ஞாயிறு, பிப்ரவரி 28, 2010

மையத்தில்..அமிழும் கனப்பொருள்..

*

நம் தீர்மானங்களை
மறுதலிப்பதற்கான
சந்தர்ப்பமொன்று வாய்த்தபோது
ஒரு புன்னகையை
நாம் வரைய நேர்ந்தது.

நடைப்பழகும்
நினைவுகளின் சுண்டு விரல்
பற்றுதலுக்குரிய வளைவுகளுடன்
வளரவில்லை.

ஒரு
கணம் தயங்கி..
பின் உருளும் கண்ணீர்த் துளியை..
இதயம் சுண்டியதாக
எப்படிச் சொல்லுவது?

நீரின் அலை வளையங்கள்..
கரைகளை
விரும்பி அடைகின்றன..
என்பதாக..
நினைத்தபடியே மூழ்கிவிடுகிறது..
மையத்தில்..அமிழும் கனப்பொருள்..!

கண்ணீர்த்துளி..
மையத்தில் அமிழும் கனப்பொருள்..
சுண்டுவிரல்..

இவைகளைத் தொட்டுத் தான்..
ஒரு புன்னகையை
நம்மால் வரைய நேர்கிறது..

****

நன்றி : ( உயிரோசை / உயிர்மை .காம் ) பிப்பிரவரி - 2010

http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=2556

முன்னெப்போதோ தொலைத்துவிட்ட பருவம்..

*

முகங்களைக் கிழிக்கின்றன
தசைப் புதிர்கள்..
காலம் எழுதிய நுண்ணிய வரிகளில்
சுருங்கி மடிகின்றன
சொல்லவே படாத கணங்கள்..

தளர்வுற்ற நடையை
மொழிப்பெயர்த்து
தெருவெங்கும் எழுதி நகர்கின்றன
அடிப் பாதங்கள்..

மரியாதை நிமித்தம்
கை கூப்பும் எதிர் மனிதர்களை
அடையாளம் காண..
புருவங்களின் மேல் தாற்காலிகக் கூரையொன்று
வேயும் உள்ளங்கை நிழலுக்குள்
அசையக் கூடும்
முன்னெப்போதோ தொலைத்துவிட்ட பருவம்..

கடந்து போகும்
வெயிலோ தென்றலோ..
கூர் மழுங்கி ஊடுருவுவது
தசைப் புதிர்களின் அறியப்படாத
வரிவடிவங்களையும்..
அவை புள்ளியிட மறந்த.. வெற்றிடங்களையும்..

****

நன்றி : ' உன்னதம் ' மாத இதழ் - ( பிப்பிரவரி - 2010 )

குழிந்திருக்கும் கருந்துளையின் வெப்பம்..

*

ஒற்றை வீட்டின் நடைக் கதவு கடந்த
மஞ்சள் நிறப் பாதையில்
இரு மருங்கிலும்
தலையசைத்து சிவந்து சிரிக்கும் செம்பருத்திப் பூக்கள்..

வருடும் விரலிடுக்கில்
பிசுப்பிசுக்கின்றன
ரத்தத்தின் நிண ஈரம்..

சீமை ஓடு அடுக்கிய வீட்டின் கூரை மேல்
பெயர் தெரியா காட்டுக் கொடியொன்று படர்ந்து..
வீட்டை விட்டு விட மனமற்று
இறுக்கிப் பிடித்திருந்தது..

அதில் வாழ்ந்த மனிதர்களின்
ஓலங்களையும் சிரிப்பொலிகளையும்
முரண் எதிர் கோட்பாடுகளின்
சங்கமிப்பென..
சுவர்களில் துளைத்த புல்லட் குழிகளில்
உணவுகளைப் பதுக்குகின்றன
எறும்புக் கூட்டங்கள்..

மழைக்காலம்
பூக்கள் வளர்க்கின்றன
எறும்புகள் பிழைக்கின்றன.

மனிதர்கள்..
முட்கம்பிகளுக்கு அப்பால்..

ரத்தத்தின் நிண ஈரம்
பிசுப்பிசுக்க
விரலிடுக்கில் வாழ்வை நெருடியபடி..

துப்பாக்கிகளின் வாய்களில்
குழிந்திருக்கும்
கருந்துளையின் வெப்பம்..
உடலெங்கும் ஊற..
இரவைக் கடக்கும் மனதை..
மௌனமாய் வழியனுப்பி வைக்கின்றனர்
நம்பிக்கையற்ற காலணிகளை..
பிஞ்சுகளின் கால்களில் அவசரமாய்ப் பொருத்தி..!

****

நன்றி : ' உன்னதம் ' மாத இதழ் - ( பிப்பிரவரி 2010 )

பெரு மழைக்கு அல்ல..!

*

உள்ளங்கை பொதிக்குள்
பத்திரமாய் உறங்கும் குழந்தைகளின்
செவிகள் சேகரிக்கின்றன..

தூரத்து கரைகளில்
வெடித்து அடங்கும் குண்டுகளின்
சப்தங்களை..

உயிர்களை துளையிட்டு
புதையும் துப்பாக்கி ரவைகளை
பிடுங்கி எரியும் வல்லமை
இனி எந்த விரல்கள் பெறுமோ
அறியோம்..

நம்பிக்கையோடு தாங்கி சுமக்கிறோம்
பூமிக்கு வருகை தந்திருக்கும்
ஒவ்வொரு ராஜக்குமாரியையும்..
மௌனமாய் விழி உருட்டி
கருகிய மரங்களின் இலைகளை உள்வாங்கி
பதியும் ராஜக்குமாரன்களையும்..

வேலிகளுக்கு வெளியே
பூத்துவிடுதல் குறித்து..

ராணுவ பூட்சுகளின் கால்மிதி
சகதிகளுக்கு கீழே..
ஆழத்தில்..
புதையுண்டு கிடக்கின்றன விதைகள்..

அவற்றுக்கு உரமாய் ஆகிப் போயினர்
என் சகோதர சகோதரிகள்..

நாங்கள் காத்திருப்பது
பெரு மழைக்கு அல்ல..
சிறு தூறலுக்கு..!

****

நன்றி : ' வார்ப்பு ' இணைய இதழ் - ( பிப்பிரவரி - 25 - 2010 )

http://www.vaarppu.com/view/2099/

தெளிவற்ற காட்சி என்னும் குற்றச்சாட்டோடு..புலம்ப நேரிடலாம்..!

*

புதையும் கனவின் ஈரச் சகதிக்குள்..
கால்களை மீட்டுக் கொள்வதான
பிரயத்தனங்களோடு முனகத் தொடங்கியது
ஒரு காட்சி..

வண்ணங்களைத் தேடி அலையும்
வேட்டை எனவும்..
அசைவுகளின் பதிவுகளை சுரண்டிப் பார்க்கும்
ஆவல் எனவும்..
வழித் தவறுதலுக்குரிய
காரணங்களைப் பக்கவாட்டு மரங்களில்
கிறுக்கி வைக்கிறது..

தெளிவற்ற காட்சி என்னும் குற்றச்சாட்டோடு
புலம்ப நேரிடலாம்
படுக்கையிலிருந்து அலறியோ மருண்டோ
விழிக்கும் கணத்தில்..

இவைகளைத் திட்டமிட்டு
வாழ்வின் நொடிப்பொழுதுகளில் என்னிடம்
அனுப்பி வைக்கும் தருணங்களைக்
கைது செய்துவிடப் போவதாக

அனுமதி கேட்டு அரசாங்க வரிசைகளில்
நிற்பதற்கான தீர்மானத்தோடு..

கழிவறைக் கண்ணாடி முன் நின்றபடி..
பற்களை சோதித்து
பற்பசை பிதுக்கியபோது..

கால்களை மீடுக்கொள்வதற்கான
பிரயத்தனங்களோடு முனகத் தொடங்கும்
ஒரு காட்சி..
கண்ணாடியின் பாதரசக் குழம்பென
வழிந்து..உருகி..
சட்டென ஆவியாகி மறைந்தது..!

****

நன்றி : ' வார்ப்பு ' இணைய இதழ் - ( பிப்பிரவரி - 25 - 2010 )

http://www.vaarppu.com/view/2099/

மேகங்களென தவழ்ந்து விலகும் நிழல்கள்..

*

வயோதிகத்தின்
முன்மாலை வர்ணங்களை
இரவுகள் வழங்குகின்றன

நடைப்பயணம் போலக் கடந்து
வந்த வாழ்வின் பாதையில்..
மீதமாகி விடுகிறது
கொஞ்சம் மேகங்களென
தவழ்ந்து விலகும் மரணத்தின் நிழல்கள்..

அவைகளைக் கையகப்படுத்தும்
தீர்மானங்களை
பகிர்ந்து கொள்ளும்
ஒரு பார்வை
ஒவ்வொருத்தருக்கும் வாய்த்திருக்கக் கூடும்..

நரை முடியின் சாம்பல் நிறங்களில்..
காலம் குழைத்த அந்தியின் கரைசல்
புறவாசலில்..
வேலிக்காத்தான் செடியின்
வேர்களில் புரையோடியிருக்கலாம்..

சலசலப்போடு
நெளிந்தோடும் நதியின்
நீர்க் குமிழ்களில் உடைந்துமிருக்கலாம்..!

****

இருண்ட உலகின் ரகசிய பின் கதவு..

*

அணிலொன்று..
என் புத்தக அலமாரிக்குள்
போவதும் வருவதுமாக
இருந்தது..

அணிலுக்கான
நூலகமாக மாறிவிட்ட
புத்தக அலமாரி..
அதன் ' கீச் - கீச் ' சப்தங்களை
மௌனமாய் சேமிக்கத் தொடங்கியது..

மூன்று இரவுகள் கடந்த
நான்காம் இரவில்..
புதிய குரல்கள் கேட்கத் தொடங்கின..

உயரமான மேல் தட்டில்..
தடிமனாய் இருந்த
' குற்றமும் தண்டனையும் '
புத்தகத்தின் பின்னால்..

மூன்று பிஞ்சு அணில்களின் சன்னக் குரலும்
தாய் அணிலின் மருண்ட பார்வையும்..
தாஸ்தயேவ்ஸ்கியின் இருண்ட உலகின் பின் கதவை
என் புத்தக அலமாரியில்
திறந்து வைத்த ரகசியத்தை..

யாரிடமும் நான் சொல்லப் போவதில்லை..!

****

என் கனவின் கதவு முழுவதும்.. உன் உள்ளங்கை ரேகைகள்..!

*

என் கனவாகி விடுதலில்..
நீ பரவசமடைகிறாய்

ஒவ்வொரு சந்திப்பிலும்
ஒரு கனவை
உனக்கு பரிசளித்துவிட நிர்ப்பந்திக்கிறாய்..

கனவு வராத நாட்களில்..
என்
இரவையே கனவாய் புனைய நேர்கிறது..

நாளை சொல்லவேண்டிய கனவுக்காக..
தூக்கம் இழந்து..
விசித்திர அவஸ்தையில் தவிக்கிறேன்..

எப்போதும்..
விடியும்போது ஒரு கனவு
என்னிடம் தயாராக இருப்பதற்கான
உத்தரவாதத்துடன் ..
நீ
'குட் -நைட்' மெசேஜ் அனுப்பிவிட்டு
உறங்கிவிடுகிறாய்..

இரண்டு நாள் விடுமுறையில்
நீ
ஊருக்கு போன நிம்மதியில்..

நான் தூங்கிய
ஒரு இரவில்..

இத்தனை நாளும் அடைபட்டுக் கிடந்த
என் கனவின் கதவு முழுவதும்..
நீ
தட்டித் தட்டிப் பதிந்த
உன் உள்ளங்கை ரேகைகள்..
இந்தப் படுக்கை முழுவதும் படரத் தொடங்குகிறது..!

****

' இப்படித்தான்..ஒரு முறை..'

*

' இப்படித் தான் ஒரு முறை ' - என்று
ஆரம்பமாகும் கதைகளிலெல்லாம்..

யாரோ காயப்படுகிறார்கள்..
ஒரு அந்தரங்கம் பறிபோகிறது..
கொடுக்கப்பட்ட ஒரு வாக்குறுதி மீறப்படுகிறது..
தெரியவா போகிறது - என்னும் பொறுப்பின்மை
விநியோகம் ஆகிறது..

' இப்படித் தான் ஒரு முறை ' - என்று
ஆரம்பமாகும் கதைகள்..

சொல்லப்படும் இடத்திலிருந்து
பெற்றுக் கொள்கிறது..
சாயல்களை உடைய மேலும் சில கதைகளை..

ஜோடிப்பு அலங்காரத்தோடு மேலும் சில
நிஜமற்ற வர்ணங்களை பூசுகிறது..

வெடிச் சிரிப்பும்..நக்கலும் நையாண்டியும்
கலந்து கலந்தே.. ரகசியங்களைக் கொடுத்து
ரகசியங்களை பெற்றுக் கொள்கிறது..

' இப்படித் தான் ஒரு முறை..' - என்று
ஆரம்பமாகும் கதைகளுக்குள்..

ஒளிந்து கொள்கிறது
கேட்பவர்களுக்கே தெரியாமல்..
கேட்பவர்களின் கதைகளும்..

இப்படித் தான் ஆரம்பமாகும்
ஒவ்வொரு கதையும்..

*****

பட்டாம்பூச்சியின் வர்ணங்களோடு ஒரு காதல் காட்சி..

*

ஒரு மென்மைத் தொடுதலில்
என் துக்கம் பொடித்து உதிர்கிறது..
உன் கைகளுக்குள்
என் கைகள் தஞ்சமடையும்போது
என் கால்கள் துவளுகின்றன..

நினைவுப்படுத்திப் பார்ப்பதற்குரிய
தொலைவை..
நீ
என்னிடமிருந்து பறித்து
ஆகாயத்தில் வீசிவிடுகிறாய்..

சிறிதளவே வளையும்
உன் புன்னகை முனையில்..
என் காதலுக்கான இடத்தை
அழகாய் குறிப்புனர்த்துகிறாய்..

என் துக்கங்கள் எனது பாதையில்
பதியனிடப்படவில்லை..
அவை..
எங்கோ தூரக் காட்டுக்குள் தூவப்பட்டுவிட்டது..

ஒரு கலசத்தை போல
நீ என்னை ஏந்துகின்றாய்..
என் கை வலையல்களுக்குள்
உன் ஆட்காட்டி விரல் நுழைத்து உயர்த்துகிறாய்..

புருவம் வளைய
என்ன..? என்பதாக சிரிக்கிறாய்..

நான் தலையசைத்து..
உன் தோள்களில் சாய்ந்து கொண்டபோது..
பட்டாம்பூச்சிகளின்
வர்ண சிறகுகள்
என் நினைவுக்கு வந்தன..!

****

பிரதிகள் பதிவு செய்யும் மனிதன்..

*

பிரதிகளில் நிகழ்கின்றது
தருணங்களின்
அலைபாய்தல்..

முடிச்சிட்டுக் கொள்கின்றன
பிணைப் பின்னலென கணங்கள்..

இன்னல்களின் ஆழ வேர்களில்..
விடுபடுவதில்லை..
நிஜங்களின் சாயல்களோ
சொல்லப்பட்டதாகத் தூண்டும்
யதார்த்தங்களோ..

பிரதிகள் பதிவு செய்கின்றன..
மனிதனின்..
குறைந்தபட்ச வாழ்வை..
சற்றேறக் குறைய மிகைப்படுத்தி..

***

உள்ளூர் ' கேயாஸ் தியரியும் ' ஒரு சுழல் காற்றும்..

*

சின்னஞ் சிறிய
சுழல் காற்றொன்று..
மின் விளக்கு கம்பத்துக்கு அருகே..
குப்பைகளை சுழற்றிக்கொண்டு
ஒத்திகை பார்க்கிறது..

நாயொன்று
மோப்பம் பிடித்தபடி
கிளரும் குப்பைத் தொட்டிக்குள்
பதற்றத்தோடும் கிடைக்கக்கூடும்
கொஞ்சம் குப்பைகள்..

ஒத்திகையின் அரங்கேற்றத்தை
செய்தியாக்கும்
பத்திரிகையாளன்
டீ கடையில்...
சிகரட் பிடித்தபடி
செல்போனில் யாரோடோ
பேசிக் கொண்டிருக்கிறான்..

'கேயாஸ் தியரி ' - பற்றின
ஆராய்ச்சியில்..
எங்கோ ஒரு அறிவியலாளன்
தலை மயிரை பிய்த்துக் கொண்டிருக்கலாம்..

கணங்களின் அற்புதங்களை..
கவிதையாக்கிக் கொண்டிருக்கிறேன்
நான்..!

****

பார்வைத் தூண்டிலிட்டு காத்துக்கிடக்கிறாய்..

*

நீ தேடும் நீ என்பவன் நீயல்ல..
நீ
இங்கு தூங்கி..
வேறெங்கோ தான் எழுகிறாய்

எத்தனை முறை சொன்னாலும்
அடம் பிடிக்கிறாய்
நம்பிக்கை அற்று
பிடி நழுவுகிறாய்

என் கண்களுக்குள் விழுந்து
தொலைந்த கனவொன்றை
பார்வைத் தூண்டிலிட்டு..
சிக்குமென்று காத்துக் கிடக்கிறாய்..
யுகம் யுகமாய்..!

நீ தேடும் நீ என்பது நீயல்ல..

****

தயக்கங்கள் கொண்டு..ஒரு பார்வை அளத்தல்..

*

கனத்த மரக்கதவுக்கு
பின்னிருந்து
எட்டி பார்க்கிறது
ஒற்றைக் கண் மட்டும் காட்டி
ஒரு பூனை..

தெருவைக் கடக்க வேண்டிய
தயக்கங்களைக் கொண்டு
என் பார்வையை அளக்கிறது..

இயல்பாய்
திரும்பிக் கொண்டாலும்..
சந்தேக விலகலற்று ஒரு தீர்க்க நோக்கு..

மீசை நுனி நெருடலோடு..
ஒரு பதுங்கல்..

முகத்தின் ஒரு பாதியில்..
ஒற்றைக் கண் தரிசனம்..

ஒரு அசந்தர்ப்ப இடைவெளியில்..
தெருவை விருட்டென்று
கடந்த அதன் வேகத்தில்..

காண நேர்ந்தது..
புடைத்திருந்த வயிற்றில்
சிறு சிறு உருளையென குட்டித் தலைகள்..

மீண்டும் தயக்கங்கள் கொண்டு
ஒரு பார்வை அளத்தல்..!

****

பொம்மை ஷூ..

*

குழந்தையின்
பிஞ்சு பாதங்களை..
அழுத்தி அழுத்தி சப்தமிடுகிறது..
பொம்மை ஷூ..

பதட்டத்தில்..
வேகமாக ஓடும் குழந்தைக்கு
புரிவதில்லை..

எப்படி இதை அப்பாவிடம்
சொல்வதென்று..!

****

ரசாயனக் கூடத்தில் மிதக்கும் புன்னகை..

*

ஒவ்வொரு முறையும்
மயக்கங் கொள்ள செய்கிறாய்..

புன்னகையில்
ரசாயனக் கூடம் வைத்திருக்கிறாய்..

விழியோரக் கணங்களில்
மின்னல் குறுக்கிடுகிறது

மழை பொழிவதற்கு முன்பே
குடை விரித்துவிடுகிறாய்

பூக்களின் இதழ்களில்
இதழ் பதித்து மீள்கிறாய்
தேன் துளிகள் ஆவியாகின்றன

மௌனத்தை காம்போடு
கூந்தலில் செருகிக் கொள்கிறாய்..

உன் கொலுசு ஒலியால்
தினம் அந்தத் தெருவின்
இயக்கங்கள் ஸ்தம்பிக்கின்றன..

ஒன்று
நினைவில் கொள்
என்னைக் கடக்கும்போது மட்டும்
என்னையும் சேர்த்தே கடத்தி போகிறாய்..!

****

பிரம்மாண்ட நிழல்களின் நிமிடங்கள்..

*

காத்திருந்த நிமிடங்களின்
பிரம்மாண்ட நிழல்..
கண் முன்
காலடியில் நகர்கிறது..

கடந்து போகும்
பிற மனிதர்களின் நிழல்களோடு
அவை சிநேகம் கொள்ள திரும்புகின்றன..

விரைதலின் வேகத்தில்..
தொடுதலோ..
ஒரு கை குலுக்கலோ
சாத்தியப் படவில்லை..
என் நிழல்களுக்கு..

ஏமாற்றங்களுடன்
அவை..
என்னையே வெறிக்கின்றன..

காத்திருக்கும் நிமிடங்களின்
பிரம்மாண்ட நிழல்கள்.. குறுகி போய்..
இப்போது
என்னருகே தான் அமர்ந்திருக்கின்றன
என்னை போலவே..

****

நீ - நான் - மற்றும் அவள் சாயல்கள்..

*

ஓடி வந்து ஏறியதில்
வாங்கிய மூச்சில்..
அவள்
உன் சாயலை ஒத்திருந்தாள்

பேருந்தின்
உள் நெரிசலில்..
உருவாகும் காலைநேரக் கசகசப்பை
அவள் முகம்
அசூயைக் காட்டியதில்
அவள்
என் சாயலை ஒத்திருந்தாள்

சீரற்ற ஓட்டத்தின்
ஜன்னல் வழிக் காற்றை
கொஞ்சமாய் ஏந்தியபடி..
' உஸ்..உஸ்..' - என்று
அனுபவித்ததில்
அவள்
உன் சாயலை ஒத்திருக்கிறாள்

பயணச்சீட்டுக்கான
சில்லறைகளை
கைக்குள் பத்திரமாய்
பொத்தி வைத்திருந்த லாவகத்தில்
அவள்
என் சாயலை ஒத்திருக்கிறாள்

ஆசுவாசத்திற்கு பிறகு
தன் வலது காதோரம் ஒதுங்கும்
கற்றைக் குழல் நறுவிசில்
அவள்
அவளாகவே தோற்றமளிக்கிறாள்

தன் நிறுத்தத்தில் இறங்க முனைந்ததில்
குறுக்கே நின்ற மனிதனை..

' எருமை மாதிரி நிக்கறியே..
லேடீஸ் வர்றாங்கல்ல.. ஒத்து..! ' - என்றபோது

அவள் ஒத்திருக்கவில்லை..
உன் சாயலையோ
என் சாயலையோ..!

****

உன் வாசல் தொட்டுத் திரும்பும்..ஒரு பனிக்காற்று

*

எனது கவன ஈர்ப்பு விசையில்
சிக்கிக் கொள்ளாமல்
நழுவும் சாதுரியம்
கை வரப் பெற்றிருக்கிறாய்

நீண்டுயர்ந்த
மௌனத்தின் அடிவாரத்தில்
பொடி எழுத்தில்
புன்னகை எழுதுகிறாய்

உன்
இரவின் வாசலைத்
தொட்டுத் திரும்பும்
ஒரு பனிக்காற்றைப் போல

வெண்மைத் துகள்களாய்
உறைந்து உதிர்கிறேன்

உனது
வீட்டுக்கும் சாலைக்குமிடையிலான
சிறிய புல்வெளிப் பாதையில்..

மல்லிகைப் பந்தலில்
மலர்கள் கொய்யும் காலை வெய்யிலில்..
உணர்ந்து கொள்..

உன் உள்ளங்காலில்..
சில்லிட்டு கரையக்கூடும்
என் மனதென்று..!

****

பிடிமானம் இழந்து வெளியேறும்..பார்வையின் நிழல்..

*

மதுக்குடுவையின்
கழுத்து வளைவுக்குள்
தளும்புகிறது அவன் புலம்பல்

நுரைத்தபடி வழிவதன்
நெடியில்..
துக்கத்தின் பிசுபிசுப்பால்
குமட்டுகிறது
அவன் உளறல்

நடுங்கும் விரல்களுக்குள்
வழுக்குதளோடு உருள்கிறது
கண்ணாடி டம்ளர்

பிடிமானம் இழந்து தவிக்கும்
பார்வையின் நிழல்கள்
பின்னிரவு நாற்றங்களோடு

அமைதியாக வெளியேறுகிறது
இதயத்தின் கூட்டிலிருந்து..

****

நிறங்களை இழக்கத் தூண்டும் சொற்கள்..!

*

கனன்று சிவந்த கண்கள்
காட்சிகளைப் புறக்கணிக்கின்றன..

சமாதானம் பேச யத்தனித்த
நாவுகளில்..
பொய்களின் நிறம் மஞ்சளென
பூசப்படுகிறது

முற்றிலும் நிராகரிப்பது
சாத்தியமில்லை என்பதை
யதார்த்த குடுவையில்
கரைக்கிறது நீல வண்ணத்துகள்..

பசலைப் படர்வு
உணர்வுகளின் அடிவயிற்றில்
புதைப்படுவதை..

நரம்புகள் அரை மனதோடு
ஒத்துக் கொள்கின்றன
பச்சையென..!

****

சட்டென பறிபோன பார்வை..

*

சொல்லியபடியே இருந்தார்கள்
கல்விக் கண் ஒன்றே
அறிவுலகின் வாசல் என..

அறியாமை இருளிலிருந்து
கிழித்துப் புறப்பட்ட
உயரழுத்த வோல்ட்டேஜ்
மின்னலொன்று..

சட்டென பறித்துவிட்டது
பார்வையை..

தடியூன்றி நடக்கும்படி
உத்தரவொன்று..
பிரகடன செய்யப்பட்டதோடல்லாமல்..

இதரச் சலுகைகளும் பெறலாம்..
என்பதாக
வந்து சேர்ந்த அறிவிப்பில்..

தத்தி தத்தி நடக்க நேர்ந்தது..
சமூகச் சாலையில்..

நல்ல டிராபிக்..!

****

மீதி சரித்திரம்..!

*

குத்து வாளின்..
கைப்பிடி அலங்காரத்தில்..
உறைந்த புள்ளிகளென
ரத்தத் துளிகளை
சேமித்து வைத்திருக்கிறது..
சரித்திரம்..

புருவம் உயர்த்தும்
ஆச்சரியங்களோடு..
அகழ்ந்தபடி..
பத்திரப்படுத்துகிறோம்..

வந்து போவோர்
பார்வைக்கு ஏதுவாய்..

கண்ணாடிப் பேழைக்குள்..!

****

மேல்தளத்தின் மூன்றாம் அறை - ஒரு சமோசா - மற்றும் ஒரு கவிதை..

*

' உன்னை
நீக்கி விடும்படி கெஞ்சுகிறாய்..

பட்டியலிடும் பொறுப்பை
நேற்றே கை மாற்றிவிட்டேன்..

மேல் தளத்தில்..
மூன்றாம் அறையில்
தொகுத்துக் கொண்டிருக்கும்
பொறுப்பாசிரியனைப் போய் பார்..!

நானிப்போது
சொகுசாக.. சமோசா சாப்பிடவேண்டும்.. '

சொல்லவொனாத் துயரம் தாங்கி..
என்
மேஜையினின்றும்..கீழிறங்கி
மௌனமாய் வெளியேறுகிறது..

அந்தக் கவிதை..!

****

மெட்ரோ கவிதைகள் - 43

*
கான்க்ரீட் இழைந்த
மொட்டை மாடியில்

அகன்ற பிளாஸ்டிக் குவளையுள்
ஊற்றி வைத்த
குழாய் தண்ணீரில்
வெயில் தளும்பிக்கொண்டிருந்தது..

நா வறண்டு
விருட்டென்று.. வந்ததன் விளிம்பில்
கால்பற்றி உட்கார்ந்த காகம்..

அவசரமாய்
பருகிப் பறந்தது..
தளும்பிய வெயிலை..!

****

அறை நெடுக..கோடு கிழிக்கும் மொழிக் கூர்..

*

படிமத் துகள் சுழலைத்
தாங்கிப் பிடிக்கிறது
ஜன்னல் துளையூடே
உட்புகும்
நெடுங்குழல் வெயில்..

அறை நெடுக
மொழிக் கூர் கொண்டு
கோடு கிழிக்கத் தொடங்குகிறது

இதுவரை..
யாரும்
எழுதியறியாத் தலைப்பொன்று..!

****

சந்தர்ப்பவாதங்களை அடுக்கிக் கொண்டிருக்கும் ஒற்றைப் பகல்..

*

சந்தர்ப்பவாதங்களை
அடுக்கிக் கொண்டிருந்த
ஒற்றைப் பகலொன்றின் நிழலில்
காத்திருக்க நேர்ந்தது

மௌனத்தை உதறியபடி
நெருங்கி வந்த
தருணங்களை உனதென்று
வாதிடுகிறாய்..

முடிவுகளற்ற சாட்சியங்களின்
கோப்புகளை
மொத்தமாய் சமர்ப்பிக்கிறாய்..

சரிப்பார்ப்பதற்கான
இரவுகளை உமிழும்
மேஜை விளக்குகள்
மின்னிழைக் கம்பிகளின் ஒளிர்தலில்..
கண்ணெரிந்து அவிகின்றன

ஒரு நேர்க்கோட்டின்
இருமுனைப் புள்ளிகளும்
விலகியிருத்தலே
கோடுகளின் சாத்தியத்தை
உருவாக்கக் கூடும்..

நீ உனதெனவும்
நான் எனதெனவும்

பகிர முடியாக் காரணங்களை
தத்தம் அறைகளினின்றி
துரத்தியடிப்பதில்

ஒரு குறுகியக் கால
வெற்றி
இருவருக்குமே வழங்குப்படும்..

அதுவரை -

சந்தர்ப்பவாதங்களை
அடுக்கிக் கொண்டிருக்கும்
ஒற்றைப் பகலோன்றின்
நிழலில்
காத்திருக்க நேர்வதொன்றும்
தப்பில்லை

****

நன்றி : ( உயிரோசை / உயிர்ம்மை .காம் ) பிப்பிரவரி - 2010

http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=2531

நடைப் பழகக் காத்திருக்கும் இரவு..!

*

மரண ஊர்வலத்தின்
கடைசி மனிதனாக

என்
மௌனங்களோடு
நடைப் பழகவே..

தடியூன்றிக் காத்திருக்கிறது
என்
ஒவ்வொரு இரவும்..

****

உதடுகளை முத்தமிடும் மழைச் சாரல்..

*

மழைச் சாரல்கள்
உன்
உதடுகளை முத்தமிடுவதை
தடுக்க வழியற்று..

முறைப்புடன்
குறுக்கே நீண்டு நிற்கின்றன..

பேருந்தின்
ஜன்னலோரக் கம்பிகள்..!

****

விளிம்பு நோக்கி நகரும் மையமும்..உலோகச் சுருள் இழையும்..

*
உருகும் சொற்களின் வார்ப்பென
உலோகச் சுருள் இழைகள்
கூர் ஓரங்களைக் கொண்டு
கவனப் பிசகாகி..

எழுதும்
விரல் ரேகையைக் கிழிக்கக்கூடும்..

கவிதைப் பட்டறையில்
கனன்று கொதிக்கும்
உருக்கு நெருப்பின் துருத்தியொன்று
சுவாசமென
விம்மிப் புடைக்கிறது
ஒவ்வொரு முறை
மையத்தை விளிம்பு நோக்கி நகர்த்தும்போது..!

****

நன்றி : ' கீற்று ' இணைய இதழ் - ( பிப்பிரவரி - 26 - 2010 )

http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=4259:2010-02-26-04-25-38&catid=2:poems&Itemid=88

முன்னறிவிப்பின் பழுத்த மஞ்சள் நிறம்..!

*

மரணித்து விடுவதாக..
முன்னறிவிப்பொன்று எழுதியிருக்கலாம்..

ஏனோ
பட்டென்று..
வளைந்த கிளையின் நுனிக் காம்பிலிருந்து
விடுபட்டுவிட்டது பழுத்த இலையொன்று..

விடியற் சூரியனின்
இளமஞ்சள் பூசிய மழைத்துளிகள்
அபூர்வமாய் அவ்விலையின் மீது
முத்தமிட்டு நழுவியபோதே..

செய்தி எழுதப்பட்டுவிட்டது என்பதையும்..
முன்னறிவிப்பாகவே..
பழுத்த மஞ்சள் நிறம் வெளிறிவிட்டதையும்..

பூக்கள் தங்களுக்குள்
ரகசியமாய் முணுமுணுத்ததை..

ஒட்டுக் கேட்டுவிட்ட வண்டொன்றின்
ரீங்கார அலையில்..
மரம் ஒரு முறை
மொத்தமாய் சிலிர்த்து அடங்கியதில்..

கூடுகளை இறுகப் பற்றிக்கொள்ள நேர்ந்தது..
பறவைகளுக்கும்
இரைக்காக வாய் பிளக்கும் குஞ்சுகளுக்கும்..!

****

நன்றி : ' திண்ணை ' இணைய இதழ் - ( பிப்பிரவரி - 12 - 2010 )

http://www.thinnai.com/?module=displaystory&story_id=31002121&format=html

அபத்தமானத் தலைப்பொன்றும்..தூக்கிலிடும்படியான உத்தரவும்..

*

' எழுது ' என்பதாக குறுக்கப்படும்
எல்லைகளில்..
சொற்கள்.. வேலிக்கம்புகளைப் போல
செருகப் படுகின்றன..

மூச்சு விடுதலுக்குரிய
அடிக்கோடுகளில்
எப்போதும் கொப்புளிக்கிறது
அபத்தமானத் தலைப்பொன்று..

மரணத் தத்துவத்தை..
தூக்கிலிடும்படியான உத்தரவிலிருந்து
காகிதம் தாண்டி..
ஓடும் பேனா முனை..

உடைப்படுதலின்
கோட்பாட்டை..
சுவாசித்து சுலபமாய் தப்புகிறது..

முன் தீர்மானத் திணறலை
முற்றிலும் நிராகரித்து..!

****

நன்றி : ( உயிரோசை / உயிர்ம்மை .காம் ) பிப்பிரவரி - 2010

http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=2461

தொடுவானத்தின் நேர்க்கோட்டு நிழல்..

*
பதுங்கிக் கொண்டது
என் தீர்மானங்களற்ற பாதையின்
மைல் கற்கள்..

தொடுவானத்தின்
நேர்க்கோட்டில் முளைக்கிறது
ஒரு பிரம்மாண்ட கருமை நிழல்..

வழித்துணைக்கு
மனசுக்குள் பறந்தபடி
மிதக்கின்றன மின்மினிப் பூச்சிகள்..

பாதங்களைப் பழக்கிக்கொண்ட
பாதைகள்
வருடியபடி மண் பறத்துகின்றது..

மீண்டுமொரு பயணத்தில்
திரும்பி வருதலின்
சாத்தியக் கூறுகளை
கணக்கில் கொண்டு

முடிவுகளின் முனைகளை
விரல் நுனிகள்
காற்றில் திருகியபடி..

இரவுக்குள் மூழ்கிவிடுகிறது
எங்கெங்கோ பயணப்படும்
கால்களோடு..!

****

நன்றி : ' கீற்று ' இணைய இதழ் - ( பிப்பிரவரி - 25 - 2010 )

http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=4235:2010-02-25-08-31-21&catid=2:poems&Itemid=88

ஆழம் தொட முடியா நங்கூரத்தின் கெட்டித்த முனை..

*
அப்படியொன்றும் சொல்லும்படியான
வாதங்களை முன்வைத்துவிடவில்லை
அவனின் மௌனம்

நினைத்துப் பார்ப்பதற்கு
ஏற்றதாய் அமையவில்லை
பொழுதுகள்

நங்கூரத்தின் கெட்டித்த முனை
மனதின் ஆழம் வரை
நீண்டதேயொழிய
தொட்டுவிட முடியாமல்
தவிக்கிறது

அசைந்தபடியே விலகிவிடும்
நினைவுகளோடு
மறக்கும் பொருட்டு..
உப்பரித்து
தனித்த தீவில்..
ஒதுங்கிவிடவும் கூடும்

ஏற்றத்தாழ்வின் அலைகள்
நீல நிறம் தவிர்த்து
கருஞ்சாம்பல் போர்த்தித்
திவலைகளாய் சிதறிக்கொண்டே இருக்கிறது
ஓய்வில்லா யுகம் முழுதும்..!

****

நன்றி : ' கீற்று ' இணைய இதழ் - ( பிப்பிரவரி - 23 - 2010 )

http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=4050:2010-02-23-04-45-42&catid=2:poems&Itemid=88

வண்ணச் சிறகின் நிழல்..

*
கனவுச் சுவர் ஒன்றில்
வண்ணச் சிறகு
வரைந்து போகிறது
வாழ்வின் நிழலை..

கூசும் வெயில் பட்டு
உதறித் திறக்கும் கண்கள்..
தரிசிக்கின்றன
ஒரு
முதல் காலையின்
யந்திரத் தனத்தை..!

****

நன்றி : ' கீற்று ' இணைய இதழ் - ( பிப்பிரவரி - 21 - 2010 )

http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=3991:2010-02-21-04-34-16&catid=2:poems&Itemid=88

சந்திப்பை ஏற்படுத்தக் காத்திருக்கும் நிமிடங்கள்..

*
' மற்றவை நேரில்..'
என்றபடி செல்போன் அணைந்துவிட்டது

சொற்கள் மீண்டும் சந்திப்பை
ஏற்படுத்தக் காத்திருக்கும் நிமிடங்களை
எங்கே பத்திரப்படுத்துவது..?

சட்டைப்பைக்குள் வைத்தால்..
தவறுதலாக
அழுக்கெனக் கருதி துவைக்கப்பட்டுவிடும்

புத்தகத்துக்குள்
செருகி வைத்தால்..
மறந்து போய் பழுப்பேறிவிடும்

கைக்குட்டை முனையில்
முடிச்சிட்டுக் கொள்ளலாம்..
ஆனால்..
கைக்குட்டை பயன்படுத்தும்
பழக்கமற்றவன் நான்

அலமாரியின் கடைசித் தட்டு முழுக்க
பழைய செய்தித் தாள்கள்
பிதுங்கிக் கிடக்கின்றன..
அவைகளுக்கிடையே ஒளித்து வைக்க
முடிவு செய்தேன்..

அவையும் கூட
அடுத்த வெள்ளிக்கிழமை
எடைக்குப் போய்விடும்

அந்த சொற்கள்
மீண்டும் சந்திப்பை
ஏற்படுத்தக் காத்திருக்கும் நிமிடங்களை..

எங்கே பத்திரப்படுத்துவது..?

****

நன்றி : ' கீற்று ' இணைய இதழ் - ( பிப்பிரவரி - 11 - 2010 )

http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=3390:2010-02-11-04-29-06&catid=2:poems&Itemid=88

நீ என்னிலிருந்தே விலகுகிறாய்..

*
ஒரு துளி வெட்கத்தைத் தொட்டு
நெற்றியில் வைத்துக்கொள்வாய்

தூங்காமல் விழித்திருந்த
நேற்றைய இரவை
ஒற்றை ஜடையில் பின்னலிடுவாய்

வலது புருவத்தை நெருங்கி
சுருளாய்த் தொங்கும்
கற்றை நெளிக் குழலை
நுனியில் சுருட்டும்போதே
ரகசியமாய் என் பெயர் உச்சரித்து
கவனமாய் பழகிக் கொள்வாய்

முட்டைவடிவக் கண்ணாடியில்
முடிவாய் ஒரு புன்னகையைப்

பதிவு செய்வாய்

தலை வாசல் நிலைக் கடந்து
செருப்புக்குள் கால் நுழைந்ததும்
ஏறிட்டு என்னைப் பார்ப்பாய்

நானொரு ஸ்தூலம்
நானொரு அவசியம்
நானொரு நிர்ப்பந்தம்

என்னை விட்டு விலகும்போதெல்லாம்
நீ என்னிலிருந்தே விலகுகிறாய்

ஒப்புக் கொள்ள மறுபடியும்
நீ மாலை வருவாய்

****

நன்றி : ' கீற்று ' இணைய இதழ் - ( பிப்பிரவரி - 9 -2010 )

http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=3281:2010-02-09-05-21-16&catid=2:poems&Itemid=88

கைப்பிடியில்லாக் கத்தியின் கூர்மை..

*
வாசித்துக் காட்டும்படி
அழுத்தமாக ஒளிர்கிறது
அவமானத்தின் நிழல் ஒன்று

கூனிக் குறுகுதலின் வெட்கமொன்று
மௌனமாய் கசிகிறது
புலன்களைக் கூசி

சூழ்நிலை
நிர்ப்பந்தம்
எதிர்பாராமை
நம்பிக்கைத் துரோகம்

நீளும் பட்டியலின் ஒவ்வொரு முனையிலும்
பாசிப் படர்கிறது
தொட்டதும் வழுக்கும் பொருட்டு..

கைப்பிடியில்லாக் கத்தியின் கூர்மையை
ஆழமாய்ப் பதம் பார்த்து பழகிவிட்ட
வாழ்வின் அநாவசியங்கள்..
நுனி சீவி வீசும் செதில்கள் யாவும்
இதயத்திலிருந்து உரிக்கப்பட்டவை

இதை..
சுலபமாய் மறந்துவிடுவார்கள்
இப்போதும்..!

****

நன்றி : ' கீற்று ' இணைய இதழ் - ( பிப்பிரவரி - 6 - 2010 )

http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=3174:2010-02-06-06-33-59&catid=2:poems&Itemid=88

நந்தவனத்து நதியும்..அவளின்.. இடது பக்க நாற்காலியும்..

*

நூலகத்துக்குள்
நுழையும்போதெல்லாம்
இடது பக்க நாற்காலியில்
அவள் உட்கார்ந்திருக்கிறாள்.

விரைந்து
புத்தக வரிகளை விரட்டும்
கண்களும்..

சின்னதாய்
முணுமுணுத்தபடி அசையும்
உதடுகளும்..

பென்சிலை உருட்டும் விரல்களும்..

அவளைச் சுற்றி..
ஒரு நந்தவனத்தையும்
குறிஞ்சிப் பூக்களையும்
தேன் உறிஞ்சும் வனத்துப்பூச்சிகளையும்
காலருகே
சலசலத்தோடும் நதியின் குளிரையும்
அசையும் நாணலின் முத்த நுனிகளையும்..

வாசிக்கும் பக்கங்களில்...
சாரல் தெளித்துக் கொண்டிருக்கக் கூடும்..!

****

மௌனம் பிசகிய கனவென்றே.. கருநிழல் சுமந்த பெருங்கேவல்..

*

நெடுந்துயரக் கேவல் ஒன்று
மொக்குடைந்து பரவிய
மகரந்த இரவில்..

சாளரம் துழாவி உள்விரைந்த
காற்றின் விசையில்..
எழுதிய தாள்கள் புரண்டு
சொற்கள் சிதறின..

கரும்பாசிப் படர்ந்த சுவற்றின் மீது
கால்கள் பாவ..
சில்லிட்டத் தரையில்..

மௌனம் பிசகிய
கனவென்றே..

அறையைக் கடந்து
வானம் பார்த்த உப்பரிகையில்
கொடிகள் பற்றி மேலேறின..

கருநிழல் சுமந்த
அப்பெருங் கேவல்..!

****

தெருவோரக் குறிப்புகள் - 2

*

ஒரு தேநீருக்கும்
இன்னொரு தேநீருக்கும்
இடைப்பட்ட வெளியில்..

ஒரு தீக்குச்சி மரணிக்கிறது

பால் கொதிப் புகையும்
சிகரட் புகையும்
கடந்து கக்கும் வாகனப் புகையும்

ஆலிங்கனம் செய்தபடியே..
மேலேறித் துளைக்கின்றன

ஓசோன் படலத்தையும்
சூரியன் கன்னத்தையும்..!

****

நிழல் போல்..கிழித்துக் கடக்கும் பாய்மரங்கள்..

*

முகம் திருப்பிக் கொண்டாய்..

துண்டிக்கப்பட்ட உரையாடலை
கடலலை..
சுவைத்தபடி உள்ளிழுத்துக் கொள்கிறது..

பொன்னிற வட்டங்கள்
ஜொலிக்கும் நீரின் நெடும்பரப்பை..
நிழல் போல்..
கிழித்துக் கடக்கும் பாய்மரங்கள்

'வீடு திரும்புதலை'
நினைவுப் படுத்திய
பின்..

திரும்பிப் பார்த்து சொல்லுகிறாய்..
'சொல்லு..' - என்று..

எதைச் சொல்ல..?

****

ஷாமியானாப் பந்தலுக்குக் கீழே..

*

மரணங்கள்
அழைப்பிதழ் கொடுப்பதில்லை

ஒரு அகால இரவிலோ
புலராத வைகறையிலோ
அவை ..
திடீரென வந்து சேர்கின்றன.

யாரும் அழைக்காமலே
வருவதும் போவதுமாக இருக்கிறார்கள்
எல்லாரும்.

மரணத்தின் தரிசனம்..
வீட்டு ஹாலில் கிடைக்கிறது பெரும்பாலும்..

பெருங்குரலெடுப்போ..
நேர நீட்சிக்கு பிறகு தொடரும் விசும்பலோ..
எதுவும் அசைப்பதில்லை..

நின்று நிதானமாக எரியும்
மரணத்தின் விளக்குச் சுடரை..

ரோஜா இதழ்களின் நறுமணக் கமழ்தலும்
கசியும் பத்தியின் வெண்புகைச் சுருளும்..
சூழலை அடர்த்தியாக்குகின்றன

தீர்க்கமான மௌனமொன்றை
முன்னிறுத்தும் பொருட்டு..

வாழ்தலின் தர்க்கங்கள்
தவிடு பொடியாகும்
சூட்சுமங்களை..
ஷாமியானாவின் பந்தலுக்குக் கீழே
பகிர்ந்து கொள்கிறார்கள்..

ஒவ்வொரு மரண நிகழ்தலின்
ஒருங்கிணைப்பில்..!

****

பயணம்..

*

நூலறுந்தக் காற்றாடி
அசைந்து கொண்டே
நழுவுகிறது..

விருப்பமின்றி
பூமி நோக்கி..!

***

தெருவோரக் குறிப்புகள் - 1

*

அகன்று விரிந்து
செம்பழுப்பு நிறத்தில் உதிரும்
தேக்குமர இலையை..

சலிப்போடு
கையிலேந்துகிறது..

தார் சாலையில்
தகிக்கும்
மத்தியான வெயில்..!

****

நடை வாசலும்..கொத்து சாவியும்..

*

சன்னதி வரிசையில்..
தலைகள் கவிழ்ந்து
கரங்கள் குவிந்து
மணி ஒலி..
சுடரொளியென..

மந்திரங்கள் கடந்து
காத்திருக்கிறான்
காவலாளி..

நடையை சார்த்தி..
பூட்டைப் பொருத்திக் கிளம்ப..

கையில்..
கொத்து சாவியோடு..!

****

குவியும் முதல் புள்ளி..

*

நம்பி..
உன்னைத் தொடரும் கால்களில் படரும்
கொடிகளில்..

துளிர்க்கும் சிறு இலையின்
நுனியில்
குவியத் தொடங்குகிறது..

முதல் புள்ளியென..
ஒரு அவநம்பிக்கை..

****

எல்லாவற்றுக்குமான பீடங்கள்..!

*

என்னிலிருந்து
நீ
நழுவி நிறுவிய
பீடங்கள்..

தன்
விஸ்தீரன எல்லைகளில்..
நிறுத்திப் பார்க்கிறது
வேடிக்கையாய்..

எல்லாவற்றையும்..!

***

மெட்ரோ கவிதைகள் - 42

*
' கருப்பு நிற டர்பன் கட்டிய தலை..' - என்று
அடையாளம் சொன்ன பிறகு..
செல்போன் அணைந்துவிட்டது.

அடிக்கும் வெய்யிலில்..
ஈரப் பிசுபிசுப்போடு
வெகு நேரம் காத்திருக்க நேர்கிறது..
அவள் வருகைக்காக..

டர்பனையும்
கழட்டிவிட முடிவதில்லை..
முறைக்கும் காகங்களும்..
மரக்கிளையிலிருந்து
விலகிப் பறப்பதாயில்லை..!

****

கனவின் வாய்கள்..!

*

கண்ணால் சதைக் கடித்து
தின்ன விரும்பும்
மனப் பற்கள்..

காமம் குடம் வழிய
அள்ளிப் பருக விழையும்..
கனவின் வாய்கள்..!

***

பிசிர் நுனிகள்..

*

மௌனத்தில் கிழிபட்ட
வாக்கியங்கள்..
பிசிர் நுனி எழுத்துக்களாய்
படபடக்கிறது..
காற்றில்..!

***

மெட்ரோ கவிதைகள் - 41

*
சிறுவர்களைப் பறித்துக் கொண்டது..
விளையாட்டாய் நகரம்..

டிஜிட்டல் போர்களில்
ரத்தம் தெறிக்க..

வெட்டிச் சாய்த்தபடியோ
சுட்டு வீழ்த்தியபடியோ
களிக்கிறார்கள்..

எப்போதும்
ஒரு நண்பன் இறந்துபோகிறான்
தற்காலிக எதிரியாய்..!

****

திங்கள், பிப்ரவரி 01, 2010

மைக் கண்களின்..நீள் பீலி..

*

மந்திரம் வரைந்த
மைக் கண்களின் நீள் பீலி..
என் கனவில்
தீற்றிச் சென்றது..
நீல நிறத்தை..

பார்வையின்
வண்ணக் குடுவையில்..
விரல் தீண்டி..
எழுதிய..ஓவியத்தின்..
நிழல் எங்கும்..

நீ
மட்டுமே
பரவி இருக்கிறாய்..

ஒரு கவிதையை..
அடிக்குறிப்பாய் எழுதி வைக்கிறேன்..
எப்போது வந்து வாசித்துச் செல்வாய்..?

*****

நான் பரிசளித்த..கூர்மைத் தருணங்கள்..

*

சொல்லிவிடத் துடித்ததை..
புதைத்துவிடும்படி..
உந்துகிறது
உன் மௌனம்..

பள்ளம் அளக்கிறாய்
உனக்கு
நான் பரிசளித்த..
கூர்மைத் தருணங்கள் கொண்டு..

அவை..
மழுங்கி இருக்கக் கூடும்..
கொஞ்சம் இப்படி கொடு..

மீண்டுமொரு முறை..
கூர் தீட்டித் தருகிறேன்..!

***

இரவு தோறும்..

*

பிரிதொரு
பகலெனக் கொண்டது..
இரவு தோறும் கழற்றி வைக்கும்..
முகமூடி..

அலுவல் இருக்கைகள்..
இலவசமாய் வழங்குகின்றன..
அதிகார முட்களை..

அந்தரங்க முகங்கள்..
கிழிபட..
அவை தைத்துக் கொள்கின்றன..
நூல்களில் முகம் கோர்த்து..!

****

உலோக மீன்கள்..

*

இரவின்
இருள் குழைய
வெளிச்சம் கிழித்து
பறக்கும் உலோக மீன்கள்..

சுமந்து செல்கின்றன..
பண்பாட்டை விநியோகம் செய்ய..
நகரம் நோக்கி..!

****