வியாழன், மார்ச் 29, 2012

வனத்தின் பெருந்துயரம்..

*
வனத்தின் பெருந்துயரம்
மொட்டைமாடி வெயிலில் காய்வதாக
கீச்சிடுகின்றன சொற்ப குருவிகள்

சிறு பச்சை இலைகள்
கைப்பற்றிக் கொள்கின்றன
சிதறும் நீர்த்துளிகளை

வேர்களின் உலகமொன்று
உயிர்த்திருக்கும் காரணத்தை
ஈரம் சொட்ட தொட்டிச் செடிகளுக்கு மேல்
நைலான் கொடியின் மீது உடைகளோடு காயப் போடுவதை
அவர்கள் உணர்வதில்லை

*****

நன்றி : ( உயிரோசை / உயிர்மை.காம் ) [ மார்ச் - 19 - 2012 ]

http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=5398

புதன், மார்ச் 28, 2012

கோட்டோவியமாகி..

*
திறந்து விடுதலின் மூலம் நிறைவேற்றுகிறாய்
எனது புறவழிச் சாலை மைல் கல்லின்
முதல் எண்ணைக் குறிப்பெடுக்கும் தருணத்தை

நம்பும்படியான வாக்குறுதிப் பட்டியலோடு
நீ அணுகும் அநேக நிமிடங்கள்

மஞ்சள் நிற அந்தி பூசிய கீழ்வான எல்லையில்
பெயர் அறியா பறவைகள்
தம் நிழலைக் கோட்டோவியமாக்கி
பறக்கச் செய்யும் கணமாகி சாகிறது

*****

நன்றி : ( உயிரோசை / உயிர்மை.காம் ) [ மார்ச் - 26 - 2012 ]

http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=5413

சொற்களை இழுத்துப் போகும் எறும்புகள்..

*
ஜன்னல் திரை விலகிய
நுண்ணிய கணத்தில்
கொஞ்சமாய் இந்த அறையினுள் நுழைந்துவிட்ட வானத்தை
என்ன செய்ய

சார்த்தி வைத்திருக்கும் வாசல் கதவின்
கீழ் இடுக்கு வழியே
எனது வார்த்தைகளைத் துண்டு துண்டுகளாக
இழுத்துப் போகும் அந்த எறும்புகளை
எப்படி அதட்ட

பிளாட்பாரத்தில் வளர்ந்திருக்கும்
கார்ப்பரேஷன் மரத்தின்
அடர்த்திக் கிளையிலிருந்து
சதா எதையாவது சொல்லித் திட்டிக் கொண்டிருக்கும்
அணில்களை எப்படி புரிய வைக்க

உங்கள் ஜன்னலுக்குள் அத்துமீறி
நுழைந்துவிட்டவன் நானென்று

******

நன்றி : ' நவீன விருட்சம் ' இணைய இதழ் [ மார்ச் - 30 - 2012 ]

http://www.navinavirutcham.blogspot.in/2012/03/blog-post_2625.html

புள்ளிகளுக்கு நடுவே..

*
இந்தப் பக்கம் வந்துவிடும்படி
கையசைக்கிறாய்
சட்டென்று அப்படி நிகழ்வது
ஒரு சிக்கலை உற்பத்தி செய்கிறது

தொடர்பு நிலையின் இருப்பக்கப் புள்ளிகளுக்கு நடுவே
நேரமற்று நிதானமின்மையோடு விரைகின்றன
அனைத்தும்

மிஞ்சி சூழும் புகையில்
துல்லியமற்று புலப்படுகிறது
அந்தக் கையசைப்பு

*****

நன்றி : ( உயிரோசை / உயிர்மை.காம் ) [ மார்ச் - 19 - 2012 ]

http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=5398

கொஞ்சமேனும்..

*
நிழல் துருத்தும்
சமன் சீரில் குளிர்ந்தத் துளியாகி
கீழிறங்குகிறாய் என் சரிவில்

அடிவாரச் சொற்களில் வீசும் வெயில் மீது
கொஞ்சமேனும் பூச முயல்கிறேன்
உன் நிறத்தை

மீண்டுமொரு தொடர்பு நுனி சிக்கித்
தலையசைகிறது துருத்தி நிழல் பிதுங்கும்
சிறுவாழ்வு

****

நன்றி : ( உயிரோசை / உயிர்மை.காம் ) [ மார்ச் - 12 - 2012 ]

http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=5376

முடிவற்ற ஒருவழிப் பாதை..

*
வயது என்ன
இத்தனை வருடங்கள்

என்னென்ன அனுபவங்கள்
இத்தனையித்தனை அனுபவங்கள்

இங்ஙனமே இந்த மொழியறிவு

கடந்து வந்த கோட்பாடுகள்
ஒவ்வொரு காலக்கட்டத்தின் மீதும் ஓர் அடுக்கு

தத்துவத் தரிசனங்களின் வீச்சு
அது முடிவற்ற ஒருவழிப் பாதை

துளைத்து உறுத்தும் கூர்முனைக் கொண்டவை
பதில்களைப் போன்றதொரு பதில்கள்..

ஒவ்வொரு அசைவிலும் வளையும் வாழ்வில்
ஸ்திரமாகி நெகிழும் கணங்களை
எங்கனம் கவ்விப் பிடிப்பது?
அதற்கொரு மொழியை விநியோகம் செய்பவன்
இதுவரைத் தட்டுப்படவில்லை

இத்தனைக் குறுக்குவெட்டுத் தோற்றங்களில்
ஒருவனும் இல்லை

' நான் சொல்றதைக் கேளு பாப்பா..
புரிஞ்சுக்கோ ப்ளீஸ் ' என்று கெஞ்சுகிறேன்

அனுபவங்கள்
மொழியறிவு
கோட்பாடுகள்
தத்துவத் தரிசனங்களின் ஏனைய அடுக்குகள்
யாவற்றையும்
தன் போக்கில் உடைத்துக் கொண்டிருக்கிறாள்
நெடுநேரமாய் தான்யா

*****

நன்றி : ( உயிரோசை / உயிர்மை.காம் ) [ மார்ச் - 12 - 2012]

http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=5376

உனது நதி..

*
நழுவிப் பிய்க்கிறாய்
என் தளிரை

வேர் ஊன்றும் வாய்ப்பில்லை
இந்தக் கரையில்

உனது நதியின் சலசலப்பில்
பதிவாகாமல் கரைகிறது அதன் அலறல்

*****

நன்றி : ( உயிரோசை / உயிர்மை.காம் ) [ மார்ச் - 5 - 2012 ]

http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=5357

அது உங்கள் கையிலிருக்கிறது..

*
எனக்கு விருப்பமில்லாத பட்டியலொன்றில்
நானிருக்கிறேன்
அது உங்கள் கையிலிருக்கிறது

ஒரு சம்பவத்துக்கும் மறு சம்பவத்துக்குமிடையில்
நீங்கள் பெயர் வரிசை மாற்றுகிறீர்கள்
அதன் ரகசிய தாழ் நீங்குதல் குறித்து
எனது இரவு கிறீச்சிடுகிறது

மீண்டும் மீண்டும் அதனை
வாசித்துக் காட்ட நேரும் ஒரு மேடையில்
ஒலிபெருக்கி வசதியற்று
உயர்ந்து கொண்டே போகிறது உங்கள் குரல்

ஓர் ஒப்பந்தத்துக்கான விவாதத்தை முன்னெடுக்க
உங்கள் நாற்காலி சமதிக்கவில்லை

காகிதங்கள் பறக்காமலிருக்க நீங்கள் வைத்திருக்கும்
பேப்பர் வெயிட்டுக்குள்
மெல்ல நுழைந்துக் கொண்டிருக்கிறது
பட்டியலிலிருந்து எனது பெயர்

*****

நன்றி : ( உயிரோசை / உயிர்மை.காம் ) [ மார்ச் - 5 - 2012]

http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=5357

உரையாடலின் நீர்க்கோடு..

*
சொற்கள் துழாவும் நீளச் சாலையில்
கரடுத் தட்டுகிறது இந்தப் பார்வை

வலுவான அர்த்தங்கள் பயணிக்கத் தயங்கும்
சுவரில் படர்கிறேன் பாசியென

என் மீது வழிந்திறங்கும் உரையாடலின் நீர்க்கோட்டில்
திரளும் கீழ்முனையில்
இப்போதும் குளிர்கிறாய் உறையப் போகும் எனது
தருணத்தை நோக்கி..

*****

நன்றி : ( உயிரோசை / உயிர்மை.காம் ) [ மார்ச் - 5 - 2012 ]

http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=5357

அபத்தக் கணத்தின் நிழல் அறை..

*
அபத்தக் கணத்தின் நிழல் அறையில்
காரைப் பெயர்ந்து கொஞ்சங்கொஞ்சமாய்
உதிர்ந்து கொண்டிருக்கிறது
என் நிரூபணம்

ஓசையற்ற மொழியின் வளைவுகளில்
துளிர்த்துத் திரளும் மௌனத் துளியொன்று
நழுவிச் சிதறுகிறது தனிமைச் சுவரில் பெருஞ்சத்தத்துடன்

அபத்தக் கணத்தின்
இந்நிழல் அறையில் எங்கிருந்தோ கசியும்
வெளிச்சப் புள்ளி கொணர்கிறது
ஓர் இசையின் கீற்றை

அதைத் தொட்டுணர நீளும் விரலில் கனக்கிறது
மற்றுமொரு நூற்றாண்டுத் தனிமை

*****

நன்றி : ( உயிரோசை / உயிர்மை.காம் ) [ மார்ச் - 5 - 2012 ]

http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=5357

கசந்து வெளியேறும் அர்த்தங்களின் மொழிபெயர்ப்பு..

*
நீ ஏன் அத்தனை இறுக்கத்துடன் பற்றிக் கொள்கிறாய்

நிறம் நிறமாய் உதிர்ந்து போகும் வாய்ப்புள்ள
ஒரு தொடர்பை

இரவைப் பூசிக் கொண்டே விடை தரும்
சொற்ப வெளிச்சத்தை

அறைச் சுவரில் இடையறாது
அசையும் புகைப்பட நிழலை

நடைபாதை ஈரத்தில் மிச்சமாகித் தேங்கிவிடும்
ஓர் எதிர்பாரா மழையின் அவசரத்தை

நிகழ்தல் என்பதின் ஆழத்தில்
மெல்ல இறங்க நேரும் அசௌகரியத்தை

கசந்து வெளியேறும் அர்த்தங்களின்
நீண்ட மொழிபெயர்ப்பை

அத்தனை இறுக்கத்துடன் சந்தர்ப்பங்களைப் பற்றிக் கொண்டு
விஷமேறும் பாசாங்குகளின் முகமூடிகளோடு
எந்த மேடையில் ஒளிந்து கொள்வாய்

*****

நன்றி : 'கீற்று' இணைய இதழ் [ மார்ச் - 28 - 2012 ]

http://www.keetru.com/index.php?option=com_content&view=article&act=section&id=19188&Itemid=139

கிழிபடாத காலண்டரின் தேதிகள்..

*
கிழிபடாத காலண்டரின் தேதிகள்
யாருமற்ற தனிமைச் சுவரில் மேலும் மேலும் அசைகிறது
சங்கேத ஒலிக் குறிப்புகளோடு

உதிர்க்கும் நள்ளிரவு
திசையற்றுப் பரவுகிறது இவ்வறையெங்கும்
மௌனத்தைக் கிளைத்தபடி..

*****

நன்றி : 'கீற்று' இணைய இதழ் [ மார்ச் - 24 - 2012 ]

http://www.keetru.com/index.php?option=com_content&view=article&act=section&id=19158&Itemid=139

ஒழுங்கற்ற வடிவங்கள்

*
தொட்டு விலகும் ஒரு ஸ்பரிசத்தில்
புதைத்து வைத்திருக்கிறாய் உனது ரகசியத்தை

வீரியம் பொங்கும் எளிய நம்பிக்கையில்
நீ எழுப்பும் சந்தேக நுனி
அதன் இறுதி வரைப் பயணிக்கிறது

எந்தவொரு குறுக்குத் தோற்றத்தையும் வார்க்காமல்
இந்தப் பகலிலிருந்து பிதுங்கும் வெயிலில்
ஒழுங்கற்ற வடிவங்கள் கொண்ட நிழல்கள்
பித்துப் பிடித்து அசைகின்றது

விருப்பமின்றி வீசும் வராண்டா காற்றில்
எப்போதும் சப்தங்கள் கும்மாளமிடும் தெருக் கூச்சலை
அழுந்த மிதித்து என்னைத் தொட்டு விலகும்
உனது ஸ்பரிசத்தில் புதைந்து கிடக்கிறது
ஒரு ரகசியம்

*****

நன்றி : 'கீற்று' இணைய இதழ் [ மார்ச் - 4 - 2012 ]

http://www.keetru.com/index.php?option=com_content&view=article&act=section&id=18831&Itemid=139