செவ்வாய், மார்ச் 30, 2010

உரையாடலுக்குப் பிறகான மிச்சங்கள்..

*

என் அண்மையின் கதகதப்பை
நீ உன் கைப்பையில் வைத்திருக்கிறாய்

ஒரு நாப்கின்னைப் போல்
அதை நீ பயன்படுத்துவதை
என் சிநேகிதி ஒரு முறை சொன்னாள்

ஆனால்
உதடுகளை மட்டுமே ஒற்றி எடுப்பாயாம்

எந்தவொரு உரையாடலுக்குப் பிறகும்
அதன் மிச்சங்களைத்
துடைத்தெடுக்க
அது உனக்கு உதவி புரிகிறது

என் அண்மையின் கதகதப்பை
முனைகள் மடங்காமல் இருக்க
அதிக சிரமங்களை நீ மேற்கொள்ளவேண்டியதில்லை

அவை
எலாஸ்டிக் தன்மையாவன

கிழிபடும் இழைகளைக் கொண்டு
அவைகளை என் இதயம் பின்னுவதில்லை

விம்மி அடங்கும் மனக் கொந்தளிப்புகளை
குமிழ்களிட்டு உடைப்பதால்
வெப்ப இழைகளாய் நழுவுபவை அவை

நீ தூங்கிவிடும் இரவுகளில்
உன் கைப்பைக்குள்
உன் உரையாடலின் அத்தனை
மிச்சங்களையும்
மறுவாசிப்பு செய்தபடி தன் ஒவ்வொரு பகலின்
முதல் எழுத்தையும்
நினைவில் வைத்துக் கொள்ளும்
வல்லமை படைத்தது
என் அண்மையின் கதகதப்பு..

அதை ஒரு நாப்கின்னைப் போல்
பயன்படுத்தும் ரகசியத்தை
ஏன்
என் சிநேகிதியிடம் சொன்னாய்?

****
நன்றி : ( உயிரோசை / உயிர்மை .காம் ) மார்ச் - 2010

http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=2686

2 கருத்துகள்:

  1. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  2. நீ தூங்கிவிடும் இரவுகளில்
    உன் கைப்பைக்குள்
    உன் உரையாடலின் அத்தனை
    மிச்சங்களையும்

    :) nice

    பதிலளிநீக்கு