வெள்ளி, மார்ச் 28, 2014

உதிர் இரவின் துகள்..

*
தனிமையில் நிற்கும் என்னிடம்
திரும்பிவிடும்படி ஒரு வார்த்தை நீட்டுகிறீர்கள்
பற்றிக்கொள்ளும் விருப்பமற்று தன்
விரல்களை இறுக்கி மடித்து வைத்திருக்கிறது
எனது மௌனம்

உறைந்தத் தன்மை இளகி உருகுகிறது
உச்சரிக்க இயலாத உங்களின் அர்த்தங்கள்

வழியெங்கும்
தடமெங்கும்
நீண்டொழுகும் ஈரத் துளிகளின் விளிம்பில்
அதிர்கிறது சொற்ப ஆகாயம்

அதில் மேகங்கள் இல்லை
நட்சத்திரங்கள் இல்லை
நிலவின் மஞ்சளை மெழுகிய ரேகை வரிகள்
அந்தியின் சிவப்பில் ஊடுகிறது நிறமியாக
உனது உதிர் இரவின் துகளாக

துண்டாகிப் போன சொற்களின் அலையில்
வீசிக்கொண்டிருக்கிறது இடையறா கடலொன்று
திரும்பிவிடும்படி ஒரு வார்த்தை நீட்டுகிறீர்கள்
உப்பு பூத்து இறுகுகிறது இதயம்

****

நன்றி : ( உயிரோசை / உயிர்மை. காம் ) [ செப்டம்பர் - 24 - 2012 ]

http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=5953

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக