வியாழன், மே 29, 2014

உப்புச் சொரியும் ஓசையின் விளிம்பு..

*
ஒரு கசையடி போதும்
என்கிறேன்

மேலும் மேலும் சொற்கள் கோக்கிறாய்

விளாறுகளின் ரத்தக்கட்டில்
உரிந்து விழுகிறது உன் வீறிடல்

உப்புப் சொரியும் என் ஓசையின் விளிம்பில்
நின்றுக் கொண்டு எக்குகிறாய்
மேலும் ஒரு சொல் உருவ

*****

தயக்க மலரின் ஒற்றையடிப் பாதை..

*
ஸ்பரிச விலகலில் கரையும் அந்திக் கீற்றை
நதியலையில் இசை மீட்டுகிறேன்

கடந்துபோகும் காற்றில்
நழுவிடாமல் பிரயத்தனப்படும் உன் புன்னகையின்
மலைப்பாதை வெளியெங்கும் புயல் வீசுகிறதே

தயக்க மலரின் மகரந்தத் துகள்களைப் பற்றும் பொருட்டு
என் வண்ணத்துப்பூச்சியின் கால்களில் தூரிகைக் கட்டுகிறேன்

ஓவிய வனமாகப் போகும் ஒற்றையடிப் பாதையின்
மருங்கெங்கிலும் நீ காத்திரு

*****

என் மீது..

*
மழையை
உன்னோடு கொண்டு போகிறாய்


கடுங்கோடை
என் மீது
காய்ந்துக் கொண்டிருக்கிறது

****

இடம்பெயர மறுக்கும் சொற்கள்..

*
எவ்வளவு முயன்றும் 

இடம்பெயர 
மறுக்கும் சொற்களை 
இந்த 
மரத்தினடியிலேயே கிடத்தி வைக்கிறேன்
அதன் மீது 

ஒரு புத்தன் வந்து உட்காரட்டும்

****

தாழ்ப்பாள்களுக்கு பின்னிருக்கும் கதவுகள்..

*
வலிய வந்து நிற்கிறேன்
எனக்குத் தெரியும் உன் கதவுகளுக்கு
தாழ்ப்பாள் கிடையாது  


ஆனாலும் 

சார்த்தியே வைத்திருக்கிறாய்

****

ஏற்கனவே..

*
மனக் குகையிலிருந்து வெளியேறி 

நிலத்தை உற்று நோக்கினால்
 

ஏற்கனவே கிளம்பிவிட்ட 

மிருகத்தின் 
கால்த் தடம்

****

சுழியிட்ட நம்பர் கரைந்து அழிகிறது..

*
மழைப் பெய்து கொண்டிருக்கிறது
மழைக் கவிதை ஒன்று எழுத வேண்டும்

தாய்ப் பூனையின்
கழுத்தைக் கட்டிக்கொண்டு
தூளியாடுகிறது குட்டிப் பூனை

பழைய சீமை ஓடு வேய்ந்த கூரையின்
முதுகுப் பாதையில் உருள்கின்றது
நீர் நூல்

பூனையின் பாதங்களுக்குள்
பதுங்கிக் கிடக்கும் கூர்நகங்கள்
உரிக்கின்றது இவ்விரவை

வெளிச்சம் சிந்தும் மின்விளக்குக் கம்பத்தில்
சுழியிட்ட நம்பர் கரைந்து அழிகிறது

தாய்ப் பூனையும் குட்டியும்
அதை எக்கி எக்கி சுரண்டுகின்றன

ஒரு சிறிய அதட்டலில்
நான்கு ஜோடிக் கண்களும் என் புறம் திரும்புகின்றது

நான் அவற்றை இந்தக் கவிதைக்குள்ளிருந்து
விரட்டுகிறேன்
அவை அடம்பிடிக்கின்றன

சூ..!
மழைப் பெய்து கொண்டிருக்கிறது
ஓடுங்கள் இங்கிருந்து

நானொரு மழைக் கவிதை எழுத வேண்டும்

*****

யாதொரு..

*
என் சிறகுகள் குறித்து
யாதொரு சந்தேகமும்
எனக்கில்லை

உன்
வானம் தான்
அச்சுறுத்துகிறது


****

ஒரேயொரு பறவை சிறகு..

*
பரணிலிருந்து எல்லாவற்றையும்
இறக்கி வைத்துவிட்டேன்

ஒரேயொரு பறவை சிறகு
மட்டும்
சிலந்தி வலையில்
தொங்கிக் கொண்டிருக்கிறது

எனக்கது
எட்டவில்லை

கவிதை எழுதும் உன் பேனாவைக் கொடு

****

காம்பிலிருந்து..

*
அதிக நேர யோசனைக்குப் பிறகு
பழுத்த இலையை
காம்பிலிருந்து
கழற்றிவிடுகிறது காற்று

****

என்றாலும் கூட..

*
எழுது மேஜையின் இழுப்பறை என்றே
திறந்தேன்
ஒரு சொல் தேடும் பொருட்டு

கொல்லன் பட்டறைக் கதவென
சுருண்டு மேலேறியது
உன்
இதயம்

அங்கு தான் இருந்தது எனக்கான ஒரு
துப்பாக்கி
தேடியச் சொல்லின் நெற்றிப்பொட்டில்
அழுந்தியபடி

****

நிச்சலனம் சுழித்தோடும் யாமம்

*
அதீத அந்தரங்கத்தோடு கமழ்கிறது பின்னங்கழுத்தில் பதிந்த முத்தம்
கைவளையில் நெருடும் விரல் நுனி
மணிக்கட்டு நரம்பின் மீது ஊர்ந்தபடி ஆரம் கூட்டுகிறது

காது மடல் உரசும் காற்றின் மூச்சில் சிறகு வளர்கிறது
யாமத்தின் அடர்ந்த இருளை ஏடிழைப் பிரித்து வெளிச்சமூட்டும் சிணுங்கல்

கோத்ததில் நெளியும் ஆலிலைப் பரல்களை அசைக்கிறது இதழ்
வெப்பம் வளரும் மச்சத்தை நெகிழ்த்தும் இந்நொடி
பூ மடல் உதிர அணைக்கும் நெருக்கத்தை வார்ப்பதில் வளையும் புன்னகை

கரைந்து போதல்
கலந்து கரைதல்

சுவாசச் சுடர் தூண்டி அசையும் நிச்சலனக் காமம்
பார்வை வனமேகி முயங்கும் உயிர்ப்பறவை தீண்டும் அலகில் காதல்

பத்து விரல் பற்றி நெஞ்சிறுகப் பதியும் நெற்றிப்பிறை
இடவலம் நகரும் சுட்டியில் ஆடும் முத்தம்

நீ மௌனம்
நீ நதி
நீ சங்கு
நீ பிறவி
ஊழிப் பிரளயப் பெருக்கில் சுழித்தோடும் இக்கூடல்
பாதக் கோலம் துளிர்த்து கரையேறி கட்டில் மேல் உயரும் நாணல்

சகி
ப்ரிய சகி
துடிப்படங்கும் அனல்மூச்சு அள்ளித் திருகி தைக்கும் தேகம்
இக்கடல் நுரைத்து முகில் உரிக்கும் உன் வைகறை

நான் பட்சி - என் சிறகு
படபடத்து இசை ஊதி இருள் புலர மீள் கவ்வும் அதே காமம்

*****


நன்றி : ' யாவரும்.காம் ' இணைய இதழ் [ மார்ச் - 10 - 2014 ]

http://www.yaavarum.com/archives/2228 

மூன்று டபிள்யூக்களுக்கு பிறகான ஒற்றைப் புள்ளி

*
நெருக்கியடுக்கப்பட்ட தோற்றப் பிழை கூடி
பட்டாணி உருண்டைகள் குவிந்த நெகிழி குடுவையின் மீது
நகரும் காலை நிழல்
வளி மண்டலம் உறிஞ்சிய காற்றில்லா நகர்வு நிகர் கல்லொன்றின்
பறவைக் கண் இமை அசைவு

எறும்பொன்றின் குச்சிக்கால் முனை வரையும் கோடுகள்
இட்டுச் செல்லும் தூசுப் படலத்தோடு
மேசை மீது எண்ணற்ற கேலக்ஸிகள்

வெப்பம் அனற்றும் அலமாரி கண்ணாடிக் கதவுகளை
மோதுகிறது அபத்த பிம்பம்
நானில்லை என்றொரு சிதறலை
வரிசைப் பிறழ்ந்த புத்தக வர்ணங்களை மொய்க்கும்
கொசுக்களின் ரீங்காரச் சிறகுகளில் மின்னுகிறது
சொற்களின் வெளிச்சம்

அறைக் கூரையிலிருந்து வழிந்திறங்கும் பொழுதுகளின் இழைப் பற்றி
தொங்குகிறது மௌனச் சிலந்தி

கணினித் திரையில் தட்டச்சப்படும் மூன்று டபிள்யூக்களுக்கு பிறகான
ஒற்றைப் புள்ளியில் எச்சமிடுகிறது வளிமண்டலம் நினைவுகூட்டி
துப்பும் புதிய கிரகம்

புற ஊதாக் கதிர்களின் வடிகட்டியில் மீந்த படிமங்களை கொண்டு
வலைப் பின்னுகிற எட்டுக்கால்களின் நூல்களையும்
இயக்கம் கொண்டசைகிறது
தப்பிதங்கள் நிறைந்த உலகின் பொம்மலாட்டம்

*****

நன்றி : ' யாவரும்.காம் ' இணைய இதழ் [ மார்ச் - 10 - 2014 ]

http://www.yaavarum.com/archives/2228 

ஒப்பந்த வசவுகளின் மரச் செதில்

*
பொய்யின் நிறம் பகிர்தலுக்கான வாசனையோடு இல்லை
இலக்கு தவறும் உண்மையொன்றின் பாதாளம்
பாதங்களின் விளிம்பில் அசைந்து
கடக்க வேண்டிய தொலைவுகளுக்கு கைகாட்டி உதிர்கிறது திசை

வார்த்தைகள் அயர்ந்து மணக்கும் பொழுதுகளை
நகர்த்துகிறது திரைச்சீலை
சரியென்றும் சரியில்லையென்பதுமான அபிப்பிராயங்கள்
புரட்டப்படும் சப்தத்தில் அதிர்கிறது முகம்

முன் - பின் தீர்மானங்களை இழுத்து வரும் வசவுகளோடு
ஒப்பந்தமாகும் மௌனத்தை ரத்து செய்யும்படி
நிர்ப்பந்திக்கும் வாக்குறுதிக்குள்
நிறம் நிறமாய் வாசனையை அவிழ்க்கிறது
நாளைய பொய்யாகும் திசைக்காட்டி மரமொன்றின் செதில்

****

நன்றி : ' யாவரும்.காம் ' இணைய இதழ் [ மார்ச் - 10 - 2014 ]

http://www.yaavarum.com/archives/2228
 

வனமழிந்து அழுகும் ஆப்பிள் மரங்கள்

*
கானல் தகிக்கும் தார் ரோட்டின்
கருஞ் ஜல்லியை
உருக்கி எரியும் சிக்னல்

கையேந்தி நகரும் ரேகை நதியில்
மிதக்கிறது உச்சிப்பகல்

ஹாரன்கள் அலறும் நகரத்தின் விலாவில்
பசியோடு புரண்டுத் திரும்புகிறாள்
செம்பட்டை ஏவாள்

வனமழிந்து அழுகிய ஆப்பிள் மரத்தைத் துருப்பிடித்து
மெலிந்து தகிக்கும்
உருவகக் கம்பத்தின் தலையில்
கூடு கட்டி முட்டையிடுகிறான் ஆதாம்

பாவச் சம்பளத்தை ரகசியமாய் புரட்டிப் பழகிய
சர்ப்பத்தின் பிளந்த நாவிடுக்கில்
உலோக விசில் சத்தம்

****


நன்றி : ' யாவரும்.காம் ' இணைய இதழ் [ மார்ச் - 10 - 2014 ]

http://www.yaavarum.com/archives/2228

ஒற்றைச் சொல்லின் பாதை..

*
பின்தொடர்ந்து வருவதற்கு மட்டுமேயான
உத்தரவில்

பிடிவாதமாகத் தொற்றிக்கொள்ளும்
ஒற்றைச்
சொல்லை

பாதி வழியோடு விட்டுவிட
முடிவதில்லை

****

விரல் நுனியில் கசியும் இரவின் பாடல்கள்..

*
இத்தனை இணக்கத்துடன் இருக்க பழக்குகிறாய்
வார்த்தைகளில் ஏந்திக் கொண்டு எனது இரவைப் பூக்கச் செய்கிறாய்

சிறகுகள் வளர்ப்பதைப் பற்றி சொல்லித் தருகிறாய்
நமக்கென பிரத்யேகமாக ஒரு வானம் வரைந்து கொள்வோம் வா
என்று அழைத்துப் போகிறாய்

நீ அறிமுகப்படுத்தும் பள்ளத்தாக்கு முழுவதும்
இரைந்து கிடக்கும் வண்ண மலர்களை
இதற்கு முன் நான் கண்டதில்லை

விடிய மறுக்கும் ஜாமத்தின் ஒவ்வொரு நொடிக்குள்ளும்
ஒளிந்து கொண்டிருக்கிறது அதன் வாசம்

உன் உள்ளங்கை மீது நான் எழுதும் இந்த மௌனத்தை மொழிபெயர்க்க
என் விரல் நுனியிலிருந்து கசியும் பாடல்களை
நீயுன் உதடுகள் கொண்டு ஒற்றியெடுத்து பாடுகிறாய்

நான் நிறைந்து மிதந்தபடி
இத்தனை இணக்கத்துடன் இருக்கும் இந்தப் பொழுதுகளை
உனக்குப் பறித்துத் தருகிறேன்

நீயொரு முத்தத்தை என் காது மடலில் மலரச் செய்கிறாய்

*****

கடந்துவிட்டதாகச் சொல்லும் இரவு..

*
சொற் பைத்தியங்கள் திணறுகின்றன
முன் வைக்கப்பட்ட வாதங்கள்
காகித அடுக்கில் நசுங்கிக் கிடக்கிறது

கடந்து விட்டதாகச் சொல்லும் காலத்தின் இரவுகளையோ
அது தன்னகத்தே எழுதி வைத்திருக்கும் ரகசியங்களையோ
குறிப்புணர்த்தும்படி பரிந்துரைக்காத
பிரதிவாதிகளின் சாட்சியங்கள்
ரத்தம் உறைந்த மணல் துகளென நிறம் இழக்க மறுத்து
உறுத்துகிறது சூழலை

ஓர் உத்தரவுக்குப் பணிய பழக்கப்பட்டிருக்கும் தலைகள்
தையலிட்டு இறுகிக் கிடக்கும் உதடுகள்
அர்த்தங்களை நெம்புவதற்கு திராணியற்ற பேனாவைப்
பற்றியிருக்கும் விரல்கள்

யாவற்றுக்கும் ஒத்திசைந்து திணறும்
சொற்பைத்தியங்களின் சபை
ஒரு கட்டளையின் அச்சில் சுழல்கிறது

காலத்தை உருட்டியபடி

*****

ஆணிகள் துளையிடும் அந்தி

*
இறுக மூடிக்கொள்ளும்
சொல் ஒன்றிலிருந்து
காலங்கடந்து கசிவதாக இருக்கிறது
உன் முதல் எழுத்து

ஒரு முனகலோடு தான்
அது தொடங்க வேண்டுமென்பதல்ல

நிர்ப்பந்தத்தை
அறைந்து சார்த்தும்போது
நடுங்குகின்றன
இரண்டொரு பழைய ஆணிகள்

திரும்புதலுக்கு
இசையவில்லை அந்தி

****

பின்தொடர முடியாத தொலைவு..

*
மேலும்
பின்தொடர முடியாத தொலைவுக்கு
இட்டுப் போகிறாய்
சரி

என் தேவை

நீ திசை திரும்பாமல் கடந்துவிடப் போகும்
ஒரேயொரு கிளைப்பாதை மட்டுமே

****

வர்ணம் பிறழாமல் அடைகாத்த துயரம்

*
ஒரே ஒரு முறை பொழிவதற்காகக் காத்திருந்த
மழையின் சாரலை ஏந்த
சாலையில் உதிரும் மஞ்சள் நிறப் பூக்களின்
காம்புகளில் கசிகிறது
என்றோ பேசித்திரிந்த பால்யத்தின் துளி ஈரம்

நீ
வரிசைப்படுத்தி சொல்லிக்கொண்டே வந்த பட்டியலில்
துருத்தியபடி நெளிகிறது ஒரு விட்டுக்கொடுத்தலின் நிறம்
மௌனம் பழகு என்று கதறும் குயிலின் குரலில்
காகத்தின் பசியொலி தெறிப்பதாகச் சொன்னாய்

அப்படித்தான் முடைந்து வைத்திருந்தேன் எனது கூட்டை

வர்ணம் பிறழாமல் அடைகாத்த முட்டைக்குள்
கருக்கொண்ட நினைவுகளின் சிறகுகளை
கொஞ்சமேனும் நனைக்குமா
இந்தச் சாரல்

உதிர்ந்த மஞ்சள் பூக்களின் நரம்புகள் மீட்டுகிறது
என் துயரத்தை
ஈரச்சாலையின் நெடுக பரவுகிறாய்
குயிலின் குரலென

****

நன்றி : கல்கி வார இதழ்  [ ஏப்ரல் - 13 - 2014 ]

உணர்கொம்பு

*
மீதமிருக்கும் முத்தங்களுக்கு
சிறகுகள் வளரத்
தொடங்கிவிட்டது

மேலும்

உணர்கொம்புகள் தோன்றும்வரை
அவை காத்திருக்கவும் கூடும்

****

கொடுக்கு

*
மரணத்தின் மீது மழை பெய்தது
முதலில் கால்கள் பிய்ந்து நகர்ந்தன

வாய் எதையோ முணுமுணுத்ததைப் போலிருந்தது

கடுகு வடிவில் உருளும் தலையில் இருக்கும் கண்கள் மட்டும்
உலகை வெறித்தபடி
நகர்கிறது
நீரில்

****

துளி உறையும் இரவு..

*
நம் அபத்தத்தில் இருந்து
வெளியே இழுத்துச் செல்ல
காத்திருக்கிறேன்

முன்பொரு மழைப் பருவத்தில்
உனக்கென எழுதிய
என் இரவுகள் சிலவற்றை
இந்த ஜன்னல் வழியே இறக்கிவிடு

அதிகம் குளிர்வதாக இருக்கிறது
அறை

****

சுருள் இழை..

*
ஒற்றைத் தந்தி அறுந்த நொடியிழை
இசைச் சுருள்
மௌனத்தில்

****

திசை இடரும் குரலின் ஒற்றைத் தீர்மானம்

*
கை நிறைய கனவைத் தவிர வேறொன்றுமில்லை என்பதாக
வாசலில் உட்கார்ந்து விட்டது காதல்

பிடிப்பற்று நழுவி ஓடும் தண்ணீரின் விளிம்பில்
மனம் நனைகிறது

புறந்தள்ளும் பார்வையின் கீழ் தொங்குகிறாய் பிடிவாதமாய்
சிறகு பிய்ந்து தரையிறங்கும் பறவையிடம் கேள்
திசை இடரும் காற்றின் வாசம் என்னவென்று

வெப்ப சுழற்சியை நடுங்கச் செய்யும் குரலின் ஒற்றைத் தீர்மானம்
கூதிர்காலத்தை பழிப்பதில் தொடங்குகிறது

இது அகாலம்
திருகி எறியும் தலையோடு கிளம்புதல் நல்லது என்கிறது
அறுபட்ட வாலின்றி ஓடிப் பழகிய கௌளி

சூட்சும ஆணிகள் அறையப்பட்ட பழங்கதவின் கைப்பிடியில்
சமையலறை ரேகை தீட்டிய கரிக்கோடுகளாகி
மரத்தை அலறச் செய்யும் ஒப்பாரி அவஸ்யப்படவில்லை

புகைப்படச் சட்டகத்தில் காதலின் நிறம் பழுப்பேறி உதிர்ந்து
உறைந்துபோன முகங்கள்
இறகைத் தவிர வேறில்லை என்றபடி உட்கார்ந்துவிட்டன
கையில் பெருங்குரலோடு

****

மின்னும்..

*
துயர் கை மணலில்
எதுவோ பட்டு
மின்னும்
கண்ணாடித் துணுக்காகிறது
உன்
புன்னகை

***

பறத்தலின் சிறகை அறிமுகப்படுத்தியவன்

*
கீழுதடு மடித்துக் காத்திருக்கிறாள்
நிரம்பித் தளும்பும் கண்களில்
பதிய மறுக்கிறது நகரும் பிம்பங்கள்

ஸ்ட்ரெச்சரின் சக்கர உருளைகள்
நினைவை இழுக்கின்றன

'இரு..' - என்பதாக
உள்ளங்கை அழுத்திப் போனவனின்
வெப்பச் சூட்டில்
அதிகமாய் வியர்க்கிறது

மருந்தின் நெடியை மீறுகிறது
நோயின் வாசனை

பறத்தலின் சிறகை அறிமுகப்படுத்தியவனின்
புதிரை
மடியில் கிடத்தி வைத்திருக்கிறாள்

வெளியே வானம் இருளக்கூடும்
எல்லோரிடமும் குடைகள் உண்டு

யாராவது
ஒரு டீ குடிக்க அழைக்க மாட்டார்களா
என நெஞ்சு விம்முகிறது

யாராவது
யாராவது

****

நன்றி : ' கீற்று ' இனைய இதழ் [ ஏப்ரல் -25 - 2014 ]

http://www.keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-49/26381-2014-04-25-07-22-07

யாருமற்ற என் அறை..

*
யாருமற்ற என் அறையில் என்ன செய்வது
ஏதாவது புத்தகம் வாசிக்கலாம்
புத்தகங்களைத் தேர்ந்தெடுப்பதில் குழப்பம்
வெறுமனே புத்தக அலமாரியை சற்று நேரம் வெறிக்கிறேன்

கண்ணாடியின் முன் நின்று
என்னைப் பார்க்கும் என்னை எனக்குப் பிடிக்கவில்லை

ஒழுங்கற்ற அறையின் ஒழுங்கின்மையாக என்னை
உணர்ந்த நொடியில்
என்னை வரையத் தொடங்கியது எதிர் சுவர் நிழல்

சிந்திக்கவோ எழுதவோ எதுவுமில்லாக் கணத்தை
நழுவச் செய்து விரல்களிடையே நெருடும் பேனாவைத்
தூக்கியெறிகிறேன்
பிளவுபட்ட பேனாவின் நாக்கு அர்த்தமற்ற சொற்களை
பிதற்றிக் கொண்டே இருக்கிறது

தனிமை என்னைத் துண்டுத் துண்டாக
வெட்டுகிறதா

அசையும் ஜன்னல் திரைச்சீலைகள் வெயிலைத் தடுக்கிறது
குறைந்த வெளிச்சத்தில் சுழலும் இவ்வறையில்
வேறென்ன ரகசியங்கள் மிச்சமிருக்கக் கூடும்

அவைகளைப் புரட்டிப் பார்க்கும் சந்தர்ப்பங்களை
பாதுகாத்து வைக்க விரும்பாத கடிகார முட்கள் சப்தமின்றி
நொண்டியபடி
கால் வலிக்க இந்த அறையிலிருந்து வெளியேறத் துடித்து
பூட்டிய வாசல் கதவை முட்டுகிறது

துணை வராத நினைவுத் தொடர்களின் காரைப் பெயர்தலை
மனச்சுவர் இடையறாமல் பூசிக் கொண்டிருக்கும்
இந்த
யாருமற்ற அறை
இது நானுமற்ற அறை தானோ

தரையில் மல்லாந்து படுத்தபடி அண்ணாந்து பார்க்கிறேன்
சிலந்தி ஒன்று என்னையே பார்த்தபடி
வலையில் ஆடிக் கொண்டிருக்கிறது வெகுநேரமாய்

****


நன்றி : ' கீற்று ' இணைய இதழ் [ ஏப்ரல் - 23 - 2014 ]

http://www.keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-49/26364-2014-04-23-00-27-49 

நேற்றைய கெட்டவார்த்தையின் துர்வாடை

*
புறங்கையில் நெளியும் பழைய நரம்பைப் போன்ற
இந்தத் திமிரை என்ன செய்ய என்று தெரியவில்லை

உச்சி முகர குவிக்கும் உதட்டில்
நேற்றைய கெட்டவார்த்தையின் துர்வாடை மட்டுமே வீசுகிறது

இந்த மலையேற்ற பாதையின் விளிம்பு பாதாளம் நோக்கிச் சரிவதை
கைப்பற்றிக்கொண்டு என்ன ஆகப்போகிறது

வேர் முளைத்துத் தலையில் பூத்த காலங்களின் நிழல் பூசி
பூமி கிரகத்தின் துயர வாசல் அத்தனையிலும் குடை மடங்கிய காளான் குழிக்குள்
உப்பாகிப் புடைக்கிறது துருவேறிய உயிர் காற்று

கல்லறைச் சிலுவையின் கான்க்ரீட் சொரசொரப்பை
நக்கிக்கொண்டிருக்கும் ஆட்டின் நாக்கை அதிகம் நேசிக்கிறேன்

புதைந்தவனின் முனகல் சொற்களை அலறி உச்சரித்து ஓடும்
ஆட்டின் மடியில் விட்டெறிந்த சிறு கல்லுக்குள்
அகலிகை உறைந்து கிடக்கிறாள்

அடுக்குப்படிக்கட்டுகளாய் படிந்துவிட்ட சதையின் மடிப்பில்
கால் அழுந்த ஏறிக்கொண்டிருக்கிறது எமனின் எருமை

இந்தத் திமிரை மட்டும் என்ன செய்ய என்று தெரியவில்லை

*****