது
எழுதி வைத்திருந்த உரையாடல்களோடு

****

நன்றி : ( உயிரோசை / உயிர்மை.காம் ) [ பிப்ரவரி - 27 - 2012 ]

http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=5326

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக