புதன், ஜூன் 30, 2010

துணையற்ற இரவில் எரியும் கேண்டில் லைட் டேபிள்..!

*
பிரிவதற்கான
நேர் எதிர் விவாதங்களை
நொறுக்கி
பீங்கான் பிளேட்களில்
கொட்டி வைத்திருக்கிறோம்

கேண்டில் லைட் டேபிளில்
நமக்குத் துணையாக
இரண்டு காலி நாற்காலிகள்
உட்கார்ந்திருக்கின்றன

கோப்பையை
உயர்த்திப்பிடித்து ஏறிடுகிறாய்

நானும்
என் கோப்பையை
உயர்த்துகிறேன்

அவைகளில்

பிரியமில்லாத இரவுகளும்
நம்பிக்கையிழந்த பகல்களும்
பொய்க் கரைசலின் நுரைகளும்
உயிரற்ற வார்த்தைகளின் சடலங்களும்
மிதக்கின்றன

சிவந்து அடர்ந்து புளித்த நிறத்தில்
கைவிடப்பட்ட
நிமிடங்கள் மொத்தமும்
தளும்புகின்றன

இப்போது
கோப்பைகள் மோதிச் சிணுங்கும்
இரண்டொரு நொடிகளில்

வெறும் கோப்பையை மேஜைமேல்
வைத்து விட்டு
ஒரே மூச்சில் கிளம்பிவிட்டாய்

சிணுங்களில் சிதறிய சில துளிகள்
பீங்கான் பிளேட்டிலும்
மேஜை விரிப்பிலும்
மெல்லப் பரவி விரிகிறது

என்னை நோக்கி..!

****

நன்றி : ( உயிரோசை / உயிர்மை.காம் ) [ ஜூன் - 29 - 2010 ]

http://www.uyirmmai.com/Uyirosai/Contentdetails.aspx?cid=3100

2 கருத்துகள்:

  1. மனதை அழுத்தும் வரிகள் ...... பிரிவின் இருவேறு முகங்களை சொல்லி போகிறது கவிதை . தடால் என்று பிரியும் முகம் பிரிவின் கணங்களில் உணரும் தனிமை என்ற மற்றுமொரு முகம் ... அருமை .......

    பதிலளிநீக்கு
  2. நன்றி..!
    ஷங்கர்...( முடிவிலி ). ஆழமும் நுட்பமும்..மிகு பாராட்டு..

    பதிலளிநீக்கு