திங்கள், மார்ச் 21, 2011

சுழியிட்டு அழைக்கும் நீரின் வெம்மை..

*
நதியைக் கடக்கும்படி
கெஞ்சுகிறது
பரிசல்

கரையோரக் கூழாங்கற்கள்
நிலவைப் பூசிச் சிரிக்கிறது

நைந்து நிறமிழந்த கால் பூட்சில்
இரவை உரசி வைத்திருக்கிறது
என் தளர் நடை

பெண்ணொருத்தியின் கனவைப் போல
நெளிந்து நழுவும் நதியைக்
கடக்கும்படி
கெஞ்சுகிறது
இந்தப் பரிசலும்

சுழியிட்டு அழைக்கும் நீரின் வெம்மை 
விரல் நுனியிலிருந்து உருளும்
இந்த அகாலத்தை
குறிப்பெழுதிக் கொண்டிருக்கிறது

எதிர்க் கரையின்
அடர்த்தி மிகு மௌனம்

******

வெளியேறுதலுக்குப் பின்

*
அப்படியொன்று
சொல்லப்பட்டதாகவே
வடியவில்லை
இந்த இரவு..

உன்
வசவுகளின் கிரணங்கள்
என்
அறையின்
எல்லாப் பொருட்களின் மீதும்
பூசப்பட்டிரு
க்கிறது..

உன் வெளியேறுதலுக்குப் பிறகு
இன்னும்
திறக்கப்படாத கதவுகள்
எதைக்
கையேந்தி நிற்கிறது
என்பதை அறியும் விருப்பமற்று

கட்டிலோரம் தரையில் நீண்டுக் கிடக்கும்
சொற்ப நிழலுக்குள்
ஒடுங்கிக் கிடக்கிறேன்

சுவற்றில் மோதிய சிதறல் உதரிகளாக
கிடக்கும் செல்போன் ..

நம் உரையாடல்களை அணைத்து வைத்திருக்கிறது..

*******


நன்றி : ' திண்ணை ' இணைய இதழ் ( மார்ச் - 27 - 2011 )

கண்ணீர் குரல்

*
தொலைதூர
செல்போன் அழைப்பின்
வழியே
பிசுபிசுக்கும்..

உன்
கண்ணீர் குரலால்

ஆலங்கட்டிக் கொள்கிறது
இந்த
உரையாடல்..

******


நன்றி : ' திண்ணை ' இணைய இதழ் ( மார்ச் - 14 - 2011 )

ஒற்றை மீன்

*
எல்லையற்று நீளும் துயரச் சுவரில்
கரும்பாசி போல்
படிந்திருக்கிறாய்

தனிமைப் போக்கும் வழியற்று
அகன்ற கண்ணாடிக் குடுவையில்
நீந்தும் 
என்
ஒற்றை மீனுக்கு

உன்னைக் கொஞ்சம்
சுரண்டி
உணவிடுகிறேன்

அது
குமிழ் குமிழாய்
உடைத்துக் கொண்டிருக்கிறது
தன் பெருமூச்சை

*****


நன்றி : ' திண்ணை ' இணைய இதழ் ( மார்ச் - 14 - 2011 )

விடாமல் பெய்யும் தனிமை

*
நம்பிக்கையின் நிறங்கள் 
கரைந்தோடும் 
இந்த யாருமற்ற இரவில் 
விடாமல் பெய்கிறது 
தனிமை..


காரைப் பெயர்ந்துதிரும் 
இருள் சுவரில் 
நீ விட்டுச் சென்ற 
வார்த்தைகள் யாவும் ..


துளிகளென திரண்டு 
என் கணுக்கால் நக்கி ஓடுகிறது 
கசடுகளாக 
உன் உதடுகளை உருட்டி..

********
 
நன்றி : ( உயிரோசை / உயிர்மை.காம் ) [ மார்ச் - 28 - 2011 ] 
http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=4146

ஜீரோ வாட்ஸ் பல்பின் ஆரஞ்சு நிறம்

*
குழந்தை கையசைத்து
அழைக்கிறாள்
யாவற்றையும்..
சுவரை, பல்லியை,
மின்விசிறியை, அசையும் பலூனை,
நம் விரலை, ஜீரோ வாட்ஸ் பல்பின்
ஆரஞ்சு நிறத்தை, படச் சட்டத்தில் இருக்கும்
தாத்தாவை
செரலாக்கை, பால் புட்டியை,
டிவியை, நீர்க்குவளையை

யாவற்றையும்
அழைக்கிறாள்..

இருந்துவிட்டு போகட்டும் என்று
நள்ளிரவு
வீடு திரும்பும் அப்பாவையும்

*****

நன்றி : ( உயிரோசை / உயிர்மை.காம் ) [ மார்ச் - 14 - 2011 ] 


http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=4102

பெயின்ட் உதிர்ந்த கால் தடங்கள்..

*
மாடி கைப்பிடிச் சுவர்களைச் சுற்றி
' ப ' வடிவில் நீ பதியனிட்ட
செடிகள் காற்றில்
தலையசைக்கின்றன

மொட்டைமாடிக்கு
இணைந்திருக்கும் இரும்பு ஏணியின் மீது
உணவைச்  சுமந்து ஊர்கிறது
ஓர் எறும்புக் கூட்டம்

கோவைக் கொடியின் பச்சை நரம்புகள்
ஏணியின் கைப்பிடியில்
இறுகப் பற்றி சுருள் சுருளாக
மௌனிக்கிறது

அதன் மீதேறி 
கடைசியாக
 நீ விட்டுச் சென்ற
 உன்  கால் தடங்கள்
 பெயின்ட் உதிர்ந்து துருவேறிவிட்டது

அந்த வெப்ப பகலில்
நீ துவைத்து
கொடியில் உலரப் போட்டிருந்த
உன் உள்ளாடைகள்
இன்னும் வெய்யிலில் காய்கிறது
உன் முடிவைப் போலவே
உக்கிரமாக

*****

நன்றி : ( உயிரோசை / உயிர்மை.காம் ) [ மார்ச் - 7 - 2011 ] 


http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=4074

சாம்பல் நிறக் குறிப்புகள்

*
படி வழியே இறங்கும்
அமைதியான நீரை ஒத்திருக்கிறது
உன் பாதங்கள்

அவைகளை
இரவின் மதில் சுவரிலிருந்து
ஒரு ஜோடி பச்சைக் கண்கள்
சாம்பல் நிறமெனக் குறிப்பெடுக்கின்றன

பஞ்சுப் படுக்கையின் மேல்
உன் பாதங்கள் ஒரு இறகைப் போல மிதக்கின்றன
என் கனவில்

நம் ரதத்தில் சரியும் சக்கரங்களை
இட்டுச் செல்லும்
கால் தடங்கள்
ஒற்றையடிப் பாதையினூடே
உன்னிடமே
வந்து சேர்கிறது

இடுப்புயர நாணலின் வெட்கத்தில்
இடம் மாறும் இதயம்
அடுக்கடுக்காய் அவிழச் செய்கிறது

துரோகத்தின் சாயலை
பிரியத்தின் பதற்றத்தை
மௌனத்தின் கசப்பை

பிறகு
வடிந்து போன மிச்சமென
தேங்குகிறது
கொசு மொய்க்கும்
ஒரு வார்த்தை

*****

நன்றி : 'கீற்று' இணைய இதழ் [ மார்ச் - 8 - 2011 ] 


http://www.keetru.com/index.php?option=com_content&view=article&act=section&id=13421&Itemid=139

உங்கள் பிரியத்துக்குரிய ஆயுதம்..

*
அயற்சியின் பள்ளத்தாக்கில்
வீழ்தல்
ஒரு தன்முனைப்பல்ல

என் பகலின் விலா எலும்பில்
நீங்கள் செருகிச் செல்லும்
உங்கள் பிரியத்துக்குரிய
ஆயுதம் அது

அதன் கூர்மையை
நீங்கள் உங்கள் இரவுகளில்
மது அருந்திக் கொண்டே
கட்டமைக்கிறீர்கள்

உங்கள் வரையறைகளை மீறாத
கோட்பாடுகளின்
இறுதி வாக்கியத்தில்
சிதையாத முற்றுப்புள்ளி அது

என் நரம்புகள் மொத்தமும்
பின்னிய வலையில்
தொங்கிக் கொண்டிருக்கும்
என்
இரவுகள் யாவும்

அயற்சியின் பள்ளத்தாக்கில்
வீழ்தல்
ஒரு தன்முனைப்பல்ல..

அது
உங்களின் வரைபடம்..

*****

நன்றி : 'கீற்று' இணைய இதழ் [ மார்ச் - 3 - 2011 ] 


http://www.keetru.com/index.php?option=com_content&view=article&act=section&id=13323&Itemid=139

ரேகைகள்..

*
என் கதவுகளுக்குக் காதில்லை
தட்டுவதை நிறுத்துங்கள்

வாசற்படியில்
உதிர்ந்து கிடக்கும்
உங்கள் ரேகைகளை

நாளை வந்து
பொறுக்கிக் கொள்ளுங்கள்..

*****

நன்றி : 'கீற்று' இணைய இதழ் [ மார்ச் - 1 - 2011 ]


http://www.keetru.com/index.php?option=com_content&view=article&act=section&id=13274&Itemid=139