திங்கள், ஏப்ரல் 26, 2010

ஒரு நொடியின் ஆயிரம் பாகம்..

*
உச்சியின் விளிம்பிலிருந்து...
நழுவத் தொடங்கினேன்

காற்றை அவசரமாய் உள்ளிழுக்கிறது
நுரையீரல்..
காட்சியின் குழப்பங்கள்..
யாவற்றையும் பச்சை நிறத்தில்
வர்ணம் தீற்றுகிறது..

திடீரென்று பேரிரைச்சல்..
காதில் அடைப்பட்டு..
வியாபிக்கிறது எப்போதுமே அறிந்திராத
கனத்த மௌனமொன்று..

கீழ் உந்தும் உயிரும்
கவர்ந்து கொள்ளும் விசையும்...
ஒருங்கே ஆலிங்கனம் செய்தபடி..
முனகுகின்றன திசைகளை அறுத்து..

ஒரு நொடியின் ஆயிரம் பாகத்தின்
ஒற்றை மெல்லிய இடைவெளியில்
பள்ளத்தாக்கின் மென்மையை தொட்டுணர்ந்த
மறுகணம்..

உடைகின்றன எலும்புகள்...
நசுங்குகின்றன நரம்பு மண்டலங்கள்..
உடனே..
நொறுங்குகிறது மண்டைக் கூடு...

ரெண்டாய் பிளந்து வெளியேறும்
மூளையின் சொதசொதப்பு...
முதல் முறையாக..

ஆகாயத்தை...
பள்ளத்தாக்கை...
நீல பச்சை வர்ணத்தை...
வாழ்ந்ததாக நம்பிய உலகத்தை...
தரிசிக்கும்போதே...

அதன் மீது கவிகிறது...வழிகிறது..
இருள் மசிய ஒரு கருநீலப் பிரபஞ்சம்...

ரத்தக் கொப்பளிப்பை
இதயம் மட்டும்...பரப்புகிறது..
அப்பள்ளத்தாக்கெங்கும்...
நிரப்பி விடும் ஆவலோடு..!

*****

நன்றி : ' திண்ணை ' இணைய இதழ் [ ஏப்ரல் - 25 - 2010 ]

http://www.thinnai.com/?module=displaystory&story_id=31004252&format=html


2 கருத்துகள்:

  1. திடீரென்று பேரிரைச்சல்..
    காதில் அடைப்பட்டு..
    வியாபிக்கிறது எப்போதுமே அறிந்திராத
    கனத்த மௌனமொன்று..//

    first class na....

    இதையெல்லாம் வெளிப்படுத்த வார்த்தைகள் இல்லை என்ற எண்ணத்தை உடைத்தேறிகிறீர்கள்!!!

    அமேசிங் [:)]

    பதிலளிநீக்கு