செவ்வாய், மார்ச் 30, 2010

தெருவோரக் குறிப்புகள்..

*
மரணத்தை வரவேற்பதற்காக
காத்து நிற்கிறோம்..
நானும் நண்பனும்..
மவுன்ட் ரோடின்
சிக்னலை மீறும் அவசர பைக்கோ

செல்போனில் பேசியபடியே
அனாயாசமாய்
தண்டவாளம் கடக்கும் பெண்ணோ

ஒட்டிய வயிற்றோடு
ஒண்டுவதற்கு நிழல் கூட தர மறுக்கும்
நகரத்தில்
வெய்யிலில் காயும் தாடிக் கிழவனோ..

உயரமான கண்ணாடிக் கட்டிடத்தின்
வெளிப்புறத்தில்
கயிற்றில் தொங்கியபடி
கண்ணாடி ஜன்னல்களை சுத்தம் செய்யும்
அழுக்கு மனிதனோ..

ஜி.ஹெச். மருத்துவமனையின்
கான்சர் பிரிவில்
தலைப் புற்று நோயோடு
நாள் குறித்துக் கொள்வதற்கு
அம்மாவின் இடுப்பில் வரிசையில் காத்திருக்கும்
மூன்று வயது குழந்தையோ..

யாருடைய மரணத்தையோ
வரவேற்பதற்கு
காத்து நிற்கிறோம்..
ஆம்புலன்ஸ் கதவில் சாய்ந்துகொண்டு
டீ அருந்தியபடி
நானும் நண்பனும்..!

****

நன்றி : ' கீற்று ' இணைய இதழ் - ( மார்ச் - 25 - 2010 )

http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=5004&Itemid=139




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக