திங்கள், ஆகஸ்ட் 30, 2010

நிச்சலனங்களோடு வீடு திரும்புதல்..

*
இந்நகரத்தின் தனித்த சாலை இருளில்
சில தூர யோசனை அடிகளுக்கு பிறகு
கிடைக்கிறது
மங்கிய மஞ்சள் விளக்கொளி..

மௌனம் உமிழும் கனத்த அர்த்தங்களை
யாரோ தார் ஊற்றிப் பூசி வைத்திருக்கிறார்கள்
தினம் கடக்க நேரும் பள்ளங்களை..

பிடிபடுவதில்லை
எப்போதும் குறைத்தபடி..
நிறுத்திவைக்கப்பட்ட ஏதோ ஒரு டூ வீலரின்
நிழலில் பதுங்கும்
பழகிய நாயின் ஆட்சேபம்..

பிளாட்பார கான்க்ரீட் காரைகளில்
இடுங்கிப் புதைந்து நிற்கும்
மாநகராட்சி மரங்களின் பலவீனங்களை
பகிர்ந்து கொள்கின்றன..
வழக்கு நிலுவையில் நெடுங்காலம் காத்திருக்கும்
பழைய கட்டிட இடுக்கில்
நிதானமாய் முளைத்து விட்ட அரசச் செடிகள்..

வழக்கமாகிவிடும் அர்த்தப்பிழைகளின்
நிச்சலனங்களோடு வீடு திரும்புதலைப்
பழகி விடுகின்றன..
மரணம் வரை உடன்பயணிக்கும்
நகரம் புரிந்த பாதங்கள்..

****

நன்றி : ' கீற்று ' இணைய இதழ் ( ஆகஸ்ட் - 2010 )

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக