வியாழன், ஜனவரி 21, 2010

மகரந்தங்களை உள்ளடக்கிய பூக்கள்..

*
வேறெங்கும்

சொல்லிவிட முடியாத துக்கமொன்றை
நட்சத்திரங்கள் கவர்ந்து கொண்டன
என் நள்ளிரவில்


குவளையில் தளும்பும் நீரின் அலையில்
நிழலென மிதவையிடுகிறது
கேவலின் கண்ணீர்த் துளியொன்று

ஈரத் துணிகளற்ற கொடிகளில்
என் மௌனங்கள் காய்கின்றன
நிலவின் கிரணத்தில் மூழ்கி

வெறுமைப் பாலை விரியும்
தரை விரிப்பில்
அவள் இல்லாத இடங்களில்
பூக்கள் பூத்திருக்கின்றன
மகரந்தங்களை உள்ளடக்கி

யாருமற்ற என் தனிமைக் கணங்கள்
வேகமாய் எதிர்த்திசையில்
ஓடி மறைகிறது
ஒற்றை எரிக்கல்லாய் வானைக் கிழித்து

****

நன்றி : ' கீற்று ' இணைய இதழ் ( ஜனவரி - 19 - 2010 )


http://www.keetru.com/index.php?option=com_content&view=article&act=section&id=2157&Itemid=139



3 கருத்துகள்:

  1. // ஈரத் துணிகளற்ற கொடிகளில்
    என் மௌனங்கள் காய்கின்றன
    நிலவின் கிரணத்தில் மூழ்கி..// so nice..


    வாழ்த்துக்கள்.. :)

    பதிலளிநீக்கு
  2. படிமங்கள் அசாத்திய அழகும் நுணுக்கமும் நிறைந்தவை உங்கள் கவிதைகளில்..

    பதிலளிநீக்கு