புதன், மார்ச் 28, 2012

அது உங்கள் கையிலிருக்கிறது..

*
எனக்கு விருப்பமில்லாத பட்டியலொன்றில்
நானிருக்கிறேன்
அது உங்கள் கையிலிருக்கிறது

ஒரு சம்பவத்துக்கும் மறு சம்பவத்துக்குமிடையில்
நீங்கள் பெயர் வரிசை மாற்றுகிறீர்கள்
அதன் ரகசிய தாழ் நீங்குதல் குறித்து
எனது இரவு கிறீச்சிடுகிறது

மீண்டும் மீண்டும் அதனை
வாசித்துக் காட்ட நேரும் ஒரு மேடையில்
ஒலிபெருக்கி வசதியற்று
உயர்ந்து கொண்டே போகிறது உங்கள் குரல்

ஓர் ஒப்பந்தத்துக்கான விவாதத்தை முன்னெடுக்க
உங்கள் நாற்காலி சமதிக்கவில்லை

காகிதங்கள் பறக்காமலிருக்க நீங்கள் வைத்திருக்கும்
பேப்பர் வெயிட்டுக்குள்
மெல்ல நுழைந்துக் கொண்டிருக்கிறது
பட்டியலிலிருந்து எனது பெயர்

*****

நன்றி : ( உயிரோசை / உயிர்மை.காம் ) [ மார்ச் - 5 - 2012]

http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=5357

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக