வெள்ளி, ஜூலை 30, 2010

எண்ணற்ற பறவைகளும்..பெயர் தெரியா மலர்களும்..

*
மழை நீரின் நியாபகங்களை
காகிதக் கப்பலுக்குக் கீழே
படரச் செய்கிறாள்

கலர் கிரேயான்கள் வரைந்த
மரங்களின் கிளையில்
வந்தமர்கிறது
ஒரு வயலட் நிற பறவை

சாப்பாட்டு மேசையில்
சிந்திய நீர்த் துளிகளில்
இழுபடுகிறது பிரமாண்ட டைட்டானிக் கப்பலொன்று

உதடுகளின் இரு முனையிலும்
மேல்நோக்கிய சிறிய வளைவாய் முளைக்கிறது
ஹார்லிக்ஸ் நிலா

டாட்டா சொல்லும் சந்தோஷத்தில்
மறந்து விட்ட பென்சில் பாக்ஸில்
வரையப்படாமலே காத்திருக்கின்றன

எண்ணற்ற பறவைகளும்
பெயர் தெரியா மலர்களும்
கிரேயான்ஸ் கலரில் நனைந்த
ஒரு காகிதக் கப்பலும்!

****

நன்றி : ' கீற்று ' இணைய இதழ் ( ஜூலை - 22 - 2010 )

http://www.keetru.com/index.php?option=com_content&view=article&act=section&id=10091&Itemid=139

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக