வெள்ளி, ஏப்ரல் 27, 2012

பேரன்பின் இருட் காடு

*
மௌனம் கலையாத
பெருந்தவக் கோட்பாட்டு மரத்தின் கீழ்
பேரன்பின்
இருட் காட்டுக்குள்
தனித்து உட்கார்ந்திருக்கப் பணித்தாய்

சொற்ப வெளிச்சம் சுமந்து
என்னைச் சுற்றிப்
பறந்துக் கொண்டேயிருக்கிறது

உனது
மின்மினிச் சொற்கள்

*****

நன்றி : ( உயிரோசை / உயிர்மை.காம் ) [ ஏப்ரல் - 30 - 2012 ]

http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=5550

மற்றுமொரு..

*
பால்கனிக்கு வெளியே விழுகிறது
வார்த்தைகள்

உச்சக் கோபத்தில் உடைந்துவிடுகின்றன
அர்த்தங்கள் மொத்தமும்

குறுகிய இடத்தில்
இழுத்துக் கட்டியிருக்கும் பால்கனிக் கொடியில்
காய்ந்துக் கொண்டிருக்கும் உள்ளாடைகள்

மற்றுமொரு பகலுக்காக
மற்றுமொரு நாளுக்காக
மற்றுமொரு இரவுக்காகக் காத்துக் கிடக்கிறது

*****

நன்றி : ( உயிரோசை / உயிர்மை.காம் ) [ ஏப்ரல் - 30 - 2012 ]

http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=5550

உப்பு நதி..

*
கைகுலுக்கி இறுகப் பற்றிக் கொள்கிறாய்
வியர்வையெனப் பெருகும் நிமிடங்களை
இடது புறங்கை நரம்பில் துடைத்துக் கொண்டே இருக்கிறேன்

இந்த நடைபாதையில்
பெயர்ந்துக் கிடக்கும் சதுரக் கற்களில்
புதைந்தபடி
ஒரு மின்கம்பம் இருக்கிறது

அதன் உடைந்த கண்ணாடிக் கூட்டுக்குள்
பெயரற்ற பறவைக் கூடொன்றின்
மெலிந்து துருத்தும் கிளையில் ஒரு இலை
வெயிலைத் தடுத்து

அதன்
நிழல்
என் மீது அசையாமல் கிடக்கிறது

பற்றிக் கொண்டிருக்கும் கைகளுக்குள்
நெளிந்தபடி நழுவுகிறது
உப்பு நதி

****

நன்றி : ( உயிரோசை / உயிர்மை.காம் ) [ ஏப்ரல் - 30 - 2012 ]

http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=5550

ரகசியமற்று பரவாமலிருப்பது பற்றிய அரிச்சுவடி

*
என்னை
அவனது கைவிளக்கு என்றான்
தீ நுனிப் போல் துடித்துக் கொண்டிருக்கிறேன்
என் திரியைப் பாதுகாக்கும்
வழியற்று

என்னை
அவளது இரவென்றாள்
ரகசியமற்று பரவாமலிருப்பது பற்றிய
அரிச்சுவடியை அந்த அறையெங்கும் தேடுகிறேன்
அகப்படவில்லை

என்னை
அவர்களது பைத்தியக் கணமென்றார்கள்
தொடர்ந்து உளறிக் கொண்டே இருப்பதற்குரிய
தத்துவத்தின் கிழிந்தப் பக்கங்களை
இடையறாமல் தைத்துக் கொண்டிருக்கிறேன்

நைந்து கிடக்கும் காலத்தின் பெருவிரல் அழுக்கில்

என்னை
எனது மௌனமென்று நிரூபிக்கும்
வார்த்தை ஒன்றை எப்போதோ தொலைத்துவிட்டேன்

****

நன்றி : ( உயிரோசை / உயிர்மை.காம் ) [ ஏப்ரல் - 30 - 2012 ]

http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=5550

சம்பந்தமில்லாத ஓர் உரையாடல்..

*
அது கொஞ்சம் சுலபமாகத் தான் இருக்கிறது

நன்றி மறக்கும் செயலை
மறக்காமல் நிறைவேற்றுவது

சினத்தின் நிறம் மங்கா சூட்சுமத்தை
ரகசியமாய் அடைத்து வைப்பது

வாதத்துக்கென அமைக்கப்பட்ட மேஜையின் மீது
சம்பந்தமில்லாத ஓர் உரையாடலை கிறுக்கிப் பழகுவது

நெடுநாளையச் சந்திப்புக்குப் பிறகு
பார்வைத் தாழ்த்தி பதில் சொல்வது

பால்யத்தின் ஞாபகங்களைக் கூசாமல்
பொய்ப் பூசி மெருகேற்றுவது

முதல் காதலின் கடைசிப் பொய்யை
ஆரம்பத்திலிருந்து நிஜமாக்க முயல்வது

நாட்குறிப்பின் நம்பகத் தன்மையை
தூசுத் தட்டி நிரூபிப்பது என்பது

கொஞ்சம் சுலபமாகத் தான் இருக்கிறது

*****

நன்றி : ' கீற்று ' இணைய இதழ் [ ஏப்ரல் - 24 - 2012 ]

http://www.keetru.com/index.php?option=com_content&view=article&act=section&id=19509&Itemid=139

கால்களற்ற காரணத்தின் தடம்..

*
சர்ப்பத்தின்
அடிவயிற்று வழுவழுப்பைப் போல்
நழுவி நெளியும் உனது பொய்

கால்களற்ற ஒரு காரணமாகி
விட்டுப் போகிறது
அதன் தடத்தை

****

நன்றி : ( உயிரோசை / உயிர்மை.காம் ) [ ஏப்ரல் - 23 - 2012 ]

http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=5520

நேனோ நொடி

*
ஒரு நிமிடத்தின்
இறுதி நொடியிலிருந்து
அடுத்த நிமிடத்தின் முதல் நொடிக்குள்
நுழையும்போது

ஏன் இத்தனை பதற்றம்
ஏன் இத்தனை அயர்ச்சி
ஏன் இத்தனை மர்மம்
ஏன் இத்தனை சூட்சுமம்
ஏன் இத்தனை நம்பிக்கையின்மை
ஏன் இத்தனை மறுதலிப்பு
ஏன் இத்தனை மௌனம்
ஏன் இந்தத் தனிமை

நுழைதலுக்கும் வெளியேறுதலுக்கும்
நடுவே நிற்பதற்கென ஒரு வெளியைக்
கண்டுகொள்வதற்குள்

இழைப் பிரிந்து இழுத்துக் கொள்கிறது
அதனுள்
உள்
ஒரு நேனோ நொடி

*****

நன்றி : ( உயிரோசை / உயிர்மை.காம் ) [ ஏப்ரல் - 23 - 2012 ]

http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=5520

உடையும் அந்தி

*
இருப்பின் நிழல் நீளும்
இந்தப் படிக்கட்டில் காத்திருக்கப் பணிக்கிறாய்

தொடர்ந்து நீயனுப்பிக் கொண்டிருக்கும்
குறுஞ் செய்திகளின் மீது அந்தி உடைந்து

துண்டுத் துண்டாய்
வெயிலடித்துக் கொண்டிருக்கிறது

****

நன்றி : ( உயிரோசை / உயிர்மை.காம் ) [ ஏப்ரல் - 23 - 2012 ]

http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=5520

பரிமாறலில் தவறி விழும் சொற்களின் வெளிச்சம்..

*
கைவிடப்பட்ட வெளியின் திசை
இலக்கின்றி விரியும் வெட்பத் தகிப்பை
இரவின் தனிமை நிழலோடுத் திருகிக் குவிக்கிறது

பரிமாறலில் தவறி விழுந்த சொற்களின் வெளிச்சம்
அணைந்து விடாத அர்த்தங்களை
மனதின் ரகசிய அறைகளில் பத்திரப்படுத்துகிறது

மூர்க்கமழிந்த ஓர் ஓசை காற்றைப் பற்றிக்கொண்டு
நினைவுத் துளை வழியே சுழன்று
காதருகே விழுகிறது முற்றிலும் வலுவிழந்து

நீயென்ற ஒற்றைப் பதத்தில்
சுழியிட்டு இழுக்கும் எனது அந்தகாரத்தை
மௌனத்துள் புதைத்தலோ மிதக்க விடுதலோ சுலபமில்லை

கைவிடப்பட்ட ஒரு வாதத்தை ஆவணப்படுத்த முயல்கிறேன்
உறுதி செய்யப்படாத ஏனைய வாக்கியங்கள்
தொடர்ந்து பிரார்த்திக்கின்றன
அபத்தமாய் விழுந்துவிடக்கூடாத ஒரு முற்றுப்புள்ளிக்காக

*****

நன்றி : ( உயிரோசை / உயிர்மை.காம் ) [ ஏப்ரல் - 23 - 2012 ]

http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=5520

வியாழன், ஏப்ரல் 26, 2012

ஆளற்ற கப்பலின் பாலை வெளி..

*
உதிர்ந்து விடுதல் குறித்து
தலைக் குடைந்து நீண்ட இரவை
உள்ளங்கையில் கட்டைவிரல் கொண்டு தேய்த்தபடி
அழியும் ரேகை நூலில்
ஆளற்ற ஒரு கப்பல் நின்றது

காற்று எழுதிய நெளி அலைகள் நிரம்பிய நிழல் மணல் வெளி
ஒட்டகக் கால் தடங்கள் குழிந்து குழிந்து
மனக் கிடங்கு வரை இழுத்துப் போயிற்று

துருவேறிச் சிவந்த இரும்புச் சுவர்களோடு
நின்ற கப்பலின் உள்ளே வெற்றிடமிருக்கிறது

தவிர
நினைவை ரீங்கரிக்கும் ஓர் ஈயும்

அதன்
மென் கண்ணாடிச் சருகின் இறகை ஊடுருவும் வெயிலென
பரவுகிறேன் அப்பாலையெங்கும்
உதிரும் பொருட்டு

*****

நன்றி : ' கீற்று ' இணைய இதழ் [ ஏப்ரல் - 17 - 2012 ]

http://www.keetru.com/index.php?option=com_content&view=article&act=section&id=19426&Itemid=139

இரண்டு நிழல்..

*
இலைச் சருகின்
உடைந்த நரம்பிலிருந்து
கொஞ்சம் கொஞ்சமாய் கசிகிறது
கோடை வெயில்

நிலம் தாங்கி மிதக்கிறது
துண்டாகி விழுந்த இரண்டு நிழல்..

****

நன்றி : ( உயிரோசை / உயிர்மை.காம் ) [ ஏப்ரல் - 16 - 2012 ]

http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=5484

துளித் தூய்மை

*
ஒவ்வொரு குறையிலும்
பழுப்பேறிக் கிடக்கிறது துளித் தூய்மை

கண்டுப் பழக அயரும் பார்வையின் வெளிச்சம்
கண்களின் நிழலில் மிதப்பதால்

சுமைக் கூடி மேலும் மூழ்குகிறது
அச்சின்னஞ்சிறு தூய்மை

*****

நன்றி : ( உயிரோசை / உயிர்மை.காம் ) [ ஏப்ரல் - 16 - 2012 ]

http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=5484

பின்னும்..

*
ஈ மொய்க்கும் இரவின் நிறத்தை
காவல் காக்க பணிக்கிறது
வக்கற்ற அகாலத்தின் வெளிச்சம்

அழுந்தத் தழுவி முத்தமிட்ட
மரணத்தின் கன்னத்தில்
பின்னும்
வழிந்துக் கொண்டிருக்கிறது

எச்சில் கோடாய்
வாழ்வு

*****

நன்றி : ( உயிரோசை / உயிர்மை.காம் ) [ ஏப்ரல் - 9 - 2012 ]

http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=5460

சொற்களுக்குள்..

*
நுண்ணிய மில்லிமீட்டர் அளவில்
இறக்கை முளைக்கும்
மனக்கசப்பு

பறந்து பறந்து
சொற்களுக்குள் உட்கார்ந்து
சதா
ரீங்கரிக்கிறது
முடிவற்ற அர்த்தங்களை

*****

நன்றி : ( உயிரோசை / உயிர்மை.காம் ) [ ஏப்ரல் - 9 - 2012 ]

http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=5460

வெற்றிடச் சதுரம்

*
குயுக்தி
மதிநுட்பம்
சதி

மூன்று திசைகளோடு
திரும்பும் காலப் புரவியில்
பிடரி மயிர் துள்ள

வீழ்ந்துபட்ட
சிப்பாயின் வெற்றிடச் சதுரம்
காத்திருப்பது

மற்றுமொரு நகர்தலுக்கு

*****

நன்றி : ( உயிரோசை / உயிர்மை.காம் ) [ ஏப்ரல் - 9 - 2012 ]

http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=5460

இரு புள்ளிகளுக்கிடையே நீளும் சிகப்பு கோடுகள்..

*
ஒரு விபத்து நடப்பதற்கான
அத்தனைக் காரணங்களையும்
நான் கையில் வைத்திருக்கிறேன்

ஒரு சொல்லிலிருந்து இன்னொரு சொல்லுக்கு
பயணிக்க நேரும் குறுக்குப் பாதையாக

ஓர் அர்த்தத்தின் சுண்டுவிரலில்
தொங்கிக் கொண்டிருக்கும் இன்னொரு அர்த்தமாக

தலைகுனிந்தபடி பக்கப் பார்வைத் திருப்பி
நெளிய விடும் நக்கல் சிரிப்பாக

ஓர் ஆதுர முத்தத்திற்கு பிறகு மிச்சமிருக்கும் ஈரத்தில்
குமிழ் விட்டு உடைந்து போகும் காமமாக

கூச்சல் குழப்பத்தோடு சிதறும் இரவின் துணுக்கில்
ஒட்டிக் கொண்டு வெறிக்கும் மெளனமாக

நொடிக்கொரு முறை நினைவை மீட்டி மீட்டி
இசைக்க நேரும் அபத்த நரம்பாக

எந்தவொரு முன்னறிவிப்பின் அடிக்குறிப்பிலும்
இரு புள்ளிகளுக்கிடையே நீளும் சிவந்த கோடாக

ஒரு விபத்து நடப்பதற்கான
சில காரணங்களை நான் கையில் வைத்திருக்கிறேன்

*****

நன்றி : ( உயிரோசை / உயிர்மை.காம் ) [ ஏப்ரல் - 9 - 2012 ]

http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=5460

கனத்து வெடித்த வார்த்தை

*
சட்டென்று எழுந்து நிற்கிறது அமைதி
முன் கணம் வரை
கனத்து வெடித்த வார்த்தையிலிருந்து
சிதறிய எழுத்துக்கள்
அறையெங்கும்
முனை உடைந்து கிடக்கிறது

கண்கள் அள்ளுகிறது
மாளவில்லை காட்சி

*****

நன்றி : ( உயிரோசை / உயிர்மை.காம் ) [ ஏப்ரல் - 2 - 2012 ]

http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=5439

திராட்சை இலைகள்

*
பாலிதீன் கவருக்குள்
முடிச்சிட்டு அழுகும் திராட்சைகள் மீது

உற்பத்தியாகும் சிறு வண்டுகளின் மூளைக்குள்
திராட்சை விதைகள்

அதன் சிறகுகளில் நிறமாகிப் போகிறது
திராட்சைத் தோட்டத்து இலைகள்

*****

நன்றி : ( உயிரோசை / உயிர்மை.காம் ) [ ஏப்ரல் - 2 - 2012 ]

http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=5439

தான்யாவின் நொடி..

*
தொண்டை நரம்புப் புடைக்க
கத்திய வார்த்தையின் நொடியை
கவனித்துவிட்ட தான்யாவின் நொடி
யுகமாக நீள்வதை

எட்டிப் பிடிக்க முடியவில்லை

ஆழத்தில் நழுவிக் கொண்டிருக்கிறது
அவள் கண்களின் உள்ளே

*****

நன்றி : ( உயிரோசை / உயிர்மை.காம் ) [ ஏப்ரல் - 2 - 2012 ]

http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=5439