வெள்ளி, ஜூலை 30, 2010

வெகு தொலைவுக்கு அப்பால் விரியும் மையத்தின் வளைவு..!

*
எத்தனையோ விதங்களில்
முகத்தில் பூசிக் கொள்ள நேர்கிறது பொய்களை..
வசவின்
வீச்சத்தில்
பேச யத்தனிக்கும் சமரசத் திசைகள்
அடைபடுகின்றன..

நிர்க்கதிச் சூழலில் பிதுங்கி
மனம் நழுவி
வெளியேறும் கால்வாயின் குறுக்கே வளர்கிறது
பயன்படாத உரையாடல்..

காலத்தின் பக்கச் சுவரில்
திரித்தேறும் கரையான்களை ஒத்திருக்கிறது
முறுக்கிக்கொண்டு நெளிகின்ற புன்னகைகள் ஒவ்வொன்றும்

வெப்பம் அனத்தும் சொற்களை
எரிந்து சாம்பலாகும் வெளியாக்குகிறது
இதுவரை
கொட்டித் தீர்த்த தர்க்கங்கள் யாவும்..

நிறமிழக்கும் உணர்வுகளை உகுக்கச் செய்யும்
வர்ணப் புள்ளிகளாலான மையத்தின் வளைவு..
வெகு தொலைவுக்கு அப்பால்..
வேர் பரப்பி உறிஞ்சுகிறது.. நடந்தவைகளை..!

****

நன்றி : ( உயிரோசை / உயிர்மை.காம் ) [ ஜூலை - 2010 ]

http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=3190

1 கருத்து:

  1. / எத்தனையோ விதங்களில்
    முகத்தில் பூசிக் கொள்ள நேர்கிறது பொய்களை.. /

    unmai :(

    பதிலளிநீக்கு