சனி, ஏப்ரல் 09, 2011

நெடுங்காலம்..

*
என் மரணத்தின்
நடு முதுகில்
நீ
இறக்கிய நங்கூரம்

நரம்பைத் துண்டித்து
துருவேறிக் கிடக்கிறது
ஆழத்தில்

****

காற்று உடைக்கும் விசும்பல் மூச்சு..

*
துர்மரணத்தின் பின் கதவு
ரகசியமாகத் தட்டப்படுகிறது

அது மரத்தாலானது
அதன் கெட்டித்துப் போன கடைசலில்
செதில்கள் சொரசொரத்துவிட்டன

தன்
மென் தட்டலில்
ஓசையெதுவும் கடத்துமெண்ணம்
ஏதுமில்லை

காற்று உடைக்கும் சிறிய இடுக்கில்
கசியும் ஒலியை
விசும்பல் மூச்சென
அர்த்தப்படுத்துக் கொள்ளும்

கனவு

துயரத்தின் மொழிபெயர்ப்பை
விடியலில் அடுக்கி வைக்கிறது
எழுது மேஜையில்..

******

நன்றி : ' திண்ணை ' இணைய இதழ் ( ஏப்ரல் - 25 - 2011 )

இருப்பின் நிலம்..

*
ஒரு
வேர்க்கடலையைப் போல்
தோற்றம் கொண்ட
இந்த தனிமையை
உடைக்கிறேன்..

அதனுள்
இரண்டு மௌன விதைகள்
உருள்கின்றது

என்
இருப்பின் நிலமெங்கும்
கட்டுக்கடங்காத
உன் வேர்கள்..

*****

நன்றி : ' திண்ணை ' இணைய இதழ் ( ஏப்ரல் - 18 - 2011 )

இரவு நெடுக..

*
தலையணைப் பூக்களில்
வாசம் நுகரும்
வண்ணத்துப் பூச்சியின் சிறகில்
காய்ந்து
பிசுபிசுக்கிறது

இரவு நெடுக
குறட்டையொலியோடு
வழிந்த
உதட்டு எச்சில்..

****

நன்றி : ' திண்ணை ' இணைய இதழ் ( ஏப்ரல் - 11 - 2011 )

வாசல் நிழல்..

*
வலிந்து கூற எதுவுமற்று
ஓடுகிறான்

துரத்தும் நிழல்கள்
துணை வருகின்றன
துர்க்கனவின்
அகன்ற வாசல் வரை

கால் பாவும் மென்மையில்
முளைக்கின்றன முட்கள்

ஒவ்வொன்றாய்
நீ
இப்போதும் விட்டுக் கொடுப்பதில்லை
எவர் பொருட்டும்

வலிந்து கூற எதுவுமற்று
திரும்பி வருகிறான்

உன்
துர்க்கனவின் வாசலை
திறந்து வை
அவனுக்குப் பின்னே
இப்போது நிழல்கள் இல்லை

*****

நன்றி : ' திண்ணை ' இணைய இதழ் ( ஏப்ரல் - 4 - 2011 )

திணறும் குளிர் இரவின் தனிமை..

*
தனித்த தீவின்
ரகசிய குகைக்குள் திரிவதாய்
சங்கேத குறியீடுகளை
மெயில் பண்ணியிருந்தாய்

கோடுகள் ஏறி இறங்கும்
ஒரு கை சித்திரத்தையும் இணைத்திருந்தாய்

திணறும் குளிர் இரவின்
தனிமைகள்
என்னை அலைக்கழிக்கின்றன

உலகின் குகைகள் பற்றின
மொத்த டவுன்லோடும் இந்த
மேஜை முழுதும் நிறைந்து பிதுங்குகிறது..

சென்ற வாரம்
நெஞ்சு கனத்து வலி குத்தி வியர்த்து
நினைவு தப்பி
ஐ.ஸி.யூ குளிரில் மல்லாந்து கிடந்தாய்..

உன் மகள் என்னிடம்
தந்த
உன் ஈ.ஸி.ஜி ரிப்போர்ட்டில்
ஏறி இறங்கிய கோடுகளில் நெளிந்தது
அந்த ரகசிய குகை..

******

நன்றி : ( உயிரோசை / உயிர்மை.காம் ) [ ஏப்ரல் - 18 - 2011 ] 


http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=4201

இதழ் விரிக்கும் பட்டாம்பூச்சிகள்..

*
அகாலத்தில்
மொக்குடையும்
கனவுகளின் வனத்தில்

பட்டாம்பூச்சிகள் பூத்து
சிரிக்கிறது

இதழ் விரிக்கும் மலர்கள்
பறந்து விடுகிறது

மகரந்தத் துகள்களை
ஒற்றியெடுக்கும்
உதடுகள்

முத்தங்களைப்
பறித்துக்
கொள்கின்றன

****

நன்றி : 'கீற்று' இணைய இதழ் [ ஏப்ரல் - 17 - 2011 ] 


http://www.keetru.com/index.php?option=com_content&view=article&act=section&id=14167&Itemid=139

கையேந்தி யாசகமாய்..

*
கருங் குருதியின் வழியே
நீளும் ஒற்றைப் பாதையோடு
பாதங்கள் பிய்ந்து விரல் நகம் உடைந்து
நிணம் ஒழுக
யாசகமாய் கையேந்தி கிடக்கிறது
நெடுங்காலமாய்
உன்
துரோகம்..

*****

நன்றி : 'கீற்று' இணைய இதழ் [ ஏப்ரல் - 14 - 2011 ] 


http://www.keetru.com/index.php?option=com_content&view=article&act=section&id=14125&Itemid=139

கல்லெறி வசவுகள்..

*
நீரலையில் நெளியும் கனவுகள் என
கரையோரம் நீண்டு வளர்ந்திருக்கிறது மனம்

கல்லெறிந்து விரியும் வளையங்களை ஒத்திருக்கிறது
நீ மூச்சு விடாமல் வீசும் வசவு

கோர்த்துக் கொள்ளவோ குலுக்கிக் கொள்ளவோ
நீள்வதாக இல்லை நட்பாக கைகள்

ஒவ்வொரு தனித்த இரவுகளின் அகாலத்தில்
கண்ணுக்குள் துரோக நிழலாய் படிந்து நகர்கின்றன
யாதொரு கோரிக்கைகளும் அற்று நம் தருணங்கள்

இன்னும்
விளக்கங்கள் எழுதிக் கொண்டிருப்பதாக
வழிப்போக்கன் ஒருவன் சொல்லிப் போகிறான்
உன் தகவலை

மறுக்கும் நிதானமிழந்து சரிவில் உருள்கிறது
வடிவம் பெரும் நோக்கமற்ற இந்த மௌனம்

சொல்லின் செதில்கள் மூச்சு விடுகின்றன
அழுத்தும் அர்த்தங்களின் பிராணவாயுவை
உள்ளிழுத்தபடி..

கரையோரம் நீண்டு வளர்ந்திருக்கிறது மனம்

******

நன்றி : 'கீற்று' இணைய இதழ் [ ஏப்ரல் - 12 - 2011 ] 


http://www.keetru.com/index.php?option=com_content&view=article&act=section&id=14107&Itemid=139

காகிதந்தின்னிப் புழுக்கள்..

*
தந்திரங்களை அடுக்கி
துளையிட்டுக் கோர்த்து
கையெழுத்துக்கென  நீட்டுகிறீர்கள்

வாசிக்க வாசிக்க அவிழும்
புதிர் சிடுக்குகளிலிருந்து
உதிர்ந்து ஓடுகின்றன
காகிதந்தின்னிப் புழுக்கள்

கைக் கட்டி பவிசாய் நிற்கும்
உங்கள் மௌனம்
தன் குளிர் கண்ணாடியை சரி செய்துக் கொள்கிறது

வீசாதக் காற்றின் கொப்புளங்கள்
முகமெங்கும் புடைப்பதில்

இந்த அலுவலகத்தின்
மின்விசிறி பிம்பம்
சலனமற்று கைவிரித்துத்
தொங்குகிறது
உங்கள் பவ்யத்தைப் போலவே
போலியாக

*****

நன்றி : ( உயிரோசை / உயிர்மை.காம் ) [ ஏப்ரல் - 4 - 2011 ] 


http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=4165