வியாழன், அக்டோபர் 28, 2010

தங்க மீனின் கடல் நிமிடம்..

*
உதடு குவித்து ஆக்சிஜன் விழுங்கும்
அழகில்..
நீரெங்கும் குமிழிட்டுப் பரவுகிறது
பொன் நிறம்..

வால் சுழற்றும் மென் அசைவில்
பாலே நடனமிடுகிறது
பிளாஸ்டிக் பாசிச் செடி..

இரை உருண்டைக்கு ஏங்கி
மேலெழுந்து வாய் பிளப்பதை
வளர்ப்பவன் பழகிக் கொள்கிறான்

இந்தக் நீளக் கண்ணாடித் தொட்டி
கடலென கற்பிக்கப்படுதல்
தங்க மீனின் உலகத்தை
நகலெடுக்கும் வித்தைப் புரிந்த சூட்சுமம்

ஒரு
கோபக் காலையில்..
வீசியெறியப்பட்ட செல்போன் விரிசலில்
கடல் தொட்டியின் நிமிடம் உடைந்தது..

உதடு குவித்து
ஆக்சிஜன் விழுங்கமுடியா
நீரெங்கும்
குமிழிட்டுப் பரவுகிறது
தங்க நிறத்தில் மீனின் மரணம்..

****

நன்றி : ( உயிரோசை / உயிர்மை.காம் ) [ அக்டோபர் - 2010 ]

http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=3464

2 கருத்துகள்:

  1. ஒவ்வொரு வரியும் அத்தனை அழகு...
    உடைந்த தொட்டியைச் சுற்றிப் பரவும் மரணித்த நீரென மனதெங்கும் பரவுகிறது பதற்றமும் வலியும்..
    அருமை..

    பதிலளிநீக்கு
  2. நன்றி..!
    கெளரி..
    காலம் தாழ்த்தி கவனிக்கிறேன் உங்கள் பின்னூட்டத்தை..
    கடல்சாரா நெய்தலின் வேறொரு வடிவமாக இதைப் பார்க்க முடிகிறதா..?

    பதிலளிநீக்கு