செவ்வாய், நவம்பர் 24, 2009

விரல் நுனியில் சுருளும் வேலிப்படல்...

*

எதையோ கேட்க நினைத்த
தவிப்பை..
முக பாவனையில் எழுதியபடியே
உடன் வருகிறாள்..

மௌனத்தைக் குழைத்து..
சாலையாக வழித்துப் போயிருக்கிறார்கள்
முன்னே சென்று விட்டவர்கள்..

இருளை சுழித்துக் கொண்டு
கீழிறங்குகின்றன
மஞ்சள் விளக்கொளிகள்..

விரல் நுனியில்
சுருளும் முந்தானை முனை..
வரிகளைப் பிரசவிக்கிறது..
விடியலில்..
'தண்ணீர்' எழுதவிருக்கும் கவிதைக்காக..

'ம்..?' -
என்ற.. அர்த்தமில்லா கேள்விக்குள்..
ஓராயிரம் பதில்கள்..
முண்டுகின்றன..
எப்படியாவது வெளிப்பட்டுவிட..

பாதங்களுக்கு கீழ்..
சிக்கிக் கொண்ட
சிறு சரளைக் கற்களை
உதறியபோது..

அவள் வீடு வந்துவிட்டது..

நேற்றைப் போலவே..
இன்றும்..
கையசைத்து..
வேலிப்படல் கடந்து..
உள் நுழைகிறாள்..
அமைதியாக..

****

வியாழன், நவம்பர் 19, 2009

நெளியும் மீனும்.. பூனைக்குட்டியும்..

*

குடை விரிப்புக்கான
பொத்தானை அழுத்திய வேகத்தில்..
வானம் விரிந்தது..

மழை நீரே உறைந்து..
சில்லிட்ட குடைக் கம்பியானது..

கணுக்கால் நீரளவில்..
தெருவே..
மீனாகி நெளிந்தது..

நான்கு பிரிவு சாலை முக்கில்..
மல்லாந்து
வாய் பிளந்துக் கிடக்கும்..
குப்பைத் தொட்டிக்குள்..

பதுங்கியபடி கவிதை வாசிக்கிறது
பூனைக்குட்டி..

ஓயாத மழையோடு..
போட்டியிட்டு நீள்கிறது..
கவிதை மழை..

' மியாவ்..மியாவ்..! '

****

வெங்காயச் சருகுகள் மண்டும் வேறொரு மரத்தடி..

*

சிவப்பேறிக் குமிழ் கொப்புளிக்கும்..
இரவின் கீழ் முனையில்..

நரை கீறி..
புரையோடிய..நிலவின்
இடுப்பையொடிக்க..

மூங்கில் சீவுகிறோம்..
நானும்..
தாடிக் கிழவனும்..

' வெட்டி வேலை ' - என்பதாக
திண்ணையில் துண்டுத் தட்டி
எழுந்து போகிறார்..
வேறொரு மரத்தடித் தேடி..

' வெங்காயம்..'

****

முக்காடிட்டு உட்காரும் ஒரு நீண்டப் பெருமூச்சு..

*

ஒரு சமவெளிப் பாலையில்..
பாதம் புதைய..
வெகு நேரம் நடந்ததின் முடிவில்..
மேலும் மேலும்..
மணலும் காற்றும்..
எழுதி வைத்திருக்கும் வரிகள்..

நா வறண்டு காய்ந்த வெப்பத்தில்..
எழுத்துக்கள்..
மொழியைத் தொலைத்தத் தவிப்போடு..
தொண்டைக்குள் இறங்க மறுக்கின்றன..

மூச்சுக் காற்றின் உஷ்ணத்துள்..
முக்காடிட்டு..
ஓசையின்றி உட்காருகிறது
ஒரு நீண்டப் பெருமூச்சு..

என்ன செய்ய..?

புருவங்களுக்கு மேல்..
உள்ளங்கை குடைப் பிடித்து..
தொலைவில் நெளியும் கானல் நீரில்..
யாரைத் தேடுகிறது..
இந்தப் பார்வை..?

உரையாடலுக்கு வழியற்று..
மௌனமாய் நிற்கிறோம்..
நானும்.. என் மொழியும்..

யாராவது..
என் தலைக்கு மேல் விரிந்த
வானத்தில்..
வட்டமிடும்..
ஒற்றைப் பருந்தின்..
உதிரும் இறகொன்றைப்
பிடித்தபடி..
என்னருகில் இறங்குங்களேன்..

நீண்ட ஒரு உரையாடலுக்காக...
மௌனமாகக் காத்து.. நிற்கிறோம்..
நானும்..
என் மொழியும்..!

****

பிடிவாதம்..

*

அட..!
என்பதாக அதட்டிச் செல்லும் வினாக்களின்..
ஒவ்வொரு இடுப்பிலும்..

பிடிவாதமாய்
உட்கார்ந்துக் கொண்டு..
கீழிறங்க மறுக்கிறது..

மழலையான பதில்..

****

தளிர்..!

*

நிலத்தை மோதி
பிளக்கும்
விதையின் இதழ்களை..
முத்தமிட்டு..
உடைகிறது..

ஒற்றை மழைத் துளி..!

****

பனிப் போர்த்திய ஜன்னல் கண்ணாடிகள்..

*

பொய் சொல்லுவதற்கான
ஒப்புதலை..
ரகசியமாய்
உள்ளங்கையில்.. கிள்ளி
உறுதி செய்து கொண்டாள்..

வாசல் கடந்து..
வீட்டுக்குள் நுழைந்த நொடியில்..
அவள் அம்மாவின் கண்களை
சந்தித்தக் கணத்தில்..
ரகசியக் கண்ணாடியை
உடைத்தன..
என் உதடுகள்..

' நான் உங்கள் மகளை
காதலிக்கிறேன்..' - என்றேன்..

' சோ ' வெனக் கைத்தட்டி
வரவேற்றது..
எதிர்பாராத ஒரு ஆலங்கட்டி மழை..

பூக்களும்..
ஒருமித்த மனதோடு..
தலையசைத்துக் கொண்டன..

ஏனோ..
கனத்த மௌனத்தோடு..
வெகுநேரம்..
என்னையும்.. அவளையும்..
அவள் அம்மாவையும்..
பனிப் போர்த்தி வேடிக்கைப் பார்த்துக்கொண்டே
இருந்தன..
ஜன்னல்.. கண்ணாடிகள்..

****

தலைமுறைப் பதிவுக்கான குறிப்புகள்..

*

கர்வமிகு
விரலசைவின் நுனியில்..
மௌன ரேகையொன்று
சுழித்துக் கொள்கிறது..
புதிய அடையாளமென..

வாழ்விற்கான காகிதங்களை..
கச்சாப் பொருட்களின்றி..
உற்பத்தி செய்து வழங்குகிறது காலம்..

பதிவுக் குறிப்புகளை..
தலைமுறைகள்
எழுதி..எழுதி..
ஓய்ந்த பின்..

கடைசி ஒருவன்..
கையொப்பமென
உருட்டுகிறான்..

கர்வமிகு..
விரலசைவின் நுனியை...

****

இரவின் நிழல் மழை..

*

சிம்னிக் குடுவைக்குள்..
காற்றின் தூரிகை..
எழுதும்..
சுடர் நிறத்தில்..

உருகி வழிகிறது..
ஒரு
கரு நிழல்..

அது..
சுவர் முழுதும்
படர்ந்து படர்ந்து..
மெல்ல
வெளியேறுகிறது..
என்னை இழுத்துக்கொண்டு..

மழையில் நனையும்படி..

****

இலக்கின்றிப் பறக்கும்..கோழியிறகு..

*

' அலைபாய்தல் ' என்கிற வார்த்தைக்கான
உரையாடலுடன்..
தொடங்கியது..
அந்தப் பேருந்து பயணம்..

ஜன்னல் கண்ணாடியை
இறக்கி விட்டுக் கொண்டதில்..
மழைச் சாரல்..
வெளிப்புறமாய் கண்ணீர்க் கோடுகளை..
மௌனமாய் இறக்கியதில்..
காட்சிகள்.. புகைப் போர்த்தின..

உன் வலக்கையும்
என் இடக்கையும்..
விரல் பின்னிக் கோர்த்துக் கொண்டதில்..
ரேகைகளுக்கிடையே..
ஓடிப் பிடித்து விளையாடுகின்றன..
இன்றிரவு
எழுதப் போகும்..கவிதைகள்..அத்தனையும்..

அலைபாய்தல்..என்பது..
கண்களை..
அதனின்று..உருவாகும் பார்வை..
சோழியுருட்டுவது.. - என்றேன்..

' ஆம்..
பேருந்து நிலையத்தில்..
நீ வந்து சேரும் வரை..
எனக்கு அது தான் நேர்ந்தது..' - என்றாய்..

அலைபாய்தல் ஒரு
கோழியிறகு..
மனதின் திசைவெளி யெங்கும்..
இலக்கின்றி...
பறந்துக் கொண்டே இருக்கும்.. - என்றேன்..

' ஆம்..
வீட்டிலிருந்து கிளம்பும்போது..
அப்படித் தான் இருந்தது..' - என்றாய்..

கண்ணாடி ஜன்னலின்.. நீர்த்திவலைகள்..
ஆர்வமுடன்..
உன் முகத்தை நோக்கித் திரும்பி வழிந்தன..
முன்பை விட வேகமாய்..

அலைபாய்தல்..
ஒரு மௌனச் சுழி..
அதில் சிக்கிக் கொள்ளும் தருணத்தை..
எளிதில்.. மீட்டெடுக்க இயலாது.. - என்றேன்..

' ஆம்..
எனக்கு.. இப்போது..
அது தான் நடந்துக் கொண்டிருக்கிறது..' - என்றாய்..

மழை ஓய்ந்து..
ஜன்னல் கண்ணாடிகள் திறக்கப்பட்ட வேகத்தில்..
அலை அலையாய் பாய்ந்து..
உட்புகுந்தது..
மற்றுமொரு உரையாடல்..

' தென்றல் ' - என்றாய்..
வெட்கமாய் தலை சாய்த்து..
சிரித்தபடி..

****




நீச்சல் விளிம்புகள்

*

கவலை நீர்
தேங்கிய..

முகக் குட்டையில்..

குழப்பமாய்
நீந்துகின்றன..

கண்களிரண்டும்..

****

குமிழ்களில் அடைபடும் மினுமினுப்பு..

*
என் அறையிலிருக்கும்
உயிரற்றவைகள்..
கோபத்தின்
இலக்காகி உயிர் விடுகின்றன..
முரட்டுக் கரங்களில்..

விளைவுகளின்
உணர்வுக் கதுப்பில்..
குமிழ் விடுவதில்..
அடைபடுகிறது
நியாயங்களின் மினுமினுப்பு..

உடைந்த சிலப் பொருட்களில்
அடையாளம் விட்டு நகர்கிறேன்..
என் கோபத்தின் முனைகளை..

இப்போதும்..!

****

வெள்ளி, நவம்பர் 06, 2009

துளைகள்..

*

ஆயிரம் ஜன்னல்களைத் திறந்து..
கிளைகளினூடே..
பூமியை

ஒவ்வொருத் துளையிலும்
எட்டிப் பார்க்கிறது
வெயில்..!

****

நழுவும் இசையின் குறிப்புகள்..

*

மீட்டத் துடிக்கும்
வர்க்க விரல்களின்
நுனியிலிருந்து நழுவி..

காற்றில் அரங்கேறுகிறது..
இசையின் குறிப்புகள்..

****

ஒரு பகல் பொழுது..

*

சலனமற்று
நீ ஒருக்களித்துப் படுத்துக்கிடந்த
ஒரு பகல் பொழுதை..

மின்விசிறியின்
மென்காற்றில் அலையாடிய
உன் நெற்றி முடி..

தரையில்
எழுதிக் கொண்டேயிருந்தது..
அமைதியாக..!

****

இரண்டு காட்சிகளும் ஒரு முரணும்..

*

குறைந்தபட்சம்
ஒரு சிகரெட்டாவது
எரிய நேர்கிறது..

நீ என்னை
அலட்சியப் பார்வையுடன்
கடக்கும்
நிமிடங்களில்..!

****

வில் வடிவ
உதட்டிலிருந்து
விடுப்பட்டுத் தைக்கும்
புன்னகை அம்பின்
அதிர்வு..

நாணின் துடிப்பில்..
'யுக'
நீட்சியாகிறது..!

*****

மெட்ரோ கவிதைகள் - 34

*
மழையில்
உடல் முழுக்க
நனைந்த பிறகும்..

பறக்கத் தோன்றாமல்
மயிர் சிலுப்பி..

மொட்டைமாடியின்
ஒற்றைக் கொம்பில்
பிடிவாதமாக
அமர்ந்திருக்கிறது..

எப்போதும் போல்
இன்றும்
ஒரு காகம்..!

****

மெட்ரோ கவிதைகள் - 33

*
சாலையை
அகலப்படுத்தும் அளவுகளுக்காக
'டேப்பின்' மறுமுனையை
எதிர்த்திசையில் பிடிக்க உதவ..

'அவனை' -
அழைக்கிறார் என்ஜினியர்..

வெட்டிக் கொண்டிருந்த
மரத்தின் அடித்தண்டில்
கோடரியை
ஓங்கி அறைந்து செருகிவிட்டு
'தலைமுண்டாசு' டவலை உருவி
முகம் துடைத்தபடி..
ஓடி வருகிறான்..

அவசரமாய் 'அவனும்'.

****

மழைக் கம்பிகள்...

*

பெருமழைக்குப் பின்னான
மழைத் துளிகளைத்
தாங்கிப் பிடித்திருக்கும்
கொடிக் கம்பிகளை..

கவ்வி நிற்கின்றன..

அம்மா
மறதியாக விட்டுப்போன..
இரண்டு ' கிளிப்புகள் '

****

குடில் குருவியின் மணித்துளி..

*

அழகிய
குடில் வடிவக் கடிகாரத்துக்குள்ளிருந்து..
ஒவ்வொரு மணி நேரத்துக்கும்
கதவுப் பிளந்து
வெளிப்பட்டுக் கூவும் குருவி..

என்ன நினைத்ததோ..

இன்று அதிகாலை..
குடில் விட்டு வெளியேறி..

ஜன்னல் திட்டில் பறந்தமர்ந்து..
இளவெயிலில்
சிறகு கோதியது..!

****

அடிவாரப் பூக்கள்..

*

மௌனத்தின்
அடிவாரத்தில்..
மேலும் மேலும்
பூக்கின்றன சில பூக்கள்..

பறிப்பதற்கான
விரல்களை
இறுக மூடிக் கொள்கிறது
வாழ்க்கை..!

****

பின்னலிடத் தொடங்கும் முனை..

*

எரியும் சடலங்களின்
நின ஒழுகலை
தீயின் கண்ணீரென
காணத் தவறிய வெட்டியான்..

தடித்த மூங்கில் கழிக் கொண்டு
மேலும் தூண்டி..
மரணத்தைக் குளிர்காய்கிறான்..

மிச்சமிருக்கும் வெளிச்சம்
அந்தி நோக்கிக் கசியும் கணத்தில்..

'இரவு' -

மயானத்தின் அடர்ந்த பந்தல் நுனியை..
பின்னலிடத் தொடங்குகிறது
கனத்த அஞ்சலியோடு..

****

நகமென வளருமேயென...

*

அழும்படி
உன்னைப் பணிக்கும்
கடவுளை
உனக்காக நேர்ந்துக் கொள்ளும்படி
நீ பணிக்கலாம்...

இரவுகளை
கைக்குட்டையாக்கி
அடிக்கடி ஈரப்படுத்தாமல்
வெளிச்சம் மங்கும் பகல்களை
ஒரு தொட்டி நீரில்
ஊற வைக்க முயற்சிக்கலாம்..

உன்
பதற்றங்களை
பல்லிடுக்கில் செருகி..
உடனே கடித்துத் துப்பிவிடுவதால்..
மீண்டும்
நகமென வளருமேயென
யோசனைத் தேவையில்லை..

வாழ்வதற்கான பக்குவத்தை..
திருமணப் பத்திரிகையில்
யாரும் அச்சடிப்பதில்லை..

அவ்வப்போது
உலரும் உதடுகளை
புன்னகையால் நனைத்துக்கொள்..

வரவேற்பறையில்..
விருந்தினர்கள்
காத்திருக்கக் கூடும்..!

*****

நன்றி : ( உயிரோசை /உயிர்மை.காம் ) நவம்பர் - 2009

www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=2210

ஈர்ப்பற்ற படிமமாகும் காலம்..

*

நரை மீசையின் நுனி
நண்பனோடு பேசும்போதெல்லாம்
நாவில் இளமையின் சுவையைக் கூட்டுகிறது..

கன்னத்து சதை மடிப்பை
பேரனோ பேத்தியோ
தளிர் விரலால் பிதுக்கும்போது
புரையோடுகிறது முதுமை..

பழுப்பேறிவிட்ட கண்களின்
வெண் பரப்பில்...
பிம்பங்களின் பதிவேற்றத்தில்

ஈர்ப்பற்ற படிமமாகிறது
காலத்தின் காட்சி யாவும்..

முனையாமலே நழுவுகிறது
இரவும் பகலும்
அனுதினம்..!

*****

புள்ளிகளின் அமைதி..

*

மௌனப் பனித்துளிகளை
சேகரிக்கத் தொடங்கும்
சிறுமியின்
இறுகிய உதடுகளுக்கு
மேற்புறத்தில்..

புள்ளிப் புள்ளியாகவே
வியர்க்கிறது
அமைதியாக
ஒரு கோபம்..!

****

திசை முட்கள்..

*

கனவின் நான்கு திசைகளிலும்
இரண்டிரண்டு வாசல்கள்..

ஒவ்வொரு வாசலிலும்
ஒரு நண்பன்..

ஒவ்வொரு நண்பனும்
அழைத்துப்போக காத்திருக்கிறான்
அவனவன் திசைநோக்கி..

இமை கூசி
கண் திறந்த பார்வையில்..
அகப்பட்ட கடிகாரத்தில்

முட்களிரண்டும்
உதிர்ந்து கிடந்தன..

****