திங்கள், மார்ச் 21, 2011

பெயின்ட் உதிர்ந்த கால் தடங்கள்..

*
மாடி கைப்பிடிச் சுவர்களைச் சுற்றி
' ப ' வடிவில் நீ பதியனிட்ட
செடிகள் காற்றில்
தலையசைக்கின்றன

மொட்டைமாடிக்கு
இணைந்திருக்கும் இரும்பு ஏணியின் மீது
உணவைச்  சுமந்து ஊர்கிறது
ஓர் எறும்புக் கூட்டம்

கோவைக் கொடியின் பச்சை நரம்புகள்
ஏணியின் கைப்பிடியில்
இறுகப் பற்றி சுருள் சுருளாக
மௌனிக்கிறது

அதன் மீதேறி 
கடைசியாக
 நீ விட்டுச் சென்ற
 உன்  கால் தடங்கள்
 பெயின்ட் உதிர்ந்து துருவேறிவிட்டது

அந்த வெப்ப பகலில்
நீ துவைத்து
கொடியில் உலரப் போட்டிருந்த
உன் உள்ளாடைகள்
இன்னும் வெய்யிலில் காய்கிறது
உன் முடிவைப் போலவே
உக்கிரமாக

*****

நன்றி : ( உயிரோசை / உயிர்மை.காம் ) [ மார்ச் - 7 - 2011 ] 


http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=4074

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக