திங்கள், ஜனவரி 23, 2012

மதில் மேல் செருகி நிற்கும் ப்ரைலி புள்ளிகள்..

*
காகிதப் பரப்பில் புடைத்துக் கொண்டிருக்கும்
நிறமற்ற புள்ளிகளில் விரியும் மணல்வெளியில்
சொற்களின் வினோத வடிவங்கள் மீது
கானல் நீரின் நிழல் மிதக்கிறது

வானும் மழையும் கயிறு திரிந்து
விரல்களின் நுனியில் வர்ணங்கள் கோர்க்கிறது

கிராமத்தின் நெல் வயலும்
சஹாராவின் புயல் மணலும்
கான்க்ரீட் இறுகும் நகரின் வெயில் முகமும்
தளிர் இலையும்
பட்ட மரமும்
வாகனங்களும் வாலில்லா பூனையும்
மதில் மேல் செருகி நிற்கும் உடைந்த கண்ணாடிச் சில்லும்
விளக்குகள் மினுக்கும் ஆளற்ற தெருவின் தனிமையும்

விரலோடும் புள்ளிகளின் வேகத்தில்
அடர்ந்த மௌனத்தின் சிறகினை அசைக்கின்றது

புன்னகையின் ரசவாதமும்
பேராவலின் ஒற்றையடிப் பாதைகளும்
விக்கித்து நிற்கின்றன தொடரும் நபர்கள் யாருமற்று

மெல்லப் பரிச்சயமாகும் ப்ரைலி புள்ளிகளோடு வந்து நிற்கிறது
எப்போதும் யாவற்றையும் நிறுத்திப் பார்க்கும்
ஓர் அசாதாரண முற்றுப் புள்ளி

*******
நன்றி : ( உயிரோசை / உயிர்மை.காம் ) [ ஜனவரி - 9 - 2012 ]

http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=5170

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக