வியாழன், மே 29, 2014

யாருமற்ற என் அறை..

*
யாருமற்ற என் அறையில் என்ன செய்வது
ஏதாவது புத்தகம் வாசிக்கலாம்
புத்தகங்களைத் தேர்ந்தெடுப்பதில் குழப்பம்
வெறுமனே புத்தக அலமாரியை சற்று நேரம் வெறிக்கிறேன்

கண்ணாடியின் முன் நின்று
என்னைப் பார்க்கும் என்னை எனக்குப் பிடிக்கவில்லை

ஒழுங்கற்ற அறையின் ஒழுங்கின்மையாக என்னை
உணர்ந்த நொடியில்
என்னை வரையத் தொடங்கியது எதிர் சுவர் நிழல்

சிந்திக்கவோ எழுதவோ எதுவுமில்லாக் கணத்தை
நழுவச் செய்து விரல்களிடையே நெருடும் பேனாவைத்
தூக்கியெறிகிறேன்
பிளவுபட்ட பேனாவின் நாக்கு அர்த்தமற்ற சொற்களை
பிதற்றிக் கொண்டே இருக்கிறது

தனிமை என்னைத் துண்டுத் துண்டாக
வெட்டுகிறதா

அசையும் ஜன்னல் திரைச்சீலைகள் வெயிலைத் தடுக்கிறது
குறைந்த வெளிச்சத்தில் சுழலும் இவ்வறையில்
வேறென்ன ரகசியங்கள் மிச்சமிருக்கக் கூடும்

அவைகளைப் புரட்டிப் பார்க்கும் சந்தர்ப்பங்களை
பாதுகாத்து வைக்க விரும்பாத கடிகார முட்கள் சப்தமின்றி
நொண்டியபடி
கால் வலிக்க இந்த அறையிலிருந்து வெளியேறத் துடித்து
பூட்டிய வாசல் கதவை முட்டுகிறது

துணை வராத நினைவுத் தொடர்களின் காரைப் பெயர்தலை
மனச்சுவர் இடையறாமல் பூசிக் கொண்டிருக்கும்
இந்த
யாருமற்ற அறை
இது நானுமற்ற அறை தானோ

தரையில் மல்லாந்து படுத்தபடி அண்ணாந்து பார்க்கிறேன்
சிலந்தி ஒன்று என்னையே பார்த்தபடி
வலையில் ஆடிக் கொண்டிருக்கிறது வெகுநேரமாய்

****


நன்றி : ' கீற்று ' இணைய இதழ் [ ஏப்ரல் - 23 - 2014 ]

http://www.keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-49/26364-2014-04-23-00-27-49 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக