திங்கள், ஜனவரி 23, 2012

பார்வையொன்றை தாழப் பறக்க விடுகிறாய்..

*
ஒரு நகர்தலை
நுணுகி கவனிக்கத் தவறிய வேகத்தில்
சொல்லி முடித்திருந்தாய்
தயங்கியபடி விரல் பின்னிக் கொண்டிருந்த
வார்த்தைகளை

பதுங்கி வெளிப்படும் இரவுகளின் வாசலில்
மீசைத் துடிக்கக் காத்திருந்த
மனப் பூனையின் நறுக்கிய வாலை
அட்டைப் பெட்டிக்குள் அடைத்து வைத்திருக்கிறேன்
உனக்குப் பரிசளிக்க

கடந்து போன கோடைப் பகலின் நிழல் விரிசலை
பூசி மெழுகும் பார்வையொன்றை தாழப் பறக்க விடுகிறாய்
பேரமைதி சூழ்ந்திருக்கும் இவ்வெளியெங்கும்
துடிப்புடன் நழுவுகிறது
நுணுகி கவனிக்கத் தவறிய
ஒரு நகர்தல்

*******

நன்றி : ( உயிரோசை / உயிர்மை.காம் ) [ ஜனவரி - 2 - 20121 ]

http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=5143


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக