தீராநதி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தீராநதி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், ஏப்ரல் 30, 2014

கோட்டோவியத்திலிருந்து வெளியேறும் பட்டாம்பூச்சி..

*
அசையும் ஜன்னல் திரைச்சீலையின் இளநீல நிறத்தில்
சிக்கிக்கொண்ட ஒரு வெண் பூச்சித்திரம்
தான் பருகிய வெயிலை என் மீது ஊற்ற

நான் உட்கார்ந்திருக்கிறேன்

மலர்ந்து மொக்குடைதலின் வாசத்தை
நேற்று நீ எனக்குப் பரிசளித்தாய்

பூக்கள் சிந்தும் ஈரச்சாலை முழுதும் மின்னும்
தெருவிளக்கின் மஞ்சள் வர்ணத்தை உன்
பாத கொலுசு மீட்டிக் கொண்டிருந்தது

தொலைவிலிருந்து நம்மை யார் பார்த்திருந்தாலும்
நாமொரு கோட்டோவியமாகத் தான் தெரிந்திருப்போம்

நீ அழுந்த தந்த ஒரு சிறிய முத்தத்தால்
என் இரவின் பால்வீதியில் மேலும் இரண்டொரு கிரகங்கள்
சுற்றத் தொடங்கின உன்னை நோக்கி

நம் ரகசிய கதவின் தாழை நீக்கும் நொடியில்
சட்டென என்னிலிருந்து சிறகசைத்து வெளியேறுகிறது
உன் பட்டாம்பூச்சியொன்று

இந்த அறை ஜன்னலின் வெண்பூச்சித்திரம் என் மீது
ஊற்றும் வெயிலைப் பருகியபடி
நான் வெறுமனே உட்கார்ந்திருக்கிறேன்

நீயந்த பட்டாம்பூச்சியாய் திரும்பி வர

*****

நன்றி  : ' தீராநதி ' இலக்கிய மாத இதழ் [ நவம்பர் - 2013 ]

மூன்றாம் இலையின் நடன அசைவு..

*
ஏதேன் தோட்டத்தில் பழுத்த இலைகள்
மூன்று சிரிக்கின்றன

முதலாம் இலை ஆதி வெளிச்சத்தை குடித்து வளர்ந்து
தன் பழுத்த நரம்புகளில் ஊறும் பொன் கதிர்க் கால்களின்
நக ஈரத்தை மினுக்குகிறது

இரண்டாம் இலை சாத்தானின் சர்ப்ப நாப்பிளவில்
துளிர்க்கும் எச்சில் பட்டு
பச்சைமை நழுவுகிறது தோட்டத்து புல்வெளியெங்கும்
எல்லைமரம் வரை நீளும் பொருட்டு

மூன்றாம் இலையின் நடன அசைவில் பெருகும்
இசைக் குறிப்புகள் சூழ் குழைக்கிறது அந்தி நிறம் பூசிய
ஆதாமின் தனிமையைப்
பழுக்கச் செய்து விலாவை உறுத்தி

கடவுளின் நீள் வெண்ணிற அங்கியில் மிதக்கும்
முகிலொன்று அவிழ்ந்திறங்குகிறது
ஏதேன் தோட்டத்தின்
பழுத்த மூன்று இலைகளின் மீதும் நிறமற்று

*****

நன்றி  : ' தீராநதி ' இலக்கிய மாத இதழ் [ நவம்பர் 2013 ]