செவ்வாய், மார்ச் 30, 2010

கைவிடப்பட்ட கனவுகள்

*

கைவிடப்பட்ட கனவுகளை
வாகனங்கள் விரையும் சாலையில்

இறக்கிவிடுவது நல்லது


அவை

ஒரு பஸ்ஸிலோ

ஒரு வேனிலோ

ஒரு காரின் சக்கரங்களுக்குக் கீழேயோ

அரைபட்டு சாகட்டும்


படுக்கையிலிருந்து எழும்போதே

தோளைப்பற்றித் தொங்குகின்றன

இறங்க மறுத்து

அடம்பிடிக்கின்றன


எனது சேமிப்புக் கிடங்கின்

இரண்டு பீரோக்களும்

நிரம்பி வழிவதை

அவை ஒப்புக்கொள்வதில்லை


கைவிடப்படவேண்டிய கனவுகள் அவை - என்னும்

உண்மை சமாதானங்கள்

அவைகளுக்குப் போதுமானதாயில்லை


அன்றாட அலுவல்களின்

அனைத்துக் குறிப்புகளுக்குள்ளும்

அத்துமீறி எட்டிப்பார்க்கும்

அநாகரீகங்களை அவை கடைப்பிடிக்கின்றன


யாரிடம் பகிர்ந்து ஒப்படைக்க நினைத்தாலும்

மீண்டும் நம்மோடே கிளம்ப எத்தனிக்கின்றன


சொந்தம் கொண்டாடுவதும்

உரிமை மீறுவதும்

நிமிடந்தோறும் உறுத்துவதும்

அவை பின்பற்றும் கொள்கைகள்


கைவிடப்படும் கனவுகளை

வாகனங்கள் விரையும் சாலைகளில்

இறக்கிவிடுவது நல்லது


அவை

ஒரு பஸ்ஸிலோ

ஒரு வேனிலோ

ஒரு காரின் சக்கரங்களுக்குக் கீழேயோ

அரைபட்டு சாகட்டும்


மரணக் கனவுகளாய்

அவை வாகன ஓட்டிகளின் தூக்கத்துக்குள்

நுழைந்து விடும்

சாமர்த்தியம் கொண்டவை.

****


நன்றி : ( உயிரோசை / உயிர்மை .காம் ) மார்ச் - 2010

http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=2660


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக