சனி, ஏப்ரல் 09, 2011

கல்லெறி வசவுகள்..

*
நீரலையில் நெளியும் கனவுகள் என
கரையோரம் நீண்டு வளர்ந்திருக்கிறது மனம்

கல்லெறிந்து விரியும் வளையங்களை ஒத்திருக்கிறது
நீ மூச்சு விடாமல் வீசும் வசவு

கோர்த்துக் கொள்ளவோ குலுக்கிக் கொள்ளவோ
நீள்வதாக இல்லை நட்பாக கைகள்

ஒவ்வொரு தனித்த இரவுகளின் அகாலத்தில்
கண்ணுக்குள் துரோக நிழலாய் படிந்து நகர்கின்றன
யாதொரு கோரிக்கைகளும் அற்று நம் தருணங்கள்

இன்னும்
விளக்கங்கள் எழுதிக் கொண்டிருப்பதாக
வழிப்போக்கன் ஒருவன் சொல்லிப் போகிறான்
உன் தகவலை

மறுக்கும் நிதானமிழந்து சரிவில் உருள்கிறது
வடிவம் பெரும் நோக்கமற்ற இந்த மௌனம்

சொல்லின் செதில்கள் மூச்சு விடுகின்றன
அழுத்தும் அர்த்தங்களின் பிராணவாயுவை
உள்ளிழுத்தபடி..

கரையோரம் நீண்டு வளர்ந்திருக்கிறது மனம்

******

நன்றி : 'கீற்று' இணைய இதழ் [ ஏப்ரல் - 12 - 2011 ] 


http://www.keetru.com/index.php?option=com_content&view=article&act=section&id=14107&Itemid=139

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக