திங்கள், ஜனவரி 23, 2012

ஓர் அவமானத்துக்கு பின்னும்..

*
நீ கற்றுக் கொடுத்த அனைத்தையும்
இன்றும் பின்பற்றுகிறேன்

எவரோடு பேசும்போதும் சிரித்துக் கொண்டே அவர்களின்
சொற்கள் மீது நம்பிக்கையிழக்க

ஒரு சத்தியத்தின் ஆயுட்காலம்
சரியாக ஒரு நிமிடம் மட்டுமே என்ற காலத்தின்
நொடிகளைக் கணக்கிட்டுக் கொண்டே

ஓர் அவமானத்துக்கு பின்னும் மிச்சமிருக்கும்
கடைசிப் புன்னகையைக் கூட
அந்த இடத்திலேயே விட்டு விட

நிறமிழக்கும் ஒரு மௌனத்தின் ஈரத்தை
புறங்கையால் நெற்றியிலிருந்து துடைத்துக் கொள்ள

அலுத்து விடும் தனிமையின் சதுரங்களை
முனைத் திருகித் திருகி வளைத்து
வளையங்கள் கோர்க்க

மீண்டும் வருவதாக மீண்டும் மீண்டும்
சொல்லிப் போகும் பொய்களைக் காகிதங்களில் மொழிபெயர்க்க

மன்னிப்புக் கோரி வரும் எந்தவொரு கடிதத்துக்கும்
பதிலெழுதாத பாவத்தைப் பரிசளிக்கும் மனத்தைப் பழக்கப்படுத்த

நீ கற்றுக் கொடுத்த அனைத்தையும்
இனிமேலும் பின்பற்ற விரும்புகிறேன்

அதனால்
எனது கதவுகளை ஆணியறைந்து வைத்திருக்கிறேன்

தயவு செய்து மீண்டும் மீண்டும் என்
அழைப்பு மணியை அழுத்தாதே

******

நன்றி : ( உயிரோசை / உயிர்மை.காம் ) [ ஜனவரி - 16 - 2012 ]

http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=5198

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக