திங்கள், மார்ச் 31, 2014

பழியின் ஆடையுள் குளிரும் பகல்கள்..

*
கடவுளின் கால் பூட்சுக்குள்
ஒளிந்துக் கொண்டிருக்கிறது எனது துர் இரவுகள்

காதலிகளின் மாம்சம் கவ்வும் உதடுகளைக் கத்தரித்து
பால்கனி உத்தரத்தில் தொங்கும் கம்பியில்
குத்தி வைக்கிறேன்

கரிய காகத்தின் அலகுகள்
அம்முத்தங்களைக் கொத்துகின்றன

பழியின் ஆடைக்குள் புகுந்து கொள்வதால்
பகல்கள் குளிர்கின்றன

வெப்பம் அனைத்தும் இரவுக்கட்டிலுக்கு அடியில்
மயிர்க்குப்பைப் போல் சுழல்கிறது

அறைக்குள் கழற்றிவைக்கும் செருப்பில்
மிச்சமாகி ஒட்டிக்கொண்டிருக்கும் அன்றாடப் பாதை

என் பழியை
என் பகலை
என் மாம்சத்தை
கடவுளின் கால் பூட்சை

முறைத்துக் கொண்டிருக்கிறது

****

நன்றி : ( உயிரோசை / உயிர்மை. காம் ) [ ஜூலை - 8 - 2013 ]

http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=6232

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக