திங்கள், மார்ச் 31, 2014

கால்களைக் கவ்வும் நடை..

*
சிறு முகம் பிடித்து
அழுந்த இழுத்து தலை வாருகிறாள்
' உம் ' என்று பிதுங்கும்
உதடுகளில் புன்னகைக் குழைய

திருஷ்டிப் பொட்டோடு
கன்னம் விடுபடுகிறது

இன்று பச்சை நிற கிளிப் கிடையாது
பூப்போட்ட ஆரஞ்சுநிற காட்டன் தொப்பி
பட்டை விளிம்பு நெளிய நெளிய பூப் போலவே இருக்கிறது

குட்டைப் பாவாடையோடு
முடிந்து போகும் வெள்ளை டாப்ஸும்
மஞ்சள் லெக்கிங்ஸூம்
கச்சிதமாய் சிறைப்பிடிக்கிறது பாப்பாவை

கடைசியாக
கருநீலநிறக் கால்செருப்போடு
வார்ப்பட்டியில் கால்களைக் கவ்வுகிறது நடை

குழந்தையை வீட்டில் விட்டுவிட்டு
ஒரு பொம்மையைத்தான் அழைத்துப் போகிறாள்
அனைவருக்கும் காட்ட

****

நன்றி : ( உயிரோசை / உயிர்மை. காம் ) [ செப்டம்பர் - 12 - 2013 ]

http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=6377

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக